த்ரிஷா பயன்படுத்தியது எல்லாமே நிஜ துப்பாக்கி!



“எங்க டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மனசிலே ரொம்ப நாளாக ஊறிக் கிடந்த கதை. அவர் ஒன்லைனில் அருமையாக கோர்த்து வைச்சிருந்தார். என்கிட்டே அதை திரைக்கதையாக ஆக்குவதில் முழு சுதந்திரம் கொடுத்து, இந்தப் படத்தை நீயே டைரக்ட் செய்னு இடமும் கொடுத்தார்.
அவர்கிட்டே இருந்தபோது கொஞ்சம் காதல் கதையாகவும் இருந்தது. அந்தக் காதல் மட்டுமே அந்தக் கதைக்கு போதாதுன்னு இதை பொலிடிக்கல் த்ரில்லராக மாற்றிவிட்டோம்.

முந்தைய படத்தின் சாயல் துளியும் இல்லாமல் அடுத்த படம் எடுக்கிறதுதான் ஓர் இயக்குநராக எனக்கு அழகு. டேக் வரைக்கும் மெருகேத்திக்கிட்டே போய் ரொம்பவும் பிரியமாகச் செய்த படம். அதனோட பலன் இப்போ எங்களுக்கு படமா வந்து நிற்கும்போதுதான் தெரியுது.
ஒரு கதை சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும். ரசிகர்கள் கதைக்குள் பயணிக்கிறபோது எதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; அதற்குள் அவர்களை இழுக்கிற வழிமுறைகளை எல்லாம் யோசிப்பேன்.

அந்த வகையில்தான் ஏ.ஆர்.முருகதாஸ் சாரும், நானும் இதை உருவாக்கியிருக்கோம். கேரக்டர்களின் எமோஷனிலும், புதிய கருவைக் கொண்டு தருகிற முயற்சியாகவும் இந்த ‘ராங்கி’ இருக்கும்...” அனுபவசாலியாக பேசுகிறார் இயக்குநர் எம்.சரவணன். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மகா வெற்றியோடு அறிமுகமானவர்.அதிகமும் உஸ்பெக்கிஸ்தானில் படமாகியிருக்கு…

இந்தப் படம் லிபியாவில் படமாக வேண்டியது. ஆனால், அங்கு சூழல் இடம் தராது. அதனால் உஸ்பெக்கிஸ்தான் போய் படமெடுத்தோம். எந்த இடத்தில் கதை நடக்கிறதோ, கற்பனையாக அல்லாமல் அந்த இடத்திலேயே போய் ஷூட் செய்தோம். இந்தப் படத்தில் வருகிற துப்பாக்கி எல்லாம் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கலாம். வேற வகையில் இருக்கேன்னு தோணும்.

இவை எல்லாமே நிஜமான துப்பாக்கிகள்! மிலிட்டரியில் கொடுக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இத்தகைய, அரசியல் பேசும் படம் வந்திருக்கிறதா என தூரத்தில் வைத்து யோசித்துப் பார்த்தாலும் இல்லை. பொலிடிக்கல் த்ரில்லர் என்றாலும் இதுவரை பார்த்த அரசியல் படமென்ற வரிசையில் வராது.

என்னோட ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஆக்ஸிடென்ட் என்பது ரியாலிடிக்கு ரொம்பவும் பக்கத்தில் இருக்கும். யாரும் இதற்கு முன்னால் அதன் நெருக்க நிமிடங்களை படம் பிடித்ததாகத் தெரியலை.

அதுபோலவே ‘ராங்கி’யிலும் மிக முக்கியமான இடங்கள் இருக்கு. தமிழ் சினிமாவில் பேசப்படாத களத்தில் இதை உருவாக்கி இருப்பதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.அதென்ன ‘ராங்கி’?கிராமத்துப் பக்கம் ராங்கி பிடிச்சவள்னு சொல்வாங்களே, அதுதான். துடிப்பாக, யார் பேச்சையும் அதிகமாக வாங்கிக் கொள்ளாமல் துடுக்காக செயல் ஆற்றுகிறவங்களை ராங்கிக்காரின்னு சொல்வாங்க.

த்ரிஷா இதில் ரிப்போர்ட்டராக வர்றாங்க. ஆரம்பத்தில் அதை ஒரு வேலையாக மட்டும் எடுத்துக்கிட்டவங்க, பிற்பாடு சூழ்நிலைகளால் அதில் திவீரமாக இறங்கி வேலை செய்றாங்க. த்ரிஷாவின் திறமையை இன்னும் நிரூபிக்கிற படம். ஷூட்டிங்கில் பேக்அப் சொல்கிற வரைக்கும் படப்பிடிப்புத் தளத்திலேயே இருக்கிற அக்கறை, காட்சியின் தன்மையை அவ்வளவு நுணுக்கமாகப் புரிந்துகொள்கிற விதமெல்லாம் ஆச்சர்ய வகை.

அவங்க உடன் நடிக்காத தென்னிந்திய ஹீரோக்களே இல்லை. அப்படியிருந்தும் எதையும் தலைக்கேற்றிக் கொள்ளாமல் நடிச்சுக் கொடுத்ததெல்லாம் பெரிய விஷயம். எனக்கே இதில் இயக்குநராக வித்யாசப்பட்டு இருக்கேன்னு நிச்சயமாக உணர முடியுது. இதில் அழகான ஒரு லவ் போர்ஷனும் இருக்கு. அதை உங்களுக்கு விளக்கிச் சொல்ல முடியாதபடிக்கு சஸ்பென்ஸாக இருக்கட்டும்னு விட்டு வைச்சிருக்கேன்.
காட்சிகளும், அந்த ஊரும் டிரெய்லரில் வித்தியாசப்படுதே…

அதற்குத்தானே இத்தனை தூரம் போய், அவ்வளவு நாட்கள் தங்கியது! இப்படியொரு விஷுவல்ஸ் காணக் கிடைக்கணுமே. ‘ராங்கி’யின் பெரும்பாலான காட்சிகள் இங்கே படமானதுதான். துவக்கத்தில் சென்னையில் இருக்கிற சூழல்; பிறகு வெளிநாட்டில் போய்ச் சேர்வதற்கான சூழல் ஆரம்பமாகும்.

த்ரிஷா இன்னிக்கு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்களில் அபூர்வ ரகம். அவர்கள் நடிச்சுட்டு இருக்கும்போதே கேமரா போகிற திசையை அவர்களால் உணர முடியுது. ஒரு குறையும் வைக்கலை. இத்தனை நாள் அனுபவம் என்பது சும்மா இல்லை என்பது எங்களோடு சேர்ந்து பணி செய்த நாட்களில்
புரிந்தது.

ஒளிப்பதிவிலும் ஹாலிவுட் படத்தின் அம்சங்கள் தென்படுது… ஒளிப்பதிவாளர் சக்திவேல் இதில் வித்தியாசமான ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். இதில் அவரது உழைப்பு ரொம்பவும் பேசப்படும். கணிக்க முடியாத கோணங்கள், ஸ்டைல் என என்னோடு இணைந்து வேலை செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் இணைந்து பணியாற்றும் தருணங்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியமானது எனப் புரிந்தது. நான் காலையில் படப்பிடிப்புத் தளத்திற்கு வரும் போது இந்தக் காட்சி இவ்விதம்தான் படமாகும் என மனதில் கணக்குப் போட்டிருப்பேன். ஆனால், அதற்கு கூடுதல் சுவாரஸ்யம், அழகு, திகில்… முக்கியத்துவம் வரும்படி எதோ ஒரு மேஜிக் செய்திருப்பார்.

இதுமாதிரி பொலிட்டிக்கல் த்ரில்லருக்கு பின்னணி அமைப்பது கடினமான பணி. மற்றவகை படங்களை விட இதில் உழைப்பு அதிகம். சி.சத்யா இதில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒரு த்ரில்லருக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் கவனித்து இசை அமைத்திருக்கிறார்.

இன்னமும் உங்களை ‘எங்கேயும் எப்போதும்’ படத்தோடு இணைத்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்?‘எங்கேயும் எப்போதும்’ படம் எனது பென்ச்மார்க் படமல்ல. இன்னும் என்னால் உச்சங்களைத் தொடமுடியும். ‘ராங்கி’யில் எனது இன்னும் அழகான இடங்களைக் காண்பித்து இருக்கிறேன்.
 
படத்தில் இழுத்துப் பிடித்த ரப்பர் பேண்ட் போல தொடர்ந்த அதிர்வு இருக்கும். எப்போது பலூன் வெடிக்கும் என ஊதிக் கொண்டிருப்பதைப் போன்ற ஓட்டமும் இருக்கும். நடுவில் கன்னடத்திலும் படம் செய்துவிட்டு வந்தேன். இதற்கடுத்த நாட்களில் இன்னும் தீவிரமாக வெளிப்படுவேன். சினிமா ரசனைக்கு மக்களைக் குறை சொல்ல முடியாது. நாம்தான் அவர்களைச்சென்றடைய வேண்டும். நாங்கள் அவர்களைச் சென்றடைவோம் என்பது என் தீராத நம்பிக்கை.
              
நா.கதிர்வேலன்