ரத்த மகுடம்-135
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
‘‘உடனடியாக உன்னை சிரச்சேதம் செய்ய வேண்டுமா..?’’ நிதானமாகக் கேட்டார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்.அருகில் நின்றிருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கு பெருமையாக இருந்தது. தான், கூறிய உண்மைகள் அனைத்தையும் சில கணங்களுக்கு முன் செவிமடுத்தவர், இப்பொழுது எவ்வளவு நாசூக்காக அவை அனைத்தையும் சிவகாமியின் உதடுகளில் இருந்தே வரவழைக்க தூண்டில் வீசுகிறார்...
சிரமப்பட்டு தன் முகத்தில் அகம் பிரதிபலிக்காதபடி பார்த்துக் கொண்டார். மன்னர் அரங்கேற்றும் நாடகத்தின் கதாபாத்திரமாக பங்கேற்க முடிவு செய்தார். சிவகாமியை திகைப்புடன் காண்பதுபோல் பார்த்தார். மன்னருக்கு அவள் அளிக்கவிருக்கும் பதிலுக்காகக் காத்திருந்தார். ‘‘ஆம் மன்னா...’’ விடையளித்தாள் சிவகாமி.
‘‘சிரச்சேதம் என்றால் என்னவென்று தெரியுமா..?’’ ‘‘அறிவேன் மன்னா... தலையைச் சீவுவது!’’ ‘‘எதற்காக உன் சிரசைச் சீவ நான் உத்தரவிட வேண்டும்..?’’ ‘‘சாளுக்கியர்களின் பொக்கிஷங்களை நான் கொள்ளை அடித்திருப்பதால்!’’
‘‘புரியவில்லையே..?’’ விக்கிரமாதித்தரின் புருவங்கள் சுருங்கின. ‘‘பொக்கிஷங்களை நீ கொள்ளையடித்தாயா..?’’ ‘‘அப்படித்தான் சாளுக்கிய வீரர்கள் சொல்கிறார்கள்...’’ ‘‘யாரிடம்..?’’‘‘தங்களிடம்!’’
‘‘என்னிடம் யாரும் அப்படி ஏதும் கூறவில்லையே..?’’ ‘‘கூறப் போகிறார்கள்... அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன...’’ ‘‘கண்ணாரக் கண்டாயா..?’’ ‘‘காதாலும் கேட்டேன்!’’ ‘‘தீர விசாரிக்க மாட்டேனா..?’’
‘‘விசாரணை நடைபெறும் வரையில் என்னை காஞ்சி சிறையில் அடையுங்கள்!’’ ‘‘வேறு சிறையில் அடைக்கக் கூடாதா..?’’ ‘‘காஞ்சி சிறைதான் பாதுகாப்பானது மன்னா...’’ ‘‘யாருக்கு..?’’ ‘‘காஞ்சியை ஆளும் சாளுக்கியர்களுக்கு!’’
‘‘ஏன்... வீட்டுக் காவலில் வைக்கக் கூடாதா..?’’ ‘‘அப்படிச் செய்தால் சாளுக்கிய வீரர்கள் உங்கள் மீது நம்பிக்கை இழப்பார்கள்...’’ ‘‘தங்கள் மன்னர் மீது நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு சாளுக்கிய வீரர்கள் பலவீனமானவர்களா..?’’ ‘‘பலம் வாய்ந்தவர்களையும் பலவீனப்படுத்தும் ஆற்றல் கரிகாலனின் சொல்லுக்கு உண்டு!’’ ‘‘அச்சொல்லால் என் மீது என் வீரர்கள் நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு எனது செயல்பாடுகள் இருக்கிறதா..?’’
‘‘அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் மன்னா...’’ ‘‘அப்பிரசாரத்தை முறியடிக்கும் வார்த்தை என்னிடம் இல்லையென்று நம்புகிறாயா..?’’ ‘‘இருக்கிறது என்று நம்புவதால்தான் மன்னா உடனடியாக சிரச்சேதம் செய்யாவிட்டாலும், முடிவு எட்டும் வரை என்னை சிறையில் அடைக்கச் சொல்கிறேன்...’’‘‘பதட்டத்தில் இருப்பதால் படபடவென்று பேசுகிறாய் சிவகாமி... நிதானித்து என்ன நடந்தது என்று சொல்...’’ அதுவரை அமைதியாக இருந்த ராமபுண்ய வல்லபர் குறுக்கிட்டார்.
‘‘குருவே...’’ ‘‘என்னையா அழைக்கிறாய்..?’’ ராமபுண்ய வல்லபர் ஆச்சர்யப்பட்டார். ‘‘நீங்கள்தானே என் குரு... எனக்கு பயிற்சியளித்து ஆளாக்கி சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவியாக நியமித்து பல்லவ இளவரசியாக பல்லவர்களுக்குள் ஊடுருவவிட்டது தாங்கள்தானே?’’
‘‘ஆம் நானேதான்...’’ ‘‘எனவேதான் தங்களை குரு என்று அழைக்கிறேன்... அழைக்கலாம் அல்லவா..?’’ ‘‘அழைப்பில் என்ன இருக்கிறது..?’’‘‘மரியாதைதான் முக்கியம் என்கிறீர்களா..? அதுவும் சரிதான்... உள்ளம் முழுக்க நிரம்பி வழியும் மரியாதையுடனேயே தங்களை குருவே என்று அழைக்கிறேன்...’’
‘‘விஷயத்துக்கு வா சிவகாமி... என்ன நடந்தது என்று சொல்...’’ விக்கிரமாதித்தர் இடைமறித்தார். குரலில் இருந்த கட்டளை சுற்றி வளைத்து பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. ‘‘மன்னா... குருவே... மதுரை பாதாளச் சிறையில் இருந்து பரஞ்சோதியால் வடிவமைக்கப்பட்ட, இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இரு அசுரப் போர் வியூகங்களை எனது கச்சையில் எழுதி எடுத்து வந்தேன் அல்லவா..?’’ ‘‘ம்...’’
‘‘அந்த வியூகங்களை நான் அரக்கின் வழியாகவோ அல்லது வேறு கருவிகளாலோ எனது கச்சையில் தீட்டவில்லையாம்...’’ ‘‘ம்...’’‘‘தேவ மூலிகையால் தீட்டினேனாம்!’’‘‘அப்படியா..?’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் திகைப்பு. ‘‘ஆம் குருவே... பொக்கிஷங்கள் இருக்கும் இடத்தில்தான் தேவ மூலிகைகள் வளருமாம்... எனவே போர் வியூகம் என்னும் பெயரில் நான் வைத்த புள்ளிகள் அனைத்தும் படைகளை நகர்த்தும் வழிமுறைகள் அல்லவாம்... மாறாக சாளுக்கிய தேசத்தின் பொக்கிஷங்கள் எந்தெந்த இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிவிக்கும் இடங்களாம்...’’
‘‘என்ன போர் அமைச்சரே இது... ஒரு மர்மக் கதையைக் கேட்பது போல் இருக்கிறதே..?’’ ராமபுண்ய வல்லபரை புருவம் விரிய பார்த்தார் விக்கிரமாதித்தர். ‘‘எனக்கு தேவதைக் கதைகளைக் கேட்பது போல் இருக்கிறது மன்னா...’’ தன் சிரசில் இருந்த பட்டுத் தலைப்பாகையைத் தடவினார் சாளுக்கிய போர் அமைச்சர்.
‘‘இதற்கே அசந்துவிட்டால் எப்படி குருவே... இன்னும் விஷயம் இருக்கிறது...’’ சிவகாமி தன் இமைகளைச் சிமிட்டினாள். ‘‘அப்படியா! சொல்... சொல்...’’‘‘உங்களிடம் நான் வழங்கியவை பரஞ்சோதியால் வடிவமைக்கப்பட்ட அசுரப் போர் வியூகங்களே அல்ல... நான் நாடகமாடுகிறேன்... என்றெல்லாம் கரிகாலன்...’’‘‘இரண்டாவது முறையாக ‘ன்’ விகுதியை உச்சரிக்கிறாய் சிவகாமி...’’ விக்கிரமாதித்தரின் உதடுகள் நகைத்தன. ‘‘எந்தச் சூழ்நிலையிலும் ‘ர்’ விகுதியுடன் கரிகாலர் என்றுதானே அழைப்பாய்..?’’‘‘அது... அது... அவனுக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கிறது மன்னா..?’’ அழுத்தம்திருத்தமாக ‘ன்’ விகுதியை சிவகாமி பயன்படுத்தினாள்.
‘‘சரி... மேலே தொடரு...’’‘‘... எங்கு நிறுத்தினேன்... ஆம்... என்றெல்லாம் கரிகாலன் உங்களிடம் பொய் சொன்னதும் நான் கோபித்துக்கொண்டு சென்றேன் அல்லவா..? நேராக சாளுக்கிய தேசத்துக்குச் சென்று பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்ட இடங்களில் இருந்து அவற்றைக் களவாடி பல்லவர்களிடம் ஒப்படைத்தேனாம்...’’‘‘இப்படிச் சொல்வது கரிகாலரா... இல்லை இல்லை... கரிகாலனா..?’’ ராமபுண்ய வல்லபர் தன் கண்களால் நகைத்தார்.‘‘ஆம் குருவே! அவனேதான்! இந்தப் பிரசாரத்தை எப்படி சாளுக்கிய படைகளுக்குள்...’’‘‘அதாவது ‘நம்’ படைகளுக்குள்...’’ விக்கிரமாதித்தர் குறுக்கிட்டார்.
‘‘ஆம் மன்னா... ‘நம்’ படைகளுக்குள் பரப்பினான் என்று தெரியவில்லை... ஆனால், தொண்டை மண்டலம் முழுக்க பரவியிருக்கும் சாளுக்கிய வீரர்கள் அனைவரும் இது குறித்துதான் தங்களுக்குள் பேசி விவாதித்து வருகிறார்கள்... எல்லோரும் என்னை குற்றவாளி போல் பார்க்கிறார்கள்... என்னைக் குறித்து எவ்வளவு அவதூறு செய்தாலும் பரவாயில்லை... அதை நான் தாங்கிக் கொள்வேன்... ஆனால், இதை மையமாக வைத்து நம் மன்னரின்...’’ ‘‘...என்னையா குறிப்பிடுகிறாய்..?’’ சாளுக்கிய மன்னர் இடைமறித்தார்.
‘‘ஆம் மன்னா! நீங்கள் ஒருவர்தானே எனக்கு மன்னர்! கரிகாலனின் பிரசாரத்தால் உங்களுக்குத்தானே இழுக்கு..?’’ ‘‘அது எப்படி நம் மன்னருக்கு இழுக்காகும்..?’’ ‘‘என்ன குருவே இப்படிக் கேட்டுவிட்டீர்கள்..?’’ ராமபுண்ய வல்லபரை ஏறிட்டாள் சிவகாமி. ‘‘சாளுக்கிய தேசத்தின் பொக்கிஷங்களைக் களவாடிய ஒரு பெண்ணை இன்னமும் சாளுக்கிய மன்னர் நம்புகிறார் என்பதை எப்படி ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் ஏற்பான்..?’’‘‘ஏற்காமல் எப்படி சந்தேகப்படுவான் சிவகாமி..?’’கேட்ட விக்கிரமாதித்தரை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சிவகாமி.
‘‘நீ சாதாரணப் பெண்ணல்ல சிவகாமி... சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி... நம் தேசத்தின் பொக்கிஷங்களை நீ எடுக்கிறாய்... எடுத்திருக்கிறாய் என்றால்... அதற்குப் பின்னால் வலுவான காரணமிருக்கும் என்றுதானே சாதாரண சாளுக்கிய வீரனும் நினைப்பான்..?’’ ‘‘அது... அது மன்னா...’’‘‘அதீதமாக குழம்பியிருக்கிறாய் என்று நினைக்கிறேன்... கொஞ்சம் சூரணமும் ஒரு குவளை கஷாயமும் குடித்தால் சரியாகி விடுவாய்...’’ சொன்ன விக்கிரமாதித்தர், ‘‘மருத்துவரே...’’ என்றழைத்தார்.
திரை மறைவில் இருந்து சாளுக்கியர்களின் தலைமை மருத்துவர் வெளிப்பட்டார்.சிவகாமியை விட ராமபுண்ய வல்லபர் அதிகம் அதிர்ந்தார். மன்னரைப் பார்க்க அறைக்குள், தான் நுழைந்தது முதல் இவர் இங்குதான் மறைந்திருந்தாரா... அப்படியானால் மன்னருக்கும் தனக்கும் நிகழ்ந்த அனைத்து உரையாடல்களையும் அவர் கேட்டிருப்பார் என்றுதானே பொருள்... எதற்காக இவரை திரைக்குப் பின்னால் மறைந்திருக்க வைத்துவிட்டு தன்னிடம் மன்னர் அப்படிப் பேசினார்... நெகிழ்ந்தார்..?‘‘சிவகாமிக்கு சூரணமும் கஷாயமும் கொடுங்கள்...’’‘‘வேண்டாம் மன்னா... நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன்...’’ சிவகாமி சொல்லச் சொல்ல தலைமை மருத்துவர் அவளை உடும்பாகப் பிடித்து திரைக்குப் பின்னால் இழுத்துச் சென்றார்.
‘‘மன்னா...’’மருத்துவரும் சிவகாமியும் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த விக்கிரமாதித்தர், திரும்பி ராமபுண்ய வல்லபரைப் பார்த்தார். ‘‘என்ன நடக்கிறது மன்னா..?’’‘‘அறிவதற்காகத்தான் நம் தலைமை மருத்துவரை பரிசோதிக்கச் சொல்லியிருக்கிறேன்... பல்லவ ஒற்றர் படையைச் சேர்ந்த நங்கை கொண்டு வந்த கச்சையை எரித்ததும் தேவ மூலிகையால் அவை எழுதப்பட்டிருப்பதை... நெய்யப்பட்டிருப்பதைக் கண்டீர்கள் அல்லவா..?’’ ‘‘ஆம் மன்னா...’’‘‘மதுரையில் நான் கண்டது வேறு! அங்கு கச்சையைக் கொண்டு வந்தவன் கரிகாலனின் நெருங்கிய நண்பனான சீனன்.
மதுரை தச்சர் வீதிக்கு வந்த அவனிடம் இருந்த கச்சையில் வரையப்பட்டிருந்தது அசுரப் போர் வியூகம் அல்ல! எந்திரப் பொறிகள்! அந்தக் கணத்தில்தான் நம்மைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் வலையை உணர்ந்தேன்... போர் அமைச்சரே... உண்மையிலேயே பரஞ்சோதி மூன்று அசுரப் போர் வியூகங்களை அமைத்தாரா... அதில் இரண்டை நரசிம்மவர்ம பல்லவன் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டாரா என்று தெரியாது... ஆனால், அப்படியொரு செய்தியை கசிய விட்டு கரிகாலன் மிகப்பெரிய நாடகம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறான்... எதற்கு என்றுதான் தெரியவில்லை...’’ ‘‘மன்னா...’’
‘‘காஞ்சியை நோக்கி நாம் படைதிரட்டி வந்தது எதிர்பார்க்கக் கூடியது... என் தந்தையும் நம் மாமன்னருமான இரண்டாம் புலிகேசி அடைந்த படுதோல்விக்கும் நம் தலைநகர் வாதாபி தீ வைத்துக் கொளுத்தப்பட்டதற்கும்... என் தந்தையின் சிரசு வெட்டப்பட்டதற்கும் ஒரு மகனாக மட்டுமல்ல, இன்றைய சாளுக்கிய தேசத்தின் மன்னனாகவும் நான் பழிவாங்குவேன் என்பது ஒவ்வொரு பல்லவ குடிக்கும் தெரியும்... எதிர்பார்த்தே காத்திருந்தார்கள்... ஆனால்... பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மன் மட்டும் ஏன் நம்மை எதிர்பார்க்காதது போல் நடந்துகொண்டான்..? நாம் வருவதை அறிந்து நம்மை படையுடன் எதிர்கொள்ளாமல் ஏன் காஞ்சியை நம்மிடம் விட்டுவிட்டு மறைந்தான்..?’’
‘‘மன்னா...’’ ‘‘இப்பொழுது ஏன் நம்மை வீழ்த்த படை திரட்டுகிறான்..? இதை ஏன் இத்தனை காலங்களாக அவன் செய்யவில்லை..?’’ ‘‘மன்னா...’’‘‘கரிகாலன் ஏன் என்னை தொடர்பு கொண்டு படை திரட்டி வரும்படி சொன்னான்..? சிவகாமி ஏன் உங்களைச் சந்தித்து உங்கள் நம்பிக்கையைப் பெற்று சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவியாக உயர்ந்தாள்..?’’
‘‘...’’‘‘அனைத்துக்கும் மேல்... இப்பொழுது ஏன் சாளுக்கியர்களின் பொக்கிஷங்கள் குறித்து இந்தப் பெண் பேசவேண்டும்..?’’ விக்கிரமாதித்தர் இப்படிக் கேட்டு முடித்ததும் திரை மறைவில் இருந்து தலைமை மருத்துவர் வெளிப்பட்டார்.‘‘மன்னா... நீங்கள் சந்தேகப்பட்டது சரி... இந்த அறைக்கு இப்பொழுது வந்தவள் நம் ஒற்றர் படைத் தலைவியான சிவகாமி அல்ல! மூலிகைத் தைலத்தால் தன் முகத்தை சிவகாமி போல் மாற்றிக்கொண்ட பல்லவ ஒற்றர் படையைச் சேர்ந்த நங்கை!’’ அதேநேரம் -சாளுக்கிய தேசத்தில் எதிர்ப்பட்ட சாளுக்கிய வீரர்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தான் கரிகாலன்!அவன் பார்வை பதிந்த இடத்தில் தேவ மூலிகை வளர்ந்திருந்தது!
(தொடரும்)
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|