Family Tree - 9 தலைமுறைகளாக பென்சில் தயாரிக்கும் நிறுவனம்!



ஓவியர் வான்கா முதல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கிய எர்னெஸ்ட் ஹெமிங்வே வரையிலான உலகப் பிரபலங்களின் விரல் இடுக்குகளில் தவழ்ந்த பென்சில்களைத் தயாரித்த நிறுவனம். இன்று புதிதாக எழுதத் தொடங்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களிலும் இதன் பென்சில்களே நடனமிடுவது ஆச்சர்யம்.
அத்துடன் உலகமெங்கும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன இதன் தயாரிப்புகள். ஸ்டேஷனரி துறையில் 250 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கும் ஒரே குடும்ப நிறுவனம்... என்று ‘ஃபேபர்- கேஸ்டலி’ன் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

டிஜிட்டல் காலத்தில் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன்களின் திரைகளே வெற்றுக்காகிதங்களாக மாறிவிட்டன. நாம் எழுத நினைப்பதை பேனா, பென்சில் இல்லாமல் விசைப்பலகையின் மூலமாக தட்டச்சு செய்துகொள்கிறோம். உலகளவில் நோட்புக், பேனா, பென்சில்களின் விற்பனையும் பெருமளவில் குறைந்துவிட்டது.

இப்படியான சூழலில் கூட பிசினஸை வளர்ச்சிப் பாதையில் நகர்த்திச் செல்வது இந்நிறுவனத்தின் சாதனை. காஸ்பர் ஃபேபர் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். ஜெர்மனியில் இசை மேதைகள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், அறிஞர்கள், ஓவியர்கள் என பல ஜாம்பவான்கள் தோன்றி அறிவுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது.

அவர்களின் ஆறாம் விரலாய் பென்சில் தன்னை நிறுவிக்கொண்டது. அப்போது சில எழுத்தாளர்கள் தினமும் எழுதுவதற்காக 50 பென்சில்கள் வரை பயன்படுத்தியிருக்கின்றனர்.இப்படி பென்சிலின் தேவை அதிகமாக இருந்த சூழலில் ஜெர்மனியில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார் காஸ்பர் ஃபேபர்.

அவர் காலத்தில் தச்சு வேலைக்கு நல்ல மவுசு. அதனால் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தச்சு வேலைக்கான பயிற்சியில் இறங்கிவிட்டார். அவருக்கு நல்ல வேலை அமையும் முன்பே திருமணம் முடிந்து, மகன் அன்டோன் வில்ஹெம் பிறந்துவிட்டான்.

தனக்குத் தெரிந்த தச்சுத் தொழிலைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்று ஸ்டீன் நகரத்துக்குக் குடிபெயர்ந்தார். அங்கே பென்சில் தயாரிக்கும் தொழில் அறிமுகமாகி, முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தது. தச்சுத் தொழில் செய்து கொண்டிருந்தவர்களின் சைடு பிசினஸே பென்சில் தயாரிப்புதான்.
இரண்டு வருடங்களில் ஸ்டீன் நகரிலேயே முக்கியமான தச்சராகி விட்டார் காஸ்பர். கிடைக்கும் நேரத்தில் பென்சில் தயாரிக்கவும் கற்றுக்கொண்டார்.
அவர் இருந்த இடத்தைச் சுற்றிலும் பென்சில் தொழிற்சாலைகள். இருந்தாலும் 1761ம் வருடம் பத்துக்குப் பத்து அறையில் பென்சில் தயாரிப்புக்காக ஒரு ஒர்க் ஷாப்பை நிறுவினார். அப்போது காஸ்பரின் வயது 31.

குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, கூடுதல் வருமானம் வேண்டி திறக்கப்பட்ட ஒர்க் ஷாப் இது. இதற்கு அவர் பெயர் கூட வைக்கவில்லை. இதுதான் இன்று உலகின் மிகப்பெரிய பென்சில் தயாரிக்கும் ‘ஃபேபர் - கேஸ்டல்’ நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
தச்சு வேலை இல்லாத நேரங்களில் மட்டுமே பென்சில்களைத் தயாரிப்பார். பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார். ஆனால், ஸ்டீனைச் சுற்றி பென்சில் தயாரிப்பில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தச்சர்களிடமிருந்து வேறுபட்டவர் காஸ்பர்.

ஆம்; அந்த தச்சர்கள் எல்லோருமே சுத்தமான கிராஃபைட்டைக் கொண்டு பென்சில்களைத் தயாரித்தனர். அதனால் பென்சில் எளிதில் உடைவதாகவும் தரமற்றதாகவும் இருந்தது. பென்சில் உடைந்தால் புதுப்பென்சில்களை மக்கள் வாங்குவார்கள்; வியாபாரம் பெருகும் என்ற எண்ணம் வேறு. அதனால் அவர்கள் சுத்தமான கிராஃபைட்டில் தரமற்ற பென்சில்களைத் தொடர்ந்து தயாரித்தனர்.

இதிலிருந்து வித்தியாசம் காட்டி, உடையாத பென்சிலைத் தயாரித்தால் சந்தையில் நல்ல இடத்தைப் பிடித்துவிடலாம் என்று திட்டமிட்டார் காஸ்பர்.
மற்ற தச்சு வேலைகளை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு, பகல் பாராமல் பரிசோதனையில் இறங்கினார். 1771ம் வருடம் கிராஃபைட்டுடன் சல்ஃபர், ஆண்டிமனி, பிசின் கலந்து புதுவிதமான பென்சிலை உருவாக்கினார்.

அவர் எதிர்பார்த்தது போலவே வலிமையான பென்சிலாக அது இருந்தது. காஸ்பர் தயாரித்த பென்சில்களை அவருடைய மனைவி உள்ளூர் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வார். வேலைக்குக்கூட இன்னொரு ஆளை நியமிக்கவில்லை. ஒர்க் ஷாப்பை பெரிய நிறுவனமாக மாற்றி, பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று காஸ்பர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 1784ல் அவர் மரணிக்கும் வரை ஆரம்பித்த அளவிலேயே பிசினஸை நடத்திவந்தார்.

அவருக்குப்பின் வந்த மகன் அன்டோன் ஒர்க் ஷாப்பை நிர்வகிக்கத் தொடங்கினார். அப்பா வுடைய கலைத்திறன் அன்டோனிடமும் வெளிப்பட்டது. அப்பா சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்து ஸ்டீனில் இடம் வாங்கி, ‘ஏ.டபிள்யூ. ஃபேபர்’ என்ற பென்சில் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்தார் அன்டோன்.

அவர் தொழிற்சாலையை நிறுவிய இடத்தில்தான் இன்றைய ‘ஃபேபர் - கேஸ்டலி’ன் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. அன்டோனுடைய காலத்துக்குப் பிறகு நிகழ்ந்த பொருளாதாரச் சரிவிலிருந்து நிறுவனத்தைத் தாங்கிப்பிடித்து அதன் தொடர் பயணத்துக்கு அச்சாணியாக இருந்தவர் அவருடைய மகன் ஜார்ஜ்.

லோதர் ஃபேபர்

காஸ்பரைப் போலவே அவருக்குப் பின் வந்த வாரிசுகளும் பிசினஸை விரிவாக்க எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. கிடைத்த லாபமே போதும் என்று நின்றுவிட்டனர்.  இதையெல்லாம் மாற்றி நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டவர் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த லோதர் ஃபேபர். பென்சில்களை அழகான அட்டைப்பெட்டியில் வைத்து விற்கும் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் இவரே.

தவிர, பென்சில்களை இலகு வாகப் பிடித்து எழுதுவதற்காகவும் ஓவியம் வரைவதற்காகவும் அதன் வடிவத்திலும் பல மாற்றங்களைச் செய்தார். இதைத்தான் இன்றைய பென்சில் தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்றுகின்றன. முக்கியமாக குழந்தைகளைக் கவரும் விதமாக பென்சில்களின் மேல் ஓவியங்களைக் கொண்டு வந்து புது டிரெண்டை செட் செய்ததும் லோதர்தான். அத்துடன் பிசினஸை விரிவாக்கி குடும்ப நிறுவனத்தை ஆழமாக நிலைநிறுத்தினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பென்சில் தயாரிப்பதில் உலகின் மையமாக உருவெடுத்தது ஸ்டீனைச் சுற்றியிருந்த தொழிற்சாலைகள். அப்போது அங்கிருந்த 25 தொழிற்சாலை களில் வருடத்துக்கு 25 கோடி பென்சில்கள் தயாரிக்கப்பட்டன. இவர்களுடன் போட்டி போட்டு ‘ஃபேபர் - கேஸ்டலை’ வளர்த்தெடுத்ததோடு, உலகின் தலைசிறந்த பென்சில் தயாரிப்பாளராகவும் விஸ்வரூபம் எடுத்தார் லோதர்.

மட்டுமல்ல, தன்னுடைய ஊழியர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்து வள்ளலாகவும் திகழ்ந்தார். இவருடைய தம்பி எபர்ஹார்டு ஃபேபர் நியூயார்க்கில் கிளையைத் திறந்து அங்கே வெற்றிக்கொடி நாட்டினார். இன்னொரு சகோதரர் ஜோஹன் ஃபேபர், லோதருடன் குடும்ப பிசினஸுக்கு உதவியாக இருந்தார். ஸ்டீனுக்கு அருகில் தனியாக ஒரு பென்சில் தொழிற்சாலையைத் தொடங்கி, ரப்பரைத் தயாரித்து தொழிலை விரிவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார்.

ஃபேபர் - கேஸ்டல்

லோதரின் ஆண் வாரிசு இறந்துபோக, பிசினஸ் நிர்வாகம் பேத்தி ஒட்டிலியின் கைக்கு வந்தது. அவர் ஜெர்மனியின் பெரும் பணக்காரரான அலெக்சாண்டர் கேஸ்டலை 1898ல் திருமணம் செய்தார். புதிய ஆண் வாரிசான கேஸ்டல் பொறுப்பை ஏற்க, நிறுவனத்தின் பெயர் ‘ஃபேபர் - கேஸ்டலா’க மாறியது.

அலெக்ஸாண்டரின் மரணத்துக்குப் பிறகு அவருடைய மகனும், ஏழாம் தலைமுறையைச் சேர்ந்தவருமான ரோலண்ட் வான் ‘ஃபேபர் - கேஸ்டல்’ நிர்வாகத்தை தனது கையில் எடுத்தார். அப்போது அவருடைய வயது 23. பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உலகமே தடுமாறிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டு உலகப்போர்கள் வேறு. இளைஞனான ரோலண்டுக்கு பிசினஸை நடத்துவதே பெரும் சவாலாகிவிட்டது.

குறிப்பாக 1920களில் நிலவிய பொருளாதார மந்த நிலையால் பென்சிலின் விற்பனை அதலபாதாளத்தில் வீழ்ந்தது பிசினஸைத் தக்கவைப்பதற்காக பென்சிலைத் தாண்டி அவர் யோசித்ததன் விளைவாக பேனா தயாரிப்பிலும் ‘ஃபேபர்- கேஸ்டல்’ கால் பதித்தது.

அடுத்து வந்த அன்டோன் வூல்ஃப்கேங் நிறுவனத்தை நவீன மயமாக்கி, விலையுயர்ந்த ஸ்டேஷனரி பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமாக ‘ஃபேபர் - கேஸ்டலை’ உயர்த்தினார். பென்சில் தயாரிப்பதற்காக சொந்தமாக தோப்புகளை உருவாக்கி சூழல் சம்பந்தமான பல விருதுகளையும் இவர் அள்ளியிருக்கிறார்.

தனித்துவம்

பென்சில் தயாரிப்பதற்காக 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பைன் மரங்களை வளர்க்கிறது இந்நிறுவனம். ஒவ்வொரு வருடமும் 3 லட்சம் மரங்களை நடுகின்றனர். நிறுவனத்துக்குச் சொந்தமான மூன்றில் ஒரு பங்கு தோப்புகளை விலங்குகள், பறவைகளின் வாழிடத்துக்காக அப்படியே விட்டுவிட்டனர். அந்தத்தோப்புகளில் கைவைப்பதே இல்லை. இவர்களின் தோப்புகள் 9 லட்சம் டன் கார்பன்-டை-ஆக்சைடை உள்ளிழுத்து சுற்றுச்சூழல் சமநிலைக்கு உதவுகிறது.

தயாரிப்புகள்

பென்சில்கள், பேனாக்கள், நோட் புக், டைரி, காலண்டர் உட்பட அனைத்து விதமான ஸ்டேஷனரி பொருட்கள். இன்று‘பென்சில் கிங்’ என்று நிறுவனத்தை செல்லமாக அழைக்கின்றனர். இன்று உலகின் மிகப்பெரிய பென்சில் தயாரிக்கும் நிறுவனமே ‘ஃபேபர் - கேஸ்டல்’தான். ஒவ்வொரு வருடமும் சுமார் 230 கோடி பென்சில்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிறுவனத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை செய்கின்றனர். பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தொழிற்சாலை களும் இருபதுக்கும் மேலான நாடுகளில் விற்பனை நிறுவனங்களும் இயங்குகின்றன. 120 நாடுகளில் விற்பனைப் பிரதிநிதிகள் இருக்கின்றனர். ஒன்பதாம் தலைமுறையைச் சேர்ந்த சார்லஸ் வான் ஃபேபர் - கேஸ்டலின் நிர்வாகத்தின் கீழ் ஸ்டீபன் லீட்ஸ் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். 2018 - 19ம் ஆண்டின் மொத்த வருமானம் சுமார் 5200 கோடி ரூபாய்!

த.சக்திவேல்