சீனத்துக் காதல்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       

       சீனத்துக் காதல்!

காதலுக்கு எல்லைகள் ஏதுமில்லை. உலகமெங்கும் அதற்கு ஒரே மொழிதான். விழியின் மொழி. நேருக்கு நேராக சந்திக்கும் தருணத்தில், எந்த அறுவைசிகிச்சையும் இல்லாமல் இதயத்தை இடம் மாற்றிவிடுகிறது விழி. சீனாவைச் சேர்ந்த ஹு சென்திங் & செந்தில்ராஜா இதயம் இடம்மாறியதும் அப்படித்தான். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் நடராஜனின் மகன் செந்தில்ராஜா. சீனாவில் ஒரு நிறுவனத்தில் என்ஜினியர். ஹு சென்திங், அதே நிறுவனத்தில் கேஷியர். இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ள, பெற்றோரும் பச்சைக்கொடி காட்டி, திருமணத்தை இந்தியாவிலேயே நடத்த முடிவுசெய்தனர். ஆத்தூரில் கோலாகலமாக நடந்தது திருமணம். விரல் வரை சிவந்த மெஹந்தி, சரசரத்த பட்டுப்புடவை, கழுத்து நிறைந்த நகைகள் என நாணத்தோடு அக்மார்க் தமிழ்ப்பெண்ணாக மாறி நின்றார் ஹு சென்திங். விசா கிடைக்காததால், இந்தக்கோலத்தில் மகளைப் பார்க்க பெற்றோருக்குக் கொடுத்து வைக்கவில்லை. 

குப்பைத்தொட்டியா இந்தியா?

இந்தியாவை மேலைநாடுகள் குப்பைத்தொட்டியாகக் கருதுவது ஒன்றும் புதிதல்ல. எலெக்ட்ரானிக் குப்பைகளும், கதிரியக்கக் கழிவுகளும் வந்து குவிகின்றன. ஆனால், உபயோகித்த நாப்கின்களையும், ஆணுறைகளையும் கூட இந்தியாவில்
கொட்டுகிறார்கள் என்று கேள்விப்படும் போது கொதிக்காமல் இருக்க முடியவில்லை. அண்மையில், சிவகாசியில் உள்ள ஒரு பேப்பர் நிறுவனத்தின் முகவரிக்கு இங்கிலாந்து மற்றும் பிரான்சிலிருந்து 10 கன்டெய்னர்கள் வந்தன. தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த அவற்றில் துர்நாற்றம் வீசவே, வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனையிட்டனர். பயன்படுத்திய ஆணுறைகள், நாப்கின்கள், டயபர்கள், மருத்துவக் கழிவுகள் பெட்டி பெட்டியாக நிரம்பியிருந்தன. கடந்த ஆண்டு ஜூலையில் ஸ்பெயின், சவுதி அரேபியா நாடுகளில் இருந்து இதேபோல வந்த ஆபத்தான கழிவுகளை அதிகாரிகள் கண்டறிந்து திருப்பி அனுப்பினர்.

வித்தியாச எதிர்ப்பு

விலைவாசி உயர்வால் தடுமாறித் தவித்த மக்களை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதைக் கண்டித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. சாலையில் அடுப்பு வைத்து சமைப்பது, சிலிண்டரை பாடையில் வைத்து சுமப்பது என விதம்விதமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் மக்கள். ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வல்லரசு வித்தியாசமான முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்க, மதுரை ஒத்தக்கடையிலிருந்து, ஐகோர்ட் கிளை வரை மாட்டு
வண்டியிலேயே வந்தார்.

இரவுப் பூ!

‘அழகானவை எல்லாம் குறைந்த ஆயுள் கொண்டவை’ என்பார்கள். நிஷாகந்தி பூவுக்கும் அது பொருந்தும். வெள்ளை நிறத்தில் கொள்ளை அழகாகப் பூக்கும் இதன் ஆயுள் வெறும் மூன்று மணி நேரம்தான். அதுவும் இரவு ஒன்பதரை மணிக்கு மலர்ந்து பனிரெண்டரை மணிக்கு வாடிவிடும். அந்த மூன்று மணி நேரத்துக்குள் தெருவையே சுகந்தமாக்கிவிடும். அவ்வளவு வாசனை. கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் ஒரு வீட்டில் பூத்துக்குலுங்கும் நிஷாகந்தி பூவைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

கலாம் மியூசியம்!

நேருவுக்குப் பிறகு இந்தியக் குழந்தைகள் பெரிதும் விரும்புவது அப்துல் கலாமை. பள்ளி, கல்லூரிகள் என்று நாள்தோறும் ஓய்வில்லாமல் சுழன்று கொண்டேயிருக்கும் கலாமின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கி ராமேஸ்வரத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘மிஷன் ஆஃப் கலாம்’ என்ற மியூசியம். கலாமின் பூர்வீக வீட்டில் அமைந்திருக்கும் இந்த மியூசியத்தில், கலாம் தொடர்பான அனைத்துப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன. வெளிநாட்டினர் வந்தால் விளக்க மளிக்க 2 மொழிபெயர்ப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மியூசியத்தை திறந்துவைத்த கலாம், ‘‘இப்போது எனக்குக் கிடைக்கும் பெருமை எல்லாம் எனது பள்ளி ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யரையே சாரும்...’’ என்று சொன்னபோது நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் நெகிழ்ந்துபோனார்கள்.