உலகளவில் ஆயிரத்தில் ஒருவர்... இந்திய அளவில் பத்தில் ஒருவர்! இந்தத் தமிழரை புகழ்கிறது அமெரிக்க பல்கலைக்கழகம்



உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் உயிரியல் அறிஞராக மகுடம் சூட்டப்பட்டிருக்கிறார் பாதிரியார் சவரிமுத்து இன்னாசிமுத்து. தமிழகத்தின் கல்வி நிறுவனங்களுக்குப் பெயர்போன இயேசு சபைகளால் நடத்தப்படும் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியின் இயக்குனர் இவர். இந்த சபைகளால் நடத்தப்படும் சென்னை லயோலா கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றியவர்.

சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை ஆராய்ந்து, சவரிமுத்துவை ‘ஆயிரத்தில் ஒருவர்’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறது அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று. ‘‘அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஸ்டான்போர்ட். அங்கு பணியாற்றும் மூன்று பேராசிரியர்கள் இணைந்து செய்த ஆய்வின் மூலம் இந்தப் பெயர் கிடைத்திருக்கிறது.

அதாவது உயிரியல் துறையில் செய்யப்படும் ஆய்வுக் கட்டுரைகளைப் பிறர் எந்தளவுக்கு மேற்கோள் காட்டுகிறார்கள் என்பதை கணக்கிட்டும், ஓர் ஆய்வுக் கட்டுரையின் முடிவை பலபேர் சுட்டும்போது அந்த ஆய்வின் சமூக தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று கணித்தும் இந்தப் பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் உயிரியல் கட்டுரைகளை ஆய்வு செய்தபோது எனது கட்டுரைகளில் இருந்து மேற்கோள் காட்டும் அளவு 872ம் இடத்தைப் பிடித்தது. அதாவது லட்சத்தில் அதிகம் சுட்டப்படும் 1 சதவீத கட்டுரைகளில் என்னுடைய கட்டுரைகளும் அடக்கம்.

அதனால் உலகளவில் ‘ஆயிரத்தில் ஒருவர்’ என்றும் இந்திய அளவில் ‘பத்தில் ஒருவர்’ என்றும் கணக்கிட்டுள்ளார்கள்...’’ என்கிற இன்னாசிமுத்து தனது ஆய்வில் புதிய வகை பூச்சி ஒன்றையும் புதுவித வேதியியல் மூலக்கூறு ஒன்றையும் கண்டுபிடித்துள்ளார். அத்துடன் உயிரியல் துறையில் இந்திய அளவில் 12 கண்டுபிடிப்புகளுக்கும் உலகளவில் 2 கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை வைத்திருக்கிறார்.

‘‘நான் எழுதிய 800க்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு அறிவியல் இதழ்களில் வெளியாகியிருக்கிறது. அதில் முக்கியமான ஓர் ஆய்வு ஏட்டில் வெளியான கட்டுரைகளை மட்டும் வைத்துக்கொண்டு அதை எவ்வளவு பேர் சுட்டிக்காட்டுகிறார்கள் என்று ஆராய்ந்திருக்கின்றனர்.

என் ஆய்வுகள் இரசாயன பூச்சிகொல்லிக்குப் பதிலாக தாவரத்தைச் சார்ந்த பூச்சிக்கொல்லிகள், மனித நோய்களுக்கு இயற்கை சார்ந்த மருந்துகள், பூச்சிகள் தாக்காத புதுவகை பயிர்களை எப்படி இயற்கையாக உருவாக்குவது போன்றவை தொடர்பானது.

இந்த கொரோனா காலத்தில் இந்திய அரசும் தமிழக மக்களும் உள்ளூர் வைத்தியம், இயற்கை விவசாயம் என்று பேசி வருவது கொஞ்சம் ஆறுதலான விஷயம். இதுதொடர்பாக அரசும் மக்களும் அக்கறை காட்டினால் இயற்கையால் ஏற்படும் உபாதைகளை கொஞ்சமாவது குறைக்கலாம்...’’ என்று முடித்தார் சவரிமுத்து.

டி.ரஞ்சித்