அதிகரிக்கும் செயின்பறிப்பு... அலறும் பெண்கள்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       

              கழுத்தில் ஒரு செயினோடு பெண்கள் தனியாக மாலையிலும் இரவிலும் நடமாடவே முடியாத அளவுக்கு அபாயகரமான நகராகி இருக்கிறது சென்னை. கடந்த நான்கு மாதங்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தி.நகர் பகுதியில் மட்டும் 47 பெண்கள் செயின்களை இழந்திருக்கிறார்கள். மயிலாப்பூரில் 20, அடையாறில் 45 சம்பவங்கள். வயதுமுதிர்ந்த பெண்களைக் குறிவைத்து நடக்கும் இந்த சம்பவங்கள் காவல்துறைக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளன.

சற்று இருள்படர்ந்த, ஆள்நடமாட்டம் இல்லாத தெருக்களில் தனியாக செல்லும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களையே செயின்பறிப்புத் திருடர்கள் குறிவைக்கிறார்கள். அடையாளம் தெரியாமல் இருக்க ஹெல்மெட். பெரும்பாலும் திருட்டு பைக். அல்லது நம்பர் பிளேட்டை மாற்றிவிடுகிறார்கள். நடந்துசெல்லும் பெண்கள்மீது மோதுவது போல வந்து, எதிர்பாராத தருணத்தில் செயினை பறித்துக் கொண்டு பறந்துவிடுவார்கள். தி.நகர், மயிலாப்பூர் மற்றும் புறநகரங்களில் இப்படி பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

வீட்டுக்கு வெளியே நிற்கும் பெண்களை நோட்டம்விட்டு, ஒரு துண்டுச்சீட்டைக் கொடுத்து அட்ரஸ் கேட்டு, அசந்த சமயத்தில் செயினை பறித்துக் கொண்டு 'எஸ்’ஸாகி விடுவது இன்னொரு ரகம். அண்ணா நகர், திருமங்கலம், அயனாவரம், ஐ.சி.எப், மதுரவாயல் பகுதிகளில் இப்படி செயினை இழந்த பெண்கள் ஏராளம்.

குறிப்பிட்ட தெருவை அடிக்கடி நோட்டமிட்டு, ‘பசையுள்ள’ பெண்ணைக் குறிவைப்பார்கள். ஒருவன் பைக்கை ஸ்டார்ட் செய்து தயாராக நிற்க, அந்தப் பெண்ணின் எதிரில் மொபைல் போனில் பேசுவது போலவந்து திடீரென செயினை பறித்துக் கொண்டு பைக்கில் ஏறி பறந்துவிடும் கும்பலும் சென்னையில் நடமாடுகிறது. .

பத்து ரூபாய் நோட்டை கீழேபோட்டு, ‘உங்கள் பணம் கீழே விழுந்துவிட்டது’ என்று சொல்லி கவனத்தை திசைதிருப்பி செயின் பறிப்பது இன்னொரு ரகம்.

கத்தியைக் காட்டி, நகைகளைக் கழற்றித் தருமாறு மிரட்டும் ‘கொடூர’ திருடர்களும் உண்டு. திருமங்கலம், ராயபுரம் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கணவனோடு செல்லும் பெண்களைக்கூட விடுவதில்லை.

சுமங்கலி பூஜை நடப்பதாகவும், அதில் கலந்து கொண்டால் புடவை, பணம் தருவதாகவும் சொல்லி வயதான பெண்களை அழைத்துச்சென்று வழியில் நகைகளை பறித்துக்கொண்டு விரட்டியதும் நடந்துள்ளது.

நாளொரு புது டெக்னிக்கை கண்டுபிடித்து கைவரிசை காட்டும் திருடர்களைப் பிடிக்க பல தனிப்படைகளை அமைத்திருக்கிறது காவல்துறை. ‘செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிக்க தங்கத்தின் விலை உயர்வே காரணம்’ என்கிறார்கள் விபரமறிந்தோர். மேலும், ‘அடையாளங்களை மறைத்துக் கொள்வதால் இதில் ரிஸ்க் குறைவு. ஒரு முயற்சியிலேயே தேவையானது கிடைத்துவிடும் என்பதால் புதிது, புதிதாக பலர் இதில் இறங்குகிறார்கள்’ என்கிறது ஒரு தகவல். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் சிலருக்கு இச்சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது. அண்மையில் அசோக் நகர் பகுதியில் பிடிபட்ட இரு திருடர்களில் ஒருவர் தனியார் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர். மற்றொருவர் கலைக்கல்லூரியில் படிப்பவர். கொடுங்கையூர் பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு பெண் திருடியும் செயின்பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார்.

இதுபற்றி சென்னை கமிஷனர் திரிபாதியிடம் கேட்டபோது, ‘‘கடந்த ஒரு மாதத்தில் நடந்த 72 செயின்பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 49 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடம் இருந்து செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 16 முதல் 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே இந்ததிருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடிவருகிறோம். தேவைப்பட்டால், குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவோம்’’ என்றார்.

தாலியை புனிதமாகக் கருதுபவர்கள் நம் பெண்கள். பெரும்பாலும் செயினில் கோர்த்தே தாலி அணிவது வழக்கம். செயினோடு சேர்த்து தாலியும் பறிபோவதால் குடும்பமே மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக நேர்கிறது. ‘செயின்பறிப்பு திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்’ என்றார் முதல்வர். முதல்வரின் வார்த்தைகளை உண்மையாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் காவல்துறைக்குத்தான் இருக்கிறது.

எச்சரிக்கை

 மாலை அல்லது இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.

 தனியாக செல்லும் பெண்கள்தான் திருடர்களின் இலக்கு. வெளியில் செல்லும்போது துணையோடு செல்லுங்கள்.

 ‘உங்கள் பணம் கீழே விழுந்து கிடக்கிறது’ என்று சொன்னால் சபலப்பட்டு திரும்பாதீர்கள். அந்த ஒரு நொடியில் உங்கள் செயின் பறிபோகலாம். துண்டு சீட்டை நீட்டி அட்ரஸ் கேட்டால், ‘தெரியாது’ என்று ஒதுங்கிவிடுங்கள். நின்று பதில் சொல்லாதீர்கள்.

 ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் யாராவது மோதுவது போல நெருங்கிவந்தால் உஷாராகி விடுங்கள்.

 பைக் நம்பர், நிறம், திருடனின் அடையாளங்கள், அணிந்திருந்த உடை ஆகியவற்றை கவனியுங்கள். பைக் நம்பர் போலியாக இருந்தாலும், அதை மாற்ற அரை மணி நேரமாவது ஆகலாம். உடனே சொன்னால், அதற்குள் திருடனைப் பிடிக்கமுடியும்.

 மொபைலில் அருகில் உள்ள காவல்நிலையத்தின் எண்ணை வைத்திருங்கள். அவசரத்துக்கு உதவும்.

 வீட்டு வாசலில் யாராவது தண்ணீர் கேட்பது போல பேச்சு கொடுத்தால் எச்சரிக்கை அவசியம்.
 
வெ.நீலகண்டன்