வாஞ்சிநாதன் 100



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       

              வஞ்சமும், பகைமையும், பழிதீர்க்கும் வெறியும் எத்தனை தலைமுறைகளுக்கு மனசில் புதைந்திருக்கும்? தன் தாத்தாவைக் கொன்றவரின் குடும்பத்துக்கு, தாத்தா இறந்த நூறாவது நாளில் ஆறுதல் கடிதம் அனுப்பியிருக்கிறார் ஒரு பேரன். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது தென்னிந்தியாவில் நிகழ்ந்த ஒரே கொலைச் சம்பவம் என சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்ட ஆஷ் கொலை வழக்கு உங்களுக்கு ஞாபகம் இருக்கும். மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனின் குடும்பத்துக்குத்தான் ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ் கடிதம் அனுப்பியிருக்கிறார். வரலாற்று ஆய்வாளரான ஆ.இரா.வேங்கடாசலபதி முயற்சியால் இது சாத்தியமாகி இருக்கிறது.

அந்த நாளை அவ்வளவு சுலபத்தில் யாராலும் மறக்க முடியாது. அது, 1911&ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி. அப்போது திருநெல்வேலி கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷ் துரை, மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது அந்தத் தேதியில்தான். அவரை சுட்டுக் கொன்ற கையோடு தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்தார் வாஞ்சிநாதன். இந்தக் கொலை வழக்கில் வாஞ்சிநாதனோடு சேர்த்து 16 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் சிலருடைய நேரடி வாரிசுகள் இப்போதும் நெல்லை மற்றும் செங்கோட்டையில் வசிக்கிறார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற அந்த சம்பவத்தை இன்றும் மறக்காமல் அசைபோடுகிறார் 88 வயதான கோதையம்மாள். ''வாஞ்சிநாதன் உட்பட பல இளைஞர்கள் சேர்ந்து 'பாரத மாதா சங்க’த்தை நடத்தி வந்தாங்க. அதுல எங்கப்பா அழகப்ப பிள்ளையும் இருந்தாரு. ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு சென்னையில முடிசூட்டு விழா நடக்கறதா இருந்தது.

வெள்ளைக் காரங்க ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்னு இருந்தாங்க. அந்தக் கொண்டாட்டத்தை முறியடிக்க ஆஷ் துரை உட்பட 16 கலெக்டர்களை கொல்லணும்னு சங்க உறுப்பினர்கள் முடிவு செஞ்சாங்க. இதுக்காக குற்றாலம் ஐந்தருவி மலைப் பகுதியில துப்பாக்கி சுடற பயிற்சியைக் கூட எடுத்துக்கிட்டாங்க. யார் யார் கலெக்டர்களை சுட்டுக் கொல்றதுன்னு விவாதம் வந்தப்போ, எல்லா பேரையும் எழுதி சீட்டுப் போட்டாங்க. அதுல ஆஷ் துரையைக் கொல்லும் பொறுப்பு வாஞ்சிநாதனுக்கு வந்துச்சு. அந்த நேரம் பார்த்து ஆஷ் துரை திருநெல்வேலிலேர்ந்து கொடைக்கானலுக்கு புறப்பட்டாரு. அதே ரயில்ல வாஞ்சிநாதனும் போனாரு. மணியாச்சி ரயில் நிலையத்துல ரயில் நின்னது. இதுதான் சரியான சந்தர்ப்பம்னு கண்ணிமைக்கற  நேரத்துல ஆஷ் துரை பயணம் செஞ்ச பெட்டிக்குள்ள வாஞ்சிநாதன் நுழைஞ்சு சுட்டுக் கொன்னாரு. ஆங்கிலேயர்கள்கிட்ட பிடிபடக்கூடாதுனு அதே ரயில் நிலையத்துல தற்கொலையும் செஞ்சுக்கிட்டாரு.

இந்தக் கொலை வழக்குல 12வது எதிரியா எங்கப்பா அழகப்ப பிள்ளைய சேர்த்தாங்க. சென்னைல 4 வருஷங்கள் வழக்கு விசாரணை நடந்துச்சு. இதுல 2 பேருக்கு தண்டனை கிடைச்சது. எங்கப்பாவை அடையாளம் காட்டும்போது போலீஸ்காரங்க குழம்பிட்டாங்க. அதனால, அவரை விடுதலை செஞ்சிட்டாங்க’’ என்று சொல்லும் கோதையம்மாள், தன் தந்தையுடன் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர். 3 முறை சிறை சென்றவர்.

ஆஷ் கொலை வழக்கில் 11வது எதிரியாக சேர்க்கப்பட்டவர் அருணாசலம் பிள்ளை. அவரது மகன் சொக்கலிங்கமும் செங்கோட்டையில்தான் வசிக்கிறார். ‘‘சம்பவம் நடந்து நூறு வருஷம் ஆயிடுச்சு. 1942ல நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்துல கலந்துக்கிட்டு நானும் சிறைக்குப் போயிருக்கேன். எனக்கு மாநில அரசோட பென்ஷன் வருது. மத்திய அரசோட பென்ஷனும் கேட்டு மனுப் போட்டு 20 ஆண்டுகள் ஆயிடுச்சு. ஆனா, இதுவரைக்கும் எந்த பதிலும் வரல’’ என்கிறார் 86 வயதாகும் சொக்கலிங்கம் பிள்ளை.

வாஞ்சிநாதனுக்கு நேரடி வாரிசுகள் யாருமில்லை. வாஞ்சி நாதன் தம்பி கோபாலகிருஷ்ணய்யர் மகன், 69 வயதான ஹரிகரன் நெல்லையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வாஞ்சிநாதன் வாரிசான இவர் என்ன சொல்கிறார்?

‘‘பெரியப்பா வாஞ்சிநாதன் அரசாங்க வேலையில இருந்தவரு. இந்தப் பணியை உதறித் தள்ளிவிட்டுத்தான் சுதந்திரப் போராட்டத்துல குதிச்சாரு. ஆஷ் கொலை வழக்குல சங்கர கிருஷ்ணன் அய்யர் உள்பட 2 பேருக்கு தண்டனை கிடைச்சது. இவுங்களோட வாரிசுகள் பற்றி தகவல்கள் எதுவுமே கிடைக்கல. தமிழக அரசு எங்களுக்கு வீடு கொடுத்திருக்காங்க. 1974ல் முதல்வராக கலைஞர் இருந்தபோது என் தங்கை திருமணத்திற்கு 5 ஆயிரம் நிதி கொடுத்தது இன்னும் நினைவுல இருக்கு. இதேபோல எங்கப்பாவுக்கு 500 ரூபாய் பென்ஷன் வழங்க முதல்வரா எம்.ஜி.ஆர். இருந்தபோது உத்தரவு போட்டாரு. அயர்லாந்தில் உள்ள ஆஷ் பேரன் ராபர்ட் ஆஷ் எழுதிய கடிதத்தைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறது எங்க குடும்பம்’’ என்கிறார் ஏக்கத்தோடு.
 
திருச்சி கார்த்தி
படங்கள்: வி.முருகன்