180 சினிமா விமர்சனம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            இருக்கும் வாழ்க்கையை இன்பமயமாக வாழ விரும்பிய ஒரு இளைஞனின் கதை. அதில் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தர விரும்பிய அவன் நிலையை இன்ப அதிர்ச்சியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெயேந்திரா.

காசியில் கருமம் முடிக்கும் ஹீரோ சித்தார்த், அங்கிருந்து சென்னை வந்து மனம்போன போக்கில் வாழ ஆரம்பிக்க... அந்த வினோத வாழ்க்கையே ஹீரோயின் நித்யா மேனனைக் கவர்ந்து சித்தார்த்தைக் காதலிக்க வைக்கிறது. காதல் என்றதும் காத தூரம் ஓடும் சித்தார்த்தின் நினைவில் வரும் ஃபிளாஷ்பேக் அமெரிக்காவில் விரிகிறது. அதில் அவருக்கு ப்ரியா ஆனந்துடன் இருக்கும் முதல் காதல் நாம் எதிர்பார்த்ததுதான் என்றாலும், அதைத் தொடர்ந்து எதிர்பாராத நிகழ்வுகளும் கிளைமாக்ஸும்.

அமெரிக்காவில் வசிக்கும் இளம் இந்திய டாக்டராக சித்தார்த் கச்சிதமாக இருக்கிறார். இயல்பாகவே அவர் முகத்தில் குடிகொண்டிருக்கும் இறுக்கமும், சோகமும் அவர் கேரக்டருக்கு வலு சேர்க்கின்றன. அதை மீறிய மகிழ்ச்சியைக் காட்ட, பீச் சிறுவனை விளையாடச் சொல்லிவிட்டு அவன் விற்கும் சுண்டலை தான் வாங்கி விற்பதிலும், பேப்பர் போடும் பையனுடன் கூட்டுச்சேர்ந்து பேப்பர் போடுவதிலும் இன்பம் காணும் கேரக்டரில் பொருந்திச் செய்திருக்கிறார்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineகுழந்தை முகம் கொண்ட நித்யா மேனன் அந்த அப்பாவித் தனத்தினால் அதிகமாகக் கவர்கிறார். சித்தார்த்தின் மேலுள்ள காதலால் விபத்துக்குள்ளாகி சிகிச்சை மீண்ட நிலையிலும், சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்தும் அவரையே காதலிப்பதில் இன்னும் அப்பாவியாகி விடுகிறார்.

காட்சிக்குக் காட்சி சித்தார்த்துடன் கட்டிப் புரள்வதிலும், ‘இச்’சிக் கொள்வதிலும் இளம்பெண்கள் பொறாமைப்படத்தக்க வேடம் பெற்ற ப்ரியா ஆனந்துக்கு கிளாமருடன் நடிக்கவும் வாய்ப்பு. மனோபயத்துக்கு ஆளான சித்தார்த்தின் செயல்களில் தன் காதல் சுக்குநூறாவதை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ப்ரியா.

சின்னச்சின்ன கேரக்டர்களில் வந்து கொண்டிருந்த ஸ்ரீசரணுக்கு சித்தார்த்தின் நண்பனாக வலுவான வேடம். கடைசியில் உண்மையின் மௌன சாட்சியாக நிற்பதில் அடையாளம் தெரிகிறார் அவர். மௌலி, கீதாவின் சென்டிமென்ட் காட்சிகள் மனதில் நிலைக்கின்றன.

படம் முழுதும் கனவுலகம் போல் மின்னலாகத் தெரிவதற்கு, ‘பேன்தம்’ கேமரா மற்றும் உயர்தொழில்நுட்ப டி.ஐயின் உதவிகளும், அவற்றின் உதவியோடு இயங்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்மும்தான் காரணம். மற்றபடி வெகுஜன ரசனையிலிருந்து விலகி நிற்கும் திரைக்கதையும், இசையமைப்பும் சராசரி மனிதனிடம் படத்தைக் கொண்டு சேர்ப்பது கடினம். கிளைமாக்ஸில் அற்புதமான ஒரு நெகிழ்ச்சி இருக்கிறது என்பது உண்மைதான். அதைத் தெரிந்துகொள்ள ரசனையிலிருந்து விலகிச் செல்லும் திரைக்கதையில் மனத்தை லயிக்க வைப்பது கடினமான காரியமாக ஆகிப்போகிறது. மனித உருவாக்கம் பற்றிய உண்மைகள் அறிந்த ஒரு மருத்துவருக்கு மரணம் அப்படியா ஒரு ‘ஃபோபியா’வாக மாறிவிடும்..? திகிலில் தெரியும் மரண உருவமும் கே.பாலசந்தர் பாணி சினிமா ‘க்ளிஷே’.

ஷரத்தின் இசையும், கார்க்கியின் வரிகளும் புரிந்து பாடல்களை மீண்டும் கேட்பதோ, பாடுவதோ இயலாத காரியம். அதனாலேயே காட்சிகளின் இடையில் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் தேனாகக் காதுகளில் பாய்கிறது.

உயர்தொழில்நுட்ப உத்திகளில் படம் மேம்பட்டுத் தெரிவது தமிழுக்கு வரம். மற்றபடி...

நூற்றெண்பது - ஹைடெக் மனக்கணக்கு..!
குங்குமம் விமர்சனக்குழு