என் கனவு ஹீரோ சூர்யா...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

எழுதியே வைத்துக்கொள்ளுங்கள்... கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வரும் வருடங்களில் ரவுண்டு கட்டிக் கலக்கப் போவது மனீஷாதான்.

இந்தியிலிருந்தோ, தெலுங்கிலிருந்தோ இறக்குமதி ஆகாமல் நேரடியாகத் தமிழ்ப்படத்திலிருந்து கணக்கைத் துவங்கும் மனீஷா, மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பாலாஜி சக்திவேல் இயக்கும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் நாயகி. அதே ரகசியப் பிரமாணத்துடன் டோலிவுட்டிலும் மெகா தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜு இயக்கும் படத்தில் நாயகியாகிவிட்டார் இந்த மராத்தி மங்கை.

முதல் சந்திப்பிலேயே நெடுநாளைய தோழியைப் போல் நட்பு பாராட்டும் மனீஷாவின் சிரிப்பில் சோழிகள் சிதற, நம் கவனத்தில் கடலைகளைச் சிதறவிட... தொடர்ந்தது பேச்சு.
‘‘மனீஷுக்குப் பூர்விகம் மகாராஷ்டிராதானா..?’’

‘‘பூர்விகம்னா அதுதான். ஆனா நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே பெங்களூருவில்தான். பி.காம் சேர்ந்தப்ப, ‘அழகான முகம் உனக்கு. நீ ஏன் நடிக்கக் கூடாது..?’ன்னு கூட இருந்த கூட்டம் உசுப்பேத்த, அப்படியே ஜாலியா மாடலிங் பண்ணலாமேன்னு போனேன். அப்பதான் பாலாஜி சக்திவேல் சார் படத்துக்காக லிங்குசாமி சார்கிட்டேர்ந்து ஆடிஷனுக்கு அழைப்பு வந்தது. நானும் அதில பங்கெடுத்தேன்னுதான் சொல்லணும். வேற முகங்களும் பாத்துக்கிட்டிருந்தாங்க. கடைசியில நான் ஓகே ஆனேன். ஆனாலும் படம் ஆரம்பிக்கவும், அதுக்கான தயாரிப்புகளுக்கும் நிறைய காலம் காத்திருந்தேன்.

ஆனா அத்தனை காத்திருத்தலும் நன்மை க்குத்தான்னு பாலாஜி சார் டைரக்ஷன்ல நடிக்கும்போது தெரிஞ்சது. நானும் தமிழ்ப்படங்கள் பார்ப்பேன்னாலும், ‘காதல்’ பார்த்ததில்லை. என் தோழி ஒருத்தி பார்த்துட்டு நெகிழ்ச்சியோட சொன்னா. அதுக்குப் பிறகு பார்த்தேன். ஆடிப்போயிட்டேன். அப்ப பாலாஜி சார் மேல ஏற்பட்ட மரியாதை ஷூட்டிங்ல பல மடங்கு கூடிடுச்சு. பெர்ஃபெக்ஷனுக்கு உதாரணம் சொல்லணும்னா அவர்தான். சொல்லிக் குடுக்கிறதிலும் சரி, அது சரியா வர்றவரைக்கும் விடாம எடுக்கிறதிலும் சரி, அவர் ஒரு ஜீனியஸ். தேடினாலும் இத்தனை திறமையுள்ள டைரக்டர்கள் கிடைப்பாங்களாங்கிறது சந்தேகம்தான்.

நீங்க இப்ப பார்க்கிற மாதிரி நான் படத்துல இருக்கமாட்டேன். படத்துக்குன்னு மேக்கப்மேனே கிடையாது. இயல்பான முகங்களோட கேரக்டராதான் எல்லோருமே தெரிவோம். இந்தப்படத்தில எனக்குக் கிடைக்கப் போற பாராட்டுகளை இப்பவே எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். இதுக்குள்ள இன்ப அதிர்ச்சியா எம்.எஸ்.ராஜு படம் தெலுங்கிலேர்ந்து கிடைச்சது. அவர் மகன் சுமந்த் அஸ்வின் ஹீரோவாகற படம் இது. ஆனா ‘வழக்கு எண்’ படத்துக்கும் இதுக்கும் ஏக வித்தியாசங்கள் இருக்கு. இதில எனக்கு ஃபுல் மேக்கப் இருக்கு. கம்ப்ளீட் கமர்ஷியல் படம். இரவு, பகலா ஐதராபாத்ல ஷூட் போறதால ரெஸ்ட்டே இல்லை. ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கோ’ன்னு கிடைக்கிற கேப்பில நல்ல படங்கள் பார்த்து ரசிச்சுக்கிட்டிருக்கேன்...’’
‘‘மனீஷாவோட கனவு ஹீரோ யார்..?’’ & முடிப்பதற்குள் புல்லட்டைப் போல் சீறி வருகிறது பதில். ‘‘சூர்யா... சூர்யாவேதான். அவர்கூட நடிக்கணும்ங்கிறதுதான் என் கனவு..!’’
மச்சம்யா மனுஷனுக்கு..!
வேணுஜி