நான் - அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத்
புதுப் புது இளம் இயக்குநர்கள்கூட சேர்ந்து எனக்கான பாடத்தை கத்துக்கிட்டுதான் இருக்கேன். இன்னைக்கும் நான் ஒரு மாணவன்தான். எல்.வி.பிரசாத் எனக்கு பெரியப்பா. அக்கினேனி சஞ்சீவி என் அப்பா. சினிமாதான் குடும்பத் தொழில். பெரியப்பா, மாமா இப்படி எல்லாரும் சென்னை வரவும், கூடவே நாங்களும் அடுத்தடுத்து வந்து செட்டிலானோம்.
நான் பிறந்தது சென்னைலதான். அம்மா ராதா, அக்கா பங்கஜா. அடையார் புனித மைக்கேல் அகாடமியிலேதான் ஸ்கூல் படிப்பு. அப்பா சினிமா எடிட்டர். ஏழெட்டு படங்களுக்கு இயக்குநர். எப்போதும் வீட்டில் சினிமா, சினிமா, சினிமாதான். ஆனால், என்னவோ தெரியலை 12 வயது வரை எனக்கும் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமதான் இருந்தேன். சினிமா பார்த்தது கூட அவ்வளவா ஞாபகம் இல்லை.
அப்ப எனக்கு தெரிஞ்சதெல்லாம் ரெண்டே விஷயங்கள்தான். ஒண்ணு கிரிக்கெட், அடுத்து நூலகம் போய் புக்ஸ் படிக்கறது. அம்மா, சகோதரி எல்லாம் இப்படி நான் இருக்கணும்னுதான் நினைச்சாங்க. காரணம், வீட்ல அப்பா இருந்து நாங்க பார்த்ததே இல்லை. எப்பவும் ஸ்டூடியோவுலதான் இருப்பார். இதனாலயே நான் சினிமா துறைக்கு போகக் கூடாதுனு அம்மாவும் அக்காவும் நினைச்சாங்க.
இப்படியே வாழ்க்கை போயிட்டிருந்தப்ப வீட்ல ஒரு அசம்பாவிதம். என் மூத்த அக்கா ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அந்த சோகத்துல இருந்து எங்க குடும்பம் மீள எங்க சிந்தனையை வேறு பக்கம் திருப்பினோம்.சினிமா என்னை ஆக்கிரமிச்சது அப்பதான். ஃப்ரெண்ட் வீட்ல அப்ப டிவி வாங்கினாங்க. தூர்தர்ஷன்ல படங்கள் போட ஆரம்பிச்சாங்க. நானும் சினிமா பார்க்கத் தொடங்கினேன்.
அந்த நேரம்தான் +2 அறிமுகம். வீட்ல என்னை காமர்ஸ் படிக்க வைக்க விரும்பினாங்க. அக்கா பேங்க் வேலைல இருந்ததால என்னையும் அந்தப் பாதைல போக வைக்க நினைச்சாங்க. எனக்கோ இலக்கியம் படிக்கணும், எழுதணும்னு ஆசை. அப்படிதான் நியூ காலேஜுல ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன்.
கல்லூரிப் படிப்பு முடிஞ்சது. தில்லில ஜர்னலிசம் படிக்கலாம்னு விண்ணப்பிச்சேன். ‘அழைப்பு வரும்வரை வீட்ல ஏன் சும்மா இருக்க... என் கூட வா’னு அப்பா தன் எடிட் ரூமுக்கு கூட்டிட்டுப் போனார்.சீன்களா அங்க வருது... மாலைக்குள்ள அதை கச்சிதமா எடிட் செய்து, கோர்த்து ஒரு கதையா தயார் செய்யறாங்க. ஏற்கனவே இலக்கியம் படிக்கற பழக்கம் இருந்ததால இந்த கதைகள் தயார் செய்வது பிடிச்சிருந்தது.
அப்பா என்னைக்கும் எனக்கு பாடம் எடுக்கும் வாத்தியாரா இருந்ததே இல்ல. ‘நீயா பார்த்து புரிஞ்சு கத்துக்கோ’ மாதிரிதான் எங்களை நடத்துவார். எதிலும் எங்க விருப்பம்தான் முக்கியம்னு விட்டுடுவார். அங்க இருந்த அப்பாவின் அஸிஸ்டெண்ட்ஸுக்கு என்னை சின்ன வயசுல இருந்தே தெரியும். உட்கார வெச்சு கத்துக் கொடுக்க ஆரம்பிச்சாங்க.
அப்பதான் 70MM அறிமுகம். அப்பா, பெரியப்பா எல்லாம் அந்த வேலைல மும்முரமா இருக்க... இங்க நான் எடிட்டிங் டேபிளில் இருக்கேன். வீட்ல ஏதோ மூணு மாசம்தானேனு நினைச்சிட்டு இருக்காங்க. அக்கா போன் செய்து பேங்க் வேலைக்கு அப்ளை பண்ண சொன்னாங்க. நான் செய்யவே இல்ல. ஜர்னலிஸம் கோர்ஸுக்கு அப்ளை செய்ததோடு சரி.
மூணு மாசத்துல எடிட்டிங் ரூம்ல ஓரளவு பழக ஆரம்பிச்சு அப்பா கூட சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சேன். தினம் தினம் நிறைய கத்துக்க முடிஞ்சது. அப்ப நெகட்டிவ்ஸை கட் பண்ணி பேஸ்ட் பண்ணணும். எவ்வளவு நேரம் வேலை செய்யறோம்னு கூட தெரியாது. ரெண்டு நாள் கழிச்செல்லாம் வீட்டுக்கு போக ஆரம்பிச்சோம்.
நாலஞ்சு வருஷம் இப்படியே போச்சு. முதற்கட்டமா அஸ்ஸாம், ஒரிசா மக்களுடைய புராஜெக்ட்ஸை நானே எடிட் செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். எல்லாமே அனுபவ பாடம்தான். இதனாலதான் இப்ப உள்ள இயக்குநர்கள் கூட சேர்ந்து ஒர்க் பண்ண முடியுது. நிறைய மொழிகள்ல வேலை செய்ய முடியுது.
இங்க எனக்கு நண்பர்களும் அதிகரிச்சாங்க. அப்படிதான் சந்தோஷ் சிவன் சகோதரர் சங்கீத் சிவன் எனக்கு நட்பானார். அவருடைய ஒரு டாக்குமெண்ட்ரியை நான் எடிட் செய்தேன். அவரே எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளரா ‘ராக்’னு ஒரு படம் செய்தார். எல்லாருமே புதுமுகம். சந்தோஷ் சிவனுக்கும் முதல் படம்.
என்னையும் எடிட்டிங்ல சேர்த்தாங்க. அமீர்கான் ஹீரோ. அப்ப அவர் பெரிய ஹீரோ இல்ல.இதே நேரம், அப்பா தொடர்ந்து வேலை செய்த கம்பெனியின் உரிமையாளர், தன் மகன் ஜெகபதி பாபுவை தெலுங்குல ஹீரோவா அறிமுகப்படுத்த முடிவு செய்தார். அந்தப் படத்துல என்னையும் தனி எடிட்டரா இன்ட்ரடியூஸ் செய்ய விரும்பினார்.
ஒரே நேரத்துல ரெண்டு படங்களுக்கும் வேலை செய்தேன். ‘ராக்’ படம் தேசிய விருது பட்டியல்ல வந்தது. முதல் நாள் அமீர்கான், குணச்சித்திர நடிகர் விருதுகள் எல்லாம் சொல்லிட்டாங்க. அடுத்த நாள் பேப்பர் செய்தி பார்த்துட்டு எங்க பக்கத்து வீட்டு லேடி கதவைத் தட்டி எழுப்பி எனக்கும் சிறந்த எடிட்டருக்கான விருது கிடைச்சிருக்கிறதா சொன்னாங்க.
அவ்வளவு சந்தோஷம். அடுத்தடுத்து நிறைய விருதுகள் அந்தப் படத்துக்கே. அதுவரைக்கும் சினிமால அப்படி ஒரு தேசிய விருது இருக்குனே தெரியாது. முதல் படத்துலயே விருது வாங்கிட்டேன். ஆனா, அதனோட சீரியஸ்னெஸ் எனக்குப் புரியலை. இன்டஸ்ட்ரீக்கு புரிஞ்சது. நிறைய பேர் தேடி வந்து ஒப்பந்தம் செய்தாங்க.
பொதுவா கமர்ஷியல் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காது. ‘ராக்’ ஒரு கேங்ஸ்டர் படம். அதுக்கு நேஷனல் அவார்ட். இது சினிமா துறைக்கு புது பாய்ச்சலைக் கொடுத்தது. நிறைய படங்கள், நிறைய மொழிகள்... இதுவரை 17 மொழிகள்ல எடிட்டிங் வேலை செய்திருக்கேன். இப்படி யாரும் செய்ததில்லைனு ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்’ல இடம் பிடிச்சேன்.
தமிழ்ல முதல் படம் ‘உயிரோடு உயிராக’. நண்பர் சுஷ்மா மூலமா முதல் என்ட்ரி. அஜித் கூட நிறையப் படங்கள் செய்திருக்கேன். அப்ப நாங்க மூவியலா டெக்னாலஜில எடிட்டிங் செய்தோம். அடுத்து ஸ்டீன்பெக். இந்த இடைவேளைல ஆவிட் டெக்னாலஜி அறிமுகம். இது நான் - லீனியர் எடிட்டிங் சிஸ்டம். கம்ப்யூட்டர் கூட இணைச்சிக்கலாம். நிறைய எஃபெக்ட்ஸ் கொடுக்கலாம். நேரம் பெருமளவு மிச்சமாகும்னு தெரிஞ்சு இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வாங்கினேன்.
ஆனா, நான் வாங்கறதுக்கு முன்னாடியே கமல் சார் வாங்கி அதுல ‘மகாநதி’ படமும் செய்து சில பிரச்னைகள் எல்லாம் கடந்து வந்ததா சொன்னாங்க. அப்பவே அதனுடைய விலை ரூ.50 லட்சம் கிட்ட வந்தது. என் வீட்டுப் பத்திரத்தை வெச்சு வாங்கினேன். அதுவரை எல்லாருக்கும் அந்த டெக்னாலஜி மேல அதீத ஆர்வம் இருந்தது. ஆனா, பிரச்னை இருக்குனு தெரிஞ்சு பலரும் இதை வேண்டாம்னு சொன்னாங்க.
என்ன பண்றதுனு தெரியலை. பெரிய தொகையை இதிலே முடக்கியிருக்கேன். அப்ப தெலுங்கு இயக்குநரான ராகவேந்திர ராவ் சார், ‘பெல்லி சந்தடி’ படத்தின் டிரெய்லரை கட் செய்ய சொன்னார். அதுவரை படத்துல நாலு சீன்ஸ் எடுத்து அதை கட் செய்து சேர்த்து கொடுப்பாங்க. ஆனா, நான் இதுல வாங்கின இன்ஸ்ட்ரூமெண்ட்ஸை வைச்சு நிறைய எஃபெக்ட்ஸ் கொடுத்தேன். செம ஹிட். வரிசையா டிரெய்லர் வேலை வந்தது. எனக்கும் போட்ட பணம் கொஞ்சம் வர ஆரம்பிச்சது.
மூணு வருஷங்கள் தொடர்ந்து படங்களின் டிரெய்லரை எடிட் செய்தேன். அப்படியே ஒண்ணு ரெண்டு படங்கள் செய்யத் துவங்கி அதுல ‘நவுகா சரித்ரமாவு’, ‘தி டெரரிஸ்ட்’ படங்களுக்கு தேசிய விருது கிடைக்க... அவ்வளவுதான், ஆவிட் பூஸ்ட் ஆச்சு. இந்தநேரத்துல மணிரத்னத்துக்கும் எனக்கும் பொதுவான ஒரு நண்பர் எங்க ஸ்டூடியோவுக்கு வந்து வந்து போவார். எந்த புதுக் கருவி, டெக்னாலஜி வந்தாலும் அவர் வேலைக்காக வருவார். அப்படியே நாங்க நட்பாக ‘அலைபாயுதே’ அமைஞ்சது. அங்க ஆரம்பிச்ச பயணம் இதோ இப்ப ‘பொன்னியின் செல்வன்’ படம் வரைக்கும் போயிட்டு இருக்கு.
என் அப்பா இன்னைக்கு சம்பாதிக்க இன்னைக்கு ஓடணும்னு நினைக்கிற மனுஷன். ஆனா, நான் கொஞ்சம் வீடு, சேமிப்பு இப்படி சிந்திப்பேன். இதனாலயே அப்பாவுக்கு இப்ப வரை பெரிதா சேமிப்பு எதுவும் இல்லை. பணம் சம்பாதிப்பார்... திரும்ப சினிமாவிலேயே அந்தப் பணத்தை போடுவார்.
நான் அதை சரி செய்துக்கிட்டேன். 1989ல வீட்ல பார்த்து முடிச்ச உறவுக்கார பொண்ணுதான் அனுபமா. அம்மா, அக்கா எல்லாம் பார்த்துட்டு வர நான் பார்த்தேன். பிடிச்சுப்போக திருமணம் நடந்துச்சு. அனுபமா வந்த அதே வருஷம் எனக்கு முதல் தேசிய விருதும் கிடைக்க ராசியான பொண்ணாவும் எல்லாரும் பார்க்க ஆரம்பிச்சாங்க.
சினிமா வேலை எப்படினு உங்களுக்கே தெரியுமே. பாதி நாட்கள் வீட்லயே இருக்க மாட்டேன். அத்தனைக்கும் அவங்க ஈடு கொடுத்தாங்க. அம்மாவுக்குப் பிறகு என் மனைவியும் நிறைய தியாகம் செய்தாங்கன்னு சொல்லலாம்.
இரவும் பகலுமா வேலை ஓடும். என் மகன் அக்ஷய் அக்கி னேனி இந்தில ‘பீட்ஸா’ படம் இயக்கினார். இப்ப வெப் சீரிஸ் வேலைகள்ல இருக்கார். கீர்த்தனாவும் என் மகனும் லயோலா கல்லூரில ஒரே வகுப்பு. நட்பு, காதலாகி எங்ககிட்ட சொன்னாங்க. ஓகே சொன்னோம். திருமணம் ஆச்சு.
எடிட்டிங்கைப் பொறுத்தவரை நமக்குனு நேரம் ஒதுக்க முடியாத வாழ்க்கையாதான் இருக்கும். ஆனா, அதையும் சரிசெய்து தூக்கம், ஜாகிங்னு என்னை நானே சீர்படுத்திக்கிட்டேன். கிரிக்கெட், புத்தகம் எனக்கு மிகப்பெரிய உதவியா இருக்க... வீக் எண்டுல கிரிக்கெட் விளையாடினேன். இப்ப ஜாகிங், உடற்பயிற்சி, சாப்பாட்டுல கட்டுப்பாடுனு இருக்கேன்.
நீங்க செய்கிற வேலைல எப்பவும் அர்ப்பணிப்பை கொடுங்க. நீங்க விரும்புகிற பாதைல போகாம, பிடிக்காத வேறு பாதைல கூட சில சமயம் பயணிக்கக் கூடிய சூழல் அமையலாம். சின்ன மனஸ்தாபங்கள் கூட உண்டாகலாம். உங்களைச் சுற்றி இருக்கற உலகத்தைப் புரிஞ்சுக்கணும்னா கத்துக்கற மாணவனாகவே இருங்க.
அனுபவம் வாய்ந்தவரோ புது நபரோ யாரா இருந்தாலும் ஈகோ தேவையே இல்ல. ஒவ்வொரு மனிதர்கிட்டயும் ஒரு புது விஷயம் கத்துக்கலாம். இதைத்தான் இப்ப வரைக்கும் கடைப்பிடிக்கிறேன். அதனாலயே வயது வித்யாசமில்லாம அத்தனை இயக்குநர்கள் கூடவும் என்னால பயணிக்க முடியுது.
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|