இந்த சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை!



தம்மாத்துண்டு நாடான - ஆமாம். மக்கள் தொகை 32 லட்சம் - மங்கோலியா, சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ளது. நிலக்கரி ஏற்றுமதிதான் இந்நாட்டின் வாழ்வாதாரம். பவுத்தர்கள் அதிகளவில் வாழும் இந்நாட்டை ‘மங்கோலிய மக்கள் கட்சி’ ஆட்சி செய்து வருகிறது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியதுமே தனது எல்லைகளை மங்கோலியா மூடியது. எனவே அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகக் குறைவாகவே காணப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் குழந்தையை ஈன்றெடுத்த தாய் ஒருவர் கொரோனா பாதுகாப்பு உடைகள் இன்றி சாதாரண பைஜாமா உடையில் ஓர் அரசு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் அந்நாட்டு மக்களை கொந்தளிக்கச் செய்தது.

காரணம், தாய்மார்களை அதிகம் மதிக்கும் கலாசாரம் கொண்ட நாடு மங்கோலியா. எனவே, தலைநகரான உலான்பாடரில் மக்கள் போராட்டம் நடத்தினர். உடனே பிரதமர் உக்னாஜின் குரேல்சுக், காவல்துறையை ஏவி தடியடி நடத்தவில்லை. மாறாக, நடந்ததற்கு பொறுப்பேற்று, தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்!

காம்ஸ் பாப்பா