சுவடுகள்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       

      ஒசாமா செஸ்!

அதற்குப் பெயர் டெர்ரர் செஸ். போர்டின் கட்டங்களின் உள்ளே ஆப்கானிஸ்தான் மேப் இருக்கிறது. ஒருபுறம் இருக்கும் காய்களில் ஒசாமா பின்லேடன்தான் ராஜா. பர்தா அணிந்த ஒரு பெண் ராணி. தற்கொலைப்படை தீவிரவாதிகள், தாலிபன் வீரர்கள் என மற்ற இடங்களில் வரிசை கட்டி நிற்கிறார்கள். இன்னொரு பக்கம் ராஜாவாக அமெரிக்க அதிபர் ஒபாமா. ராணியாக சுதந்திர தேவி சிலை. யானைகள் இடத்தில், அல்கொய்தா தகர்த்த அமெரிக்க இரட்டை கோபுரம். மற்றவர்கள் அமெரிக்க கூட்டுப் படைவீரர்கள். 

இதுபோல பிரிட்டிஷ் செட் ஒன்றும் உண்டு. அதில் ராஜா இடத்தில் முன்னாள் பிரதமர் டோனி பிளேர். ராணி இடத்தில் பிரிட்டிஷ் ராணி. ஆப்கானிஸ்தானில் போர் செய்யப் போன கனடா வீரர் ஜெஃப்ரி ட்ரெயின் என்பவர் டிசைன் செய்துவிற்ற இந்த செஸ் போர்டு பரபரப்பாக விற்பனை ஆகிறது. ஒரு செட் சுமார் 11 ஆயிரம் ரூபாய் என கிட்டத்தட்ட ஆயிரத்து 500 போர்டுகளை விற்று நல்ல வருமானம் பார்த்துவிட்டார் அவர்.

லுங்கி ஃபேஷன்!

நம்ம ஊர் ஆசாமிகள் லுங்கி கட்டி, அதை ஸ்டைலாக மடித்துக் கட்டுவார்களே... அதுதான் லேட்டஸ்ட் ஃபேஷன் போலிருக்கிறது. டொரன்டோ திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகைகள் பிபாஷா பாசு, அமிஷா படேல் இருவரும் இப்படி வலம் வந்தார்கள். நம்ம ஊருக்கு எந்த நடிகை அறிமுகம் செய்வார் என்று பார்ப்போம்...

ஹாட் பிப்பா!

பிரிட்டிஷ் மீடியாக்கள் கையில் அவலாக இப்போது சிக்கியிருப்பவர், பிப்பா மிடில்டன். இங்கிலாந்து இளவரசர் வில்லியமை மணந்துகொண்ட கேதே மிடில்டனின் தங்கை. அக்கா திருமணத்தின்போது மணமகள் தோழியாக வந்ததிலிருந்தே பிப்பா மீது மீடியாக்களின் கண் விழுந்துவிட்டது. ஒரு பத்திரிகை, ‘அழகான பின்புறத்தைக் கொண்ட பெண்’ என அவருக்குப் பட்டம் கொடுத்தது. சினிமாவில் நடிக்க அழைப்பு வந்தது. பிப்பா தன் தோழிகளோடு ஜாலியாக எப்போதோ எடுத்துக் கொண்ட அந்தரங்க போட்டோக்களை ஒரு பத்திரிகை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியது. இப்போது, ‘இளவரசர் வில்லியமின் தம்பி ஹாரிக்கும் பிப்பாவுக்கும் காதல்’ என கிசுகிசு வெளியாகிவிட்டது. இதனால் கவலையடைந்த குடும்பம், குண்டு துளைக்காத கார் ஒன்றை பிப்பாவுக்காக வாங்கியிருக்கிறது. புகழ் பெற்றாலே எப்போதும் பிரச்னைதான்!

உள்ளே  வராதே!

நோபல் பரிசு வென்ற ஜனநாயகப் போராளி ஆங் சான் சூ கியி மட்டுமில்லை... அவரோடு தொடர்புடைய யாரையுமே எதிரியாகத்தான் பார்க்கிறது மியான்மர் அரசு. சூ கியி வாழ்க்கை இப்போது ஹாலிவுட் படமாகிறது. இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்த மியான்மரில் அனுமதி கிடைக்காததால், இதேபோன்ற நிலப்பரப்பையும் பண்பாட்டையும் கொண்ட தாய்லாந்தில் ஷூட்டிங் நடக்கிறது. படத்தில் சூ கியி வேடத்தில் நடிப்பவர் ஹாலிவுட் நடிகை மிச்செல்லி இயோ. சமீபத்தில் சூ கியியை சந்திக்க இவர் வந்தபோது, விமான நிலையத்திலேயே வழிமறித்து திருப்பி அனுப்பிவிட்டார்கள். ‘மியான்மரில் நுழையத் தடை விதிக்கப்பட்டவர்கள்’ பட்டியலில் அவர் இருக்கிறாராம்.

அழகான  அமைச்சர்!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கடந்த பிப்ரவரி மாதம் பதவிநீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. துணை அமைச்சராக இருக்கும் ஹினா ரப்பானி அந்தப் பொறுப்பை கவனித்து வருகிறார். ஒசாமா பாகிஸ்தானில் மறைந்திருந்தது அம்பலமான பிறகு, பல நாடுகளுடனான பாகிஸ்தான் உறவு மோசமாக இருக்கிறது. எல்லாவற்றையும் சமாளிக்க, வசீகரமான ஹினா ரப்பானிக்கு கேபினட் அந்தஸ்து கொடுக்கலாமா என்று அதிபர் சர்தாரி யோசிக்கிறார். 34 வயதாகும் ஹினா, பாகிஸ்தானின் பாரம்பரிய அரசியல் குடும்பத்தின் வாரிசு. இந்தியாவுடனான அமைதிப் பேச்சு தீவிரம் அடைந்துவரும் சூழலில், இவருக்கு முக்கியத்துவம் அதிகரிக்கக்கூடும்.

உளவாளி ஸ்கூல்!

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ&வின் ஏஜென்ட்டுகள் உலகம் முழுக்க விரவியிருப்பதால்தான், உலகின் போலீஸ்காரனாக அந்த நாடு இருக்கிறது. ஒரு குட்டி தேசத்தில்கூட அமெரிக்காவுக்கு உளவு பார்க்க ஆள் இருக்கும். அமெரிக்காவின் அடிச்சுவட்டில் உலகை வசப்படுத்த சீனா தீர்மானித்து இருக்கிறது. அதற்காக உளவுப் பயிற்சி கொடுப்பதற்கு தனியாக கல்லூரிகளைத் திறந்துவருகிறது. ‘நேஷனல் இன்டெலிஜென்ஸ் காலேஜ்’ என்ற பெயரில் இந்த ஆண்டில் இதுவரை எட்டு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில கல்லூரிகள் ரகசியமான வளாகங்களில் இயங்குகின்றனவாம். பயிற்சி எடுக்க வரும் மாணவர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி எப்படி உளவு பார்ப்பது, மற்ற நாடுகளின் அரசாங்க இணைய தளங்களில் ஊடுருவி, ரகசிய ஃபைல்களை எப்படிப் படிப்பது என எல்லாம் இந்தப் பயிற்சியில் சொல்லித் தரப்படுகிறது. வேறு ஏதாவது கோர்ஸ் படிக்கப் போகிற மாதிரி, இங்கே பயிற்சி முடிக்கும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் இருக்கிறதாம்!