லவ் ஸ்டோரி-கார்த்திக் சீனிவாசன்



நம்பிக்கையூட்டும் காதல்தான் தினப்பொழுதை அழகாக்குகிறது!

கார்த்திக் சீனிவாசன், நவீன போட்டோகிராஃபியின் பல புதிய வகைகளுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தவர்களில் முதல் வரிசையில் நிற்கிறார். இன்னும் இளைஞர்கள் வர நேர்ந்து விட்டாலும், இவரின் அடியொற்றித்தான் நடக்க வேண்டியிருக்கிறது. வலுவான தனித்தன்மையே அவரின் பாணி. மாடலிங் போட்டோகிராஃபியிலும், இப்போது wedding photographyயிலும் இவர் கொடியே பறக்கிறது.

தீராத பிரியமும் அன்பும் கொண்ட அவர் காதல் இணையர் ஹேமாவோடு கொண்டிருக்கும் அன்பை கனிந்து சொல்லிய காதல் பக்கங்கள் இனி…நான் படித்து வளர்ந்த காலத்தில் இந்த இணையம் - அலைபேசியெல்லாம் கிடையாது. இருந்த ஒன்றிரண்டு தியேட்டர்களை மட்டுமே அறிந்திருந்தோம்.
காதல் அதிகமும் சினிமாப்படங் களிலே இருந்தது. பெண்களைப் பார்த்துப் பேசினாலே குற்றமாகக் கருதப்பட்டது. அதுவும் எல்லோருக்கும் முன்னால் சாலையில் பார்த்துப் பேசுவது இன்னும் தவறு. பெண்கள் வேறு பிறவியென கருதப்பட்டார்கள். அவர்களை நாமே பிரித்து வைத்துவிட்டு,புரிந்து கொள்ள கஷ்டப்பட்டோம்.

எனக்கு எதுவும் நிகழாவிடினும் என்னைச் சுற்றி இருந்தவர்களுக்கு காதல் நிகழ்ந்து கொண்டே இருந்தது. இப்போதுதான் ஆண், பெண் பகிர்வில் பெரிய புதிர்கள் இல்லை. ஆனால், அப்போது நாமே சிக்கல்களாக வைத்துக் கொள்ள விரும்பினோம். ஒரு மனிதனுக்கும் மனுஷிக்கும் இடையில் இருப்பது காதல் மட்டும்தானா?

இரண்டு சகோதரிகளுக்குப் பிறகு நான் பிறந்தேன். சின்ன வயதிலேயே அம்மாவை இழந்துவிட, அக்காக்களால் பாசம் குறையாமல் வளர்க்கப்பட்டேன். அதனால் பெண்களை எப்போதும் நல்ல கண்ணோட்டத்தோடு பார்த்து வந்திருக்கிறேன். சென்னைக்கு மாடலிங்கிற்கு வந்தபிறகு பெண்களை அவ்விதமே பார்க்கிறேன்.

சின்ன வயதில் பெண் பிள்ளைகளோடு விளையாடியபோது, அவர்கள் திடீரென்று ஒரு நாள் விளையாட்டிற்கு வரவில்லை. முன்பைவிட திடீரென அழகாய் வந்து நின்றார்கள். ‘என் கூட பேசாதே’ என்று கூட சொன்னார்கள். ‘இன்னும் அவள் சின்னப் பிள்ளையில்லை, வீட்டுக்கு வராதீங்கப்பா’னு வீட்டில் பெரியவர்கள் கூட சொன்னார்கள். அந்தக்காலம் அப்படித்தான் இருந்தது.  

அப்புறம் சென்னை வந்து ஒளிப்பதிவாளராக பயிற்சி பெற நினைத்தபோது  நடிக்கப் போகலாமே என்றார்கள். இன்ஸ்டிடியூட்டிற்கு வெளியே பார்த்த ஒருவர், ‘நீங்க மிலிந்த் சோமன் மாதிரி இருக்கீங்க’ என்றபோது உயரப் பறந்தேன். பிறகு மாடலிங் பண்ண ஆரம்பித்தேன். முதல் ஷூட்டே நான் ஆண் மாடலாக, நுனி நாக்கு ஆங்கிலம் பேச 15 பெண்கள் உடன் நடந்தார்கள். கைகள் நடுங்க அணிவகுப்பில் நடந்தேன். ஒரு பெண்ணை நேரில் கண்டறியாதவனுக்குப் பக்கத்தில் அத்தனை பெண்கள்!

ஆனால், அங்கேயும் பெண்களுக்கு நம்பிக்கையான நண்பனாக இருந்தேன். மாடல் பெண்கள் உடன் சிநேகிதர்களுடன் அவுட்டிங் போக, ‘கார்த்திக் வீட்டுக்கு போய் வந்திடுறேன்’னு சொல்ல பழகிக் கொண்டார்கள். பார்ட்டி முடிந்த பிறகு என்னை வீட்டிற்கு டிராப் செய்ய துணை நாடினார்கள்.

எப்போதும் பெண்களின் பத்திரம் பற்றி கவலைப்பட்டேன். பெண்கள் சூழ பணி என்றாலும், அவர்கள் பாதிக்காமல், பூச்செண்டு பரிமாறாமல் தாண்டிப் போய்க்கொண்டு இருந்தேன்.

அப்போதுதான் இந்த ஹேமா வருகிறாள். ஒரு மாடலிங் ஷோவில் அவளைச் சந்திக்கிறேன். அந்த பெரிய கண்களில் ஏதோ மாயம் கூடியிருக்கிறது. பிடிவாதமாக அந்த முகம் மனதில் நின்று போகிறது. அன்றைக்கு மதியம். வேலைகள் முடிய உணவிற்கான நேரம் நெருங்க எல்லோரும் பஃபேயில் சாப்பிடத் தொடங்குகிறார்கள். கேமராக்களை எடுத்து வைக்கும் வேலையில் ஆழ்ந்திருக்கும் போது எனக்காக உணவை எடுத்து வந்து தருகிறது இரண்டு கரங்கள். பார்த்தால் அது ஹேமா.

பெண்மையும், அழகும் கூடியிருந்தாலும், அடுத்தவரின் பசி தீர்க்கும் அந்த பண்பு, பிரியம் கவர்ந்து விடுகிறது. அடுத்தடுத்து அன்பும், அறிவும், தெளிவும், உறுதியும் கொண்ட ஹேமா என் மனசிற்குள் வந்து விடுகிறாள்.

சக மனிதன் பட்டினி கிடப்பதைக் காணப் பொறுத்துக் கொள்ளாத மனம் ஆச்சர்யப்படுத்துகிறது. அடுத்தடுத்து கால ஓட்டத்தில் இரண்டு வருஷங்கள் பழகி மனம் புரிந்த பிறகு மணம் புரிந்தோம். அவள் சிநேகம் இயல்பாக இருந்தது. காதல் ஒருவரை அழகாக்குவது போல் வேறெந்த ஒப்பனையாலும் அழகாக்க முடியாது. காதல் வசப்பட்டிருக்கிற முகங்களை என்னால் பார்த்த மாத்திரத்தில் சொல்லிவிட முடியும்.

நல்ல காதல் உள்ளத்தை அழகாக்கும். உள்ளத்தில் ஒளியுண்டாயின் முகத்தில் அது வீசும். சிறந்த காதலர்களால் சிறந்த நட்பைப் புரிந்துகொள்ள முடியும். கண்ணைக் காக்கும் இரண்டிமை போல ஹேமா என்னைக் காத்தாள். இப்போது எங்கள் தீராத அன்பின் அடையாளமாக ஆர்யன் கார்த்திக், கியான் கார்த்திக் இருக்கிறார்கள்.

ஹேமா என்னை விடவும் திறமை வாய்ந்தவள். ஆங்கிலம், இந்தி, தமிழ் என சரளமாக உரையாடுவாள். நான் ஹேமாவுக்கு சம உரிமை அளித்திருக்கிறேன். அவர்களுக்கு என்ன தேவை என காது கொடுத்து கேட்கிறேன். பெண்களுக்கு ஒரு செக்யூரிட்டி வேண்டும். நம் முன்னோர்கள் பெண்களைக் கலந்தாலோசிக்காமல் செய்தவைகளை நாமும் பின்பற்றக்கூடாது. எல்லாவற்றையும் நம் பெயரில் வாங்கிப் போட்டுக் கொள்ளுதல் தகாது.
என் வீட்டின் முகப்பில் ஹேமா என்ற பெயரே அலங்கரிக்கிறது. காரை அவள் பெயரிலேயே வாங்கியிருக்கிறேன். அவளும் நகை, பட்டுச்சேலைகளை வாங்கி அலமாரியில் அடுக்கிக் கொள்வது கிடையாது.

எங்கள் இரண்டு பேருக்கும் பயணம் பிடிக்கும். பாங்காக்கிற்குப் போனால் கூட மனைவியுடன் போகிறேன். என் மகனை அழைத்து ‘உன்னை வேண்டிய மட்டும் படிக்க வைக்கிறேன். பிறகு உழைத்துச் சம்பாதித்து கல்யாணம் செய்து கொள்வது கூட உன் பொறுப்பு’ என உணர்த்தி
யிருக்கிறேன்.

வாழ்க்கையை வாழ்ந்து விட்டுப் போவதே அழகு என நானும் அவளும் முடிவு செய்திருக்கிறோம். Wedding Photographyக்காக ஒரு நிறுவனம் அமைத்து, அவளே நிர்வகிக்கிறாள். பெண்களை சுயம் காண வைப்பதே கடமை.நம்பிக்கையூட்டும் காதல்தான் தினப்பொழுதை அழகாக்குகிறது. தேகம் தன் வேகம் தளரும்போதும் மூன்றாவது காலாக முளைக்கிற அன்புதான் காதல். இங்கே விட்டுக் கொடுப்பதிலும் ஒரு வெற்றி உண்டு. காதல் வேண்டி யவற்றைத் தரும். எனக்கு ஹேமாவைத் தந்து வாழ்க்கை தந்தது.

செய்தி: நா.கதிர்வேலன்

ஓவியம்: ஸ்யாம்