காற்றின் கையெழுத்து



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       

              ‘நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா - இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா?’
 சித்தர்கள் சிரமப்பட்டுக் கேட்கிற கேள்விகளை, கண்ணதாசன் சினிமா பாட்டுக்குள் சாதாரணமாகக் கேட்டுவிடுகிறான். பாரதியும் கண்ணதாசனும்தான் கவிஞர்களில் சித்தர்களாக வாழ்ந்தவர்கள்.

யாரும் யாரையும் கேட்காமல்தான் பிறக்கிறோம். பிறந்த பிறகு ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்கிற கேள்விகள்தான் வாழ்வை ஒரு முரண்பாட்டு மூட்டையாகக் கட்டி வைத்துவிடுகிறது.

‘நீ அம்மா பிள்ளையா... அப்பா பிள்ளையா...’ என்று குழந்தையோடு கேள்விகளால் விளையாடுகிறோம். அது அம்மா பிள்ளையும் இல்லை; அப்பா பிள்ளையும் இல்லை. இந்த உலகில் ஏகாந்தமாக & சுதந்திரமாக & வாழ வந்திருக்கிற இன்னொரு உயிர் என்பதைக் கட்டுண்ட நம் ஆழ்மனம் ஏற்றுக் கொள்வதில்லை.

‘‘குழந்தைதான் மிகவும் அதிகமாக சுரண்டப்படுகிற உயிர்’’ என்கிறார் ஓஷோ. ‘‘பெற்றோரின் முறைப்படுத்துதல்தான் உலகிலேயே மிகவும் மோசமான சுரண்டல். இது வேரோடு களையப்பட்டால்தான் மனிதன் முதன்முறையாக நிஜமான, தன்னம்பிக்கை நிறைந்த சுதந்திரத்தைக் காண்பான். தவறான முறையில் நாம் குழந்தையை வழிநடத்துவதால், மனித குலம் முழுவதும் தப்பான வழியில் போய்விடுகிறது. குழந்தைதான் விதை. இந்த விதை விஷமாக்கப் படுகிறது.’’

ஓஷோவின் வார்த்தைகளுக்கு முன்னால் பெற்றோர்கள் அனைவரும் குற்றவாளிகளாகத்தான் நிற்கவேண்டியிருக்கிறது. கருவறை விட்டு வந்த கணத்திலிருந்து ஒரு குழந்தையை நமக்கேற்றாற் போல வடிவமைக்கத் தொடங்கிவிடுகிறோம். நமது உடைமைப் பொருளாக கையாளத் தொடங்குகிறோம்.

வெயிலை, மழையை, காற்றை... ஒரு விதை போல உணர்ந்து முட்டி முளைக்க வேண்டிய குழந்தையை, வெயிலில் சுற்றக் கூடாது; மழையில் நனையக் கூடாது என்று குடைபிடித்துப் பராமரிக்கிறோம். குடை என்பது அவர்களுக்காக நாம் விரிக்கிற கருணை என நினைக்கிறோம். அது கருணையல்ல; இயற்கைக்கு எதிரான தண்டனை.

வேலைக்குப் போகும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை மழலையர் காப்பகத்தில் விட்டு அழைத்து வருகிறார்கள். இயற்கை உபாதையைக் கூட அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ள முடியாதபடி ஒரு ‘நாப்கினை’யும் கட்டி விடுகிறார்கள். வேலைக்குப் போகும் பெண்களை வாழ்வின் நெருக்கடிக்காக மன்னித்து விடலாம். வேலைக்குப் போகாத சில நாகரிக யுவதிகளும் தங்கள் குழந்தைகளைக் காப்பகத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். அவர்களின் வேறு வேலைகளுக்கு அது சௌகரியமாக இருக்கிறது.

ஒரு குழந்தையின் கல்வியை, வேலையை, காதலை, கல்யாணத்தை பெற்றோர்களே தீர்மானிக்கிறார்கள். ‘படி... படி... படி...’ என்று அவர்களை மதிப்பெண்களோடு மல்லுக்கட்ட வைக்கிறார்கள். அவர்களின் ‘சுயம்’ பூஜ்யமாகிவிடுவதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை. அன்பு என்கிற பெயரில் குழந்தைகளை மெல்ல மெல்லக் கொல்கிற வன்முறை இது.

‘படிக்கவிடாமல் கல்யாணத்திற்கு என்னைக் கட்டாயப்படுத்துகிறார்’ என்று சமீபத்தில் இளம்பெண் ஒருவர் தன் தந்தை மீது போலீசில் புகார் கொடுத்தார். இன்னொரு பெண்ணின் தந்தை, தன் மகள் காதலித்துத் திருமணம் முடித்துவிட்டாள் என்பதற்காக அவளது கணவரை ஆள் வைத்துக் கொலை செய்தார். இந்தத் தந்தைகள் தங்கள் குழந்தைகளின் மீது காட்டியது அக்கறையா... வன்முறையா..?

நாம் கடந்து வந்த பாதைகளை மட்டுமே முன்வைத்து, நமது குழந்தைகளை வழி நடத்துவது ஒரு குருட்டுச் சமூகத்தைத்தான் உருவாக்கும். அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; கால்களும் இருக்கின்றன. காண்பதற்கும் நடப்பதற்கும் புதிய புதிய உலகங்கள் திறந்திருக்கின்றன. நமது உலகத்தில் அவர்களைச் சிறைப்படுத்தக்கூடாது. நதிகளின் அனுபவத்தை அவர்கள் மீன்களாக இருந்து ரசிக்க வேண்டும். கடலின் அனுபவத்தை அவர்கள் நதிகளாக நடந்து அடைய வேண்டும்.

குழந்தைகளின் உலகத்தை வெறும் பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல் உளவியல்ரீதியாக அணுகும் பத்திரிகைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் நம்மிடம் சொல்லிக¢கொள்ளும்படி இல்லை.

மண்ணோடும் மக்களோடும் இயற்கையோடும் கலந்து வாழ நினைக்கிற ஒரு குழந்தை, அதற்குத் தடையாக இருக்கிற தன் பெற்றோர் மீது வழக்குத் தொடுக்கிறது. அவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் ‘ஞாயிற்றுக் கிழமை’த் தம்பதிகள். குழந்தை வெற்றிபெறும் கதையை, ‘வண்ணத்துப்பூச்சி’ என்ற படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருந்தார் ராசி.அழகப்பன். பதினைந்து, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ‘குழந்தைகள் படம்’ என்று தணிக்கைச் சான்றிதழ் பெற்ற படம். நடிகை ரேவதி, இந்தப் படத்தின் கருத்துக்காக பணம் பெற்றுக் கொள்ளாமல் நீதிபதியாக நடித்துக் கொடுத்தார்.

‘‘இன்று பல உலக நாடுகள் குழந்தை களுக்கான திரைப்படங்களை முன்னிலைப் படுத்தி வளர்க்கின்றன. இந்தியாவில் ‘குழந்தைகள் திரைப்படக் கழகம்’ பெயருக்குத்தான் செயல்படுகிறது. தமிழகத்தில் குழந்தைகள் திரைப்படத்திற்கான விருதுகூட அமைக்கப்படவில்லை. குழந்தைகள் பார்ப்பதற்கான தளங்களையும் சரிவர அமைக்க யாரும் முன்வராதது ஆச்சரியமாக இருக்கிறது’’ என்கிறார் அழகப்பன்.

இந்த இடத்தில் ரஷ்யக் கவிஞன் ரசூல் கம்சதோவின் கவிதையைத்தான் நான் கவனப்படுத்த விரும்புகிறேன்.

நிகழ்காலத்தை நீங்கள்
துப்பாக்கியால் சுட்டால்
வருங்காலம் உங்களை
பீரங்கியால் சுடும்!
தமிழா! தமிழா!

‘‘இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து இந்தியாவிடம் இருந்து எந்த நிர்ப்பந்தமும் வரவில்லை. வழக்கமான இருதரப்பு விவகாரங்கள் பற்றி மட்டுமே இந்தியத் தூதர்கள் என்னுடன் விவாதித்தார்கள்’’ என்கிறார் ராஜபக்சே.

‘‘இலங்கைப் பிரச்னையின் தன்மையைத் தமிழக முதல்வரிடம் எடுத்துச் சொன்னேன்; அவர் புரிந்துகொண்டார்’’ என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

‘‘இலங்கைத் தமிழர்கள் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசுவோம்’’ என்கிறார் சுஷ்மா சுவராஜ்.

இந்தியா & இலங்கை இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில், இரு நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் மூன்று நாட்கள் நடக்கிறது.

இவை செய்திகள் அல்ல; எனக்கு சுடோகு விளையாடுவது போல இருக்கிறது. எப்படிக் கூட்டினாலும் ஒரே கூட்டு எண் வருவது மாதிரி, எல்லா செய்திகளும் ஒரே செய்தியாகவே தெரிகிறது.

இலங்கைப் படையின் அத்துமீறலுக்குப் பயந்து ராமேஸ்வரத்தில் பல மீனவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களாகவும், வேறு தொழிலுக்கும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். மிச்சமிருக்கிற ஈழத் தமிழர்கள் சிங்களவர்களாக மாறி விட்டால் & அல்லது மாற்றிவிட்டால் & பேச்சுவார்த்தை சுலபமாக முடிந்துவிடும். ஈழத்தில் பேசுவதற்குக்கூட தமிழ் இருக்காது.
கொக்கோக சேவல்

‘சேவலே! சேவலே! நான் அவனைச் சேர்ந்திருக்கும் பொழுதில் விடிந்துவிட்டதெனக் கூவுகிறாய். சிலம்பாலேயே உன் வாயை உடைத்திருப்பேன். எதற்காக விட்டுவிட்டேன் தெரியுமா? உன்னை நான் வளர்த்தேன் என்பதால்தான்!’

தனிப்பாடல் ஒன்றில்தான் தலைவியின் இந்தத் தாபக் கற்பனை. சிறகை முன்னும் பின்னும் சேவல் அசைப்பது, இரவைப் ‘போ’ என்று சொல்லி, பகலை ‘வா’ என்று அழைப்பது போல இருக்கிறதாம். சிறகுக்குள் சிக்கித் தவிக்கிறது காதல்.

போவென் றிரவைச் சிறகால் அடித்துப்
பொழுதை இங்கே
வாவென் றழைப்பதற்கோ வளர்த்தேன் இந்த
வண்ணச் சேவலை
தாவென் றவர்க்குத் தருமென் தலைவன்
தடஞ்சிலம்பில்
ஆவென்ற வாய்கிழிப்பேன்; பொறுத்தேன்
வளர்த்தேன் என்பதால்!

தலைவியை எழுப்பியது ‘கொக்கரக்கோ’ சேவலா அல்லது ‘கொக்கோக’ சேவலா என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும் போலிருக்கிறது.
(சலசலக்கும்)
பழநிபாரதி