நாகம்மா



‘‘நாகம்மாவுக்கு சாமி வந்திருச்சாம்... நாகம்மாவுக்கு சாமி வந்திருச்சாம்...’’ தெருவில் சத்தமாகக் கத்திக்கொண்டே யாரோ ஓடும் சத்தம் கேட்டது. ஓட்டுக் கூரை வழியாக கீற்றாக விழுந்த சூரிய ஒளி கண்ணாடியில் விழுந்து கண் கூச வைப்பதை ரசித்துக்கொண்டு இருந்தவள் சத்தத்தால் கலைக்கப்பட்டு ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தேன்.ஆண்களும் பெண்களுமாக பத்துப் பதினைந்து பேர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தனர்.

‘‘ஏன் பாட்டி... இன்னமும் நாகம்மா அக்கா சாமியாடுதா..?’’
‘‘ம்... ம்... ஆடிகிட்டுத்தான் இருக்கா...’’ என்றாள் பாட்டி சலித்த குரலில்.நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை என் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். பாட்டி வீட்டுக்கு இரண்டு மூன்று வீடுகள் தள்ளி ஒரு பிள்ளையார் கோயிலும் அதை ஒட்டி ஒரு தெருவும் இருக்கும். அதில் வரிசையாக சின்னச்சின்ன ஒற்றை அறை ஓட்டு வீடுகளும், தகரக் கூரை போட்ட வீடுகளும் வரிசையாக இருக்கும்.

அதில் ஒன்றுதான் நாகம்மா அக்கா வீடு. நாகம்மா அக்காவின் குடும்பத்தினர் எங்கள் தாத்தாவின் தாத்தா காலத்தில் இருந்தே வழிவழியாக எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தவர்கள். முதலில் காலையில் வந்தால் மாலை வரை வேலை செய்து வந்தவர்கள் காலம் செல்லச்செல்ல வெவ்வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.

இருந்தாலும் விசுவாசம் காரணமாக காலை மாலை இருவேளையும் வந்து ஏதாவது வேலை இருந்தால் செய்து கொடுத்து விட்டுப் போவார்கள்.
நாகம்மா அக்காவின் தாயார் வள்ளிம்மாவும் அவள் தகப்பனாரும் அவ்வப்போது வருவார்கள்.வள்ளிம்மாவுடன் சிலசமயம் நாகம்மாக்காவும் வரும். எனக்குத்தான் அவளைக் கண்டால் ஒரே பயம். திடீர் திடீரென சாமி வந்து ஆடுவாள் நாகம்மாக்கா.

ஒல்லியா இருக்கும். தலை செம்பட்டை பரந்து கிடக்கும். அந்த ஒல்லி உடம்புக்குள் சாமி வந்து ஆடும்போது பார்க்க வேண்டுமே... அவ்வளவு ரௌத்திரம்.பாட்டி ஊரில் அப்போது கழிவறை வீட்டுக்கு வீடு கிடையாது. எல்லோருக்கும் கரட்டு மேடுதான் கழிவறை. பெண்களுக்கு பெரிய அவஸ்தை அது. கருக்கலில் ஒதுங்கினால் உண்டு. இல்லையென்றால் என்ன ஆத்திரம் அவசரம் என்றாலும் கஷ்டம்தான். அதுவும் மாதாந்திர நாட்களில் படும் பாடு தாளாது.

நாகம்மா அக்காவுக்கு பத்து வயது இருக்கும்போது கருக்கலில் ஒதுங்கப் போயிருக்கிறாள். கூட வள்ளிம்மாவும்தான். ஒதுங்கிவிட்டு நாகம்மா பேரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்திருக்கிறாள். பதில் வரவில்லை என்றதும் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறாள். அங்கும் நாகம்மா வரவில்லை என்றதும் தேடிச் சென்றிருக்கிறாள். கரட்டு மேட்டு எல்லைப்பிடாரி கோயிலில் தலைவிரி கோலமாக நாகம்மா உட்கார்ந்திருந்தாளாம். பக்கத்தில் போனால் உக்கிரமாகச் சிரித்து, ‘‘உன் பிள்ளைய எனக்குப் பிடிச்சுப் போச்சுடி... அதான் குடி வந்துட்டேன்...’’ என்று சொன்னாளாம்.

அன்றிலிருந்து எப்ப வரும்னு எல்லாம் சொல்ல முடியாது. பாத்திரம் கழுவிக் கொண்டே இருப்பாள். ‘‘உஸ்... உஸ்...’’ என்று சத்தம் கேட்கும். திரும்பிப் பார்த்தால் கால் மேலே கால் போட்டு உட்கார்ந்திருப்பாள்.இதற்காகவே பாட்டி எப்போதும் ஒரு தட்டில் சூடமும் திருநீறும் வைத்திருப்பாள். சூடத்தைக் கொளுத்தி வைத்தால் நாகம்மா ஊரில் யாரைக் கூப்பிடுகிறாளோ அவர்கள் வந்து மண்டியிட்டு நமஸ்கரிப்பார்கள். உடனே வாக்கு சொல்வாள்.

அந்த சமயம் அவளைப் பார்க்கவே பயமாக இருக்கும். கண்களை உருட்டி அமானுஷ்யமாகச் சிரித்துக்கொண்டே இருப்பாள்.கொஞ்ச நாளில் பெரிய மனுஷியானாள். மாதாந்திர நாட்களில் மட்டும் அவளிடம் சாமி வராது.‘‘எங்க குலத்துல பதினைஞ்சு வயசுக்கு மேல பொண்ணுகள வச்சுகிட்டே இருக்க மாட்டோம். இதுக்கு பதினைஞ்சு முடிஞ்சு ரெண்டு வருஷமாச்சு. வர்ற மாப்பிள்ளையெல்லாம் சாமியாடின்னு தள்ளிப் போயிடறாங்கம்மா...’’ என்று வள்ளிம்மா, பாட்டியிடம் வருத்தப்பட்டாள்.

‘‘சேலத்துக்கு பக்கத்துல ஒரு மலை இருக்காம். அங்க இருக்கற பெண் தெய்வந்தான் எல்லா தெய்வத்துக்கும் அக்கா மாதிரியாம். அங்க போய் நேர்ச்சை செஞ்சுட்டு வந்தா சாமி வராதாம். நான் எந்த இடம்னு விசாரிச்சு சொல்றேன்...’’ என்று பாட்டி சொன்னா.ஆனால், பாட்டி கேட்டுச் சொல்வதற்கு முன்பே வள்ளிம்மாவின் தூரத்து சொந்தமான பொன்னான், அக்காவைக் கட்டிக்கொள்வதாகச் சொல்ல... சந்தோஷமாக கல்யாணம் செய்து வைத்தார்கள்.

பொன்னானுக்கு தறி ஓட்டும் வேலை. இதன் பிறகு நானும் படிக்க அப்பா வீட்டுக்கே வந்தேன். இப்பொழுது சைக்கலாஜி மூன்றாவது வருடம். எப்போதும் விடுமுறையில் பாட்டி எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவாள். அதனால் நாகம்மா அக்காவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
‘கிராமத்துக்கு வந்து ரொம்ப வருஷமாச்சே’ என இந்த வருடம் வந்தேன்.

‘‘ஏம் பாட்டி... நாகம்மாக்காவுக்கு எத்தனை குழந்தைங்க..?’’

‘‘குழந்தையாவது குட்டியாவது..? பொண்டாட்டிய தெய்வமா கொண்டாடலாம். பொண்டாட்டியே தெய்வமா இருந்தா என்ன செய்யறதாம்..? அதான் பொன்னான்...’’ என்று எதையோ சொல்ல வந்தவள் நிறுத்திக் கொண்டாள்.‘‘இதெல்லாம் மனநோய் சார்ந்த விஷயம். நல்ல மனநல மருத்துவர்கிட்ட காண்பித்து குணப்படுத்த வேண்டிய விஷயம்...’’ என்று சொல்ல வந்தவள் அடக்கிக் கொண்டேன்.

நிச்சயமாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காலம் எத்தனை மாறினாலும் சில விஷயங்கள் கிராமத்து மக்களிடையே எடுபடாது.
இருந்தாலும் படிக்கும் படிப்பைச் சார்ந்த விஷயம் என்பதால் பாட்டிக்குத் தெரியாமல் நாகம்மா சாமியாடும் வீட்டுக்குப் போனேன். வள்ளிம்மா வீட்டில் இருந்து இரண்டு வீடுகள் தள்ளித்தான் பொன்னான் குடியிருந்தார் என்பது மனதில் இருந்தது.

போனவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாகம்மா வீட்டு முகப்பில் நாகம்மா பாத்திரக்கடை என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டு ஏகப்பட்ட பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அதன் முகப்பில்தான் நாகம்மா அக்கா எப்போதும் போலவே அட்டகாசமாக கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்திருந்தாள். நான் போகும்போது இருந்த ஒல்லியான நாகம்மா அக்கா இல்லை. உடம்பு பிடித்து கழுத்தில், காதில் நகைகள் ஜொலிக்க உயர்ரக சேலையுடன் அமானுஷ்யமாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

எதிரே கட்டி சூடம் எரிந்து கொண்டிருந்தது. என்னதான் சைக்கலாஜி எடுத்து படித்துக் கொண்டிருந்தாலும் உள்ளூர சின்னவயது பயம் மிக சன்னமாக வராமல் இல்லை.கூடியிருந்த கூட்டத்தின் பின்புறமாகவே நின்றேன். ஊருக்கு வந்து ரொம்ப நாளாகிவிட்டதால் யாருக்கும் என்னையும், எனக்கும் வேறு யாரையும் அடையாளம் தெரியவில்லை.

‘‘டேய்... பிடாரி வந்துருக்கேண்டா...’’ ஆக்ரோஷமான கூச்சல் வந்தது நாகம்மாக்காவிடமிருந்து. கண்கள் இரண்டும் நல்ல சிவப்பில் பளபளத்தன.
‘‘சொல்லாத்தா...’’ என்றபடி பவ்யமாக வந்து நின்றார் அவர். அப்போது தான் அவரை உற்றுப் பார்த்தேன். அட... பொன்னான்தான். அவரும் இப்போது சதை கூடி பளபளவென்று இருந்தார்.

‘‘டேய்... புதுசா கரட்டு மேட்டு அடிவாரத்துல ஆத்தாளும், மகளுமா இரண்டு பேரு குடி வந்துருக்காங்க. அவள நான் சொன்னேன்னு கூட்டிட்டு வாங்கடா...’’ உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர் கூட்டிக்கொண்டு வர ஓடினார்.‘‘ஊம்... ஊம்...’’ என்று அரற்றியபடி தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்தாள் நாகம்மா அக்கா.

பத்து நிமிடத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும், அவள் மகள் போலிருந்த அழகான இளம்பெண்ணும் வந்தார்கள். நடுங்கியபடி தன் முன்னே நின்றவர்களை ஏறிட்டுப் பார்த்தாள் நாகம்மா அக்கா. பார்வையா அது... அவ்வளவு தீட்சண்யம்.‘‘ஏன்டி... இளங்குருத்தக் கூட்டிட்டு என் எல்லைக்குள்ள வந்துருக்க. ஆனா... ஆனா...’’ என்றவள் அட்டகாசமாகச் சிரித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

‘‘கர்ம வினை சுத்துதடி... சுத்துதடி... கர்மவினை சுத்துதடி. இன்னும் பத்து நாள்ல இந்த ஊர் எல்லையத் தாண்டி ரொம்ப தூரம் போயிருங்கடி... இல்லேன்னா... இல்லேன்னா... தாய் மக ரெண்டு பேத்துல ஒருத்தர் தாண்டி இருப்பீங்க... காவு கேட்குதடி... காவு... போயிருங்க... போயிருங்க... போனீங்கன்னா... இளங்குருத்துக்கு மாங்கல்யம் தானா வந்து சேரும். உயிரும் பிழைக்கும்...’’‘‘செய்யறோம் ஆத்தா... செய்யறோம்...’’ என்றபடி விழுந்து கும்பிட்டார்கள் அந்தத் தாயும், மகளும்.

தடாரென்று சத்தம் கேட்டது. நாகம்மா அக்காதான் தரையில் சாய்ந்திருந்தாள். ‘‘சாமி மலையேறிருச்சு...’’ என்றபடி கூட்டம் கலைந்தது.
‘‘ஏண்டி... நீ எதுக்கடி அங்க போன..?’’ என்று திட்டினாள் பாட்டி.‘‘பாட்டி... போரடிக்குது. அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வந்திர்ரேன்...’’ என்றேன் மாலையில்.‘‘போயிட்டு வா. ஆனா, ஊருக்குள்ளேயே பார்த்துட்டு வந்துரணும். பொழுது சாய கரட்டு மேட்டுப் பக்கமோ, பிடாரி கோயில் பக்கமோ போகக் கூடாது...’’

‘‘சரி பாட்டி...’’ என்றவள், ‘போனால் என்ன... கரட்டு மேட்டில் சூரியன் மறைவது அழகாகத் தெரியும்... நிறைய போட்டோ எடுக்கலாம்' என்று மனதிற்குள் நினைத்தபடியே கையில் செல்போனுடன் நடந்தேன்.மாலை விழுந்து கொண்டிருந்தது. பொதுவாக அமாவாசை, விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் ஜனநடமாட்டம் மாலை நேரங்களில் இருக்காது. உக்கிர தெய்வம் என்பதால் பயம்.

பூசாரி மட்டும் ஐந்து மணிக்கே வந்து தீபம் ஏற்றி தீபாராதனை காட்டிவிட்டு நடையைக் கட்டி விடுவார்.மெதுவாக கரட்டு மேட்டில் கொஞ்ச தூரத்திற்கு போய் புகைப்படம் எடுத்தவள் அப்போதுதான் அவளைப் பார்த்தேன். வேக வேகமாக பிடாரி கோயில் பக்கம் போய்க் கொண்டிருந்தாள்.

‘நாகம்மா அக்கா எங்கே இந்த நேரத்தில்... அதுவும் இவ்வளவு வேகமாக... ஒரு வேளை மீண்டும் சாமி வந்து விட்டதோ?’ என்று உற்றுப் பார்த்தேன். நன்றாக நடப்பதாகத்தான் தோன்றியது.

அவள் வேகம் மனதிற்குள் ஆவலைத் தூண்ட மெதுவாக இறங்கி பிடாரி கோயிலுக்குப் போனேன்.கருவறை முன் படியில் உட்கார்ந்திருந்தாள். உள்ளே ஒரே சுடர் பிரகாசித்துக் கொண்டிருக்க மங்கலான வெளிச்சத்தில் கையில் சூலத்துடன் நின்று கொண்டிருந்தாள் பிடாரி.கருப்பு உருவத்தில் வாயில் சின்னதாக நீண்ட பற்களுடன் அந்த வேளையில் பிடாரியைப் பார்க்க லேசான பயம் வந்தாலும் அதைவிட நாகம்மாக்கா... ‘‘டேய்... யாரது மறைஞ்சு பாக்கறது... வெளில வா...’’ என்று சத்தம் போடுவாளோ என்றுதான் உள்ளே அதிகமாக திக்... திக் என்றது.

கண்ணில் கண்ணீர் ஊற்றாக வழிய மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் அக்கா. ஒரு வேளை பாடுகிறாளோ..? நான் நின்ற இடத்தில் இருந்து அவள் என்ன சொல்கிறாள் என்று கேட்கவில்லை.பரிதாபமும் ஆர்வமுமாக இன்னும் கொஞ்சம் முன்னே சென்று தூண் மறைவில் நின்றேன். இப்போது அவள் பேசுவது... இல்லை, புலம்புவது மெலிதாகக்  கேட்டது.‘‘மன்னிச்சுக்கோ... நான் என்ன செய்வேன்..? எனக்கு வேற வழி தெரியல. அந்த குடி கெடுக்கற...’’ என்ற வார்த்தைகள் துண்டு துண்டாகக் கேட்டன.

சட்டென்று காலையில் பார்த்த அந்த இளம்பெண்ணும் ‘‘அதான் பொன்னானும்...’’ என்று இழுத்த பாட்டியின் குரலும் ஞாபகத்திற்கு வந்தன.

சத்தமே இல்லாமல் வெளியே வந்து விட்டேன்.யாரிடமும் நான் பார்த்ததை, கேட்டதைச் சொல்லாமல் ஊருக்குத் திரும்பினேன்.அடுத்த விடுமுறைக்கு என்னைப் பார்க்க வந்திருந்த பாட்டி என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்... ‘‘நாகம்மா இப்பல்லாம் சாமியாடறதில்ல... புள்ளையாண்டிருக்கா...’’

- விஜி முருகநாதன்