1953 - 69களில் வெளிவந்த மர்ம நாவல்கள் 2021ல் மறுபதிப்பு காண்கின்றன!‘‘இப்போவெல்லாம் யாரு சார் புக்கு படிக்கிறாங்க? எல்லாம் ஃபேஸ்புக்கு, வாட்ஸ்அப்புதான்…” என்கிற புலம்பல் அதிகரித்திருக்கும் காலக்கட்டத்தில் அதிரடியாக அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை வாசிப்பால் கட்டிப்போட்ட மர்ம நாவல் இயக்கம் மறுமலர்ச்சி காண்கிறது.
தமிழில் மர்ம நாவல்களை, ஆங்கில நாவல்களுக்கு இணையான உள்ளடக்கம் மற்றும் தரத்தோடு 1950களில் வெளியிடத் தொடங்கிய அதே ‘பிரேமா பிரசுரம்’தான், மீண்டும் அதே நாவல்களை மறு அச்சு செய்கிறது.

“கொரோனா ஊரடங்கு சமயத்தில் எல்லாத் தொழிலைப் போலவும் எங்க பதிப்புத் தொழிலும் கடுமையா பாதிக்கப்பட்டது. ஆனா, வீட்டில் முடங்கிக் கிடந்தவர்கள் வாசிக்க ஆரம்பிச்சாங்க.புத்தகங்கள் தயாரிப்பு என்பது சமையல் போன்றது. சமைச்சதை சாப்பிட்டவங்க திருப்தி அடையறாங்க என்பதுதான் சமையல்காரனுக்கு சந்தோஷமே.கொரோனா சமயத்தில் நாங்க சோதனை முறையில் எங்களோட பழைய சில மர்ம நாவல்களை கிண்டில் என்கிற மின்வாசிப்பு களத்தில் பதிவேற்றினோம்.

பழைய நூல்களா இருந்தாலும் அவற்றை வாசிச்சவங்களுக்கு அது புது அனுபவமா இருந்தது. மேலும் நூல்களைக் கேட்டு எங்களைத் தொடர்பு கொண்டாங்க.வாசிக்க வாசகர்கள் ரெடியா இருக்கிறப்போ, அவங்களுக்கு நூல்கள் கிடைக்கச் செய்வது எங்க கடமை என்பதால் ஐம்
பதுகளின், அறுபதுகளின் இளைஞர்களை வாசிப்பு சுவாரஸ்யத்தால் கட்டிப்போட்ட எங்க பழைய மர்ம நாவல்களை தூசு தட்டியெடுத்து, புதுசா கொடுக்க ஆரம்பிச்சிருக்கிறோம்...” என்று பேச ஆரம்பித்தார்  ‘பிரேமா பிரசுர’த்தின் ரவி ராமநாதன்.

முதற்கட்டமாக மேதாவி, சிரஞ்சீவி, பி.டி.சாமி போன்ற எழுத்தாளர்கள் எழுதிய சுமார் 40 புத்தகங்கள் மறுபதிப்பு காண்கின்றன. இவற்றை முன்
மதிப்பு வெளியீட்டுத் திட்டம் மூலமாக வெளியிட ‘பிரேமா பிரசுரம்’ முன்வந்திருக்கிறது.“எப்பவுமே கடந்த காலத்தை அசைபோட புத்தகம் வாசிப்பவர்களுக்கு பிரியம் அதிகம். அறுபது, எழுபது வருஷங்களுக்கு முன்னாடி நம்ம ஊர் எப்படி இருந்தது, மனிதர்கள் என்ன மாதிரி வாழ்ந்தார்கள் என்பதையெல்லாம் தெரிஞ்சுக்க பழைய நாவல்களை இப்போ வாசிக்கிறது உதவும்.

அவ்வகையில் எங்களோட நாவல்களுக்கு 2கே கிட்ஸ் என்று சொல்லப்படுகிற இன்றைய இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். கிண்டிலில் நாங்கள் ஏற்றிய நூல்கள் சராசரியாக ஐந்நூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் தினமும் வாசிக்கப்படுகின்றன. கிண்டிலை பாவிப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்தான்… அவங்களிடமிருந்து கிடைக்கும் ஃபீட்பேக் எங்களை ரொம்ப உற்சாகப் படுத்தியிருக்கு.

“அப்பா அரு.ராமநாதன் அந்தக் காலத்திலேயே ரொம்ப மாடர்னா சிந்திச்சவரு. அவருக்கு சரித்திரக் கதைகளில்தான் ஆர்வம். அவர் எழுதிய ‘வீரபாண்டியன் மனைவி’ என்கிற மகத்தான சரித்திர நாவல், இன்னைக்குவரைக்கும் பெஸ்ட் செல்லர்.சரித்திரத்தில் ஆர்வம் என்றாலும், அப்போதைய ஆங்கில பாக்கெட் புக்ஸை வாசிப்பது மாதிரியான அனுபவம், வெறும் தமிழ் மட்டுமே வாசிக்கத் தெரிஞ்ச நம்ம இளைஞர்களுக்கும் கிடைக்கணும்னு விரும்பினாரு. அவர் நடத்திய ‘காதல்’ என்கிற மாதப் பத்திரிகையை இன்னமும் அறுபது வயதைக் கடந்தவர்கள் சிலிர்ப்போடு நினைவுகூர்கிறார்கள்.
எங்க பிரசுரத்தோட சிந்தனையாளர் வரிசை நூல்களெல்லாம் அப்ப ரொம்ப பிரபலம். அதே மாதிரி எங்க பிரசுரத்துக்கு பெரும்புகழ் கிடைச்சது இம்
மாதிரி மர்மநாவல்களால்தான்.

முதன்முதலா சிரஞ்சீவி எழுதிய ‘மர்மக்கொலை’ என்கிற நாவலைத்தான் வெளியிட்டோம். அதைத்தொடர்ந்து சிரஞ்சீவி, மேதாவி, பி.டி.சாமின்னு பிரபலமான எழுத்தாளர்கள் தொடர்ந்து மர்மக்கதைகளை கிட்டத்தட்ட இருபதாண்டுகள் எழுதினாங்க.நாங்க இருநூறுக்கும் மேற்பட்ட மர்மநாவல்களை வெளியிட்டிருக்கோம். அத்தனையுமே விற்பனையில் பெரும் சாதனை படைத்தவை. நிறைய மறுபதிப்பும் வெளியிட்டோம்.

இப்போ அவைகளை திரும்பவும் ரீலாஞ்ச் செய்வதற்கான காரணம், மர்ம நாவல்களுக்கு இருக்கும் மார்க்கெட்டை உணர்ந்துதான். இவை நன்றாக விற்கும் பட்சத்தில், ஏராளமான வாசகர்கள் வாசிக்கும் பட்சத்தில் நிறைய இளைஞர்கள் மீண்டும் நாவல் எழுத ஆர்வத்தோடு வருவாங்க. புதிய எழுத்தாளர்களை வாசிப்புலகத்துக்கு அறிமுகப்படுத்த முடியும் என்கிற நோக்கமும் எங்களுக்கு இருக்கு…” என்கிறார் ரவி ராமநாதன்.

அடிப்படையில் கெமிக்கல் என்ஜினியரான இவர், அத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்று தொழிற்சாலையெல்லாம் நடத்தி இருக்கிறார். இருப்பினும் அவருடைய அப்பாவின் கனவான பிரசுரத் தொழிலை தொடர்ந்து நடத்த தன்னுடைய சொந்தத் தொழிலைத் துறந்திருக்கிறார்.

யுவகிருஷ்ணா