Family Tree - 500 வருடங்களாக துப்பாக்கி தயாரிக்கும் குடும்பம்!



உலகளவில் ஆயுதங்கள் தயாரிப்பில் முன்னோடி; நீண்ட காலமாக துப்பாக்கி தயாரிப்பில் இருக்கும் ஒரே நிறுவனம்; பிரெஞ்ச் பேரரசன் நெப்போலியன், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் வரை பல உலகப் பிரபலங்கள் இதன் வாடிக்கையாளர்கள்; 1650க்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த முக்கியமான போர்களுக்கெல்லாம் ஆயுதங்களைத் தயாரித்த நிறுவனம்... என ‘ஃபேப்ரிக்கா டி’ஆர்மி பியட்ரோ பெரெட்டா’ என்ற குடும்ப நிறுவனத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். சுருக்கமாக ‘பெரெட்டா’.

மிகச்சிறிய இடத்தில் துப்பாக்கியின் உதிரிப்பாகமான குழலைத் தயாரிக்கும் பட்டறையாக ஆரம்பித்து, அதிநவீன ஆயுதங்களைத் தயாரிக்கும் பெரு நிறுவனமாக உலகமெங்கும் கிளை பரப்பியுள்ளது இந்நிறுவனம். ஆயுதங்களுக்கு எதிரான தடைகள், விதிகள், விநியோக கட்டுப்பாடுகள் மற்றும் அரசியல் மாற்றங்களைக் கடந்து 500 ஆண்டுகளாக நிலைத்து நிற்பது இதன் சாதனை.

பார்த்தலோமியோ பெரெட்டா

துப்பாக்கியின் ஆரம்பப்புள்ளி வெடிமருந்து. கி.பி.850லேயே சீன ரசவாதிகள் வெடிமருந்தைத் தயாரித்ததாக வரலாறு சொல்கிறது. அப்போது வெடிமருந்தைக் குறிபார்த்து ஏவுவதற்காக மூங்கில் குழல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், 13ம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவுக்குள் வெடிமருந்து வாசமே வீசத்தொடங்கியது. அடுத்த 200 ஆண்டுகளில் முக்கிய ஆயுதமாக பரிணமித்தது துப்பாக்கி.

14ம் நூற்றாண்டின் மத்தியில் ஒட்டோமான் பேரரசு தனது எல்லைகளை விரிவாக்க ஐரோப்பாவுக்குள் படையெடுத்தது. இப்படியான ஒரு நெருக்கடிச் சூழலில் இத்தாலியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தார் பார்த்தலோமியோ பெரெட்டா. அவர் பிறந்த வருடம் 1490. பத்து வயதிலேயே பெரெட்டாவுக்கு ‘ஆர்க்யூபஸ்’ என்ற நீளமான துப்பாக்கியின் அறிமுகம் கிடைக்க, அவருடைய வாழ்க்கையே மாறியது.

துப்பாக்கியை ஓர் அற்புதம் போல வியப்புடன் பார்த்தார்; அணுகினார். துப்பாக்கியைக் கையில் ஏந்துவதுதான் அவரது கனவு. எப்படியாவது துப்பாக்கியைத் தொட்டுப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் துப்பாக்கித் தொழிற்சாலைகளில் எடுபிடி வேலைக்குச் சேர்ந்தார். இருபது வயதுக்குள் துப்பாக்கிக் குழல் தயாரிப்பதைக் கற்று, அதில் வித்தகராகிவிட்டார்.

கையில் கொஞ்சம் பணம் சேர ஆரம்பித்தது. 1526ம் ஆண்டில் வடக்கு இத்தாலியில் உள்ள மெல்லா நதியின் கரையில் அமைந்துள்ள கோர்டோன் என்ற கிராமத்தில் துப்பாக்கிக் குழலைத் தயாரிக்கும் பட்டறையைச் சிறியதாகத் திறந்தார். இதுதான் உலகிலேயே நீண்ட காலமாக துப்பாக்கி தயாரித்து வரும் ‘பெரெட்டா’வின் தொடக்கம்.

பட்டறையை ஆரம்பிக்க பார்த்தலோமியோ தேர்ந்தெடுத்த இடம்தான் சிறப்பு வாய்ந்தது. இது பிசினஸ் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பாலபாடம். ஆம்; வால் ட்ரோம்பியா என்ற பள்ளத்தாக்கின் மத்தியில் அமைந்திருந்தது கோர்டோன் கிராமம். வால் ட்ரோம்பியாவில் எங்கு தோண்டினாலும் இரும்பு கிடைக்கும். துப்பாக்கிக் குழல் தயாரிக்கத் தேவையான மூலப்பொருளுக்கு அலைய வேண்டிய அவசியமே அவருக்கு ஏற்படவில்லை.

வேறு இடத்தில் அவர் ஆரம்பித்திருந்தால் இரும்பைக் கொண்டு வருவதற்கே தனிச்செலவு செய்ய வேண்டியிருந்திருக்கும். எல்லாமே நேர்த்தியாக, சிறப்பாக அவருக்கு அமைந்துவிட்டது. ஆனால், அவருக்கு முன்பே அங்கு பல ஜாம்பவான்கள் இந்தத் தொழிலில் இருந்தனர். தவிர, வால் ட்ரோம்பியாவில் 50 சுரங்கங்களும் 8 உருக்கு ஆலைகளும் 40 பட்டறைகளும் இருந்தன. அங்கிருந்த ஆலைகளில் ஒவ்வொரு வருடமும் 25 ஆயிரம் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன. குறிப்பாக போர்க் காலங்களில் தினமும் 300 துப்பாக்கிகள். இதுபோக இரும்பு மற்றும் உருக்கால் ஆன பொருட்களின் தயாரிப்பு ஜோராக நடந்தது. துப்பாக்கி ஏற்றுமதியும் கொடிகட்டிப் பறந்தது.

திக்குமுக்காடிப் போன பார்த்தலோமியோ தனது நிறுவனத்தை நிலைநிறுத்த கடுமையாகப் போராடினார். மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலையிலும், யாருமே நெருங்க முடியாத தரத்திலும் துப்பாக்கிக் குழல்களைக் கையினாலேயே தயார் செய்தார். அக்டோபர் 3, 1526 அன்று வெனிஸ் பிரபுக்களிடமிருந்து ‘ஆர்க்யூபஸ்’ துப்பாக்கிகளுக்கான 185 குழல்கள் வேண்டி ஆர்டர் வந்தது. இதுதான் ‘பெரெட்டா’ துப்பாக்கி சாம்ராஜ்யத்துக்குக் கிடைத்த முதல் ஆர்டர்.

பார்த்தலோமியோவின் தனித்துவமான வடிவமைப்பு, தரம், செயல்பாடு, நுட்பம் இவை வாடிக்கையாளர்களைக் கவர, வால் ட்ரோம்பியாவில் முக்கிய நிறுவனமாக வேரூன்றியது. 1571ல் ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக ஐரோப்பாவின் ஒன்றிணைந்த படைகள் போரிட்டன. இதில் ஐரோப்பா சார்பாக பங்கேற்ற வெனிஸின் கப்பற் படைக்கு துப்பாக்கிக் குழல்களைத் தயாரித்தது ‘பெரெட்டா’தான். இந்தச் சம்பவத்திலிருந்து பெரட்டாவின் துப்பாக்கிக் குழல்கள் சர்வதேச அளவிலான கவனத்தைப் பெற்றன.

பார்த்தலோமியோவுக்குப் பிறகு வந்த அவரது மகன் ஜகோமோவும், பேரன் ஜியோவன்னினோவும் துப்பாக்கிக் குழல் தயாரிப்பில் மாஸ்டர்

களாகத் திகழ்ந்தனர். இன்னொரு பேரன் லொடோவிகா துப்பாக்கிகளுக்கு லாக் அமைக்க ஆரம்பித்து நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்.

16ம் நூற்றாண்டில் வால் ட்ரோம்பியாவிலேயே அதிக அளவு துப்பாக்கிக் குழல்கள் தயாரித்த இரண்டாவது நிறுவனமாக ‘பெரெட்டா’ மகுடம் சூடியது. பார்த்தலோமியோ பிசினஸில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்தினார். அதையே அவரது சந்ததியினரும் பின்பற்றுகின்றனர். ஆம்; ‘பெரெட்டா’ நிறுவனக் குடும்பம் அரசியலில் தலையிடுவதே இல்லை.

*பியட்ரோ

அன்டோனியோ பெரெட்டா இருநூறு ஆண்டுகளாக துப்பாக்கிக் குழல்கள் மட்டுமே தயாரித்துவந்த ‘பெரெட்டா’, 18ம் நூற்றாண்டில் துப்பாக்கியைத் தயாரிக்கும் நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்தது. அப்போதைய நிர்வாகியான பியட்ரோ அன்டோனியோ, இத்தாலி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘பெரெட்டா’வின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தி, விநியோகஸ்தர்களிடமிருந்து ஆர்டர் பெற்று வந்தார்.

1832ல் தனது பெயரைச் சேர்த்து ‘ஃபேப்ரிக்கா டி’ஆர்மி பியட்ரோ பெரெட்டா’ என்று நிறுவனத்தின் பெயரை மாற்றினார். அந்தப் பெயரே இப்போதும் நிலைத்து நிற்கிறது. பியட்ரோ இறந்த பிறகு அவருடைய மகன் ஜியூஸெப்பி பொறுப்புக்கு வந்ததுதான் ‘பெரெட்டோ’வின் திருப்புமுனை.

இத்தாலியில் ஆயுதங்கள் தயாரிக்கும் முதன்மை நிறுவனமாக ‘பெரெட்டா’வை உருவாக்கினார். அப்பா எப்படி இத்தாலி முழுக்க பயணம் செய்து பிசினஸை விரிவாக்கினாரோ, அதையே பின்பற்றி உலகம் முழுவதும் பயணம் செய்து பிசினஸை பரவலாக்கினார்.

1860ல் வருடத்துக்கு 300 துப்பாக்கிகளை மட்டுமே தயாரித்து வந்த ‘பெரெட்டா’வை, 1880ல் 8 ஆயிரம் துப்பாக்கிகள் தயாரிக்கும் பெரு நிறுவனமாக வளர்த்தெடுத்தார் ஜியூஸெப்பி. இவருக்குப் பிறகு வந்த இரண்டாம் பியட்ரோ, நவீன காலத்துக்கு ஏற்ற மாதிரி தயாரிப்புகளை வடிவமைத்தார். அத்துடன் நிறுவனத்துக்குத் தேவையான மின்சாரத்தை எடுக்க ஹைட்ரோ எலெக்ட்ரிக் பிளான்ட்டையும் அமைத்தார்.

இருபதாம் நூற்றாண்டில் ஆச்சர்யப்படத்தக்க ஒரு வளர்ச்சியை எட்டியது ‘பெரெட்டா’. உலகப் போர் காலங்களில் புதுவிதமான துப்பாக்கிகளைத் தயார் செய்ய ஆரம்பித்தது. இரண்டாம் உலகப்போரின்போது இத்தாலி இராணுவத்துக்கு ஆயுதங்கள் தயாரித்ததே ‘பெரெட்டா’தான்.
இரண்டாம் பியட்ரோவின் மரணத்துக்குப் பிறகு அவரது மகன்களான பியரும் கார்லோவும் நிர்வாகத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர். இவர்
களின் காலத்தில்தான் சர்வதேச அளவில் பெரெட்டா புகழ்பெற்றது. கிரீஸ், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸில் கால்பதித்தது. முக்கியமாக விளையாட்டுத்துறையில் பெரெட்டாவின் துப்பாக்கிகள் அறிமுகமாயின.

எண்பதுகளில் பல முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட்டு அமெரிக்க இராணுவத்துக்குக் கைத்துப்பாக்கி தயாரிக்கும் ஆர்டரை தன்வசப்படுத்தியது. அமெரிக்க இராணுவம் ஆயுத ஆர்டர் கொடுத்த முதல் வெளிநாட்டு நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது பெரெட்டா.
அதிலிருந்து பெரெட்டாவின் 50% வாடிக்கையாளர்கள் அமெரிக்கர்கள்தான். 1993ல் உகோ குசாலி நிர்வகிக்க ஆரம்பித்த பிறகு நிறுவனத்தின் வளர்ச்சி வருடத்துக்கு 30% அதிகரித்து, ஆயுதத் தயாரிப்பில் முன்னோடி யாகிவிட்டது.

*தயாரிப்புகள்

தோளில் தாங்கிப்பிடித்துச் சுடும் நீண்ட துப்பாக்கி வகைகள், ஒரு கையில் பிடித்துச் சுடக்கூடிய சிறு துப்பாக்கி வகைகள், சுழல் கைத்துப்பாக்கிகள், ஷாட்கன் என்றழைக்கப்படும் நீளமான துப்பாக்கி வகைகள், கத்திகள், சிறு மெஷின் துப்பாக்கிகள், இராணுவம் மற்றும் காவல்துறைக்கு பிரத்யேகமான துப்பாக்கி வகைகள், ஸ்போர்ட்ஸ் மற்றும் வேட்டைக்கான ஸ்பெஷல் துப்பாக்கிகள், உடைகள்.

*இன்று

உலகளவில் இராணுவங்களுக்கு அதிகமாக ஆயுதங்களை விநியோகிக்கும் நிறுவனமாக மிளிர்கிறது ‘பெரெட்டா’. தினமும் ஆயுத உற்பத்தியின் எண்ணிக்கை 1,500. பெரெட்டாவின் ஆயுதங்கள் 100க்கும் மேலான நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

போர்வீரர்கள், ராஜாக்கள், வேட்டைக்காரர்கள், அரசியல்வாதிகளின் கைகளில் மட்டுமே சுழன்றுகொண்டிருந்த பெரெட்டாவின் துப்பாக்கிகள் ஹாலிவுட் படங்களில் வரும் கதாநாயகர்களின் கைகளிலும், ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கத்தைத் தட்டும் வீரர், வீராங்கனைகளின் கைகளிலும் சுழல்கின்றன.

குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்கும் நாயகர்களின் விருப்பமான துப்பாக்கிகள் எல்லாமே பெரெட்டாவின் தயாரிப்புகள்தான்.

நிறுவனத்தை பதினைந்தாம் தலைமுறையைச் சேர்ந்த பியட்ரோ குசாலி பெரெட்டா மற்றும் ஃப்ராங்கோ குசாலி பெரெட்டா இருவரும் நிர்வகித்து வருகிறார்கள். 2019ம் ஆண்டு இந்நிறுவனத்தின் வருமானம் 1686 கோடி ரூபாய்!

புத்தகங்களும் திரைப்படங்களும்

‘The World of Beretta: An International Legend’, ‘The Gun Digest Book of Beretta Pistols: Function, Accuracy, Performance’, ‘Beretta: 500 Years of the World’s Finest Sporting Life’ என ஏராளமான புத்தகங்கள் ‘பெரெட்டா’ குடும்பத்தைப் பற்றியும் அதன் தயாரிப்புகளைப் பற்றியும் வெளிவந்துள்ளன.
‘The Bourne Identity’, ‘Hotel Rwanda’, ‘The Hurt Locker’, ‘Inception’, ‘The Dark Knight’ என நூற்றுக்கும் மேலான படங்களில் ‘பெரெட்டா’வின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

த.சக்திவேல்