நான்...ஆதிரா பாண்டிலட்சுமி



என் அம்மா கொடுத்த வலிமைதான் இன்னைக்கு இங்க பேசிட்டு இருக்கேன். காவடிச்சிந்து கேட்டுக்கிட்டே எழுந்திருச்ச ஒரு குழந்தைப் பருவ வாழ்க்கை. அம்மா ஸ்டாஃப் நர்ஸ். அவங்களுக்கு ஓர் இடத்திலே நிலையான வேலை இல்லை. ஊர் ஊரா போயிட்டே இருப்பாங்க. அப்படி போயி தங்கியிருந்த இடம் பெரியகுளம். அங்கதான் நான் பிறந்தேன்.

அடுத்து மறுபடியும் டிரான்ஸ்ஃபர் ஆன இடம் பழனி. எழுந்திருக்கும் போதே காவடிச்சிந்து தொடங்கி மயிலாட்டம், ஒயிலாட்டம்னு களை கட்டுகிற ஊர். வருஷம் முழுக்க திருவிழாதான். அம்மா அங்கயே செட்டிலாக நினைச்சாங்க. பிள்ளைகள விட்டு பிரிய மனசு இல்லை. எப்போதும் இசை கேட்கிற சூழல் எனக்கு சின்ன வயசுலயே அமைஞ்சது.

அப்பா ராஜபிள்ளை, ஹோமியோபதி டாக்டர். அம்மா  ராஜ லட்சுமி. அக்கா தங்கமணி. அண்ணன்கள் பாண்டியன், பாண்டி, செல்வராஜ், அப்புறம் நான், பாண்டிலட்சுமி. சும்மா போகணுமேன்னுதான் ஸ்கூல் போனது. நிறைய கதை, கவிதையெல்லாம் பத்திரிகைகள்ல எழுதிட்டு இருந்தேன். பிரபல பத்திரிகைகள்ல பிரசுரம் கூட ஆச்சு.

எனக்கு உலகத்தை அறிமுகம் செய்ததே புத்தகங்கள்தான். நிறைய படிப்பேன். ஆனா, பள்ளிப்படிப்பு +2 வரைக்கும்தான். 17 வயசுல திருமணம் செய்துட்டு துபாய்க்கு போயிட்டேன். அவர் முஸ்லிம்; நான் இந்து. போதாதா பிரச்னைகள் வர. அங்கயும் என் வாழ்க்கை ஒதுக்கப்பட்ட வாழ்க்கை. சொந்த மண்ணுக்கு வந்தாலும் மரியாதை இல்லாம வாழ்ந்தேன்.

அந்த வயசுலே என்னல்லாம் கஷ்டம் அனுபவிக்கக் கூடாதோ அத்தனையும் அனுபவிச்சேன். பத்து வருஷங்கள் அகதி மாதிரியான வாழ்க்கை. இதற்கிடைல துபாய்ல பார்லர் ஓபன் செய்தேன். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இன்னும் ரெண்டு பார்லர்கள் திறந்தேன். கூடவே பொட்டிக் ஷோரூம் எல்லாம் வெச்சு பெரிய அளவிலே முன்னேறிப் போனேன்.

எவ்வளவு உயரம் போனாலும் எங்கயும் என் வேலையை நான்தான் செய்வேன். என் திருமணப் பிரச்னை அதிகரிக்க ஆரம்பிச்சது. என் குழந்தைகளுடைய படிப்பும் பாதிக்க ஆரம்பிச்சதால சொந்த மண்ணுக்கே திரும்பி வந்து பிள்ளைகளை ஸ்கூல்ல சேர்த்தேன்.

அந்த நேரம் என் அம்மா உடம்பு முடியாம படுத்த படுக்கையானாங்க. என் அம்மா கூட முழுமையா இருந்த நாட்கள் அதுதான். கொஞ்ச நாள்தான். கேன்சர் வந்து படுத்தவங்க ஒரு கட்டத்திலே இறந்தும் போனாங்க. அம்மாவுக்கு ஒரு பழக்கம் உண்டு. ஏரியா மக்களுக்கு வைத்தியம் பார்ப்பாங்க. இல்லாத மக்களுக்கு தன் பணத்தைக் கொடுத்து சாப்பாடு வாங்கித் தருவாங்க.

இந்தப் பழக்கத்தால அவங்க இறந்ததும் அவ்வளவு கூட்டம். நிற்க இடமே இல்ல. அப்பதான் நமக்கான மக்களை நாமதான் சேர்க்கணும்னு புரிஞ்சுகிட்டேன். அதுக்கு முதல்ல நாம யார்னு நாம தெரிஞ்சிக்கணும். அப்படி ஆரம்பிச்ச பயணம் சென்னைல வந்து நின்னுது.

அடுத்து எனக்கு எங்க அப்பா கொடுத்த தைரியம். அம்மா அரசு நர்ஸ். அவங்களை அப்பா புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு வேற யாரும் புரிஞ்சிருக்க மாட்டாங்க. அம்மா செய்யக் கூடிய அத்தனை வேலைகளையும் யோசிக்காம அப்பாவும் செய்வார்; செய்தார். சமைக்கறது, வீட்டுப் பராமரிப்பு, எங்களைப் பார்த்துக்கறது, கூடவே வீட்டோடு ஹோமியோபதி கிளினிக் வேலையும் சேர்த்துப் பார்ப்பார்.

இப்பவே ஆணாதிக்கம் இருக்கே... அப்ப எப்படி இருந்திருக்கும்..? அதுவும் கிராமத்துல..? ஆனா, அப்பா அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்ல. அவ்வளவு அற்புதமா வீட்டைப் பார்த்துக்கிட்டார். எந்தப் பிரச்னைன்னாலும் நேருக்கு நேரா சந்திப்பார். இந்தப் பக்கம் என் வாழ்க்கை வெறுமனே விமானப் பயணம், துபாய் வாழ்க்கை, ஓர் ஆடம்பர அறைக்குள்ள அடைஞ்ச வாழ்க்கைனு போகுது.

அம்மா இறந்ததும் தற்கொலை செய்துக்க கூட நினைச்சேன். அப்பதான் நாம யார்னு முதல்ல புரிஞ்சுக்கணும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. தீராத தேடலில் இசைதான் முதல் அறிமுகம். பறை அடிக்கிற குழுவுல சேர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டேன். இன்னொரு பக்கம் திருமண பந்தம் அதுக்கு மேல சரியா வராது... என்னை இன்னமும் முழுசா கொன்னுடும்னு தெரிஞ்சது.

விவாகரத்து வாங்கினேன். ஆனாலும் இப்ப வரை அந்தப் பிரச்னை தொடர்ந்துட்டுதான் இருக்கு. சென்னைல ஆரம்பக் காலத்துல கொஞ்சம் பண ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றங்களை சந்திச்சேன். அப்புறம் கூத்துப்பட்டறைல மூணு மாதங்கள் பயிற்சி. பின் செய்யாறு புரசை கண்ணப்பத் தம்பிரானுடைய தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளில சேரக்கூடிய பாக்கியம் கிடைச்சது.

தெருக்கூத்துக் கலை எனக்குள்ள வந்தது. முழுமையா எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்த இடம் அதுதான். ரெண்டு வருஷங்கள் அங்க தங்கி குருகுலக் கல்வி மாதிரி படிச்சேன்.  9 நவரசங்கள்தான் நமக்குத் தெரியும். ஆனா, உண்மைல 34 ஆயிரம் உணர்வுகள் இருக்கறதா ஓர் ஆராய்ச்சி சொல்லுது. அதைத் தேட ஆரம்பிச்சேன்.

இதுல பறை, களரி, சிலம்பம்... இப்படி ஆதிகால கலைகளையும் கத்துக்க ஆரம்பிச்சேன். உலகக் கலைகளுக்கெல்லாம் பொதுவான அடவுப் பயிற்சி எனக்கு அறிமுகமாச்சு. நாடக நடிப்பு, கூத்துனு இல்லாம தெருக்கூத்தை எப்படி எல்லாம் மனிதர்களை மாற்ற பயன்படுத்தலாம்னு யோசிச்சேன். எனக்கு நானே பயிற்சி எடுத்துக்க வளசரவாக்கத்துல ஓர் இடம் பிடிச்சேன். வீடு, மேல பயிற்சிக் கூடம்.

தெரிஞ்ச நண்பர்கள் வர ஆரம்பிச்சு எனக்குனு ஒரு குழு சேர்ந்து ஒண்ணா நிறைய பயிற்சிகள் எடுத்துக்க ஆரம்பிச்சோம். அடுத்து சிலர் எங்களுக்கு சொல்லிக் கொடுங்கன்னு வந்தாங்க. அப்படி கொஞ்சம் கொஞ்சமா நவீன கூத்துப்பட்டறையா அந்த இடத்தை மாத்தினேன். எங்கள் கூத்துப்பட்டறை இயல், இசை, நாடகம் மூலமா மனிதர்களுடைய மன அழுத்தங்களை சரி செய்யணும்னு முடிவு செய்தோம்.

நாடகங்கள், ஒர்க் ஷாப்கள் மூலம் ஸ்கூல், காலேஜ், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நேரடியா போய் இயல், இசை, நாடகம் மூலமா அவங்களை அவங்களுக்கே அறிமுகப்படுத்துகிற வேலை செய்யறோம். நான் கூத்துப்பட்டறைக்குள்ள வந்தப்ப சில பெண்கள் மட்டுமே இருந்தாங்க. அதுவும் நான் இருந்த குழுவுல நான் மட்டும்தான் பெண்.

இருந்த பெண்கள்ல சிலர் சினிமாவுக்கு போனாங்க. அப்ப வரை சினிமாக்கு போற ஆர்வம் எனக்கில்ல. தவிர சினிமா மேல ஒரு தவறான பார்வையும் பயமும் இருந்துச்சு. இந்த நிலைல என்னைத் தேடி சினிமா வாய்ப்பு வந்தது. மறுத்தேன். ஆனா, இயக்குநர் சந்தோஷ், தன்னோட ‘கணிதன்’ படத்துல நான் நடிச்சே ஆகணும்னு என் ஸ்கூலுக்கு நடையா நடந்தார். சரினு அதர்வாவுக்கு அம்மாவா நடிச்சேன்.

என் சினிமா என்ட்ரி என் கூத்துப்பட்டறைக்கு வேறு ஒரு முகம் கொடுக்க ஆரம்பிச்சது. நிறைய அறிமுக நடிகர்களுக்கு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பயிற்சிகள், சீன்களுக்கான ஒத்திகைகள் கொடுக்கும் இடமா என் ஸ்கூல் மாற ஆரம்பிச்சது.

அப்படித்தான் ‘ஒரு குப்பைக் கதை’ படத்துல வில்லனுக்கு பயிற்சி கொடுக்கப் போயி தினேஷுக்கு அம்மாவா நடிச்சேன். அதுவும் சரக்கடிக்கிற கேரக்டர். நல்ல பேரு கிடைச்சது.‘ஒரு பெண் நடத்துற கூத்துப்பட்டறை இதுதான்’னு பலரும் என் பள்ளியை சொல்றாங்க. அதுல எனக்குப் பெருமைதான்.

‘கனா’ படத்துல வந்த அந்த 25 கிரிக்கெட் விளையாடுற பொண்ணுங்களுக்கும் நாங்கதான் நடிப்புப் பயிற்சி கொடுத்தோம். ஷூட் போறப்ப தமிழ்ல பேசினா புரிஞ்சிக்கிற அளவுக்கு மாத்தி அனுப்பினோம். சினிமாவுக்காக மட்டுமில்ல தங்கள் மன அழுத்தத்தை போக்கிக்கவும் பலர் எங்க ஒர்க் ஷாப்புல கலந்துக்கறாங்க.

சிலம்பம் தெரிஞ்ச நடிகை வேணும்னு ‘மருது’ படத்துக்காக இயக்குநர் முத்தையா என்னைத் தேடி வந்தார். சிலம்பம் கத்துக்கிட்ட முதல் நடிகை நான்தான்னு என் மாஸ்டரே அடிக்கடி சொல்வார்.‘சர்வம் தாள மயம்’,  ‘டூலெட்’, வெற்றிமாறன் சார் இயக்கிய ‘பாவக் கதைகள்’ வெப் சீரிஸ்னு பயணிச்சு இப்ப ‘குதிரைவால்’ வரை வந்திருக்கேன்.

எனக்கு கிடைக்காத படிப்பை என் பசங்களுக்கு அள்ளிக் கொடுத்தேன். அவங்களும் நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு புத்திசாலிகளா படிக்கிறாங்க. மூணு பசங்க- சாமிரா, ஆதில், ஆதிஷ். ‘உங்க வயசு என்ன’னு யார் கேட்டாலும் ‘35ல ஆரம்பிச்சு 65 வயசு கேரக்டர் வரைக்கும் என்னால நடிக்க முடியும்’னுதான் பதில் சொல்லுவேன்.

வயசை சொல்லியே ஆகணும்னு கேட்டதாலேயே ஓர் இந்திப் பட வாய்ப்பை நிராகரிச்சேன்.
ஒரு பொண்ணு மேல வர்றப்ப என்ன மாதிரி பிரச்னைகளை சந்திப்பாளோ... அது அத்தனையும் நானும் சந்திக்கறேன். என்னை முழுமையா ஆதரிக்கறவங்க எனக்கு அமைஞ்ச குருநாதர்கள்.

நடிப்பு சொல்லிக் கொடுத்தவர் முத்துசாமி சார்னா, தைரியத்தையும், மன வலிமையையும் கற்றுக்கொடுத்தவர் சம்பந்தம் சார். ரெண்டு பேருமே எனக்கு என்ன வரும்னு பார்த்து என் திறமையை வெளியே கொண்டு வந்தாங்க. மேடை பயத்தைப் போக்கியவர் நடிகர் அனந்த் சுவாமி.  பாண்டிலட்சுமி இப்ப ஆதிராவா இருக்கேன்.

திருமண வாழ்க்கைல நடந்த பிரச்னைகள் காரணமா சில வருடங்கள் வீட்டை விட்டே வெளிய வராம முடங்கியிருந்தேன். எனக்குனு புது அடையாளம் வேணும்னு தோணுச்சு. அப்ப என் அண்ணன் ஒரு புத்தகத்தோடு வந்து ‘இதுல ஒரு பெயரை தேர்வு செஞ்சு வைக்கலாம்... நீ வீட்டுக்குள்ள அடைபட்டு கிடந்தது போதும்... புது மனுஷியா வெளிய வா’னு சொன்னார்.

அந்தப் புத்தகத்திலே இருந்த பெயர்கள்ல ஒண்ணுதான் ஆதிரா. என் அண்ணன் எனக்கு வெச்ச பெயர். என் பசங்களுக்கே என் உண்மையான பெயர் தெரியாம இருந்தது. அப்புறம், அம்மா அப்பா வெச்ச பெயரை ஏன் மறைக்கணும்னு ‘ஆதிரா பாண்டிலட்சுமி’னு டைட்டில்கள்ல கொடுக்க ஆரம்பிச்சேன்.

நான் என்னவா இருக்கேன்... என்ன சாதிச்சேன்... தெரியலை. ஆனா என் மனசுக்குப் பிடிச்சதை இப்ப பிடிச்சா மாதிரி மன நிறைவா செய்யறேன். அதுதான் நான் கத்துக்கிட்ட, மத்தவங்களுக்கு என் கூத்துப்பட்டறை மூலமா சொல்லிக் கொடுக்கற ‘நான்’. நீங்க யாருனு தேடுங்க... கண்டடைவதுதான் நீங்க. நான் இன்னமும் தேடிட்டுதான் இருக்கேன்.

*ஷாலினி நியூட்டன்

*ஆ.வின்சென்ட் பால்