தனது ரசிகரின் மகள் திருமணத்துக்கு வாழ்த்து வீடியோ அனுப்பிய இந்தி ஹீரோ!



சிறுகதை எழுத்தாளர்களில் இன்று கவனிப்பை ஈர்த்துள்ள ஒரு சிலரில் அப்சலும் ஒருவர். சிறுகதைகள் மட்டுமின்றி, கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என 2 ஆயிரத்துக்கும் அதிகமான படைப்புகளை கொடுத்திருக்கிறார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்த அப்சல், 9ம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே எழுத ஆரம்பித்தவர். பேரணாம்பட்டு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிற்றூர். இங்கு உருதுதான் பிரதான மொழி. அப்சலும் உருது மொழிக்காரர். அப்படி இருந்தும் தமிழ் மீது கொண்ட காதலால், தமிழில் கதைகளும் கவிதைகளும் எழுத ஆரம்பித்தார்.

‘‘சிறு வயதில் எனக்கு நண்பர்கள் கிடையாது. பேசுவதற்கு மனிதர்கள் கிடைக்காமல் எனக்குள் நான் பேசிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது நானாகவே தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். அது எல்லாம் கதைகள். ஆம், நான் நிறைய கதைகளை மனதுக்குள் உருவாக்கிக் கொண்டு அதை அப்படியே சொல்லிக் கொண்டிருப்பேன். இதை எழுத்தாக எழுத ஆரம்பித்தேன். அப்படி 14 வயதில் நான் எழுதிய கதைதான் ‘அமர்ஜோதி’. அமர் நாயகன், ஜோதி நாயகி. இது காதல் கதை.

இதுபோல் பல கதைகள் எழுதி, மறைத்து வைத்துக்கொள்வேன்...’’ எனக்கூறும் அப்சல், சினிமா மீதான தனது அதீத மோகத்தைப் பற்றியும் விவரிக்கிறார்.‘‘சென்னைதான் எங்கள் பாட்டி ஊர். அவ்வப்போது அங்கு சென்று வருவேன். அப்போது தியேட்டர்களில் வரும் புதிய படங்களைப் பார்த்துவிட்டு பேரணாம்பட்டுக்கு திரும்புவேன்.

பேரணாம்பட்டில் புதிய படங்கள் வெளியாகாது. திரைக்கு வந்து ஓராண்டுக்குப் பிறகுதான் வெளியாகும். அதனால் பள்ளியில் மற்ற மாணவர்களிடம், சென்னையில் நான் பார்த்த படங்களின் கதையைக் கூறுவேன். அவர்கள் ரசித்துக் கேட்பார்கள். இப்படித்தான் கதை சொல்லும் பழக்கமும் எனக்குள் ஆரம்பித்தது. அதன்பிறகு அது ஒரு போதையாகவே மாறிப்போனது.

அடிக்கடி சென்னைக்குச் செல்வதும் அங்கு பார்த்த படத்தின் கதையை மனதில் பதிந்துகொண்டு வந்து பேரணாம்பட்டில் சொல்வதும் எனது வழக்கமாகிப்போனது. இதுபோல் படங்கள் பார்க்கும்போது, எனக்கு திரையில் அறிமுகமானார் எனது ஹீரோ, தர்மேந்திரா.

அவரது ஹேர் ஸ்டைல், வசன உச்சரிப்பு பாணி, உடல் மொழி, சண்டைக் காட்சிகளில் வெளிப்படுத்தும் ஆவேசம், காதல் காட்சிகளில் கண்ணை கொள்ளைகொள்ளும் புன்னகை என அவரது பித்தனாகிப்போனேன். அப்போது நான் பார்த்த அவரது ‘ரஸியா சுல்தான்’ படத்தைப் பற்றிய எனது அலசல் கட்டுரையை ‘வண்ணத்திரை’ இதழுக்கு அனுப்பினேன். 1983ல் பிரசுரமானது. அதுதான் பத்திரிகையில் வெளியான எனது முதல் படைப்பு. தொடர்ந்து எழுதவும் ஆரம்பித்தேன்.

கல்லூரியில் படிக்கும்போதுதான் எனக்கு நண்பர்கள் வட்டம் பெருகியது. அப்போது ‘மலர்ச்செண்டு’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்தேன். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என இதில் நான் எழுதுவேன். எனது நண்பர்களும் எழுதுவார்கள். எழுத்து மீதான பற்று அதிக மாகிக் கொண்டிருக்க மறுபுறம் சினிமா மீதான மோகமும் குறைந்தபாடில்லை.

தர்மேந்திரா நடித்த ‘அலிபாபா அவுர் 40 சோர்’ இந்திப் படத்தை பேரணாம்பட்டில் திரையிட வேண்டும் என எனக்குள் ஆசை ஏற்பட்டது. அங்குள்ள தியேட்டரில் அந்தப் படத்தை வெளியிட அப்போது 400 ரூபாய் ஆகும் எனத் தெரிந்தது. 1985ல் அது பெரிய தொகைதான் எனக்கு. அப்போது அம்மாவிடம் ரூ.100 வாங்கினேன். மீதியை நண்பர்கள் படுதய்யூப், ஷகில் கொடுத்து உதவினார்கள். படத்தை திரையிட்டோம்.

இதில் எனக்கு நஷ்டம்தான். ஆனாலும் அப்போதே சினிமா விநியோகஸ்தராகிவிட்ட சந்தோஷம் எனக்குள் பரவியிருந்தது...’’ எனச் சொல்லும் அப்சல், சென்னைக்கு வந்ததும் சிறுகதை, கட்டுரைகளில் கவனம் செலுத்தியது முதல் இப்போது தர்மேந்திரா பற்றிய புத்தகத்தை தமிழில் வெளியிட்டது வரையும் நெகிழ்ந்து பேசுகிறார்.

‘‘வாழ்வாதாரத்துக்காக குடும்பத்துடன் சென்னை வந்துவிட்டோம். தோல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தேன். அந்த சமயத்தில் எழுதுவதற்கு சிறிய இடைவெளி. மீண்டும் 90களில் எழுத ஆரம்பித்தபோது, ‘தினகரன்’, ‘தினமலர்’, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘இந்தியா டுடே’, ‘குங்குமம்’, ‘குமுதம்’ என பலவற்றிலும் சிறுகதைகள் வெளியாகின.

ஒருமுறை தர்மேந்திரா சென்னை வருகிறார் என தகவல் கிடைத்தது. லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஷ்ரமம் பள்ளி ஆண்டு விழாவுக்காக அவர் வந்திருந்தார். காமராஜர் அரங்கில் அப்போதுதான் முதல்முறையாக நான் விரும்பும் தரம்ஜியை நேரில் பார்த்தேன். அவர் முன்
வரிசையில் அமர்ந்திருந்தபோது, அவரைச் சந்தித்துப் பேசினேன்.

அது மறக்க முடியாத தருணம். அப்போது அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது...’’ என்று சொல்லும் அப்சல், தர்மேந்திராவைச் சந்தித்த பிறகு அவரைப் பற்றிய புத்தகத்தை எழுத வேண்டும் என்ற ஆவல் தனக்கு அதிகமானது என்கிறார்.
விடாமுயற்சியில் அவரது நண்பர்கள் கோரி, ‘இருவாட்சி பதிப்பகம்’ நடத்தும் உதயகண்ணன் ஆகியோரின் உதவியால் சமீபத்தில் ‘தர்மேந்திரா- மக்கள் கலைஞன்’ என்ற புத்தகத்தை அப்சல் எழுதி யுள்ளார்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி அப்சலின் நண்பரும் பாலிவுட் பத்திரிகையாளருமான அலி பீட்டர் ஜான் மூலம் தர்மேந்திரா அறிந்தார். உடனே அப்சலுக்கு போன் செய்தும் பேசியிருக்கிறார். அந்த போன் உரையாடலின்போது தர்மேந்திரா அப்சலிடம் கேட்ட கேள்வி, ‘‘இது பணத்துக்காக வெளியிடப்பட்ட நூலா?’’ என்பதுதான்.

உடனே, ‘‘இல்லை... இது மாபெரும் கலைஞனுக்கு ஒரு பாமரனின் குருதட்சணை...’’ என அப்சல் கூறியதும். தர்மேந்திரா நெகிழ்ந்து போயுள்ளார்.
அத்துடன், சமீபத்தில் நடந்த அப்சலின் மகள் ஷானூரின் திருமணத்துக்கு தனது வாழ்த்தை தெரிவிக்கும் வீடியோ ஒன்றையும் பதிவு செய்து தர்மேந்திரா அனுப்பி வைத்திருக்கிறார்.

‘‘40 ஆண்டுகளாக நான் தூரத்திலிருந்து மட்டுமே பார்த்து வந்த எனது நாயகன் இன்று எனக்கு பரிச்சயமானவர் ஆகிவிட்டார். மும்பைக்கு தனது வீட்டுக்கு வரும்படியும் அழைத்துள்ளார். நான் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன். இந்த சந்தோஷத்தில் அடுத்தடுத்து ஆன்மிகம், அரசியல், சிறுகதைத் தொகுப்பு என மேலும் 3 நூல்களையும் எழுதி முடிக்க இருக்கிறேன். விரைவில் அவை வெளியாகும்...’’ என பூரிக்கிறார் அப்சல்.

ஜியா