நியூஸ் சாண்ட்விச்



3 மாதத்தில் 76 குழந்தைகளை மீட்ட பெண் காவலர்!

தில்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா, ‘கான்ஸ்டபிள்கள், ஹெட் கான்ஸ்டபிள்கள் ஒரு வருடத்திற்குள் 50 குழந்தைகளுக்கு மேல் மீட்கும் பட்சத்தில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்’ என அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தில்லி வடக்கு மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட சீமா தாகா மூன்று மாதங்களுக்குள் 76 குழந்தைகளை மீட்டுள்ளார். அதில் 56 பேர் 7 - 12 வயதுடையவர்கள்.  

தில்லி, மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், பீகார், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள சீமா, ‘‘நான் ஒரு தாயாக இருப்பதால், எந்த தாயும் தங்கள் குழந்தையை இழப்பதை விரும்பவில்லை. குழந்தைகளை மீட்பதற்காக ஒவ்வொரு நாளும் கடிகாரத்தைப் போல சுற்றி வேலை செய்தோம்...” என்று கூறியுள்ளார்.

கம்பிக்குள் சித்திரம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்த சாதுராம் என்பவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உதய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுவர் ஓவியங்கள் மீது அலாதி ஆர்வம் கொண்ட சாதுராம், தன் விருப்பத்தை சிறை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அவரது ஆர்வத்தை அறிந்த ஊழியர்கள் சிறையின் சுவர்களை அலங்கரிக்க அனுமதி கொடுத்தனர். இதனையடுத்து சாதுராம் தனது கைவண்ணத்தைக் காண்பித்து சிறையை வன்ணமயமாக மாற்றியுள்ளார். அவருடன் இணைந்து மேலும் 15 கைதிகளும் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.  

10 கிமீ நடந்து தந்தைக்கு எதிராக புகார் அளித்த 11 வயது சிறுமி!

ஒடிசா மாநிலம் கேந்திரபாத் மாவட்டத்தில் உள்ள டுகுகா கிராமத்தில் வசித்து வரும் சிறுமி சுஷ்ரீ சங்கீதாவின் தாய் 2009ம் ஆண்டு இறந்து விட்டதால் அவரது தந்தை மறுமணம் செய்துகொண்டார். 6ம் வகுப்பு பயின்று வரும் சுஷ்ரீக்கு மத்திய அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் அரிசியும் பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தனது தந்தையே எடுத்துக் கொள்வதாக 10 கிமீ  நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ‘‘தனக்கு பள்ளியில் வழங்கப்பட்டு வரும் அரிசியை தந்தையே பெற்றுக் கொள்வதோடு, பணமும் அவரது வங்கிக்கணக்கில் செல்வதால் அதையும் தரமறுக்கிறார். என்னையும் இவர்கள் சரியாகப் பார்த்துக் கொள்வதில்லை. என்னுடைய வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தால், அவர்கள் தந்தையின் கணக்கிலேயே டெபாசிட் செய்கிறார்கள்...” என குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவியின் நிலையை அறிந்த மாவட்ட ஆட்சியர், பணத்தை அவரது கணக்கில் டெபாசிட் செய்யுமாறு மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். சிறுமிக்கு வழங்கப்படும் அரிசியையும் அவரது தந்தையிடம் வழங்கக்கூடாது என பள்ளித் தலைமை ஆசிரியருக்கு கட்டளையிட்டுள்ளதோடு, மாணவியின் தந்தையிடமிருந்து இதுவரை பெற்ற பணத்தையும், அரிசியையும் மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அன்னம் அரசு