குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

செருப்புல நெருப்பு பறக்க நடந்து வரும் மாஸான ரஜினி இல்லாம, கிராபிக்ஸ துணைக்குக் கூப்பிடாம,  ‘கபாலி’ யில் மீண்டும் பழைய கிளாஸான ரஜினி தூக்கலா தெரிஞ்சார். சரி, ‘முள்ளும் மலரும்’, ‘மூன்று முடிச்சு’ கால ரஜினி திரும்ப வந்துட்டார்னு, கொஞ்சம் குழப்பமான கேங்ஸ்டர் கதை சொல்லி புக் பண்ணக் கிளம்புது ஒரு குரூப்பு...

முதல்ல, தன்னோட ‘சம்சாரம் அது மின்சாரம் 2’வுக்கு சூப்பர் ஸ்டாரை சாக்கு போட்டு அமுக்க கிளம்பி வர்றாரு இயக்குநர் விசு. விசு: இங்க பாரு கண்ணா, பொண்டாட்டிக்காக அலைஞ்சத கபாலி முதல் பார்ட்ல காட்டினோம்ல! அந்தப் பொண்டாட்டி உன்னை அலைய விடுறத ‘சம்சாரம் அது மின்சாரம்’ செகண்ட் பார்ட்ல காட்டுறோம். கபாலி ஃபர்ஸ்ட் பார்ட் குடும்பத்துக்கான ஆக்‌ஷன் படம்னா,  நாம எடுக்கப் போற செகண்ட் பார்ட் குடும்பத்துக்குள்ள நடக்கிற ஆக்‌ஷன்டா கண்ணா. சாணில பிள்ளையார் செஞ்சாலும் பூசணிப்பூல தும்பிக்கை  வைக்கிற மாதிரி, என் மேல நம்பிக்கை வை கண்ணா.

ஒரு கோட்டு போட்டதுக்காக ஒன்பது பக்கம் வசனம் பேசினியே... நானெல்லாம் முப்பது வருஷம் முன்னாடி, ‘கோதாவரி, கோட்டைக் கிழிடி’னு ஒரு கோட்டை வச்சு, முன்னூறு பக்கம் வசனம் பேசினேன்டா கண்ணா. பாம் வைக்கிற வில்லன்களை பொடனிய பொளந்து பாழாக்குறவன் ‘டான்’ இல்ல கண்ணா! பெத்த குழந்தைகளை படிக்க வச்சு ஆளாக்குறான் பாரு,  அந்த அம்மையப்பன்தான் டான். ‘நெருப்புடா நெருங்குடா’வையெல்லாம் ஓரம் வச்சுட்டு, ‘ரேஷன் கடை பருப்புடா, தேய்ஞ்சு போன செருப்புடா’னு முழு குடும்பஸ்தனா உன்னை இறக்கிக் காட்டுறேன் கண்ணா.

‘திரும்ப வந்துட்டேன்’னு சொல்லு கண்ணா, ‘முப்பது வருஷம் முன்னாடி கோதாவரியோட எப்படி கோவிச்சுக்கிட்டு போனேனோ, அதே கோவத்தோட கோலிவுட்டை கலக்க திரும்பி வந்துட்டேன்’னு சொல்லு. அடுத்து, நெஞ்சுக்குள்ள இருக்கிறது நெஞ்செலும்பா இல்ல நமீதா வாங்கச் சொல்ற முறுக்குக் கம்பியானு தெரியாத வகையில், எப்பவும் நிமிர்ந்து நடக்கிற சமுத்திரக்கனி, தன்னோட ‘சாட்டை பார்ட் 2’க்கு சயின்ஸ் வாத்தியார், சம்பவம் பண்ற கேங்ஸ்டர்னு ரஜினிக்காக டபுள் ரோல் கதை ஒண்ணு சொல்ல வர்றாரு.

சமுத்திரக்கனி: சார்! இவன் ‘டான்’தான் சார்... ஆனா நேர்மையான டான். பண்றது அடிதடிதான், ஆனா அதுல ஒரு பங்ச்சுவாலிட்டி இருக்கும். செய்யறது கொலைதான், ஆனா அதுல ஒரு சின்சியாரிட்டி இருக்கும். பின்னால தாக்கறதுக்கு பத்து பேர் ஓடி வந்தாலும், சிக்னல்ல சிகப்பு லைட் எரியுதுனு பச்ச லைட் வரும் வரை பொறுமையா நின்னுட்டுப் போறவரு சார் இந்த டான். பகல்ல பள்ளிக்கூடத்துல பாடம் நடத்துற நீங்கதான், நைட்டு ‘வாணி ராணி’ முடிஞ்சப்புறம் வான்டடா போயி, இல்லீகல் பிசினஸ் பண்றவங்களை லாடம் காட்டுறீங்க. தேங்கா எண்ணெய தலைக்கு தேய்க்கிறப்பவே, நீங்க தேசபக்தியையும் தேய்ச்சு வளர்ந்தவரு.

ஒரு கட்டத்துல, தப்பிச்சுப் போக நினைக்கிற உங்க முன்னால தமிழ்நாடு போலீஸ் தேசிய கீதம் பாடுறாங்க. தேசபக்தி யில, தொண்ணூறு அடி ஆழம் தோண்டி நிற்க வச்ச தெரு லைட் மாதிரி அசையாம நிற்கிற உங்களைக் கைது பண்றப்ப  இடைவேளை விடுறோம். காவல்துறை பார்வையில நீங்க ஒரு கெட்ட காட்ஃபாதரா இருந்தாலும், குடும்பத்தின் பார்வையில நீங்க ஒரு குட்ஃபாதர். எல்லோரும் தங்கள் குழந்தைகள் டாக்டரா வரணும், இன்ஜினியரா வரணும்னு நினைக்கிறப்ப, ‘மொதல்ல நம்ம குழந்தை நல்ல மனுஷனா வரணும்’னு நீங்க சொல்ற க்ளைமாக்ஸ் சீனை ஒன்பது நிமிஷம் வர்ற மாதிரி வச்சிருக்கேன்.

அடுத்து, ‘அரண்மனை 3’க்கு ஆள் புடிக்க வர்றாரு சுந்தர்.சி சுந்தர்.சி: தூத்துக்குடி கேங்ஸ்டர்ல இருந்து துபாய் கேங்ஸ்டர் வரை, பல படங்கள்  வந்தாச்சு. ஆனா இதுவரை யாருமே தொடாததுன்னா அது பேய் கேங்ஸ்டர் படம்தான். ஒரு குக்கிராமம். அந்த ஊரு மந்தையில யாரு ஐஸ்பாய் விளையாடினாலும் சில பேய்ங்க வந்து விளையாடுறவங்க முதுகுல கப் ஐஸ் அடிச்சுட்டுப் போய் விளையாட்டைக் கெடுத்துடுதுங்க. ஒரு தடவை உங்க தங்கச்சி முதுகுல கப் ஐஸ் அடிக்கப் போக, உங்க தங்கச்சி அந்த நேரத்துல திரும்பிட, முதுகுக்கு பதிலா மூஞ்சில அடிச்சிடுது.

விஷயத்தை வாட்ஸ்அப்ல தெரிஞ்சுக்கிட்ட நீங்க, இந்தப் பேய்களை அடக்க மலேசியாவில் இருந்து வர்றீங்க. ‘‘கபாலினு பேரைச் சொன்னவுடனே, மரு வச்சுக்கிட்டு லுங்கி கட்டிக்கிட்டு ‘கருப்பன் குசும்புக்காரன்’னு வேப்பிலை அடிச்சு பேய் ஓட்டுறவன்னு நினைச்சியா? கபாலிடா’’னு இன்ட்ரோ வைக்கிறோம். வழக்கம் போல பேய்கள் நடமாடுற இடங்களில் எல்லாம் நீங்க சிசிடிவி கேமரா வைக்கறீங்க.

இதுக்கிடையில பேய்களோட பெல்லி டான்ஸ், க்ளைமேக்ஸ் சாமி பாட்டு, பேய்கள் கேங்கோட நடவடிக்கையை கண்டுபிடிக்க பேய்கள் உடம்புல ஜி.பி.எஸ் பொருத்துறது, ‘கபாலி 1’ல கோட்டுக்குள்ள இருந்து கம்பி எடுத்து அடிச்ச மாதிரி, இதுல கோட்டுக்குள்ள இருந்து கதவை எடுத்து அடிக்கிறீங்கனு மாஸ் மசாலா பின்னிடலாம். சூப்பர் ஸ்டார் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, இயக்குநர் மிஷ்கினும் கௌதம் மேனனும் A4 சைஸ் பேப்பர் நாலு பண்டல்களுடன் நிற்கிறார்கள். 

பின்னால் லாரியில், 200 அருவாள் 300 நாட்டு வெடிகுண்டு மற்றும் மூணு கிராமம் அளவுக்கு கேரக்டர் ஆர்டிஸ்ட்களுடன் வந்து இறங்குகிறார் இயக்குநர் ஹரி. இதற்கிடையில் ‘‘காசி சுடுகாட்டில் கிடைத்த மண்டை ஓட்டு மாலையுடன், அடுத்த கதை சொல்ல பாலா வர்றாரு’’னு கேட்டவுடனே, ‘‘பாபாஜியைப் பார்க்கப் போறேன்... இமயமலைக்கு ரெண்டு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணுங்க’’னு சொல்லிட்டு பேக்கேஜ் ரெடி பண்ண ஆரம்பிக்கிறார் சூப்பர் ஸ்டார்!                            

-ஓவியங்கள்: அரஸ்