ஏன் பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறார்கள்?
ஏனென்றால் அரசாங்கத்தின் உணவு தானியக் கொள்முதல், கோதுமை மற்றும் அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவை முழுமையாக அமல்படுத்தப்படுவது இந்த மாநிலங்களில்தான். இம்மாநிலங்களில் விளைகின்ற கோதுமை மற்றும் நெல்லில் சுமார் 85% இந்திய உணவுக்கழகத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் கரீப் மற்றும் ராபி பருவங்களில் இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து கொள்முதலுக்காக மத்திய அரசு செலவிட்டிருக்கும் தொகை ரூ.88,000 கோடி.
*பசுமைப்புரட்சியும் பஞ்சாப்பும்
1960களில் கடுமையான உணவுப் பஞ்சத்தை இந்தியா சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ‘பட்டினிக்குக் காரணம் உற்பத்திக் குறைவுதான்’ என்று கூறி பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த பசுமைப் புரட்சி பஞ்சாப், அரியானாவில்தான் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. 1970ல் பஞ்சாப் மற்றும் அரியானாவில் வெறும் 47.2% விளைநிலங்களில்தான் கோதுமையும் நெல்லும் சாகுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இன்று அது 80.3% ஆக உயர்ந்திருக்கிறது.
வெவ்வெறு பயிர்களை விளைவித்து வந்த சிறு விவசாயிகளையும்கூட அரசாங்கம்தான் கோதுமை மற்றும் நெல் உற்பத்திக்கு மாற வைத்தது. நாடெங்கும் பணப்பயிர் உற்பத்தியும் ஊக்குவிக்கப்பட்டது.இதன் காரணமாக இந்த இரு மாநிலங்களும் இரு பொருள் உற்பத்தி மாநிலங்களாக மாற்றப்பட்டன. மற்ற தானியங்களைக் காட்டிலும் அரசாங்கம் கோதுமை, நெல்லைத்தான் ஊக்குவித்தது. ஒட்டு ரக விதைகள், ரசாயன உரங்கள், பூச்சி மருந்து, பம்புசெட்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு அரசாங்கம்தான் விவசாயிகளைப் பயிற்றுவித்தது.
விவசாய உள்ளிடு பொருட்களுக்கு இப்படிச் செலவு செய்து பழகியிராத விவசாயிகள் தயங்கியபோது, அவர்களுக்கு வங்கிக்கடன் வழங்கி அரசு ஊக்குவித்தது. இப்படி பெரும் செலவு செய்து நெல்லையும் கோதுமையையும் ஏராளமாக உற்பத்தி செய்தால், அதற்கு நியாயமான விலை கிடைக்குமா... விலை கிடைக்காவிட்டால் நட்டத்தை யார் சுமப்பது... என்ற தயக்கமும் அச்சமும் விவசாயிகளிடம் முளைத்தது.
இந்தப் பின்புலத்தில்தான் குறைந்தபட்ச விலை, அரசுக் கொள்முதல் ஆகியவை அமலுக்கு வந்தன. “விளைவித்த தானியத்தை அரசே வாங்கிக் கொள்ளும். விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாத வண்ணம் குறைந்த பட்ச ஆதரவு விலையையும் நிர்ணயம் செய்யும். அந்த விலைக்கு குறைவாக தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்வதை அரசு அனுமதிக்காது. கொள்முதல் நிலைய அதிகாரிகள் இதை உத்தரவாதம் செய்வார்கள்...” என்றெல்லாம் விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதம் கொடுத்தது.
அந்த வகையில் இந்தியாவின் தானியக் களஞ்சியமாக பஞ்சாப் மாற்றப்பட்டது. நாட்டில் உற்பத்தியாகும் கோதுமையில் 20%, அரிசியில் 9% பஞ்சாப்பில் விளைகிறது.
*அரசுக் கொள்முதல் இல்லாத பீகாரின் அனுபவம் என்ன?
நிதீஷ் குமார் அரசு 2006ம் ஆண்டிலேயே APMC சட்டத்தை ரத்து செய்து, கொள்முதலை தனியார் ஏகபோகத்துக்கு விட்டுவிட்டது. அதாவது அரசுக் கொள்முதலை நிறுத்தி ‘யாரிடம் வேண்டுமானாலும் நல்ல விலைக்கு விற்று லாபம் பார்க்கின்ற வாய்ப்பை’ இன்றைய மத்திய அரசுக்கு முன்னால், 2006ம் ஆண்டிலேயே நிதீஷ்குமார் பீகார் விவசாயிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்.
இதனால் ஏற்பட்டுள்ள பாதகங்களை அம்மாநில விவசாயிகள் அனுபவித்து வருகிறார்கள்.உள்ளிடு பொருட்களின் செலவுகளைக் கணக்கிட்டதன் அடிப்படையில், நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2532ம், சோளத்துக்கு ரூ.2526ம் தீர்மானிக்குமாறு பீகார் அரசின் விவசாயத்துறை செயலர் சரவணகுமார் 2020ம் ஆண்டு மத்திய அரசுக்கு எழுதினார்.
ஆனால், 2020ல் மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலை நெல்லுக்கு ரூ.1868, சோளத்துக்கு ரூ.1850.2020ம் ஆண்டு பீகாரில் விளைந்த கோதுமையில் வெறும் 1% மட்டுமே இந்திய உணவுக்கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டது.அந்த வகையில் பீகார் வியாபாரிகள் 2020ம் ஆண்டு நெல்லுக்குக் கொடுத்த விலை, குவிண்டாலுக்கு 900 முதல் 1000 ரூபாய்.
பீகார் அரசு கேட்ட விலை ரூ.2532. மத்திய அரசு தீர்மானித்த விலை ரூ.1868. பீகார் வியாபாரிகள் கொடுத்த விலை ரூ.1000.கோதுமைக்கு 2020ம் ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.1760. ஆனால், பீகார் விவசாயி களுக்கு சந்தையில் கிடைத்த விலை ரூ.1060. ஆக, அரசுக் கொள்முதல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டால் விவசாயிகளின் கதி என்ன என்பதற்கு பீகார் ஒரு சான்று.
இன்னொரு புள்ளிவிவரம் வழியே இன்னும் எளிமையாக இதைப் புரிந்து கொள்ளலாம்.விவசாயத்தைச் சார்ந்து வாழும் குடும்பங்களின் மாத வருமானம் என்ன என்று அரசே கணக்கிட்டிருக்கிறது. தேசிய அளவில் விவசாயத்தைச் சார்ந்து வாழும் ஒரு குடும்பத்தின் (5 பேர்) மாத சராசரி வருமானம் ரூ.6426. இதில் சுமார் 30%க்கும் மேற்பட்ட தொகை விவசாயம் அல்லாத வேறு வேலைகள் மூலம் (கட்டிட வேலை போன்றவை) ஈட்டப் படும் வருவாய்.
அரசுக் கொள்முதல் ஒழிக்கப்பட்ட பீகார் மாநிலத்தில் ஒரு குடும்பத்தின் மாத சராசரி வருமானம் ரூ.3558. அரசுக் கொள்முதல் மிகவும் குறைவாக நடக்கும் மேற்கு வங்கத்தில் ரூ.3980. அரசுக் கொள்முதல் நடைபெறும் பஞ்சாப்பில் ஒரு குடும்பத்தின் மாத சராசரி வருமானம் ரூ.18,059.இதிலிருந்து தெரிய வரும் உண்மை இதுதான் - எந்த மாநிலங்களில் அரசுக் கொள்முதல் இல்லையோ அல்லது மிகவும் குறைவாக நடக்கிறதோ, அங்கெல்லாம் வறுமை தாண்டவமாடுகிறது. அத்தகைய மாநிலங்களிலிருந்துதான் பெருமளவி லான விவசாயிகள் புலம்பெயர் தொழிலாளர்களாக வெளியேறுகிறார்கள்.
இவை அரசே வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களில் இருந்து கிடைத்திருக்கும் உண்மை. இந்த உண்மையை தங்கள் வாழ்க்கை வழியே உணர்ந்திருப்பதால்தான் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் சமரசமின்றி தில்லியில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.
சாந்தகுமார் கமிட்டியின் பரிந்துரைகள் என்ன..?
பிரதமரானால் சாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவேன் என்று 2014ம் ஆண்டு வாக்குறுதி அளித்த மோடி, பிரதமரானதும் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சாந்தகுமார் எம்பி தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தார். இந்திய உணவுக்கழகத்தை மறு கட்டமைப்பு செய்வது குறித்து ஆராய்ந்து மூன்றே மாதங்களில் அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி சாந்தகுமார் கமிட்டி கூடி விவாதித்து தன் பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கியது. அப்பரிந்துரையை உணவு மற்றும் பொது விநியோகத்துக்கான மத்திய அமைச்சராக அன்று இருந்த பஸ்வான், ஜனவரி 2015ல் வெளியிட்டார். அவற்றில் சில...
* தானியங்களைக் கொள்முதல் செய்யவும் சேமிக்கவும் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்.
* பஞ்சாப், அரியானா, ஆந்திரா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் தானியக் கொள்முதல் செய்வதிலிருந்து மத்திய அரசு விலகிக்கொண்டு, அதை அந்த மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும்.
* உர மானியத்தை நிறுத்திவிட்டு, ஏக்கருக்கு ரூ.2800 பணமாகக் கொடுத்துவிடவேண்டும்.
* உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் பயனடையும் மக்களின் எண்ணிக்கையை 67% இலிருந்து 40% ஆகக் குறைக்க வேண்டும்.
* ரேசன் கடைகளுக்குப் பதிலாக பணமாகக் கொடுத்து வெளிச்சந்தையில் தானியத்தை வாங்கிக் கொள்ளுமாறு செய்ய வேண்டும்.
அரசுக் கொள்முதலை நிறுத்துவதற்கு சாந்தகுமார் கமிட்டி முன்வைக்கும் வாதம் இதுதான்: நாட்டிலுள்ள விவசாயிகளில் 6% பேர்தான் அரசுக் கொள்முதலால் பயனடைகின்றனர். மீதமுள்ள 94% பேரிடம் தனியார் முதலாளிகள்தான் கொள்முதல் செய்கின்றனர். எனவே, மொத்தத்தையும் தனியாரிடம் கொடுத்து விடலாமே என்பதுதான் அந்த கமிட்டி சொல்லவரும் கருத்து.
“6% விவசாயிகள்தான் பயனடைகின்றனர்” என்ற இந்தப் புள்ளிவிவரத்தை ஒரு அறுதி உண்மை போல இன்று அரசு பிரச்சாரம் செய்கிறது. இது உண்மையல்ல. 6% என்பது அரிசி, கோதுமை கொள்முதலை மட்டும் வைத்து சொல்லப்படுகிறது. மற்ற விளைபொருட்களான பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பால் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் மொத்தத்தில் அரசுக் கொள்முதலால் பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கை 15% முதல் 25% வரை வரக்கூடும். 94% விவசாயிகள் தனியார் சந்தையில்தான் ஏற்கனவே இருக்கிறார்கள் என்று காட்டி இப்போதைய மோடி அரசின் 3 வேளாண் சட்டங்களை நியாயப்படுத்துவதற்காகவே இது பிரச்சாரம் செய்யப்படுகிறது...” என்கிறார் வேளாண்மை பொருளாதார அறிஞரான ஹரிஷ் தாமோதரன்.
தற்கொலைகள் கூறும் உண்மை என்ன?
2012 - 17ம் ஆண்டுகளில் பஞ்சாப்பை ஆண்ட சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி அரசின் உத்தரவுப்படி, பஞ்சாப் பல்கலைக்கழகம், பஞ்சாப் விவசாயப் பல்கலைக்கழகம், குருநானக் பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வின்படி, 2000 - 2015 வரையிலான 15 ஆண்டுகளில் பஞ்சாப்பில் மட்டும் 16,606 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் -
44% பேர் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஒரு ஹெக்டேருக்கும் (2.4 ஏக்கர்) குறைவான நிலம் உள்ள குறு விவசாயிகள். 30% பேர் 2 ஹெக்டேர் வரை நிலமுள்ள சிறு விவசாயிகள். 18% பேர் 2.5 ஹெக்டேர் வரை நிலமுள்ள அரை - நடுத்தர விவசாயிகள், 7% பேர் 4 ஹெக்டேர் வரை நிலம் உள்ள நடுத்தர விவசாயிகள். 1% பேர் 4 ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள பணக்கார விவசாயிகள்.
கடன்
பஞ்சாப்பில் 85.7% விவசாயக் குடும்பங்கள் கடன் பிடியில் சிக்கியிருக்கின்றன. அவர்களுடைய சராசரிக் கடன் ரூ.5.52 லட்சம். உள்ளிடு பொருட்கள் மற்றும் எந்திரங்கள்தான் இந்தக் கடனுக்கு முதன்மைக் காரணங்கள். விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய சராசரிக் கடன் ரூ.91,000.
ஜான்சி
|