வீட்டுப் பணியாளர் Vs வீட்டு எஜமானர்



ஏழ்மையான இளம் விதவைக்கும் பணக்கார இளைஞனுக்கும் இடையில் மலரும் காதல்தான் இந்தப் படம். மகாராஷ்டிராவில் உள்ள குக்கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவள் ரத்னா. இளம் விதவை. வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றுவதோடு தங்கையின் படிப்புச் செலவுக்கும் உதவுகிறாள். இதுபோக மாமியார் வீட்டுக்கும் பணம் அனுப்புகிறாள். ஃபேஷன் டிசைனர் ஆக வேண்டும் என்பது அவளது கனவு.

இன்னொரு பக்கம் மும்பை மாநகரில் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இளைஞன் அஸ்வின். எழுத்தாளர் ஆக வேண்டும் என்பது அவனது கனவு. காதலியுடனான முரண்பாட்டால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி குடும்ப பிசினஸில் ஈடுபட்டு வருகிறான். ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிக்கிறான்.

அவனது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக மும்பைக்கு வருகிறாள் ரத்னா. அவள் தங்குவதற்காக வீட்டுக்குள்ளேயே அட்டைப்பெட்டி போன்ற ஓர் அறை ஒதுக்கப்படுகிறது.  வேலை முடிந்து ஓய்வாக இருக்கும்போது டெய்லரிங் பயிற்சி பெற வெளியில் போக அனுமதி கேட்கிறாள் ரத்னா. அவளின் விருப்பத்தை மதித்து, அனுமதி தருகிறான் அஸ்வின்.

வீட்டில் இருக்கும்போது அஸ்வினின் துயரத்தைக் கவனிக்கும் ரத்னா, அவனுக்கு ஆறுதலாகப் பேசுகிறாள். இது அஸ்வினுக்குப் பிடித்துப்போகிறது. இந்த உலகத்திலேயே தன்னைப் புரிந்துகொண்டது மற்றும் தனக்கு சரியான இணையாக ரத்னாவால் இருக்க முடியும் என்று உணர்கிறான்.

பொருளாதாரம், அந்தஸ்து, படிப்பு என சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் எல்லா அளவீடுகளிலும் தனக்கு எதிரான திசையில் இருக்கும் ரத்னாவிடம் தன் விருப்பத்தைச் சொல்கிறான். அஸ்வினும் ரத்னாவும் இணைய காதல் மட்டுமே போதுமா... இருவரும் இணைந்தார்களா... என்பதே மனதைத் தொடும் கிளைமேக்ஸ்.

அஸ்வினைச் சார்ந்த யாருமே அவனுடைய காதலைப் பரிசீலிப்பது கூட இல்லை. மாறாக,  வேலைக்காரியுடன் ஒரு முதலாளி காதல் கொள்வதா என்று அவனை ஏளனப்படுத்துகிறார்கள். மனதின் ஓரத்தில் அஸ்வின் மீது ரத்னாவுக்கு நல்ல அபிப்ராயம் இருந்தாலும் அவளாலும் காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த விஷயம் வீட்டுக்குத் தெரிந்தால் பெரிய பிரச்னையாகிவிடும் என்று பயந்து வேலையையும் அஸ்வினையும் விட்டுக் கிளம்பிவிடுகிறாள்.

காதலினூடாக சமூகத்தில் நிலவும் ‘ஏழை - பணக்காரன்’ என்ற வர்க்க பேதத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது சிறப்பு. எப்போதுமே ‘சார்’ என்று அஸ்வினை மரியாதையுடன் அழைக்கும் ரத்னா, இறுதிக் காட்சியில் ‘அஸ்வின்’ என பெயர் சொல்லி அழைக்கிறாள்.  ரத்னாவாகக் கலக்கியிருக்கிறார் திலோத்தமா. அஸ்வின் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் விவேக் காம்பர். இப்படத்தின் இயக்குநரான ரோஹனா கெரா, முக்கிய பெண் இயக்குநர்களில் ஒருவர்.