பாதுகாக்கப்பட்ட பகுதி என ஜெயலலிதா அறிவித்தார்... இப்போது அப்பகுதிக்கு சாவுமணி அடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி...



தோண்டப்படும் சதுப்பு நிலம்… எச்சரிக்கும் சூழலியலாளர்கள்...

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைத் தோண்டுவதற்கு சுற்றுச்சூழலியலாளர்கள் மத்தியிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. நிவர் புயலால் பள்ளிக்கரணை, நாராயணபுரம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடானது. இன்னும் அங்கே மழைநீர் வடியவில்லை. அந்தப் பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடி தீர்வாக கால்வாய்கள் அமைக்கப்பட்டு அதன்வழியே தேங்கும் மழைநீரை நேரடியாகக் கடலுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தை அறிவித்தார்.

இந்தக் கால்வாய்கள் மார்ஷ்லேண்ட் எனப்படும் சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட இருப்பதுதான் சோகம். இந்த சதுப்பு நிலத்தை 2005ல் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அவரின் வழிவந்தவர்கள் அதே சதுப்புநிலத்திற்கு சாவுமணி அடிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

கடந்த இருபது ஆண்டுகளாக பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பற்றி ஆய்வு செய்து வரும் ‘கேர் எர்த்’ அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான டாக்டர் ஜெய வெங்கடேசன், ‘‘ஏற்கனவே சதுப்புநிலத்தின் முக்கால் பகுதியை அழிச்சிட்டோம். இப்ப மிச்சம் இருக்கிறதையும் அழிச்சிட்டா இந்தப் பகுதி மட்டு மல்ல, சுற்றியிருக்கிற பல பகுதிகள் வறண்டு ஆபத்தான நிலை ஏற்பட்டும்…’’ என வேதனையுடன் பேசுகிறார்.   

‘‘பொதுவா, சதுப்பு நிலம்ங்கிறது நீர்நிலைகள்ல ஒருவிதம். ஆனா, நீர்நிலைக்கும் சதுப்புநிலத்துக்கும் அடிப்படை வித்தியாசமே ஆழம்தான். அதிக ஆழமில்லாம மூணு அடிக்குக் குறைவாக இருந்தா அது சதுப்புநிலம். அதுக்கு மேல ஆழம் இருக்குறது நீர்நிலை.

நீர்நிலைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆனா, சதுப்பு நிலம் இயற்கையா உருவானது. எப்பவும் ஈரத்தன்மையோடு இருக்கும். சதுப்பு நிலங்கள் நன்னீர், உவர்நீர்னு ரெண்டு வகையா இருக்கு. உதாரணத்துக்கு பிச்சாவரம் அலையாத்திக்காடுகள் உவர்நீர் சதுப்புநிலம். ஆனா, நம்ம பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ரொம்ப சிறப்பு வாய்ந்தது. காரணம், ரெண்டு நீரும் இந்தச் சதுப்பு நிலத்துக்குள்ள இருக்குறதுதான்.

மழைக்காலம் முழுவதும் நன்னீர் சதுப்புநிலமா இருக்கும். கோடை காலத்துல நீர் குறையக் குறைய கடல் நீர் உள்ள வரும். இந்த மாதிரி நீர் பரிவர்த்தனை இருக்கிறதால நமக்கு இரண்டு பயன் இருக்கு. ஒண்ணு வெள்ளத்தடுப்பு. மற்றொன்று நிலத்தடி நீர் பெருக்கம்.

இந்த நிலம் ஒரு ஸ்பாஞ்ஜ் மாதிரி. இந்த ஸ்பாஞ்ஜ் பள்ளிக் கரணையில 35 அடிக்கும் அதிகமா பூமிக்கடியில இருக்கு. அதனால எவ்வளவு நீர் வந்தாலும் உறிஞ்சிக்கிட்டே இருக்கும். உறிஞ்சினது போக எஞ்சிய நீரை ஒரு ஏரியைப் போல தேக்கி வைக்கும். அதுக்குப் பிறகு தேங்குற நீரை கொஞ்சம் கொஞ்சமா கடல் பக்கம் கொண்டு சேர்த்துடும்.

முதல்ல, ஒக்கியம் மடுவுக்குப் போகும். அங்கிருந்து பக்கிங்ஹாம் கால்வாய், மணல் பகுதினு கடல்ல கலக்கும். இந்த சதுப்புநிலத்துக்கு அடியில மூணு நீர்ப் படுகை ஓடுது. அதனால, வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதியில நிலத்தடி நீர் நல்லாயிருக்கும். முன்னாடி நிறைய லாரிகள் இங்கிருந்து குடிநீர் எடுத்திட்டுப் போறதை பார்த்திருப்போம். இன்னைக்கு கட்டடங்கள் அதிகமானதால நிலத்தடிநீரும் குறைஞ்சுபோச்சு.

இந்த சதுப்புநிலம் மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்கி மேடவாக்கம் வரை சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பரந்து விரிந்து இருந்துச்சு. இன்னைக்கு வெறும் 620 ஹெக்டேரா சுருங்கிடுச்சு. பிரிட்டிஷ் காலத்துல இந்த நிலத்தை புறம்போக்குனு ஆவணப்படுத்தியிருந்ததால நிறைய குடியிருப்புகள் வந்துச்சு. இதுல மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டுச்சு. தனியார் நிறுவனங்கள் வந்துச்சு. பெருங்குடி குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுச்சு. பல்லாவரம், துரைப்பாக்கம் இருநூறு அடி சாலை சதுப்பு நிலத்திற்கு இடையே போடப்பட்டுச்சு.

இப்படி பல்வேறு ஆக்கிரமிப்புகள். இதன்பிறகே அதிகாரிகள் பாதுகாப்பு செய்ய வேண்டிய பகுதிகளை பத்திரப்படுத்தினாங்க. இதில்தான் இன்னைக்கு தோண்டணும்னு அரசு சொல்லி யிருக்கு...’’ என்கிறவரிடம், இப்போதைய பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்றோம். ‘‘இப்ப 2015க்குப் பிறகு குடியிருப்புக்குள் தண்ணீர் வந்ததும் எல்லோரும் வெள்ளம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இது வெள்ளம் அல்ல. இதுக்குப் பெயர் வாட்டர் லாக்கிங். அதாவது தண்ணீர் வெளியேற முடியாம தேங்கி நிற்கிறது.

பொதுவா, தண்ணீர் வடிய ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு பூமியில் வடியணும். மண்ணும், புல்லும் இருந்தால்தான் தண்ணீர் உள்ளிறங்கும். ஆனா, கான்கிரீட்டால் பூமியில் வடிய வழியில்லாமப் போச்சு. அடுத்து, அது போவதற்கான பாதை அடைபட்டிருக்கு. அதனால, வெளியேற முடியாத நீர் தெருக்கள்ல சூழ்ந்திருக்கு.

தரமணி, கல்குட்டை, பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நாராயணபுரம், சுண்ணாம்புக்கொளத்தூர், பள்ளிக்கரணை, ஒக்கியம் துரைப்பாக்கம்னு இந்தப் பகுதிகள்ல இருந்து வர்ற தண்ணீர் எல்லாம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்குதான் வரணும். குறிப்பா, 234 சதுர கிமீ நிலத்துல இருந்து வரக்கூடிய தண்ணீர் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துலதான் வடியணும்.

தவிர, 54 ஏரிகளிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு தண்ணீர் வருது. இப்ப பிரச்னை எதனாலனா இந்த 54 ஏரிகள் எல்லாமே நல்லாயிருக்குனு சொல்ல முடியாது. சில ஏரிகள் ஆக்கிரமிப்பால் குறைஞ்சிருக்கு. சிலது சாலைகள் உள்ளிட்ட மற்ற வளர்ச்சியினால் துண்டிக்கப்பட்டிருக்கு. சிலவற்றில் வடிகால் சரியில்ல. சிலவற்றை ஆழப்படுத்தல.

இந்த 54 ஏரிகளையும் ஆழப்படுத்தி சீர் செய்தால் குடியிருப்புக்குள் நீர் புகாது. அப்புறம், இங்க ஒண்ணு அங்க ஒண்ணுனு செய்யாமல் நீர் போகக்கூடிய கால்வாய்களை சுத்தப்படுத்தி ஆக்கிரமிப்புகளையும் அகற்றணும். இப்ப ஆக்கிரமிப்புனு சொல்லவே பயமா இருக்கு. ஏன்னா, இங்க ஆக்கிரமிப்பை அகற்றணும்னு சொன்னாலே ஏழை மக்களைத்தான் அடிச்சு துரத்துறாங்க. பாவம் அவங்க. ஆக்கிரமிப்புனா குடிசைகள்னு எடுத்துக்கக் கூடாது. மோசமா கட்டப்பட்ட கட்டடங்களும் இருக்கு.

அப்புறம் சதுப்புநிலத்துல தண்ணீர் வடமேற்கில் இருந்து தென்கிழக்குல வடியும். இது ஒரு வழி. அடுத்து, தென்மேற்குல இருந்து வடகிழக்குல வடியும். அது இன்னொரு வழி. இதுக்கு தடையா இருக்குற இடம் பெருங்குடி குப்பை மேடு. பள்ளிக்கரணை சதுப்புநிலம் கடல்மட்டத்துல இருந்து
0.5 மீட்டர் மேல இருக்கு. ஆனா, பெருங்குடி குப்பைமேடு நாலு முதல் 7 மீட்டர் கடல்மட்டத்துல இருந்து மேல இருக்குது. இதுதான் தண்ணீைரத் தடுக்குது. அதனால, இதையும் சீர்படுத்தி பள்ளிக்கரணைக்குள்ள தண்ணீர் வரச் செய்யணும். அந்த நீர் சதுப்புநிலத்துல நிற்கணும். பிறகு, ரீசார்ஜ் ஆகணும். மீதி உபரியா இருக்குற நீர்தான் கடலுக்குப் போகணும்.

இந்த நன்னீரை நாம் மூலநீரா யோசிக்கணும். இப்ப ஒக்கியம் மடுவுல உள்ள நீர் பக்கிங்ஹாம் கால்வாய்ல போய் சேருது. பக்கிங்ஹாம் கால்வாய்ல உள்ள நீர் பெரும்பாலும் உப்புநீர்தான். அப்ப உப்புநீர் உள்ள வராமல் இருக்க இந்த நன்னீர்தான் உதவுது. கோடை காலத்துல உப்புநீர் வராமல் தடுக்க சதுப்புநிலம்தான் அரணா இருக்குது.

இப்ப அரசின் கூற்றுப்படி சதுப்புநிலத்துக்கு தண்ணீர் எடுத்திட்டு வராமல் கால்வாய் வழியா நேரடியா கடலுக்குக் கொண்டு போவோம்னு சொல்றது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு தண்ணீர் வந்தால்தான் சுற்றியிருக்கிற பகுதிகள் செழிப்பா இருக்கும். இல்லனா, இங்குள்ள அத்தனை பூமியும் வறண்டு போயிடும்...’’ என்கிறார் ஜெய.

இந்நிலையில் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாக்க வேண்டுமென அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது. அந்த அமைப்பின் ஜியோ டாமின், ‘‘இந்தியா முழுவதும் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட பல்லுயிரின வளமிக்க 94 சதுப்புநிலங்கள்ல மூன்று இடங்கள் தமிழகத்துல இருக்கு. அதுல ஒண்ணு பள்ளிக்கரணை. இங்க, 65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையான பாம்புகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 167 வகையான தாவரங்கள்னு மொத்தம் 625க்கும் மேற்பட்ட உயிரினங்களைக் காணலாம்.

எந்த ஓர் உயிரியல் பூங்காவிலும்கூட இத்தனை அதிகப் பல்லுயிரின வளத்தைப் பார்க்க முடியாது. இதைத் தோண்டி ஆழப்படுத்தி நீர்த்தேக்கமா மாத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியளிக்குது. நீர் இருப்பு நிச்சயமற்ற இன்றைய சூழல்ல ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துறது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனா, பள்ளிக்கரணையின் முக்கியத்துவம் அதன் இயற்கையான சதுப்புநிலச் சூழலிலே இருக்கு.

இதை மனிதர்கள் அமைத்த சாதாரண ஏரி, குளங்களோடு ஒப்பிடக்கூடாது. இந்த சதுப்புநிலத்தின் நில அமைப்பும், மண்ணின் தன்மையும், ஆழமும், பருவ காலங்களுக்கேற்ற தண்ணீர் இருப்பும், உணவும் அதற்கு ஏற்ற தகவமைப்புகொண்ட ஏராளமான உயிரினங்களை அப்பகுதியை நோக்கி ஈர்த்திருக்கு.

உதாரணத்துக்கு, பெரிய உள்ளூர்ப் பறவையான சங்குவளை நாரை (Painted Stork) மற்றும் வலசைப் பறவையான பூநாரைகள் (Flamingo) போன்றவை நீந்த இயலாதவை; ஆழம் குறைவான நீர்ல மட்டுமே வாழும் தகவமைப்பு பெற்றவை. இவையெல்லாம் சதுப்புநிலத்தை நாடியே வரும். சதுப்புநிலத்தை ஆழப்படுத்துவது இவ்வுயிரினங்களின் அழிவுக்கே வழிவகுக்கும்...’’ என்கிறவர், அரசுக்கு வைத்த சில கோரிக்கைகளை அடுக்கினார்.

‘‘2017ம் ஆண்டு சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு சட்டவிதிகள்படி பள்ளிக்கரணையை பாதுகாக்கப்பட்ட பகுதியா அறிவிக்கணும். அடுத்து, ​ஈரநிலங்களைப் பாதுகாக்க ராம்சார் (Ramsar) மாநாட்டு ஒப்பந்தத்துல நம் அரசு கையெழுத்திட்டிருக்கு. ஆனா, நூற்றுக்கும் மேற்பட்ட சூழல் முக்கியத்துவம் கொண்ட ஈரநிலங்கள் தமிழகத்தில் இருந்தும் கோடியக்கரை மட்டுமே ராம்சார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டிருக்கு. பள்ளிக்கரணை உட்பட முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களைக் காக்க அவற்றை ராம்சார் பகுதியா அறிவிச்சு நடவடிக்கைகள் எடுக்கணும். அப்புறம், ​பள்ளிக்கரணைக்கு நீர் வழங்கும் கால்வாய்கள்ல மாநகர சாக்கடை கலப்பதைத் தடுத்து நிறுத்தணும். ​பள்ளிக்கரணையில் தொடர்ந்து திடக்
கழிவுகள் கொட்டப்படுவதைக் கைவிட்டு சூழலுக்குத் தீங்கற்ற திடக்கழிவு மேலாண்மையைக் கையாளணும்.

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் எல்லைகளைத் தெளிவா வரையறுத்து எதிர்கால ஆக்கிரமிப்புகளையும் ஊடுருவல்களையும் தடுக்கணும். ​பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் பல்லுயிர்த் தன்மையையும் சூழலையும் பாதுகாக்க அப்பகுதி குறித்த ஆழ்ந்த புரிதல்கொண்ட நிபுணர்களையும் சூழல் வல்லுநர்களையும் உள்ளடக்கிகுழு ஒன்றை அமைத்து அவர்களின் ஆலோசனைகளை மேற்கொள்ளணும்.

வருங்காலங்கள்ல எந்தச் சூழலிலும் எஞ்சியிருக்கும் சதுப்புநிலப்பகுதிகள் குறுகியகாலப் பொருளாதார வளர்ச்சிக்காக மடைமாற்றப்படுவதைத் தவிர்க்கணும். இதை அரசு செய்தால்தான் இந்தப் பல்லுயிர் வளம் பாதுகாக்கப்படும். இந்நகரும் உயிர்ப்புடன் இருக்கும்...’’ என்கிறார் ஜியோ டாமின்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்