உதயன் சினிமா விமர்சனம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       

               வன்முறை வாழ்க்கை வேண்டாம் என்று ஒதுங்கிப்போகும் இளைஞனை வன்மம் எப்படி மீண்டும் தன்பக்கம் இழுக்கிறது, அதிலிருந்து எப்படி அவன் மீண்டான் என்று சொல்லும் இலகுவான கதையை வைத்துக்கொண்டு பாமரனும் ரசிக்கும் ஒரு கமர்ஷியல் படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சாப்ளின்.

ஒரு பெண்ணைப் பார்த்து, அவளை நாள்கணக்கில் தொடர்ந்து சென்று, கண்களால் பேசி, ‘‘ஐ லவ் யூ...’’ சொல்வதெல்லாம் ஓல்டு ஸ்டைல் என்கிற ரீதியில் முதல் பார்வையில் ஹீரோயின் ப்ரணீதாவைப் பார்த்த மாத்திரத்திலேயே, ‘‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..?’’ என்று போட்டு உடைக்கும் ஹீரோ அருள்நிதி சபாஷ் வாங்குகிறார். குழந்தைத்தனமான சிரிப்பும், கள்ளமில்லாத பார்வையுமாக வரும் அவர், ப்ரணீதா எதிர்பார்க்காத தருணங்களில் எதிர்பார்த்திராத காரியங்களைச் செய்வது இளமைக் குறும்பு.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஇரண்டாவது படத்திலேயே ‘இரண்டு’ மடங்கு நடிக்க வாய்ப்பு பெற்றிருக்கிறார் அருள்நிதி. ஒரு பக்கம் வங்கியில் உதவி மேனேஜராக மென்மையான கேரக்டரிலும், இன்னொரு பக்கம் எந்த ரவுடியையும் புரட்டி எடுக்கும் வல்லமை பெற்ற கோப இளைஞனாகவும் இரண்டு முகங்களில் கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் அவர். மென்மையாக வரும் நகரத்து இளைஞனைவிட, பீடா போட்டுக் குதப்பும் வன்முகத்தில் வீரியம் அதிகமாக இருக்கிறது. பானுவின் காதல் புரிந்து தன் காதலைச் சொல்லவரும் வேளையில், எதிரிகளால் அவர் பாதிக்கப்பட்டு விடக்கூடாதென்று உயிரைவிடும் நொடியிலும் காதலை மறுப்பது போல் நடிப்பது மனதில் பதிகிறது.

ஆந்திரத்திலிருந்து இறக்குமதியாகியிருக்கும் ப்ரணீதா தமிழக வெயிலுக்கு இதமான அறிமுகம். உடலை மறைக்கும் ஆடைகளோடு வரும்போது குடும்பக் குத்துவிளக்காகத் தோன்றுபவர், பாடல்களில் கிளாமர் ஆடைகள் அணிந்து லேசர் கதிராக ஜொலிக்கிறார். கிராமத்துக் கதாநாயகியாகும் பானுவுக்கு சின்ன வேடம்தான் என்றாலும் உதயனின் முரட்டு மிரட்டலுக்கு பயப்படாமல் அவரைக் காதலில் விழ வைக்கும் கேரக்டரில் பொருந்தியிருக்கிறார்.

குளோஸ் கட், அரிவாள் மீசையோடு வரும் ஆசிஷ் வித்யார்த்தி, பார்வையிலேயே பயங்கரத்தைக் காட்டி யிருக்கிறார். வன்முறையை விரும்பாத மகன் ஆபத்தில் சிக்கிக் கொண்டபோதும் பதறாமல், ‘‘என் மகன் அரிவாள் வீசற அழகை நான் பாக்கணும்...’’ என்று ஆர்ப்பரிக்கும் அழகில் அவர் ‘ஆபத்’ வித்யார்த்தி.

பார்வைக்கே பயமாக இருக்கிறார் வில்லன் சாய்ரவியும். உதயனைக் கொல்லச் சொல்லிவிட்டு போன் வரும்போது, ‘‘போனை எடு... எதாவது நல்ல செய்தியா இருக்கும்...’’ என்று மனைவியிடம் சொல்லும் கொடூர வில்லனாக மிரட்டியிருக்கும் அவருக்குக் குரலும் வரப்பிரசாதம். ஹீரோயினின் அப்பா, அம்மாவாக வரும் கிருஷ்ணமூர்த்தியும், ஸ்ரீரஞ்சனியும் தேவையைச் செய்திருக்கிறார்கள்.

ஒருபக்கம் தாதாக்களே நடுங்கும் பெரிய தாதாவான ஆசிஷ் வித்யார்த்தி, வில்லன் சாய்ரவி மற்றும் அருள்நிதியின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு தேடும்போதும், அவர்களைச் சந்திக்க நேரும்போது அவருக்கும், அவர்களுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவரும்போதும் ஏகப்பட்ட த்ரில் வைத்திருக்கிறார் இயக்குநர் சாப்ளின்.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு வழக்கம்போல் வண்ணக்கலவை. தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் இசையமைப்பாளர் மணிகாந்த் கத்ரியிடம் நம்பிக்கை வைக்க முடிகிறது.

உதயன் - ஸ்பெஷல் மசாலா..!
குங்குமம் விமர்சனக்குழு