அணையா அடுப்பு-29



தாலியறுக்கக் கூடாது!

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

பிரமதண்டிகாயோகம்.மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் அடிக்கடி வள்ளலார் செய்து கொண்டிருந்த தவம்.இருபுறமும் இரும்புச் சட்டியில் நிலக்கரியைப் போட்டு தீக்கங்குகள் எரிந்து கொண்டேயிருக்கும்.அதற்கு நடுவில் அமர்ந்து வள்ளலார் தவம் செய்வார்.அறை முழுக்க தாங்கவியலா அனல் வீசும்.வள்ளலாரின் அகத்துக்குள் வீசிக்கொண்டிருந்த அனலை சமன் செய்வதற்காகவே இத்தகைய கடுமையான தவத்தை அவர் அவ்வப்போது செய்து கொண்டிருந்தார்.

அச்சமயத்தில் அவரது கைகளுக்குள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட எந்த உலோகத்தை வைத்தாலும் அது உருகி ஓடிவிடும் என்று அவரது அன்பர்கள் சொன்னார்கள்.இத்தகைய அனலான தவத்தை அவர் மேற்கொண்டது மற்றவர்களுக்குத் தெரியாது.ஒருநாள் -அவர் தவம் மேற்கொண்டிருப்பது அறியாமல், வள்ளலாரின் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓர் அன்பர் நுழைந்தார்.சட்டென்று தீப்பிடித்த கானகத்துக்குள் மாட்டிக் கொண்டது போன்ற அனலை அவர் உடல் உணர்ந்தது.

கரி எரிவதால் ஏற்பட்ட புகைமூட்டத்தில் நிலைதடுமாறி நடந்தவரின் பாதத்தில் எரிந்து கொண்டிருந்த இரும்புச் சட்டி பட்டு, தீக்கங்குகள் அறையெங்கும் சிதறின.தடுமாறி கீழே விழுந்தவரின் கரங்களிலும் நெருப்புத் துண்டங்கள் பட்டு, அவருக்கு தீக்காயம் உண்டானது.
அதே தீக்கங்குகள் வள்ளலாரின் உடலிலும் பட்டன.

ஆனால் -வள்ளலாருக்கு எந்தவிதமான பாதிப்புமில்லை.அவர் சுத்த தேகத்தை அடைந்தார் என்பதற்கு இந்நிகழ்வையே சான்றாகச் சொல்கிறார்கள்.
சுத்த தேகம் என்பது நெருப்பாலோ, பனியாலோ அல்லது வேறேதேனும் இயற்கைத் தன்மையாலோ சற்றுகூட பாதிப்படையாது.
ஞானக்கனல் மேனி கொண்டவர் வள்ளலார் என இச்சம்பவத்தை மேற்கோள் காட்டி ‘வள்ளலார் இராமலிங்கம் அடிகள் வரலாறு’ எழுதிய சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள் குறிப்பிடுகிறார்.

வள்ளலார், இவ்வளவு கடுமையாக, தான் மேற்கொண்ட பிரமதண்டிகாயோகம் குறித்துதான்…“ஒருநாழிகையில் யோகநிலையை உணர்த்தி மாலையே யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலையே...” என்று பாடுகிறார்.இயற்கை எய்தியவர்களைக் கூட எரிக்கக் கூடாது என்று வற்புறுத்தும் வள்ளலார், சுத்த தேகம் கொண்டவர் என்பதால்தான் அதீத நெருப்புக்கு இடையே கூட சாந்தமாக தவம் இயற்ற முடிந்தது.

இறந்தவர்களைப் புதைக்க வேண்டும் என்று பலமுறை பாடல்களில் வற்புறுத்திய வள்ளலார், மேட்டுக்குப்பத்தில் இருக்கும்போதுதான் சாலை நிர்வாகிகளுக்கு தன் கருத்தை கட்டளையாகவே சொல்கிறார்.கணவன் இறந்தால் மனைவி தாலி இழக்க வேண்டியதில்லை என்கிற கருத்தை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே முற்போக்காக அவர் சொல்லியிருக்கிறார் என்பது இக்கடிதம் மூலம் தெரியவருகிறது.30-03-1871ம் தேதியிட்ட அந்தக் கடிதத்தை முக்கியத்துவம் கருதி அப்படியே தருகிறோம்.

“அன்புள்ள நீங்கள் சமரச வேத சன்மார்க்க சங்கம் தருமச் சாலைக்கு மிகவும் உரிமையுடையீர்களாகலில் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது.
நீங்களும் உங்களையடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளாற் சுகமாக வாழ்வீர்களாக.

கர்ம கால முதலிய பேதங்களால் யார்க்காயினுந் தேக ஆனி நேரிட்டால் தகனஞ்செய்யாமல் சமாதியில் வைக்க வேண்டும்.
இறந்தவர்கள் திரும்பவு மெழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவுந் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தை யுடனிருக்க வேண்டும்.

புருட னிறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.மனைவி இறந்தால் புருடன் வேறு கல்யாணம் பிரயத்தனஞ் செய்ய வேண்டாம்.
பிள்ளைக ளிறந்தால் சஞ்சலிக்க வேண்டாம்.கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்ய வேண்டாம்.தெரிவிக்கத் தக்கவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்ட மட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும்.

இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள்.செய்திருந்தால், சமரச வேத சன்மார்க்க சங்கமும் மேற்படி தருமச்சாலையும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் சிதம்பரங் கோயில் திருச்சபைகளைப் புதுக்கி நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணை கூர்ந்து எனது தந்தையாராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம் சமரச வேத சன்மார்க்க சங்கத் தருமச் சாலைக்கு எழுந்தருளிக் காட்சி கொடுக்குந் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக விருக்கின்றது.

அந்தத் தருணத்தில் சாலைக்கு உரியவர்களாகி யிருந்து இறந்தவர்களை யெல்லாம் எழுப்பிக் கொடுத்தருளுவார். இது சத்தியம். இது சத்தியம்.
இந்தக் கடிதம் வெளிப்பட்டறிந்து கொள்ளாமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பி யருளுவார். இது வெளிப்பட் டறிந்தபின் தகனஞ் செய்தல் கூடாது. அது சன்மார்க்கத்திற்கு தக்கதல்ல. ஆகலில் மேற்கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக.

எனக்கு உலக அறிவு தெரிந்தது தொட்டு எனது தந்தையார் திருவருளை நான் அடையும் வரையில் என்னுடன் பழகியும் என்னை நம்பியடுத்தும் என்னைக் கேள்வியால் விரும்பியும் எனக்கு உரிமைப்பட்டும் இருந்து இறந்தவர்களை யெல்லாம் எழுப்பிக் கொடுத்து சமரச சன்மார்க்க சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய பெருங்கருணை வள்ளல் சாலைக்கு உரியவர்களாகி யிருந்து அவநம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரம் செய்தேயருளுவார்.

ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள். ஆகலில் நம்பிக்கையுடன் இருங்கள். பெரிய களிப்பை யடைவீர்கள். இது சத்தியம். இது சத்தியம்.இப்படிக்கு சிதம்பரம் இராமலிங்கம்” இந்தக் கடிதத்தை சன்மார்க்க சங்கத்தார் சமாதிக் கட்டளை என்பார்கள்.

இக்கடிதத்தின் சுருக்கமாக இறப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று வள்ளலார் சொல்லுவதைக் கீழ்க்கண்டவாறு புரிந்துகொள்ளலாம்.

* மனித உடலை எரிக்கக் கூடாது; புதைக்க வேண்டும்.
* கணவரை இழந்த கைம்பெண்கள் தாலியெடுக்க வேண்டாம்.
* கருமாதி போன்ற சடங்குகளை இறந்தவருக்கு செய்ய வேண்டியதில்லை.
* மறைந்தவரின் நினைவாக முடிந்தவரை நிறையப் பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

மறைந்தவர் உயிர்த்தெழுதல் குறித்த நம்பிக்கை வள்ளலாருக்கு இருந்ததாக கடிதம் மூலம் தெரிய வருகிறது. அப்போது தமிழகத்தில் காலூன்றிக் கொண்டிருந்த கிறிஸ்தவ மதத்தின் தாக்கமாக இது இருந்திருக்கலாம்.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்