கழுத்தை நெரிக்கும் கடன்... கலங்கவைக்கும் இ.எம்.ஐ... கொரோனா கால துயரங்கள்!
கடன் என்ற சொல் இல்லாமல் அரசாங்கமே இயங்க முடியாத காலம் இது. கைக்கும் வாய்க்கும் முழம் போடும் வாழ்வில் மத்தியதர வர்க்கத்தினருக்கு இ.எம்.ஐ கடன்கள்தான் ஆபத்பாந்தவன்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது முதல் வீடு வாங்குவது வரை அனைத்துக் கடன்களுமே இ.எம்.ஐ எனும் தவணை முறைத் திட்டத்தில்தான் ஓடுகின்றன. சம்பளத் தேதியானதும் மாதத் தவணையைச் செலுத்திவிட்டு, ஒரு கடன் முடிந்ததும் இன்னொரு கடனில் புதிய வண்டியோ, டிவியோ, குளிர்சாதனப் பெட்டியோ வாங்கிப் போட்டு, வாழ்க்கையை நெடுக ஓட்டு வதுதான் மிடில் கிளாஸ் மாதவன்கள் வழக்கம். ஆனால், இந்த தவணைக் கடன்களுக்கு கொரோனா மூலம் வந்து சேர்ந்தது சோதனை.மாதம் தவறாமல் தவணை கட்டிக்கொண்டிருந்தவர்கள் பலர் கொரோனாவால் நிகழ்ந்த திடீர் வேலை முடக்கம், தொடர்ந்து நிகழ்ந்த வேலையிழப்பால் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மட்டும் சுமார் இரண்டு கோடியே பத்து லட்சம் மாதச் சம்பளக்காரர்கள் வேலை இழந்துள்ளார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதில் கடன் வாங்கியவர்களில் மிகமிகச் சிறிய எண்ணிக்கையினரால்தான் தங்கள் மாதத் தவணையைச் சரியாகச் செலுத்த முடிந்திருக்கிறது.
கொரோனா உருவானதைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் வங்கி மார்ச் முதல் ஆகஸ்ட் வரை செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகைகளுக்கு விலக்கு அளித்து ஆணையிட்டது. ஆனால், ஆகஸ்ட்டில் நிலைமை சீராகவில்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும். இப்படியான சூழலில் கடந்த மூன்று நான்கு மாதங்களாக கடன்காரர்களால் கடன் வாங்கியவர்கள் கடும் அவமானத்துக்கு ஆளாகிவருகிறார்கள்.
கொடுத்த கடனை வசூலிக்க வேண்டும் என்ற வெறியில் கடன் கொடுத்தவர்கள், வழக்கம்போல் தங்கள் நான்காம் தர வழிமுறை களைப் பயன்படுத்துகிறார்கள். வீட்டுக்கு ரவுடிகளை அனுப்புவது, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு போன் போட்டு மிரட்டுவது என இறங்கியிருக்கும் இந்த கும்பலால் கடன்பட்டவர்கள் கலங்கி நிற்கிறார்கள்.
ஒரு தவணை விடாமல் முறையாகக் கட்டிக் கொண்டிருந்தவர்கள்கூட கொரோனாவால் நிகழ்ந்த வேலை இழப்பால், கட்ட முடியாத சூழல் ஏற்பட, இந்த மிரட்டல் கும்பலால் கடும் உளைச்சலுக்கு ஆளாகி நிற்கிறார்கள்.ரிசர்வ் வங்கி ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாத காலத்துக்கான கடன் ஒத்திவைப்பை அறிவித்தபோது தனிநபர் கடனாளிகளில் சுமார் ஐம்பத்தொரு சதவீதம் பேரும், கார்ப்பரேட் கடனாளிகளில் சுமார் முப்பத்தொரு சதவீதம் பேரும் இந்த விலக்கு கேட்டு விண்ணப்பித்தனர்.
ஆனால், விலக்கு நீங்கிய பிறகும் கடனை பெரும்பாலானவர்கள் திருப்பிக் கட்டவில்லை. ஆட்டோ-டெபிட் எனும் தானியங்கி கடன் தவணை முறைகளில் சுமார் நாற்பத்தொரு சதவீதம் பேர் அக்டோபர் மாத தவணையைக் கட்டவில்லை என்கிறது, தேசிய தானியங்கி பட்டுவாடா அமைப்பு (National Automated Clearing House).
இவற்றில் தொண்ணூறு சதவீதம் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கில் போதுமான தொகை இல்லை என்பது மட்டுமே காரணம். இத்தனைக்கும் என்ஏசிஹெச் டேட்டாவின்படி வங்கிகளுக்குள்ளான ஸ்டாண்டர்டு இன்ஸ்ட்ரக்ஷன் ஏற்பாட்டில் இந்த ஆட்டோ டெபிட் வராது. உதாரணமாக, இந்திய ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், அதே வங்கியில் கடன் வாங்கினால், இரண்டு கணக்கு களுக்கும் இடையே நிரந்தர டெபிட் இணைப்பு ஏற்படுத்திவிடுவார்கள். மாதம் ஆனதும் தானாகவே அந்த சேமிப்புக் கணக்கிலிருந்து கடன் கணக்குக்கு தொகை வரவாகிவிடும். இதுதான் ஸ்டாண்டர்டு இன்ஸ்ட்ரக்ஷன்.
இந்த முறை என்ஏசிஹெச் டேட்டாவில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இல்லாமலே கடன் நிலுவைத் தொகை சுமார் நாற்பது சதவீதம். இதையும் கணக்கிட்டால் வராக் கடன் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்கிறார்கள்.ஒவ்வொரு ஆட்டோ டெபிட் பேமெண்ட் கட்டாமல் எகிறும்போதும் இருநூறு ரூபாய் அபராதம் என்கிறார்கள் வங்கியினர். பல மாதங்களாக தவணை கட்டாமல் விடும்போது இது மேலும் கணிசமாக எகிறும். ஏற்கெனவே வாங்கிய கடனையும் அதற்கான வட்டியையுமே கட்ட முடியாமல் திணறுபவர்களுக்கு இது மேலும் அதிகச் சுமையாகவே இருக்கும்.
இதைப் போலவே கிரிடிட் கார்ட் கடன் தவணையும் இந்த கொரோனா காலத்தில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எஸ்.பி.ஐ. கிரிடிட் கார்ட் நிறுவனத்துக்கு கடந்த செப்டம்பர் வரையான காலாண்டில் 4.29 சதவீதம் வராக் கடன் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இருபத்தாறாயிரம் கோடி கடன் தொகையில் எட்டு சதவீதம் வரை இதனால் பாதிப்படைந்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களுக்கு வராக்கடனில் பத்து சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கொரோனாவால் பெரும்பாலானவர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களைவிட்டு சொந்த கிராமங்களுக்குத் திரும்பியுள்ளது கடன் கொடுத்தவர்களுக்குப் பெரும் தலைவலியாய் மாறியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் கொரோனா வரை தவணைகளைச் சரியாகச் செலுத்திக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சூழ்நிலை காரணமாக நேர்ந்த இந்த தவணை தவறியமைக்கு நிறுவனங்கள் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள். உச்சநீதிமன்றம் இது தொடர்பாய் வழிகாட்டும் என்றே பல கடன்காரர்கள் காத்திருக்கிறார்கள்.
கொரோனாவால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது ஒரு முக்கியமான காரணம். சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் தங்களது கடனைக் கட்டாமல் போனதோடு தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தையும் வழங்க இயலாமல் போனது. இதனால் ஊழியர்கள் தங்களது சொந்தக் கடன்களை அடைக்க இயலாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இதனாலும், வங்கிகள் பாதிப்படைகின்றன.
‘கொரோனா எனும் கொடிய அரக்கனின் பிடி விலகாமல், உலகம் வழக்கமான பொருளாதார சூழலுக்குள் நுழையாமல், இந்த நெருக்கடிக்குத் தீர்வில்லை’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். ஆனால், மக்களோ அரசை எதிர்பார்க்கிறார்கள். அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு மாதாந்திரத் தவணைத் தொகையை மேலும் சில மாதங்களுக்கு விலக்கி வைக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.
இது தொடர்பாகவும் அவசர காலச் சட்டத்தில் ஷரத்துகள் இடம் பெறவேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். மொத்தத்தில் இதற்கெல்லாம் என்ன தீர்வு என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.
இளங்கோ கிருஷ்ணன்
|