தல! sixers story - 30



பழையன கழிதல்!

ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுமே மறக்க விரும்புவது…ஆனால் -மறக்க இயலாதது…2007 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைத்தான்!
இதற்கு முன்பாக நடந்த இரண்டு ஒருநாள் போட்டித் தொடரையும் இந்தியா வென்றிருந்ததால், அணி என்னவோ நம்பிக்கையோடுதான் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணமானது.ரசிகர்களும் உற்சாகமாகவே இருந்தார்கள்.ஊடகங்கள் உற்சாகமாக கபில்தேவ் தலைமையிலான 1983 இந்திய அணியையும், திராவிட் தலைமையிலான 2007 இந்திய அணியையும் ஒப்பிட்டு கட்டுரைகள் எழுதின.

முந்தைய 2003 உலகக்கோப்பைப் போட்டியிலும் கங்குலி தலைமையிலான இந்தியா ஃபைனல் வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

டிராக் ரெக்கார்டெல்லாம் இந்தியாவுக்கு பக்காதான்.எனினும் -போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் அப்போதைய கத்துக்குட்டி வங்கதேசத்துடன் நடந்த போட்டி, இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே கறையாக அமைந்தது.

கங்குலியும், யுவராஜ்சிங்கும் மட்டும் ஓரளவுக்கு கவுரவமாக ஆட முன்கள வீரர்களான சேவாக், ராபின் உத்தப்பா, சச்சின் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வங்கதேச பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு பலியானார்கள்.இந்தியப் பெருஞ்சுவரான திராவிட்டையே வெறும் 14 ரன்களில் பெவிலியனுக்கு விரட்டியடித்தார்கள்.தோனி, ஹர்பஜன்சிங், அஜித் அகர்கர் என்று மூவரும் வரிசையாக முட்டை போட்டார்கள்.கடைசி இரு வீரர்களான, பேட்டே பிடிக்கத் தெரியாத ஜாகீர்கானும், முனாஃப் பட்டேலும் வீரதீரத்தோடு போராடி ஆளுக்கு தலா 15 ரன்கள் எடுத்தும் கீர்த்தி பெற்ற இந்திய அணியால் 200 ரன்கள் கூட எடுக்க முடியாமல் 191 ரன்களிலேயே ஆல்-அவுட் ஆனது.

அடுத்து சேஸிங் செய்த வங்கதேசமோ மூன்று அரை செஞ்சுரி களோடு, ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை கம்பீரமாக வென்று உலக கிரிக்கெட் அரங்கையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.இந்தப் போட்டியில் இந்தியா அடைந்த படுதோல்வி, இங்கிருக்கும் ரசிகர்களை வெறி கொள்ள வைத்தது.இந்தியாவின் முன்னணி வீரர்களின் வீடுகள் இங்கே ரசிகர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாயின.

குறிப்பாக ‘டக் அவுட்’ ஆன தோனியின் ராஞ்சி வீட்டில் கல்லெறி சம்பவம் கடுமையானது.இத்தொடரின் முதல் அத்தியாயமே இங்கேதான் தொடங்கியது.அடுத்து கத்துக்குட்டி அணிகளிலேயே கத்துக்குட்டியான பெர்முடா அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் சூறையாடி இருந்தாலும், இலங்கை அணியுடனான போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

வங்கதேசம், இலங்கை அணிகளுடனான இரண்டு போட்டியிலுமே நம் ‘தல’ தோனி, ‘டக் அவுட்’ ஆனார் என்பதுதான் சோகத்திலும் சோகம்.அடுத்த சுற்றான ‘சூப்பர் எய்ட்’ பிரிவுக்கு இலங்கையும், வங்கதேசமும் தேர்வாக, இந்தியா படுதோல்வி முகத்தோடு தாயகம் திரும்பியது.

தில்லி விமான நிலையத்தில் இந்திய அணிக்கு ரசிகர்களால் கொடுக்கப்பட்ட வரவேற்பு படுமோசமானது.அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் இதை என்று நினைத்தாலும் கண்கள் கலங்கிவிடுவார்கள்.

“வாழ்க்கையில் மிகவும் அவமானகரமாக அந்தத் தருணத்தைக் கருதினேன். கண் மண் தெரியாமல் எனக்கு ஏற்பட்ட கோபத்தையெல்லாம் ஒன்று திரட்டினேன். அந்தக் கோபத்தை இனி கிரவுண்டில் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன். நல்ல கிரிக்கெட் வீரனாக மட்டுமின்றி நல்ல மனிதனாகவும் என்னை வெளிப்படுத்திக் கொள்ள அன்றைய கோபம்தான் உதவியது...” என்று தோனி பின்னர் அச்சம்பவத்தை ஒருமுறை குறிப்பிட்டார்.2007 உலகக் கோப்பைப் போட்டிகள் ஒரு விஷயத்தை மட்டும் இந்திய கிரிக்கெட்டுக்கு உறுதியாகச் சொன்னது.பழையன கழிதல் நல்லது!

பயிற்சியாளரான கிரேக் சேப்பலும், இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

அப்போதைய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு செயலர் நிரஞ்சன் ஷா, இத்தோல்விக்கு கேப்டன் திராவிட் பொறுப்பல்ல என்று சம்பிரதாயமாகச் சொன்னாலும், கேப்டன் பொறுப்புக்கு ஒரு புதிய இளைஞரை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் சூசகமாகக் குறிப்பிடத் தவறவில்லை.
நிரஞ்சன் ஷாவின் மனதில் இருந்தவர் யுவராஜ்சிங்தான் என்று ஊடகங்கள் கணித்தன.

ஆனால் -ஷாவின் மனதில் இருந்தவரோ விக்கெட் கீப்பர் தோனி என்பது பின்னாளில்தான் தெரிந்தது.அதிரடி வீரரான யுவராஜ்சிங்கால், சிக்கலான சூழல்களில் அணிக்கு சேதாரத்தைத் தவிர்க்கக் கூடிய குயுக்தியான முடிவுகளை எடுக்க முடியுமா என்கிற சந்தேகம் தேர்வாளர்களுக்கு இருந்தது.

அதற்கேற்ப அடுத்தடுத்து நடந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தோனி, தன் பொறுப்பை உணர்ந்து அணியின் சுமையை தோளில் சுமந்து விளையாடத் தொடங்கினார்.

எனவேதான் -அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த முதலாம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தோனி, அணியை வழிநடத்தும் கேப்டன் ஆனார்.மூத்த வீரர்கள் டி20 உலகக்கோப்பை விளையாடுவதை நாசூக்காக தவிர்த்தனர்.
சச்சின்தான் முதன்முதலாக தோனியின் பெயரை கேப்டன் பதவிக்கு முன்மொழிந்தார்.

அப்போதைய தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார், திராவிட், கங்குலி ஆகியோரும் இதை வழிமொழிந்தார்கள்.26 வயதில் இந்திய அணிக்கு ‘தல’ ஆனார் நம்ம தல.“கிரிக்கெட் பயிற்சிக்கு பெரிய வசதிகள் இல்லாத சிறிய மாநிலமான ஜார்க்கண்டில் இருந்து நான் அணிக்கு வந்ததே ஆச்சரியம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஜார்க்கண்டில் இருந்து இந்திய அணிக்கு ஒரு வீரர் என்பதே, எம் மக்களுக்கு நடைபெற சாத்தியமில்லாத கனவாக இருந்தது. இன்று இந்திய அணிக்கே ஒரு ஜார்க்கண்ட் பையன் கேப்டன் என்பது கிள்ளிப் பார்த்து வலித்தும் கூட நம்பமுடியாத நிகழ்வாக இருக்கிறது...” என்று நெகிழ்வாக சொன்னார் தோனி.பின்னர் நடந்ததெல்லாம் இந்திய கிரிக்கெட் வரலாற்றையே புரட்டிப் போட்ட நிகழ்வு.

(அடித்து ஆடுவோம்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்