பட்டாம் பூச்சிக்காக ஒரு கிளப்! ஆச்சரியப்படுத்தும் ராஜபாளையம் இளைஞர்



பட்டாம்பூச்சி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் குதூகலம்தான். ஆனால், பறவைகளைக் கண்டு வியக்கும் அளவிற்கு பட்டாம்பூச்சிகள் பக்கம் யாருக்கும் கவனம் போவதில்லை. அந்தக் கணப்பொழுதில் கவனித்து மகிழ்ந்துவிட்டு சட்டென நகர்ந்துவிடுபவர்களே அதிகம்.  
சரண் அப்படியான இளைஞர் இல்லை. பட்டாம்பூச்சியின் அதீத ரசிகர். அவற்றை அணு அணுவாக கவனிப்பவர். அவற்றுடனே பயணம் செய்பவர். தமிழகத்தின் அத்தனை பட்டாம்பூச்சி இனங்களும் அவருக்கு அத்துப்படி. இதில், முக்கால்வாசி இனங்களைப் புகைப்படங்களும் எடுத்து வைத்துள்ளார்.
மட்டுமல்ல; இப்போது பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், வீடுகளுக்கும் கூட பட்டாம்பூச்சி தோட்டங்களை அமைத்துக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பட்டாம்பூச்சிகளுக்கென ‘Rhopalocera and Odonata Association of Rajapalayam’ என்ற பெயரில் ஒரு அமைப்பையே நடத்தி வருகிறார். ‘‘பட்டாம்பூச்சிகள் பத்தி படிப்பதற்கு Rhopaloceraனு சொல்வாங்க. தும்பிகள் மற்றும் ஊசித் தும்பிகள் படிப்பிற்கு Odonataனு பெயர். நாங்க பட்டாம்பூச்சிகள் மட்டுமல்ல; தும்பிகளையும் சேர்த்தே கவனிக்கிறோம். அதனாலதான் ‘ரொபலசெரா அண்ட் ஓடனேட்டா அசோஸியேஷன்’னு பெயர் வச்சோம்…’’ எனப் புன்னகைத்தபடியே பேசத் தொடங்கும் சரணுக்கு வயது 26.

‘‘சொந்த ஊர் ராஜபாளையம். சின்ன வயசுல என் அம்மா அடிக்கடி பறவைகளைக் காட்டுவாங்க. அப்படிதான் பறவைகள் மேல ஆர்வம் வந்துச்சு. ஆறாம் வகுப்பு படிக்கிறப்ப என் பள்ளியின் தலைமையாசிரியருக்கு பறவைகளைக் கவனிக்கிற பழக்கம் இருந்துச்சு. அவருடன் வார விடுமுறை நாட்கள்ல பேர்டு வாட்ச்சிங் போவேன். அவர்தான் பறவைகள் பத்தியும், எப்படி கவனிக்கிறது என்பதையும் கத்துத்தந்தார். பிளஸ் டூ முடிக்கிற வரை அவருடன் பயணிச்சேன்.

2011ல் மதுரையில் ஒரு தனியார் எஞ்சினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். அங்க முகநூல் வழியா சில பறவை ஆர்வலர்கள் வந்தாங்க. அவங்க கூட சேர்ந்து என்ன பறவை, என்ன இனம், அது அரிதானதானு இன்னும் ஆழமா கவனிச்சேன். அப்ப ஒரு முகநூல் நண்பர் வழியா ராஜபாளையத்தைச் சேர்ந்த பறவை ஆர்வலர் விஷ்ணு சங்கரின் தொடர்பு கிடைச்சது. அவருடன் சேர்ந்து உள்ளூர்ல பறவைகளைக் கவனிச்சேன்...’’ என்கிறவர், பட்டாம்பூச்சி பக்கம் தன் கவனம் பறந்த கதையை விவரித்தார்.    

‘‘எங்க ராஜபாளையத்துல சாம்பல் நிற அணில் சரணாலயம் இருக்கு. அங்க எத்தனை பறவைகள் இருக்கு? வலசை வரும் பறவைகள் எவை? உள்ளிட்ட எல்லா தகவல்களையும் நாங்க பராமரிச்சோம். இப்பவும் பராமரிச்சிட்டு வர்றோம். அப்ப சந்தோஷ், பிரணவ்னு இன்னும் ரெண்டு நண்பர்கள் அறிமுகமானாங்க. நாங்க நாலு பேருமா சேர்ந்து பேர்டு வாட்ச்சிங் பண்ணினோம்.  இப்படியே இருந்தப்ப 2015ம் ஆண்டு என் தாத்தா ஒருத்தர்
‘வண்ணத்துப்பூச்சிகள்-ஓர் அறிமுகக் கையேடு’னு ஒரு புத்தகம் தந்தார். அதுல தமிழ்நாட்டுல பார்க்கக் கூடிய பொதுவான 90 பட்டாம்பூச்சிகள் இருந்துச்சு. அதுல ஒரு பத்து பட்டாம்பூச்சிகளை பேர்டு வாட்ச்சிங் பண்றப்ப நானே புகைப்படம் எடுத்திருக்கேன்.

அப்பதான், 2004ல் இருந்து 2015 வரை பதினோரு ஆண்டுகள் பேர்டு வாட்ச்சிங் பண்ணியாச்சு. இப்ப பட்டாம்பூச்சியை வாட்ச் பண்ணலாமேனு தோணுச்சு. நண்பர்கள்கிட்ட சொன்னேன். எல்லோரும் ஆமோதிச்சாங்க. 2015 மே மாசம் சாம்பல் அணில் சரணாலயத்துல இருக்கிற எஸ்டேட்டுக்கு நானும், விஷ்ணுவும் போனோம். அங்க நிறைய பட்டாம்பூச்சிகளை படம் எடுத்தோம். அதை முகநூல்ல உள்ள பட்டாம்பூச்சி குழுவுல போட்டேன். இந்தக் குழுவில் இந்தியா முழுவதும் உள்ள பட்டாம்பூச்சி நிபுணர்கள் இருக்காங்க.  

அப்ப ஒரு குறிப்பிட்ட பட்டாம்பூச்சியின் புகைப்படத்துக்கு எல்லோரும் வாழ்த்து சொன்னாங்க. ஏன்னு எனக்கு புரியல. இதுல ‘பட்டர்ஃப்ளை மேன் ஆஃப் இந்தியா’னு அழைக்கப்படுகிற டாக்டர் ஐசக் கெகிம்கர் ஒரு மெசேஜ் அனுப்பி, ‘இந்தப் புகைப்படம் ரொம்ப அரிதானது. கிடைக்குமா’னு கேட்டார்.அவர் அப்பதான் ‘Butterflies of India’ புத்தகத்தை எழுதிட்டு இருந்தார். உடனே அனுப்பினேன். பிறகுதான் சிலர் இந்தப் பட்டாம்பூச்சியின் புகைப்படம் எங்கும் கிடைக்காதுனு சொன்னாங்க. அதை நாங்க தெரியாமலயே எதேச்சையா எடுத்திருக்கோம். அதுக்குதான் பாராட்டு. அதை சந்தோஷ், பிரணவ்கிட்ட சொன்னேன்.

அப்பதான் ஒரு கிளப் ஆரம்பிக்கலாம்னு முடிவெடுத்து 2017ல் தொடங்கினோம். அதுவே ‘Rhopalocera and Odonata அசோஸியேஷன்’. எங்களுக்கு ராஜபாளையம் வன உயிரின சங்கத் தலைவர் டி.எஸ்.சுப்ரமணிய ராஜா சாரும், சாத்தூர் ஜமீன் மகன் ராமசாமி சாரும் வழிகாட்டியா இருக்காங்க. 

இதன்வழியா நிறைய பட்டாம்பூச்சிகளைக் கவனிச்சோம். ஒருநாள் விருதுநகர் மாவட்ட வன அதிகாரியைச் சந்திச்சேன். அவர் அலுவலகத்துல ராஜபாளையம் பகுதியில இருக்குற பட்டாம்பூச்சிகளின் பட்டியலைப் பார்த்தேன். வெறும் 56 இனங்கள்தான் இருந்துச்சு. அது ரொம்ப குறைவுனு தோணுச்சு.

அதனால, நாங்க புகைப்படம் எடுக்க ஆரம்பிச்சோம். ஒரே வருஷத்துல 150 இனங்களை சாம்பல் நிற அணில் சரணாலயத்துக்குள்ள மட்டும் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொடுத்தோம். ஆச்சரியப்பட்டாங்க. பிறகு, தமிழ்நாட்டுல பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுக்கும்போது நாங்க ஒரு பதினைஞ்சு பட்டாம்பூச்சிகள் பட்டியலை போட்டோவுடன் கொடுத்தோம். தமிழ்நாட்டுல மொத்தம் 323 பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பதா சொல்றாங்க. எங்க டீம் ராஜபாளையத்துல மட்டும் 237 பட்டாம்பூச்சி இனங்களைப் பார்த்து ரெக்கார்ட் பண்ணியிருக்கு...’’ என்கிறவர், தொடர்ந்தார்.

‘‘பொதுவா, பட்டாம்பூச்சிகள் அதற்குப் பிடித்த செடிகளில் மட்டுமே முட்டையிடும். ஒரு பட்டாம்பூச்சி கருவேப்பிலை செடியில் முட்டையிட்டால் அடுத்து இன்னொரு கருவேப்பிலை செடியில்தான் முட்டையிடும். அந்த இடத்துல கருவேப்பிலை செடி இல்லன்னா அந்த இனமே அங்க இருக்காது. சில பட்டாம்பூச்சிகள் இரண்டு மூணு செடிகள்ல கூட முட்டையிடும்.

அப்புறம், பட்டாம்பூச்சிகள் காலநிலை மாறும்போதும், உணவு கிடைக்காதபோதும் இடம்விட்டு இடம் நகரும். கிம்சன் ரோஸ்னு ஒரு பட்டாம்பூச்சி
தமிழ்நாட்டு கடற்கரையில் இருந்து இலங்கை வரை இடம்விட்டு இடம் போகும். அதேபோல காமன் க்ரோ, புளூ டைகர், டார்க் புளூடைகர்னு சில பட்டாம்பூச்சிகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்ல இருந்து மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு வரும். பிறகு, மேற்குத் தொடர்ச்சி மலைகள்ல இருந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்குப் போகும். இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். இப்படி நிறைய பட்டாம்பூச்சிகள் இருக்குது.

ஆனா, மக்கள் காட்டுயிர்னா யானை, புலி, சிறுத்தைனு மட்டுமே நினைச்சிட்டு இருக்காங்க. பறவைகளைப் பத்தி தெரிஞ்சவங்க அதை ரசிக்கிறாங்க. ஆனா, வண்ணத்துப்பூச்சி, தும்பி மாதிரி யானவை யார் கண்ணுக்கும் தெரியறதில்ல. புலி, யானையை விட பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தும்பிகள் இருந்தால் மட்டுமே நம்மால் இந்த பூமியில் வாழ முடியும். ஏன்னா, தேனீக்களைப் போல பட்டாம்பூச்சிகளும் மகரந்தச் சேர்க்கைக்கு பங்களிப்பவை; இந்த உலகத்தை உயிர்ப்புடன் வச்சிருக்கக் கூடியவை...’’ என்கிறவர், தும்பிகள் பக்கம் பறந்தார்.

‘‘இந்தப் பட்டாம்பூச்சிகளை கவனிக்கும்போதே நாங்க தும்பி மற்றும் ஊசித் தும்பிகளைப் பத்தி யும் கவனிச்சிட்டு வந்தோம்.
ராஜபாளையம் பகுதியில மட்டும் 51 தும்பி இனங்களைப் பார்த்திருக்கோம். பொதுவா, தும்பிகள் இருந்தால் அங்க கொசுக்கள் இருக்காது. ஏன்னா, அவை கொசுக் கள் உள்ளிட்ட சிறு பூச்சிகளைச் சாப்பிடும். தும்பிகளை இயற்கையான பூச்சிகொல்லிகள்னு சொல்லலாம். பட்டாம்பூச்சிகளும், தும்பிகளும் காற்று மாசோ, சுற்றுச்சூழல் மாசோ உள்ள இடங்கள்ல இருக்காது. ஓர் இடத்துல பட்டாம்பூச்சிகளும், தும்பிகளும் இல்லனா அந்த இடம் மாசுபட்ட இடம்னு தெரிஞ்சிக்கலாம்.

நாங்க இந்த கிளப்பை ஆரம்பிச்ச நோக்கமே மக்கள்கிட்ட பட்டாம்பூச்சி, தும்பி பத்தின விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னுதான். பட்டாம்பூச்சி பத்தி நிறைய பேருக்குத் தெரியாது. இப்ப நாங்க அதுபத்தி ஒரு புரிதலை ஏற்படுத்த நடைப்பயணம் அழைச்சிட்டுப் போறது, நிறைய பேசறதுனு செய்றோம்.

குறிப்பா, இந்த ஆண்டு பட்டாம்பூச்சி பத்தி பேச ஆன்லைன் டாக்ஸ் நிறைய ஏற்படுத்தினோம். சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ்ல உள்ள நண்பர்களுடன் உரையாடினோம். அவங்க அங்குள்ள பட்டாம்பூச்சிகள், அதைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்துகிட்டாங்க.

இந்தக் கொரோனா காலத்துல இந்தியாவுல 19 மாநில பட்டாம்பூச்சி நிபுணர்களுடன் கலந்துரையாடினோம். அப்புறம், மாணவர்கள், பெற்றோருக்கு வாட்ஸ்அப்ல ஒருவாரம் பட்டாம்பூச்சிகள் பத்தி வகுப்பு எடுத்தோம். அடுத்து, பட்டாம்பூச்சி தோட்டங்களை கல்லூரி, பள்ளிகள், நண்பர்களின் வீடுகளுக்கு பண்ணிக் கொடுத்திருக்கோம். முதல்ல, அவங்க இடத்துல என்ன மாதிரி செடிகள் இருக்கு... என்ன பட்டாம்பூச்சி வந்து போகுதுனு ஆறு மாசம் கவனிப்போம். அப்புறம், தோட்டங்களை அமைப்போம். ஏன்னா, பட்டாம்பூச்சி வந்துபோக அதுக்குனு host plant இருக்கு. அதுக்குதான் அது வரும்...’’ என்ற சரணின் ஆசை, முந்நூறு பட்டாம்பூச்சி இனங்களையாவது பார்க்க வேண்டும் என்பதுதான்.

‘‘இந்தியா முழுவதும் 1328 பட்டாம்பூச்சி இனங்கள் இருக்கு. தென்னிந்தியாவுல 340 இருக்கும். நான் இதுவரை 289 இனங்களைப் பார்த்து புகைப்படம் எடுத்துட்டேன். முந்நூறு இனங்களைத் தொட இன்னும் பயணிக்கணும். அதுக்காகவும் தயாராகிட்டு வர்றேன்...’’ உற்சாகம் பொங்க
சொல்கிறார் சரண்.   

பேராச்சி கண்ணன்