பணக்கார நாடுகளின் பேராசையால் கொரோனா நீண்ட நாட்களுக்கு நம்மிடையே நீடிக்கும்!



புவி அரசியல் Vs கொரோனா உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் WHO தலைவர்

‘‘கொரோனா தடுப்பூசியால் பேரழிவு மிக்க தோல்வியை உலகம் எதிர்நோக்கி  இருக்கிறது...’’இப்படிச் சொல்லி உலகெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பவர் வேறு யாருமல்ல; உலக சுகாதார (World Health Organisation - WHO) அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் ஆதனோம் கெரியேசஸ்தான்.  

இப்போதுதான் கொரோனாவுக்கான தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளும் கண்டறிந்து அதனை தத்தம் நாடுகளில் நடைமுறைப்படுத்தும் சூழலில் டெட்ரோஸ் ஏன் இவ்வாறு சொன்னார் என்று தேடிப் போனால், உலக சுகாதார அமைப்பு, உலக நாடுகளின் அரசியல் ஈகோக்களால் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது... இந்த புவியரசியல் எப்படி கொரோனாவுக்கு எதிரான மானுட சமூகத்தின் போரை பாதிக்கிறது... என்கிற அதிர்ச்சிகரமான உண்மைச் சித்திரம் ஒன்று நமக்குக் கிடைக்கிறது.

உலக சுகாதார நிறுவனம் (உசுநி) ஐக்கிய நாடுகள் சபையால் சென்ற நூற்றாண்டின் மத்தியில் தொடங்கப்பட்டது. உலகின் பெரும்பாலான நாடுகள் மன்னராட்சி மற்றும் காலனிய ஆட்சியைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய நாட்களில் உசுநி போன்ற ஓர் அமைப்பின் தேவை தீவிரமாக உணரப்பட்டது.

பெரியம்மை, போலியோ, காசநோய் போன்றவை மிகப் பெரிய உயிர்க்கொல்லிகளாக உலகை மிரட்டிக்கொண்டிருந்த காலங்கள் அவை. உலக சுகாதார நிறுவனம் தொடங்கியதுமே பெரியம்மை ஒழிப்பு போரில்தான் முதலில் இறங்கியது. வெற்றியும் பெற்றது.இதற்கு அடுத்தபடியாக போலியோ ஒழிப்பு போன்ற செயல்பாடுகளிலும் முன்னணியில் இயங்கியது. இன்று இவ்விரு கொடுநோய்களுமே உலகில் துடைத்தழிக்கப்பட்டுவிட்டன. இந்தக் கிருமிகள் எதிர்கால மனித குலத்தின் நன்மைக்காக ஆய்வகங்களில் மட்டுமே உள்ளன.

இப்படியான சூழலில்தான் சென்ற வருடத்தில் உலகையே மிரட்டத் தொடங்கியது கொரோனா. இக்கொள்ளை நோயை ஒழிப்பதற்கான செயல் திட்டத்தை அமுலாக்க உலக சுகாதார நிறுவனம் முயன்றும் இன்று நாடுகளுக்கு இடையிலான அரசியல் அதிகாரப் போட்டிகளால் கொரோனாவுக்கு எதிரான போர் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

அதனால்தான் இதன் தலைவர் தம் கையறு நிலையை அறிக்கையாக தெரிவித்திருக்கிறார். ‘‘சமமற்ற கொரோனா தடுப்பூசி கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வி யைச் சந்தித்தாலும் ஆச்சர்யமில்லை. ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கக் கூடியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன், பணக்கார நாடுகளில் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது நியாயமல்ல...’’ என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் வருத்தமுடன் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை பணக்கார நாடுகளில் 3.9 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஓர் ஏழை நாட்டில் இதைவிட மிகக் குறைந்த அளவிலேயே தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா என இருவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.உலக சுகாதார அமைப்பால் ஒரு சுயாதீனக் குழு நியமிக்கப்பட்டது. ஐநா சபையின் பொது சுகாதார அமைப்பு, சர்வதேச அளவில் அவசர நிலையை முன் கூட்டியே அறிவித்திருக்கலாம் என அக்குழு கூறியது. அதோடு கொரோனா தொடர்பாக சீனா விரைவாக போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் கூறியது.

இதெல்லாம் பழைய புகார்கள். இதுவரை, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களுக்கென தனியாக கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டன. மற்ற நாடுகள், ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி யைப் பயன்படுத்தி வருகின்றன.
இதில் பெரும்பாலான நாடுகள், தடுப்பூசியை தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு விநியோகித்துக் கொள்வதற்கே முன்னுரிமை கொடுக்கின்றன. இப்படியான சூழலில்தான் உசுநி தலைவரின் விமர்சனம் எழுந்துள்ளது.

‘‘முதலில் எனக்குதான் தடுப்பூசி என்கிற அணுகுமுறை, நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ளும் விதத்தில் அமையும். இது தடுப்பூசியின் விலையை அதிகரிக்கும்; பதுக்கலை ஊக்குவிக்கும். இது போன்ற செயல்களால் கொரோனா நீண்ட நாட்களுக்கு நம்மிடையே நீடிக்கும்...’’ என்கிறார் டெட்ரோஸ்.
எல்லா நாடுகளும் முழுமையாக கோவேக்ஸ் (உலக அளவில் கொரோனா தடுப்பூசியைப் பகிர்ந்துகொள்ளும் திட்டம்) திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.

வரும் 2021 ஏப்ரல் 7ம் தேதிக்குள் (உலக சுகாதார தினத்தன்று), உறுப்பு நாடுகள் அனைத்திலும், கொரோனாவை எதிர்கொள்வதற்காக தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார் டெட்ரோஸ்.இதுவரை 180 நாடுகள் கோவேக்ஸ் திட்டத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த திட்டத்துக்கு உலக சுகாதார அமைப்பும், சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசியை ஆதரிக்கும் குழுக்களும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றன.

உலக நாடுகளை ஒன்றிணைக்க வேண்டும், அப்போதுதான் நாடுகள் சார்பாக, மருந்து நிறுவனங்களிடம் பேரம் பேசும் வலிமையை அதிகரிக்க முடியும் என்பதுதான் இதன் நோக்கம்.இந்தத் திட்டத்தில் இருக்கும் 92 ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கான நிதி நன்கொடையாளர்கள் மூலம் திரட்டப்படும். இதுவரை ஐந்து மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து 200 கோடி தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டிருக்கின்றன. பிப்ரவரியில் இருந்தே ஏழை நாடுகளில் விநியோகம் தொடங்குமாம்.

உலக அளவில் பல நாடுகள் தங்கள் தேவைக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகளைப் பதுக்குவதாகவும் உசுநி குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக கனடா கடும் கண்டனங்களைச் சம்பாதித்துள்ளது. தனக்கு தேவையானதைப் போல ஐந்து மடங்கு அதிகமான தடுப்பூசிகளை கனடா ஆர்டர் செய்துள்ளதாம். இது பதுக்கலுக்கும் நியாயமற்ற விலை ஏற்றத்துக்கும் வழிவகுக்கும் என்கிறார்கள்.

பணக்கார நாடுகள் ஒருபுறம் உபரியாக தடுப்பூசிகளை வைத்திருக்க, மறுபுறம் தேவையுள்ள ஏழை நாடுகளில் பத்தில் ஒருவருக்கு மட்டுமே தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என்று சொல்கிறது ஓர் சர்வதேச ஆய்வு.உலக சுகாதார அமைப்பின் சுயாதீன அறிஞர்கள் குழு, இந்த அமைப்பின் மீதே சில விமர்சனங்களை வைத்திருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்த அமைப்புக்கு சீனா, அமெரிக்கா மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற சில அமெரிக்க நிறுவனங்கள் அதிக நிதி அளித்து வருவதால், சில விஷயங்களில் அவர்களின் கைப்பாவை போல் உசுநி இயங்குகிறது என்றும் சொல்கிறார்கள். நாடுகளுக்கு இடையிலான அரசியல் என்பது எப்போதும் இருப்பதுதான். ஆனால், கொரோனா என்பது மானுடப் பேரிடர்.

இந்த விஷயத்திலாவது உலக நாடுகள் தங்கள் அரசியலை மறந்துவிட்டு, நிஜமாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன அவசியமோ அதனைச் செய்துதருவதுதான் நாமெல்லாம் சமூக அமைப்பாக முன்னேறிய மனிதர்கள் என்பதற்கு நிஜமான பொருள். இதுவே, மனிதத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கருத்தாகவும் இருக்க முடியும்.

இளங்கோ கிருஷ்ணன்