பத்மநாப சுவாமியின் 50,000,00,00,000 ரூபாய் புதையல்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                       திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமியை ‘காவல் தெய்வம்’ என்றுதான் கேரள மக்கள் அழைக்கின்றனர். ஆனால் அவர் 50 ஆயிரம் கோடி ரூபாய் புதையலை தன் கருவறையைச் சுற்றிய பாதாள அறைகளில் வைத்து, காவல் காத்து வருகிறார் என்பது யாருக்கும் தெரியாது. இப்போது புதையல் கணக்கெடுக்கப்பட, தமிழகத்திலும் எந்தெந்தக் கோயில்களில் எவ்வளவு புதையல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 

இந்தக் கோயிலின் முழுமையான வரலாறு யாரும் அறியாதது. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வாழ்ந்த வில்வ சாமியார் என்பவரின் கனவில் பத்மநாப சுவாமி வந்ததாகவும், அவர்தான் இங்கு சிறிய அளவில் ஒரு கோயிலைக் கட்டியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  

1686ல் இக்கோயில் தீப்பிடித்தது. அதன்பின் சுமார் 30 ஆண்டுகளாக பூஜைகளும் நடைபெறவில்லை. தற்போது குமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி முதல் கேரளத்தின் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா வரை திருவிதாங்கூர் சமஸ்தானம் என முன்பு அழைக்கப்பட்டது. இந்த சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மாதான் இக்கோயிலைப் புதுப்பித்தார்.

அவர் பத்மநாபரை ஒரு தெய்வமாகக் கருதவில்லை. தனது நாட்டுக்கு மன்னனாகவே கருதினார். போர் மூலமும், வரியாகவும் பலரிடமிருந்து கிடைக்கும் தங்கம், வைரம், வைடூரியம் உட்பட்ட நகைகளை பாதுகாத்து வைக்க, கோயிலின் கருவறை பின்புறம் 6 ரகசிய அறைகளைக் கட்டினார் அவர். இவற்றை தனக்கோ, அல்லது தனது குடும்பத்துக்காகவோ அவர் சேர்த்து வைக்கவில்லை. நாட்டில் எப்போதாவது வறட்சியோ, அழிவோ ஏற்பட்டால் நிவாரணம் தருவதற்காக நகைகளை ரகசிய பாதாள அறைகளில் சேர்த்து வைத்ததாகக் கூறுகின்றனர். இப்போதும் கோயில் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்களின் முழுக்கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

திருவனந்த புரத்தைச் சேர்ந்த சுந்தரராஜ ஐயர் என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கை அடுத்து, ஆறு ரகசிய அறைகளில் இருக்கும் நகைகள் மற்றும் பொருட்களை கணக்கெடுக்க 2 முன்னாள் நீதிபதிகள் உட்பட 7 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. கடந்த 27ம் தேதி கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

இந்த 6 அறைகளுக்கு ‘ஏ’ முதல் ‘எஃப்’ வரை பெயரிடப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ அறைகள்தான் பாதாள அறைகள் என அழைக்கப்படுகிறது. இந்த 2 அறைகளும் கடைசியாக விசாகம் திருநாள் மன்னர் காலத்தில் சுமார் 136 வருடங்களுக்குமுன் திறக்கப்பட்டதாகும். பல வருடங்களாக திறக்கப்படாமல் இருப்பதாலும், குகை போன்ற சிறிய அறைகள் என்பதாலும் இந்த அறைகளை முதலில் திறக்க அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்பட்டது.

இதையடுத்து மற்ற 4 அறைகளை முதலில் திறந்தனர். இதில் 2 அறைகள் திருவிழாக் காலங்களிலும், மற்ற 2 அறைகள் தேவைப்படும் காலங்களிலும் திறக்கப்படுபவை. இந்த அறைகளிலேயே குவியல் குவியலாக தங்க நகைகளும் பொருட்களும் கிடந்தன. முதல் நாளில் முதல் அறையில் எடுத்த கணக்கிலேயே மதிப்பு ரூ.500 கோடியைத் தாண்டியது.
மூன்றாவது நாள் பாதாள அறைகளுள் ஒன்றான ‘பி’ அறையை திறக்க அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து ‘ஏ’ அறை திறக்கப்பட்டது. இதில் முதலில் இருந்த இரும்புக் கதவில் 3 பெரிய பூட்டுகள் இருந்தன. இதை திறந்தபோது உள்ளே அறை முழுவதும் மணல் மூடிக்கிடந்தது. ‘எதுவும் இல்லை’ என்றுதான் எல்லோரும் நினைத்தனர். இந்த அறையில் கஷ்டப்பட்டு ஒரு ஆள் மட்டுமே நுழைய முடியும்; குனிந்துதான் நிற்க முடியும். இன்னொருவர் உதவி இல்லாமல் ஒருவர் உள்ளே போகவோ, வெளியேறவோ முடியாதபடி 3 படிக்கட்டுகள் விசித்திரமாக இருந்தன. இந்த பாதுகாப்பு அமைப்பை எல்லோரும் பார்த்து வியந்தனர்.

தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மண்ணை அப்புறப்படுத்தினர். மண்ணை அகற்றியவர்கள் மூச்சுவிடவே சிரமப்பட, உடனடியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மண்ணை அகற்றித் தரையைப் பார்த்தால்... கல்லால் ஆன ஒரு பாதாள அறை தென்பட்டது. கற்களை நகர்த்தியபோது, அதனுள் இருந்த நகைக் குவியல்களைப் பார்த்து அதிகாரிகள் மூர்ச்சையாகாத குறை. மூட்டை மூட்டையாக தங்க நாணயங்கள், தங்கக்கட்டிகள், வைர கிரீடங்கள், ரத்தினம் மற்றும் மரகத செயின்கள் என தோண்டத் தோண்ட புதையல்.

தங்க செயின்கள் மட்டுமே 2 ஆயிரத்துக்கும் மேல் இருந்தன. இதில் 2.2 கிலோ எடையில் 4 தங்க சங்கிலிகள் காணப்பட்டன. இவற்றின் நீளம் மட்டுமே 18 அடி. நெல் மணி சைசில் தங்க மணிகளும் பல மூட்டைகள் காணப்பட்டன. மண்ணுக்குள் இருந்தாலும் எல்லாமே பளபள என்றிருந்தன. இந்த ஒரு அறையில் காணப்பட்ட பொருட்களே ரூ.50 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

மொத்தமாக எல்லா அறைகளில் இருந்த நகைகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த மதிப்பீட்டுப் பணிகள் முடியவே பல நாட்கள் ஆகக்கூடும். பிறகு இந்தப் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ‘‘தற்போது வெளியாகியுள்ள நகைகளின் மதிப்பு தோராயமானதே. உண்மையில் அவற்றின் பழமையைக் கணக்கிட்டு கலைப்பொருள் என்ற விதத்தில் மதிப்பிட்டால், அவற்றின் மதிப்பு பல மடங்கு இருக்கும்’’ என்றும் விஷயம் தெரிந்த சிலர் கூறுகின்றனர்.

இதுவரை கேஷுவலாக பக்தர்கள் நுழையமுடிந்த பத்மநாப சுவாமி கோயிலுக்கு இப்போது கடும் பாதுகாப்பு! 
 திருவனந்தபுரத்திலிருந்து ஏ.கே.அஜித்குமார்