நான்... - சேலம் சிவராஜ் சிவகுமார்
‘நீ என்ன போதிக்கிறாயோ அதன்படி வாழ்...’ இதைத்தான் என் குரு ஸ்ரீசுவாமி சிவானந்தா போதித்தார். அவர் காட்டிய வழியிலேயே இன்று வரை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ‘நவீன இந்தியாவின் சித்த மருத்துவத்தின் தந்தை’ - இந்தப் பெயர் கிடைத்ததெல்லாம் என் முன்னோர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடத்தின் பலன் எனலாம். மனித குலத்திற்கு சேவை செய்வதை கடவுளுக்கு செய்யும் சேவையாகவே என் முன்னோர்களும் பார்த்தனர். நானும் அதன் வழியே இப்போது வரை - 60 வருடங்களாக - மருத்துவம் செய்து வருகிறேன்.
ஏழு தலைமுறையாக இந்த சித்த மருத்துவத்தை செய்து வருகிறோம். எனக்கு முன் என் தாத்தா, அப்பா, நான், பின் என் மகள், மகன் மற்றும் பேரன்... என இந்த சேவையைச் செய்து வருகிறோம். மருத்துவப் பாதுகாப்பு, மரபுகள், அதன் தெய்வீகம், வளர்ச்சி, பண்டைய முறைகள்... என அத்தனையும் என் தாத்தாவிடமிருந்து என் அப்பாவுக்கும், எனக்கும், என் மூலம் என் மகள், மகன், பேரன் என வாழையடி வாழையாக சித்த மருத்துவம் செய்து வருகிறோம்.
சித்த மருத்துவத்தின் உன்னதத்தை உணர்ந்த என் தாத்தாக்கள் 200 வருடங்களுக்கு முன் இந்தியாவின் தெற்குப் பகுதி களில் மருத்துவ சேவைகளைத் துவங்கினார்கள். சுமார் 143 ஆண்டுகளுக்கு முன் ஜூலை 1875ம் வருடம் சித்த மருத்துவத்திற்கென முழுமையான ஆராய்ச்சி, பல தரப்பட்ட சித்த மருந்துகள் தயாரிப்பு என அனைத்திற்குமான ஸ்தாபனமாக எங்களின் சித்த மருத்துவக் கூடம் நிறுவப்பட்டது. அன்று துவங்கிய இந்த சேவை இன்றும் தரம் மாறாமல் செயல்பட்டு வருகிறது.
எங்களுடைய உழைப்பு, உண்மை, அனைத்தும் அறிந்து நம் நாட்டிலிருந்து மட்டுமல்ல, அயல் நாடுகளில் இருந்தும் கூட பலரும் எங்களிடம் மருத்துவம் வேண்டி வரத் துவங்கினர். என் முழுப் பெயர் சிவராஜ் சிவகுமார். 1943, ஆகஸ்டு 15ம் தேதி பிறந்தேன். புகழ்பெற்ற சித்த மருத்துவரான மருத்துவர் சிவராஜ், மற்றும் பரிபூர்ணா இருவருக்கும் மகனாகப் பிறந்தவன். சேலம் அருகே புகழ்பெற்ற கஞ்சமலை அருகே உள்ள கிராமம் சிவதாபுரம். அங்கேதான் என் பிறப்பு. எங்களின் பூர்வீகமும் அங்கேதான்.
அந்த மலையில் 18 சக்தி வாய்ந்த சித்தர்கள் வாழ்ந்து மகிமைப்படுத்தியதாக நம்புகிறோம். அவர்களின் ஆசீர்வாதம் இன்றும் எங்கள் குடும்பத்துக்கு உண்டு. மருத்துவர்கள் உருவாக்கப்படுவதில்லை, பிறக்கிறார்கள் என்னும் பழமொழிக்கேற்ப சித்த மருத்துவத்தில் ஊறிப்போன குடும்பத்தில் நான் பிறந்து, பிறப்பிலேயே சித்த மருத்துவம் எனக்குள் இருக்க 15 வயதில் மருத்துவப் பயிற்சியைத் துவங்கினேன். மருத்துவத்துடன் ஒழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை, சேவையின் நோக்கம் என அத்தனையும் எனக்கு என் முன்னோர்கள் மூலம் போதிக்கப்பட்டது.
சிறுவயதில் மற்ற குழந்தைகள் போல் என் குழந்தைப்பருவம் அமையவில்லை. மாறாக அப்போதே மருத்துவம், பயிற்சி, மருந்துகள் தயாரிப்பு இப்படித்தான் என் வாழ்க்கை மாறியது. ஒழுக்கம் உயிரினும் மேலானது என நம்பும் இரு தலைமைகளான என் தாத்தா மருத்துவர் ரத்தினவேல் மற்றும் என் தந்தை மருத்துவர் சிவராஜ் என இருவருக்கும் நான் செல்லப்பிள்ளையாக இருந்தேன்.
எனக்கும் அந்த ஒழுக்கம், விசுவாசம் அத்தனையும் அந்த வயதிலேயே இருந்ததால் இருவருக்கும் நான் மிகவும் முக்கியமானவனாக மாறினேன். இவ்விருவரையும் கடவுள் அனுப்பி வைத்த சேவகர்களாகவே மக்களும், என் உறவினர்களும் நானும் மதிக்கிறோம்.
சித்த மருத்துவத்தில் உள்ள அத்தனை நுட்பங்கள், ரகசிய சூத்திரங்கள், குணமாக்கும் மருந்துகள், சிறப்பான பயிற்சிகள்... இப்படி அனைத்தையும் எனக்கு போதித்தனர். என் வயதுக் குழந்தைகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கையில் எனக்கு கடவுள் வேறு ஒன்றைத் திட்டமிட்டு சமூகத்தின் சேவைப்பக்கம் அனுப்பினார்.
நான் என்னிடம் வரும் நோயாளிகளை முதலில் பேச விட்டு விடுவேன். சிலருக்கெல்லாம் என்ன பிரச்னை என்றே சொல்லத் தெரியாது. பொறுமையாகக் கூர்ந்து கவனித்து, என்னிடம் வருவோருக்கு உண்மையில் என்ன தேவை என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை அவர்களைப் பேசவிட்டு பின்னர்தான் சிகிச்சையைத் தொடங்குவேன்.
ஒரு நல்ல மருத்துவர் நல்ல கேட்பாளராக இருக்க வேண்டும் என என் தாத்தாவும், அப்பாவும் சொல்வார்கள். அதைத்தான் நானும் பின்பற்றுகிறேன். எப்படி கடவுள், பக்தர்களின் பிரச்னையை அமைதியாகக் கேட்டு அதை நிவர்த்தி செய்கிறாரோ அதே பாணிதான். மருத்துவர்கள் தம்மிடம் பிரச்னை என வரும் மக்களிடம் முதலில் செவி கொடுத்துக் கேட்க வேண்டும். என்றைக்குமே எங்கள் பரம்பரை இந்த சித்த வைத்தியத்தை ஒரு வேலையாக, அல்லது பணம் கொடுக்கும் தொழிலாகப் பார்த்ததே இல்லை. அப்படிப் பார்த்திருந்தால் நாங்கள் இத்தனை தலைமுறைகள் கடந்து இந்தத் துறையில் நிலைத்து நின்றிருக்க முடியாது.
தேவை என ஓடி வரும் மக்களுக்கு நிவர்த்தி கொடுக்கும் இடம் ஒன்று கோயில், மற்றொன்று மருத்துவமனை. அதை உணர்ந்து இன்றுவரை சேவையாகவே செய்து வருகிறோம். இத்தனை வருடங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் தொழில் வல்லுநர்கள், வெவ்வேறுபட்ட மருத்துவத் துறைகள் என கடந்து வந்திருக்கிறேன்.
இதில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் இரண்டு மருத்துவர்கள். என் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்கள். மறைந்த மருத்துவர் உத்தமராயன், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி யின் பேராசிரியர் மற்றும் மருத்துவர் சிரோன்மணி. இருவரும் இந்த சித்த மருத்துவத்திற்கு ஈடில்லா சேவையையும், பங்களிப்பையும் கொடுத்துள்ளனர். எங்களின் இந்த சேவையில் அவர்களின் பங்கையும் நிச்சயம் பதிவிட வேண்டும்.
ஆங்கில மருத்துவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது, சித்த மருத்துவம். சித்த வைத்தியம் குழந்தைப் பருவத்திலிருந்தே குடும்பத்தின் மூலம் வருவது. தலைமுறைகள் கடந்து செய்யும் சிகிச்சை முறை. எங்கள் குடும்பம் ஏழு தலைமுறைகள் கடந்து இந்த சித்த மருத்துவம் செய்து வருகிறோம். டாக்டர் சிவராஜ் வைத்தியசாலை காலம் தாண்டி இன்றும் சேவை செய்து வருகிறது. எங்கள் குடும்பமே வைத்தியம் செய்வதை எங்களுக்கு கடவுள் கொடுத்த பணியாகச் செய்து வருகிறோம்.
எப்படி என் வாழ்க்கை என் தாத்தா மற்றும் அப்பாவினால் வடிவமைக்கப்பட்டதோ அதே பாணியில் எனக்கடுத்து என் மனைவி திருமதி மல்லிகா சிவகுமார், பின்னர் என் மகள் மருத்துவர் சிவராஜ் கல்பனா, என் மகன் மருத்துவர் சிவராஜ் சஞ்சய் என குடும்பமாகச் சேர்ந்து பல தசாப்தங்களைக் கடந்து இந்த சித்த வைத்தியசாலையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
கண்டங்கள் தாண்டி கடல் கடந்து மில்லியன்கணக்கான நோயாளிகளை குணப்படுத்தியிருக்கிறோம். இதற்கிடையில் முடிந்தவரை இக்கால இளைஞர்களின் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் உடல் பிரச்னைகளைக் கண்டறிந்து பல இளைஞர்களை ஆரோக்கியமான பாதையில் திருப்பிக் கொண்டிருக்கிறோம்.
இதற்கென ஏராளமான இலவச கல்வி நிகழ்ச்சிகள், ஆரோக்கியம் சார்ந்த கூட்டங்கள் என மீடியாக்களிலும், பகுதி வாரியாக வருகை தருவது என்றும் நடத்தி வருகிறோம். இதை வெறுமனே எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டுமே செய்தால் அவ்வளவு வேகமாகச் செயல்பட முடியாது. எனவேதான் எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு போதித்த வைத்திய முறைகளை அடுத்து வரும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல வேண்டி சித்த மருத்துவத் துறைக்கென அனைத்து வசதிகளும் அடங்கிய கல்லூரி மற்றும் ஆய்வுக்கூடத்தை நிறுவி நடத்தி வருகிறோம்.
என் மகன் மற்றும் மகள் இருவரும் ஒன்றிணைந்து ‘சிவராஜ் நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி’, ‘சிவராஜ் ஹோமியோபதிக் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கூடம்’, ‘சிவராஜ் சித்தா மருத்துவக் கல்லூரி’, ‘சிவராஜ் மருத்துவத் தோட்டம்’... என அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள்.
200 வருடங்களுக்கும் மேல் சிவராஜ் சித்த வைத்திய சாலை மக்களுக்கு நிறைவான மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. என்னைத் தொடர்ந்து என் வாரிசுகளும், நாங்கள் உருவாக்கி வரும் பல நூறு சித்த மருத்துவர்களும் இப்பணியை மேற்கொள்கின்றனர் என நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது. இப்பெருமைகள் அனைத்தும் என் முன்னோர்களையும், தொடர்ந்து எங்களுக்கு ஆசி வழங்கும் கடவுளையுமே போய்ச் சேர வேண்டும்.
இப்பொழுது என் மகன் தொழில்ரீதியாகவும் சேலம் ஹோட்டல் சிவராஜ் ஹாலிடே இன் என்னும் நான்கு நட்சத்திர ஹோட்டலைத் துவக்கி எங்கள் தொழிலையே மற்றுமொரு பாதையில் பயணிக்கச் செய்து வருகிறார். இந்தளவுக்கு நாங்கள் நீடித்து நிற்கக் காரணம், எங்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையே. அந்த ஒழுக்கம்தான் என்னை ‘நான்’ என பேசும் அளவிற்கு முன்னேற்றியிருக்கிறது.முன்னோர்களை நமஸ்கரிக்கிறேன். கடவுளை வணங்குகிறேன்.
ஷாலினி நியூட்டன்
|