கொல்லாத துப்பாக்கியா பெல்லட் கன்?



காஷ்மீரைப் பொறுத்தவரை துப்பாக்கியும் வீரர்களும்தான் மாறுகிறார்களே தவிர, சூழ்நிலை ஒருநாளும் மாறுவதில்லை. ‘ஹிஸ்புல் முஜாகிதீன்’ ஆயுதக்குழுவின் கமாண்டரான புர்ஹான் வானி ஒரு என்கவுன்டரில் கொல்லப்பட, மீண்டும் எரிகிறது காஷ்மீர். இம்முறை காஷ்மீர் மக்கள் ராணுவத்தின்மீது கோபம் கொள்ள முக்கிய காரணமாக அமைந்தது, பெல்லட் கன். போராட்டம் நடத்த வீதிக்கு வரும் காஷ்மீர் இளைஞர்கள் பலரும் போலீஸ் மற்றும் ராணுவத்தின் மீது கற்களால் தாக்குதல் நடத்துகிறார்கள்.



பதிலுக்கு ராணுவம் பெல்லட் துப்பாக்கியால் சுடுகிறது. இதை ‘குறைந்தபட்ச தாக்குதல்’ என வர்ணிக்கிறது ராணுவம். இந்த ‘குறைந்தபட்ச’த்தில் 60க்கும் மேற்பட்டோர் இறந்துவிட, 160க்கும் மேற்பட்டோர் காயங்களோடு மருத்துவமனையில் உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வை இழந்துவிட்டனர்.

அத்தனை ஆபத்தானதா பெல்லட் துப்பாக்கிகள்? சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும் துப்பாக்கி சேகரிப்பாளருமான சுந்தரபாண்டியனிடம் கேட்டோம்... ‘‘ஆங்கிலேயர்  காலத்தில் வேட்டையாட அறிமுகப்படுத்தப்பட்ட துப்பாக்கி வகை இது. விலங்குகள் பாய்ந்து வரும்போது அதைக் குறி பார்த்து சுட முடியாது. அப்போது  பெல்லட்கள் பரவலாகப் போய்த் தாக்கும். பொதுவாகவே காரீயத்தினால் ஆன  குண்டுகளுக்கு பெல்லட்டுனு பெயர். விமானம் பறக்கும்போது எதிரில் பறவைகள் கூட்டமா வந்தா அதை விரட்டுறதுக்கு இந்தத் துப்பாக்கியைத்தான் பயன்படுத்துறாங்க.



தோட்டாக்கள் பரவலா போய்த் தாக்கும். விமானப் பாதையில் இருந்து பறவைகள்  விலகிப் போயிடும். இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாதுனு ஒரு கருத்து இருக்கு. காஷ்மீரில் பயன்படுத்தப்பட்டது இந்த வகைதான். ராணுவத்துல இதை ‘ஷாட் கன்’னு சொல்லுவாங்க. ஒரு கேட்ரிட்ஜில் 100 முதல் 200 வரை, ஊசி போலத் துளைக்கும் பெல்லட் குண்டுகள் இருக்கும்.  ஒன்றாம் நம்பரில் துவங்கி ஆறாம் நம்பர்,  எட்டாம் நம்பர்னு நிறைய கேட்ரிட்ஜ் இருக்கு. இதில் 4/5 நம்பர் கேட்ரிட்ஜ் வரை பயன்படுத்தத்தான்  ராணுவத்துக்கு அனுமதி உண்டு. 5/6 மற்றும் அதற்கு மேற்பட்டதைப் பயன்படுத்தத்  தடை இருக்கு.

கட்டை விரல் அளவு உள்ள கேட்ரிட்ஜ், ஒரு முறை சுடும்போது அதிவேகத்தில் பல சிறு குண்டுகளைக் கக்கியபடி வெளிவரும். தூரத்தில் நிற்பவர்கள் மீது பட்டால் இது சின்ன பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தும். ஆனால் பக்கத்தில் நிற்கும் மனிதர்கள் மீது பயன்படுத்தினால் உடலை சல்லடையாகத் துளைத்துச் சரமாரியாகத் தாக்கும். இப்படி தாக்குதலுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுவதும் சிரமம். உடலில் எண்ணற்ற குண்டுகள் துகள் துகளாகச் சிதறிப் பாய்ந்துவிடும். ஒவ்வொன்றையும் தனித்தனியே அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும்.

அதில் சில குண்டுகள் உடலைத்  துளைத்து உள் உறுப்புகளைத்  தாக்கி சிதைத்து இருக்கும். இப்படி நெருக்கத்தில் தாக்கப்பட்டு பிழைத்தாலும் உடலில் தழும்புடன், உறுப்புகள் பாதிப்படைந்து வாழ்நாள் முழுக்கச்  சிரமப்படுவார்கள்!’’ என்றார் அவர். காஷ்மீர் ஒவ்வொருமுறை அமைதி இழக்கும்போதும், வீதிக்கு வரும் இளைஞர்களுக்கும் ராணுவத்துக்கும் மோதல் நிகழும். கற்களால் தாக்கும் இளைஞர்களைக் கலைக்க ஒவ்வொருமுறையும் புதிய யுக்தியைக் கையாள்கிறது ராணுவம்.

ஆனால் இந்த பெல்லட் குண்டு தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது. காஷ்மீர் உயர் நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் கல் வீசும் இளைஞர்களுக்கும் மத்தியில் சிக்கி, அப்பாவிகளும் குழந்தைகளும்கூட பெல்லட் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், உலக பிரபலங்கள் பலரின் முகத்தை பெல்லட் தாக்குதலுக்கு ஆளான முகம் போல கிராஃபிக்ஸ் செய்து உருக்கமான வேண்டுகோள் வைக்க, சமூக வலைத்தளங்களில் அது பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது.

காஷ்மீருக்கு நேரில் வந்து நிலைமையைப் பார்த்த மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், ‘‘இனி யாரும் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த மாட்டார்கள்! இளைஞர்களும் பாதுகாப்புப் படை மீது கற்களை வீசக்கூடாது’’  என்று சொன்னார். ஆனால் அடுத்த நாளே மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டைரக்டர் ஜெனரல் துர்கா பிரசாத் இதை மறுத்துவிட்டார். ‘‘பல இளைஞர்கள் காயம் பட்டதற்கு வருந்து கிறோம். ஆனால் எங்களிடம் பெல்லட் துப்பாக்கியைவிட ஆபத்தில்லாத வேறு ஆயுதம் ஏதுமில்லை.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேறு வழி இல்லாத நிலையில்தான் நாங்கள் இதனால் சுடுகிறோம். எங்கள் வீரர்களில் 1000 பேர் கல்வீச்சுத் தாக்குதலில் காயம்பட்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆபத்தான காயத்தை ஏற்படுத்தாத மாற்று ஆயுதங்கள் ஏதாவது இருக்கிறதா என உலக அளவில் தேடுகிறோம். அதுவரை வேறு வழியின்றி பெல்லட் குண்டுகளைச் சுடுவோம். அப்படித் தாக்கும்போதும், காலில் முட்டிக்குக் கீழே சுடச் சொல்லியிருக்கிறோம்’’ என்கிறார் அவர்.

- புகழ் திலீபன்
படங்கள்: ஆர்.சி.எஸ்