படத்தை ரிலீஸ் செய்ய உண்ணாவிரதம்! நியாயம் கேட்கும் இயக்குநர்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       

        லோக்பால்’ தொடர்பான உண்ணாவிரதங்களால் அன்னா ஹசாரேவும், பாபா ராம்தேவும் தேசிய அரசியலில் புயலைக் கிளப்பிக்கொண்டிருக்க, இங்கே தமிழ்த் திரையுலகில் ஒரு இயக்குநரின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அந்த இயக்குநர் ஸெல்வன்.

ஷங்கரிடம் சினிமாவைக் கற்றவர் என்கிற அடையாளத்துடன் வந்தவர் ஸெல்வன். ‘சூரி’ படத்தின் மூலம் தன்னைத் தரமான இயக்குநராகப் பதிவு செய்துகொண்டார். அடுத்து ‘கவிதாலயா’வுக்காக அவர் இயக்க ஒப்புக்கொண்ட ‘கிருஷ்ணலீலை’தான் அவரை உண்ணாவிரதப் போராட்டம் வரையில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. சென்னை போலீஸ் கமிஷனரிடம் உண்ணாவிரதத்துக்கான அனுமதியைக் கேட்டுக் காத்திருக்கும் ஸெல்வன் தன் ஆதங்கங்களைக் கொட்டினார். திருமணமாகி இரண்டு மாதமேயான நிலையில், ஸெல்வனின் முடிவில் மிரண்டு போயிருக்கிறார் அவரது புது மனைவி.

‘‘கே.பாலசந்தர் சார்தான் எனக்கு மானசீக குரு. அவரோட கவிதாலயா நிறுவனத்தில எனக்குப் படம் பண்ற வாய்ப்பைத் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி கொடுத்ததும் அத்தனை சந்தோஷப்பட்டேன். 2007ம் வருஷம் டிசம்பர் 12ம் தேதி & ரஜினி பிறந்தநாள் அன்னைக்கு நான் ஒப்பந்தமானேன். 2008 மே மாதத்தில ஜீவன், மேக்னா ராஜை வச்சு ஷூட்டிங் ஆரம்பிச்சு 2009 ஜனவரில நிறைவடைஞ்சது. மார்ச்ல போஸ்ட் புரொடக்ஷன் ஆரம்பிச்சு வேலைகள் நடந்துக்கிட்டிருந்தப்ப, டப்பிங்கின்போது திடீர்னு வேலைகளை நிறுத்தச் சொன்னாங்க. அன்னைக்கு நின்ன வேலை அப்படியே நிக்குது.

ஓடிப்போன மூணு வருஷங்கள்ல செலக்டிவ்வா, நேர்த்தியா படம் பண்ற டைரக்டர் பாலாவோட படம் ரெண்டு வந்துருச்சு. பெரிய ஹீரோவான விஜய் படமும் நாலு ரிலீசாகிடுச்சு. என் படம் எப்ப ரிலீசாகும்னு யாருக்குமே தெரியலை. கவிதாலயாவுல கேட்டா, ‘அந்தப் படத்தை ஐங்கரனுக்கு ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில வித்துட்டதால, அவங்கதான் அதைச் சொல்லணும்’னு சொன்னாங்க. அங்கே போய்க் கேட்டா எந்த பதிலும் இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு, ‘படத்தை ரிலீஸ் செய்யற தேதியை நீங்க சொல்லலைன்னா நான் உங்க ஆபீஸ் முன்னால சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்’னு கடந்த 21ம் தேதி ஒரு கடிதம் கொடுத்தேன். அதோட நகலை ஐங்கரனுக்கும் அனுப்பினேன்.

இதுக்கு நேரடியா எந்த பதிலையும் சொல்லாம இயக்குநர் சங்கத்துக்கிட்ட இந்தப் பிரச்னையை அவங்க கொண்டு போயிட்டாங்க. புதிய நிர்வாகம் ஜூலை 2&ம் தேதி பொறுப்பேற்கிறதால, ‘பொறுமையா இருங்க. பிரச்னையைச் சரி பண்ணிக்கலாம்...’னு சொன்னாங்க. அதனால என்னோட உண்ணாவிரதத்தை ஜூலை 5&ம் தேதிக்கு மாத்தி வச்சேன். இப்ப இயக்குநர்கள் சங்க புது நிர்வாகிகள் 6&ம் தேதி பதவியேற்கப் போறதா சொல்லியிருக்கிறதால, என் உண்ணாவிரதத்தை 10&ம் தேதிக்கு மாத்தி வச்சிருக்கேன்.

இது என்னைப் பிரபலப்படுத்திக்கவோ, சம்பந்தப்பட்டவங்க மனசை காயப்படுத்தவோ எடுத்த முடிவு இல்லை. என் கண்ணீரைப் பகிர்ந்துக்க நான் எடுத்த முடிவு. இன்னைக்கும் கே.பி. சார் உள்பட எல்லார் மேலயும் எனக்கு நல்ல மரியாதை இருக்கு. ஆனா மூணு வருஷமா என் படம் ரிலீசாகாததால, நான் படற வேதனைகளுக்கு அளவே இல்லை. ‘இது ரிலீசாகட்டும். பிறகு வாங்க...’ன்னு நான் வாய்ப்பு தேடிப்போற கம்பெனிகள்ல திருப்பி அனுப்பிடறாங்க. ஒரு படம் ரிலீசாகலைன்னா அடுத்த பட வாய்ப்பு இல்லைங்கிறதுதான் இங்கே நடைமுறையா இருக்கு. வேலையில்லாம, சம்பளமில்லாம மூணு வருஷம் ஓட்டறது எத்தனைக் கஷ்டம்னு நான் சொல்லிப் புரிய வேண்டியதில்லை. வயதான என் பெற்றோரையும் நான்தான் கவனிச்சுக்கிறேன். ஒரு தங்கை கல்யாணத்துக்குக் காத்திருக்கா...

‘கிருஷ்ணலீலை’ ஒரு சமூகச் செய்தி சொல்ற படம். அதுவும் அந்தப் பிரச்னை இந்தக் காலகட்டத்தில முக்கிய அங்கம் வகிக்குது. படம் இப்போ ரிலீஸ் ஆகறதுதான் பொருத்தமா இருக்கும். அதெல்லாம் ஆறிப்போன பின்னால படம் வந்தா, சொல்ல வர்ற செய்தியோட வீரியம் குறைஞ்சு, அது வெற்றியைக்கூட பாதிக்கலாம். ‘நீ உண்ணாவிரதம் இருக்கிறதால படம் ரிலீசாகிடுமா..?’ன்னு கேட்கிறாங்க. ஆனா, ‘என் படம் எப்போ ரிலீஸ் ஆகும்..?’கிற கேள்விக்காவது பதில் வருமில்லையா..? அதுக்கான அறப்போராட்டம்தான் இது.

இதைத் தவிர்க்கச் சொல்லி கேட்கிறவங்களுக்கு நான் வைக்கிற கோரிக்கை இதுதான்... என் வாழ்க்கைக்கு ஒளி கொடுங்க... இல்லைன்னா என் உண்ணாவிரதத்துக்கு வழி விடுங்க..!’’
வேணுஜி