இளநீர் வெட்ட சம்ப ளம் ரூ.20 ஆயிரம் to ரூ.30 ஆயிரம்!



நவீன கொத்தடிமைகளை உருவாக்கும் போலி விளம்பரங்கள்...

எஸ். செய்தித்தாளில் இப்படியொரு விளம்பரம் வந்திருக்கிறது!ஆச்சர்யத்துடன் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டோம்.எதிர்முனையில் இருந்தவர், ‘ஒரு கையில் இளநி பிடித்து வெட்டணும்... அதற்கான அனுபவம் உள்ளவர்கள்தான் தேவை. கிராமத்திலிருந்து வருபவர்களுக்கே முன்னுரிமை...’ என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு போனை கட் செய்தார். மறுபடியும் தொடர்பு கொண்டு, ‘மாதம் இவ்வளவு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு, இளநி வெட்டுவதில் அப்படி என்ன வேலை’ என்று கேட்டதற்கு, அதே பதிலை கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் சொன்னார்.

எங்கேயோ இடிக்கவே மீண்டும் தொடர்பு கொண்டோம். ரிங் மட்டுமே சென்றது. ஒருவேளை மொபைல் எண்ணைப் பார்த்து அழைப்பை எடுக்காமல் இருக்கிறாரோ என்று வேறொரு எண்ணில் இருந்து அழைத்தோம்.அப்போதும் பதிலில்லை.எனவே, விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த முகவரிக்குச் சென்றோம்.

இளநீர் வெட்டுவதற்கான தடயமே அந்த இடத்தில் இல்லை! அதிர்ச்சியுடன் அக்கம் பக்கத்தில் விசாரித்தோம்.‘‘கீழ்த் தளத்தில்தான் அவங்க ஆபீஸ். இப்ப பூட்டியிருக்கு போல. இந்தத் தெரு முனைல போய்ப் பாருங்க. அங்க ஒருத்தர் இளநி வித்துக்கிட்டு இருப்பார். அவர்கிட்ட கேளுங்க...’’ என்றார் அங்கிருந்தவர்.

உடனே அவர் சொன்ன இடத்துக்குச் சென்றோம். மறைந்த பழம்பெரும் இயக்குநர் வீட்டுக்கு அருகில்தான் அந்த இளநீர்க் கடை இருந்தது.  ‘‘ஐயா... இளநி வெட்ட ஆள் வேணும்னு விளம்பரம்…’’ என்று சொல்லி முடிப்பதற்குள் அங்கிருந்த இளநீர் வெட்டுபவர் பொங்கி விட்டார்.

‘‘அவன் ஒரு ஃபிராடு பையன் பா... பலமுறை அவன்கிட்ட சொல்லிட்டேன்... இப்படி எல்லாம் விளம்பரம் கொடுத்து மத்தவங்களை கஷ்டப்படுத்தாதனு. கேட்கவே மாட்டேங்கறான். விளம்பரத்துல கொடுக்கற போன் நம்பரை பெரும்பாலும் அட்டண்ட் பண்ணமாட்டான்.
எடுத்து பேசினான்னா மறுமுனைல எப்படி பேசறாங்க... அவங்க அப்பாவியா இல்ல புத்திசாலியானு எடை போடுவான்... அப்பாவினு தெரிஞ்சா அவங்களை வரச் சொல்லி பேசிப் பார்த்து பணத்தைக் கறப்பான்...

ஆமா சார்... சம்பளத்துல இவ்வளவு பர்சன்ட் இத்தனை மாசத்துக்கு எனக்குத் தரணும்னு டீல் பேசிட்டு... அக்ரிமெண்ட் போட்டு வெத்து பேப்பர்ல கையெழுத்து வாங்கி அப்புறமா எங்கிட்ட கூட்டிட்டு வந்து, ‘பாவம்ணா... கிராமத்துல இருந்து பொழைக்க வந்திருக்கான்... இளநீர் வெட்டு வான்... பார்த்து போட்டுக் கொடு’னு கெஞ்சுவான்!

நானும் பரிதாபப்பட்டு வேலை கொடுப்பேன்... ஆனா, விளம்பரத்துல சொன்ன சம்பளத்தை என்னால தர முடியாது... கொடுக்கற சம்பளத்தை வேற வழி இல்லாம வாங்குவாங்க... வெத்து பேப்பர்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால வாங்கற சம்பளத்துல அவனுக்கு கமிஷன் கொடுத்தே ஆகணும்... இது நவீன கொத்தடிமை சார்...’’ பற்களைக் கடித்தபடி சொன்னவர், நம்மை ஏற இறங்கப் பார்த்தார்.

‘‘ஏன் சார்... இளநீர் வெட்ட யாராவது இவ்வளவு சம்பளம் தருவாங்களா..? நாக்குத் தள்ள பொழுதன்னைக்கும் வெட்டினா கூட ஒரு நாளைக்கு ரூ.900தான் கிடைக்கும்! அதிகபட்சம் மாசத்துக்கு பத்தாயிரம் கிடைச்சாலே பெருசு! எதார்த்தம் இதுதான் சார்... இப்படி வர்ற விளம்பரத்தைப் பார்த்து ஏமாறாதீங்க...’’ என எச்சரித்தார். ஆக... மக்களே உஷார்... இந்த கொரோனா பொது ஊரடங்கை பயன்படுத்தி உங்களை நவீன கொத்தடிமையாக்க ஒரு கூட்டமே முயற்சிக்கிறது.

அன்னம் அரசு