அணையா அடுப்பு - 36
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவர் கட்டளை!
வள்ளலாரின் மகா உபதேசம் பெருமழையாய் பெய்து, கேட்டவர்களின் உள்ளங்களை சிந்தனை வெள்ளமாய் நிரப்பியது.“ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தாலல்லது தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஆதலால் தெய்வத்தைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்திலிருந்துக் கொண்டு விசாரஞ் செய்துக் கொண்டிருங்கள்.
அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்?
அண்டத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவைகள் எப்படிப்பட்டன, இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன, இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத்தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்?
நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன, கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந்நகம் வளர்தலும் இவை போன்ற மற்றத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமும் செய்துக் கொண்டிருங்கள்.இப்படி இடைவிடாது விசாரஞ் செய்துக் கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக் குறித்து ஏளனமாகச் சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலான் நீங்கள் அதை லட்சியம் செய்யக்கூடாது.
இப்படியே ‘காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வரவிடுத்தவர் ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால், காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா’ என்று விசாரித்துத் தெரிந்துக் கொள்ளுகிற பட்சத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா?
இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலட்சியம் தோன்றினால், நிராசை உண்டாம். ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை கிரியை யோகம் ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசையென்னும் படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.
இவ்விசாரஞ் செய்துக் கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள்.
இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. இது முதல் கொஞ்ச காலம் சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்துக் கொண்டிருங்கள்.மேலும் சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது, சிவாயநம என்றும், நமசிவாய என்றும் இதுபோன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதிமூன்று பதினைந்து பதினாறு இருபத்து நான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும்.
ஆதலால் நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்ம லாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் தரத்தின்படி பலவகைச் சாதகங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சி யெடுத்துக் கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள்.
அஃது அருமை.இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகா வாக்கியத் திருமந்திரத்தை தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம் எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த உண்மையறிவநுப வாநந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையைப் பற்றி குறிப்பித்தேன், குறிப்பிக்கின்றேன், குறிப்பிப்பேன்.
நமது ஆண்டவர் கட்டளை யிட்டது யாதெனில், நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற் சாதனமாகஅருட் பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதிதனிப்பெருங் கருணை அருபெருஞ் ஜோதிஎன்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம்.
அது ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை.‘சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்’ என்னும் பிரமாணத்தால் உணர்க.மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரியவொட்டாது, அசுத்த மாயா காரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.
சுத்த மாயா காரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும், இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால், இத்தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம். இதற்கு சாட்சியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையிலேயே யாதெனில் நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடியிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியில் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது. அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்துக் கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார். தெரிவிக்கின்றார். தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மை யறிவாய் விசாரம் செய்துக் கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்துக் கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.
எல்லோருக்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை…”தன்னுடைய மஹோபதேசத்தை முடித்துவிட்டு மக்களைப் பார்த்தார் வள்ளலார். அவர்களோ பிரமித்துப் போய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
(அடுப்பு எரியும்)
தமிழ்மொழி
ஓவியம்: ஸ்யாம்
|