திருமணம் டூ தற்கொலை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       

                  சாஃப்ட்வேர் எஞ்சினியரை திருமணம் செய்துகொண்டு, மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த ஸ்வீட்டி என்ற பெண்ணின் சோக டைரியின் தொடர்ச்சி இது...

மார்ச் 2: ஏற்கனவே சத்தியம் செய்திருந்ததுபோலவே நேற்றிரவு அவரது உதட்டில் முத்தம் கொடுத்தேன். மை காட்! அந்த முத்தத்தால் அவருக்கு நான் சொந்தமானேன்; எனக்கு அவர். முதல்முறையாக இருவரும் உடலால் இணைந்தோம். இதுவரை அனுபவிக்காத புது உணர்வுகள்!

நாளை என் வீட்டிலிருந்து நிரந்தரமாக நான் பிரிய வேண்டிய நாள். என்னவர் வீட்டுக்கு, அவர் மனைவியாகச் செல்லப்போகிறேன். கொஞ்சம் கவலையும் கொஞ்சம் எதிர்பார்ப்பும் கலந்த உணர்வுகளோடு வலம் வந்தேன்.

மார்ச் 3: இன்று அவருக்குப் பிறந்த நாள். முதலில் வாழ்த்து சொன்னது நான்தான். இருவருமாகச் சேர்ந்து கொண்டாடினோம்.

மார்ச் 4: இப்போதெல்லாம் காலையில் ‘குட்மார்னிங்’ சொல்வது வெறும் மொபைல் போன் மெஸேஜ்களில் இல்லை. அன்பான முத்தங்களைப் பகிர்ந்தபடி சொல்லிக்கொள்கிறோம். எல்லாமே சுகம். வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணங்களை அனுபவிக்கிறேன். மாமனாரும் மாமியாரும் ரொம்பவே அன்பு காட்டுகிறார்கள்.

மார்ச் 5: இன்று ரிசப்ஷன். நன்றாக நடந்தது.

மார்ச் 8: என் பெற்றோர் மீது மாமனாரும் மாமியாரும் கோபமான வார்த்தைகளைக் கொட்டினார்கள். கார் வாங்குவதற்கும், ஃபர்னீச்சர்கள் வாங்குவதற்கும் பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்களாம். அப்பா என்ன செய்வார்? அவரிடம் ஏது பணம்? கையில் பணம் இல்லாமல் கல்யாண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டாம் என்று பலமுறை சொன்னேன். என் பேச்சை யார் கேட்டார்கள்?

மார்ச் 9: மாமியார் என்னை கடைக்குக் கூட்டிப்போய் டிரஸ் வாங்கிக் கொடுத்தார். கல்யாணத்துக்கு எனக்கு எடுத்த துணிகள் எதுவுமே நன்றாக இல்லையாம். மாமியார் பணத்தில் டிரஸ் எடுத்துக்கொள்வதில் அவமானமாக இருந்தது. நல்ல துணி எடுத்துத் தராத அம்மா மீது கோபம் வந்தது. நாளை நானும் அவரும் பெங்களூரு கிளம்புகிறோம். சில நாட்களில் வடகிழக்கு மாநிலங்களில் ஹனிமூன்.

மார்ச் 11: நேற்று பெங்களூரு  வந்து புதுவீட்டைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. அவரது நண்பர் கல்யாணத்துக்குப் போய் வந்தோம். நான் அழகாக இருப்பதாக அவரது நண்பர்கள் சொன்னார்கள்; அவரும் பாராட்டினார். எல்லாம் நன்றாகப் போவதுபோலத் தெரிந்தாலும், என் அடிமனசில் ஒரு வலி இருக்கிறது. அவருக்கும் அவரது கேர்ள்ஃபிரண்ட் ரம்யாவுக்குமான உறவு ஆழமாகவும் இறுக்கமாகவும் வளர்ந்திருப்பது புரிகிறது. என்ன செய்வது என்று புரியவில்லை; என் உணர்வுகளை யாருடன் பகிர்ந்துகொள்வது என்றும் தெரியவில்லை. முதல்நாள் இந்த வீட்டுக்குள் நுழைந்ததுமே, ‘வீட்டில் இருக்கும் கட்டிலில் நீ படுக்கக் கூடாது’ என்று அவர் என்னிடம் கண்டிப்பாகச் சொன்னார். அது ரம்யாவுக்காக அவர் வாங்கிய கட்டிலாம்! அவரது கேர்ள்ஃபிரண்ட் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது; என்னைத் தவிர! திருமணம் பேசிய நாளிலிருந்து நான் அவர்மீது பைத்தியம் போல காதல் கொண்டதால், எனக்கு அது தெரியாமல் போய்விட்டது. எனக்கு ஒரு திருமணம் செய்து தங்கள் கடமையை முடித்துவிட வேண்டும் என்றுதான் என் பெற்றோர் நினைத்தார்களே தவிர, எப்படிப்பட்டவருக்கு தங்கள் பெண்ணைக் கொடுக்கிறோம் என்று விசாரிக்கவில்லை. நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்தான்; ஆனால் சந்தோஷமாக இல்லை. என் உணர்வுகளை, என் நிலைமையை, என் மௌனத்தைப் புரிந்துகொள்ள இங்கு யாருமே இல்லை. என் கனவுகள் கரைந்துவிட்டன. மற்றவர்களுக்காக உதட்டில் ஒரு செயற்கைப் புன்னகையைச் சுமந்தபடி வலம் வருகிறேன். எனக்குள் என்ன இருக்கிறது என்பதை யாருமே அறியமாட்டார்கள்.

மார்ச் 12: அவரும் நானும் போய் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கினோம். புது கட்டிலும் ஆர்டர் செய்தோம். ஒரு வாரத்தில் அது வரும். அதுவரை நான் தரையில் படுக்க வேண்டும்; வீட்டில் இருக்கும் கட்டில்தான் ரம்யாவுக்காக வாங்கியதாயிற்றே! நாங்கள் ஹனிமூன் போகவில்லை; அதைப்பற்றி யோசிக்கக்கூட இல்லை. நாங்கள் எப்போதுமே ஹனிமூன் போகமுடியாது என்றே நினைக்கிறேன். அவருக்கு என்னோடு வர விருப்பமில்லை போல் தெரிகிறது.

மார்ச் 18: அவர் என்னை வெளியில் கூட்டிச் சென்றார். என்னை சமாதானப்படுத்தவே இதைச் செய்கிறார் என்பது புரிகிறது. அவர் மனசில் ரம்யாதான் இருக்கிறாள். இப்போது மட்டுமில்லை; ஆரம்பத்திலிருந்தே! அதை மறைத்தபடி அவர் என்னை நெருங்க முயற்சிக்கும்போதெல்லாம், நாங்கள் இன்னும் விலகிப் போகிறோம். என் கைகளுக்குப் பிடிபடாமல் அவர் விலகி தூரச் செல்வதை நான் இயலாமையோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரைத் திருமணம் செய்துகொண்டது, நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு. இந்தத் திருமணத்தால் இருவருமே சந்தோஷமாக இல்லை.

மார்ச் 20: இன்று ஹோலி. அவரும் நானும் காரில் தும்கூர் வரை சென்றோம். திரு மணத்துக்குப் பிறகு எனது முதல் ஹோலி, மிக மோசமான நாளாக அமைந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் காரணம் அப்பா. எப்படிப்பட்ட ஆளுக்கு தன் பெண்ணைக் கொடுக்கிறோம் என்று விசாரிக்கக் கூடவா மாட்டார்? பெயரளவில் எனக்கு கணவர் இருக்கிறார். அவரது உடலும் உள்ளமும் வேறொரு பெண்ணுக்குச் சொந்தம். அவரது வாழ்விலும் இதயத்திலும் எனக்கு இடமில்லை. ‘என் பையனை நீ சந்தோஷமாக வைத்திருக்காவிட்டால், அவன் உன்னை விட்டுவிட்டு எங்காவது போய்விடுவான்’ என்று மாமியார் என்னை போனில் எச்சரிக்கிறார். திரு மணம் முடிந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் இப்படிப் பேச அவருக்கு எப்படி மனம் வருகிறது? துயரமும் தனிமையும் மட்டுமே இந்த வீட்டில் எனக்குச் சொந்தம். கண்ணீரைத் துடைத்தபடி ஹோலி விருந்து செய்து கொடுத்தேன்.

மார்ச் 21: இன்று மிக மோசமான நாள். அவர் என் மாமியாரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. மாமியார் என்னை போனில் கூப்பிட்டு, ‘நீயெல்லாம் ஒரு பொம்பளையா’ என்று கேட்டார். நான், ‘ஆமாம்’ என்றேன். நான் அவரது மகனிடம் நெருங்குவது இல்லையாம்; எப்போதும் தனியாக இருக்கிறேனாம். ஏன் தன் மகன் அப்படி நினைக்கிறான் என்பது அவருக்குப் புரிய வில்லையா?

கணவரும் நானும் ஒரே அறையில் இருக்கிறோம். ஆனால் அவரது மனசும் ஆன்மாவும் எங்கோ இருக்கும் வேறொரு பெண்ணிடம் இருக்கிறது. என் குரல் அவருக்குக் கேட்பதில்லை; என் முகத்தை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. என்மீது அவர் அன்பு காட்டுவார் என்று எல்லா பிரயத்தனங்களும் செய்து பார்த்தேன்; என் இருப்பை உணர்த்த முயற்சித்தேன். எல்லாவற்றிலும் எனக்குத் தோல்விதான். அவருக்கு கேர்ள்ஃபிரண்ட் இருப்பது தெரிந்ததுமே, நான் இந்தத் திருமணத்தை தவிர்த்திருக்க வேண்டும். என் வாழ்வும் பறிபோய்விட்டது; அவரும் சந்தோஷமாக இல்லை. இன்னும் எத்தனை நாளைக்கு இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியும் என்று புரியவில்லை...
(அடுத்த இதழில்...)