அணையா அடுப்பு - 30



ஜோதி ஒளிர்ந்தது!

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

ஆன்மீகப் பயணத்தில் வள்ளலாருக்கு குறிப்பிடத்தக்க மைல்கற்களாக அமைந்த சம்பவங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.அவருடைய சிறு வயதில் முருகக் கடவுள் மீது ஏற்பட்ட பற்றினை முதல் மைல் கல்லாக எடுத்துக் கொள்ளலாம்.அச்சமயத்தில் முழுமையாக உருவ வழிபாட்டுக்கு அவர் ஆட்பட்டார்.சென்னை கந்தகோட்டம் கந்தசாமியே அவரை முழுமையாக ஆட்கொண்டார்.

எனவேதான் -கந்தசாமியை வணங்கி அவர் பாடிய ‘ஓங்கு திருப்பாடல்’, முதல் பாடலாக ‘திருவருட்பா’வில் தொகுக்கப்பட்டது.முருக தரிசனத்தை தன்னுடைய அறையிலிருந்த நிலைக்கண்ணாடியில் அவர் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.பின்னர் திருவொற்றியூர் தியாகப் பெருமான், வடிவுடையம்மன், திருத்தணி முருகன் மற்றும் ஏராளமான சிவத்தலங்கள் என்று உருவ வழிபாட்டை முழுமையாகக் கடைப்பிடித்தார்.சென்னையைத் துறந்து கருங்குழிக்கு வந்தபோது, சிதம்பரம் நடராஜர் கோயில் அவருக்கு ஞானம் பெருகச் செய்தது.

அச்சமயத்தில்தான் உருவ வழிபாட்டின் நீட்சியாக அருவுருவ வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டார்.இப்படியான காலக்கட்டத்தில்தான் பிரம்ம சமாஜத்தைச் சார்ந்தவர்களின் ‘விக்கிரக வழிபாடு கூடாது’ என்கிற கொள்கையோடு முரண்பட்டு, தர்க்கங்கள் செய்தார்.அருவுருவ வழிபாட்டுக்கு உருவ வழிபாடு அடித்தளம் அமைக்கும் என்பதே அவருடைய வாதமாக இருந்தது.

அருவுருவ வழிபாட்டை அவர் எதிர்க்கவில்லை, அதே சமயம் உருவ வழிபாடு செய்பவர்களின் உரிமையும் மறுக்கப்படக் கூடாது என்கிற ஜனநாயகபூர்வமான சிந்தனையே அதற்குக் காரணம்.மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் அவர் செய்த தியானங்கள், சிந்தனைகளின் அடிப்படையில் இறுதியில் முழுமையாக தன்னை அருவ வழிபாட்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டார்.அருவம் என்று சொன்னாலும், அதற்கு ஓர் உருவமாக ‘ஒளி’யை முன்னிறுத்தினார்.

இத்தகைய பின்னணியில்தான் 1872ம் ஆண்டு பிறந்தபோது ஒளி வழிபாட்டுக்கு அறிவுத் திருக்கோயிலாக சபை கண்டார் வள்ளலார்.
சன்மார்க்க சங்கம் அமைத்தபோதே அதன் தொடர்பான வழிபாட்டுத் தலம் பற்றி ஏராளமான ஆலோசனைகளை அவர் நடத்தியிருந்தார்.
தில்லைவாழ் அந்தணர்களோடு வழிபாட்டு முறையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் வடலூரை புதிய சிதம்பரமாக உருவாக்கினார்.

வடலூரை ‘உத்தர ஞான சிதம்பரம்’ என்றார்.சிதம்பரத்தை பூர்வ சிதம்பரம் என்றும், வடலூரை உத்தர சிதம்பரம் என்றும் சொன்னார்.
பூர்வ என்றால் ‘பழைய’ என்று பொருள். ‘உத்தர’ என்பதற்கு புதிய என்று அர்த்தம்.மேலும் ‘பூர்வ’ என்பது தெற்கையும் அடையாளப்படுத்தும். போலவே, ‘உத்தர’ என்பது வடக்கு.முன்னைச் சிதம்பரமாக தில்லையையும் (தென் திருச்சிற்றம்பலம்), பின்னைச் சிதம்பரமாக வடலூரையும் (வட திருச்சிற்றம்பலம்) வள்ளலார் குறிப்பிடுகிறார்.

வடலூருக்கு பிரத்யேகமாக ‘உத்தர ஞான சிதம்பர மாலை’ என்று பாமாலையே பாடினார்.வடலூர் சுத்த சன்மார்க்க சங்கம் சார்பாக ஒளி வழிபாட்டுக்கு அமைத்த திருக்கோயிலை ‘சத்திய ஞானசபை’ என்று பெயரிட்டார்.தமிழில் புதிய சொல் வழக்குகளை உருவாக்குவதில் அவர் முன்னோடியாகவே இருந்தார்.அதுநாள் வரை மடம் என்று பொதுமக்களால் வழங்கப்பட்ட அமைப்பை ‘சங்கம்’ என்றும், சத்திரம் என்று வழங்கப்பட்ட அமைப்பை ‘சாலை’ என்றும், வழிபாட்டுத் தலமான கோயிலை ‘சபை’ என்றும் புதிய வழக்கப் பெயர்களில் அறிமுகப்படுத்தினார்.

சபை அமைக்கும்போது அவர் வெளியிட்ட விளம்பரம் சுவாரஸ்யமானது.“கடவுள் தாமே திருவுள்ளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஒரு ஞானசபையை இங்கே தமது திருவருள் சம்மதத்தால் இயற்றுவித்து, ‘இக்காலந் தொடங்கி நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்’ என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ்ஜோதியராய் வீற்றிருக்கின்றார்” என்பதே அவ்விளம்பரம்.

ஜோதி வடிவிலான இறைவனே தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்வதான குறிப்போடு வெளிவந்த அவ்விளம்பரத்துக்கு அப்போது நல்ல வரவேற்பு.1871ம் ஆண்டே சபையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.பூர்வ சிதம்பரத்தை பார்க்கும் வகையில் தெற்கு நோக்கியபடிஎண்கோண வடிவில் சபையை அமைக்கத் திட்டமிட்டார் வள்ளலார்.சபையின் முன் மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபை, மேற்புறம் சிற்சபை.

சிற்சபையின் வாசல் கிழக்கு நோக்கிய நிலையில் இருக்கும்.பொற்சபையின் வாசல் மேற்கு நோக்கி இருக்கும்.சிற்சபையும், பொற்சபையும் தில்லையிலேயே உண்டு.வள்ளலார் உருவாக்கிய புதிய தில்லையில் கூடுதலாக ஞானசபை உருவாக்கப்பட்டது. இதன் வாயில் தெற்கு நோக்கி இருக்கும்.
மூன்று சபைகளின் வாயிலையும் பறவைப் பார்வையில் பார்த்தால் ‘ஃ’ என்கிற ஆயுத எழுத்தைப் போன்ற வடிவில் அமைந்திருக்கும்.
சபையிலே பன்னிருகால் மண்டபம் ஒன்றுக்குள் ஒன்றாக நான்கு கால் மண்டபம் அமைந்திருக்கும்.

இந்த நான்குகால் மண்டபத்தினுள்ளேதான் அருட்பெருஞ்ஜோதி அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த ஜோதி தரிசனத்தைக் காண வெவ்வேறு நிறங்களில் ஏழு திரைகள் தொங்கும்.ஜோதியை தரிசிக்கும்போது உள்ளத்தில் நாம் உணரக்கூடிய அனுபவத்தை, புறத்தில் மாயையாகக் காட்டுவதே சபையின் நோக்கம்.
ஜோதிக்கு முன்பாக இடப்பட்ட ஏழு திரைகளும் தத்துவங்களைக் குறிக்கின்றன.

ஒவ்வொரு தத்துவத்தை நாம் உணரும்போதும், அடுத்தடுத்து அதற்கு மேம்பட்ட ஒரு தத்துவ தரிசனம், இறுதியில் ஜோதி தரிசனம் என்பதே குறியீடாக அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.ஆறு அடி ஒன்பது அங்குல உயரமும், நாலடி இரண்டு அங்குல அகலமும் கொண்ட கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஒளியே சபையில் நாம் காணக்கூடிய அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.

இந்தக் கண்ணாடி மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 48 நாள், வள்ளலாரின் வழிபாட்டுக்கு உரியதாக இருந்தபிறகே வடலூரில் ஞானசபையில் அமைக்கப்பட்டது.ஜனவரி 25ம் தேதி தைப்பூச தினமான அன்றிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் அருட்பெருஞ்ஜோதி தரிசனம் கிடைத்து வருகிறது.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி