ஒரு எஸ்பியின் டைரி



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                         பொன்னி நதி பாய்ந்தோடும் மத்திய மண்டலத்துக்கு மிக முக்கிய பிரமுகர் வருகை. பாதுகாப்பு ஏற்பாடுகளை மண்டல ஐ.ஜியும், மாவட்ட எஸ்.பியான நானும் செய்தோம். அப்போது ஒரு சுற்றுலா தல பகுதி காவல் ஆய்வாளர் வயர்லெஸ்ஸில் தொடர்பு கொண்டார். ‘‘சார்... ஒரு முக்கிய விஷயம்... செல்போனுக்கு தொடர்பு கொள்கிறேன்’’ என்றார்.

செல்போனில், ‘‘இங்குள்ள சுற்றுலா தலத்தில், ராணுவ அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்’’ என்றார். கொடூர கொலைக் குற்றவாளிகளும் ரவுடிகளும் மத்திய மண்டல காவல் துறையின் கடும் நடவடிக்கையால் ஒழிக்கப்பட்டிருந்தனர். சிலர் வேறு மாநிலத்துக்குத் தப்பிச் சென்று விட்டனர். அதனால் இதை ரவுடிக்கும்பல் செய்திருக்க வாய்ப்பில்லை. பயங்கரவாதிகள் நடமாட்டமும் இல்லை. பிறகு எப்படி?

அடுத்த சில நிமிடங்களில் அந்த ஸ்பாட்டில் இருந்தேன். மக்கள் நடமாட்டம் மிகுந்த சுற்றுலா தலம்; பொழுது சாய்ந்ததால் அமைதியாக இருந்தது. கத்தியால் குத்தப்பட்ட ராணுவ அதிகாரியுடன் மனைவி, மகள், மாமனாரும் வந்திருக்கின்றனர். மருத்துவ மனைக்கு அவருடைய காரிலேயே கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைகள் இருக்கும் மாநகர் பக்கம் செல்லாமல், பதற்றத்தில் கிராமப்பகுதியுள்ள எதிர் திசையில் சென்று விட்டனர் என்று தகவல் வந்தது. அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் சாலை ஓரத்தில் காத்திருந்தேன். எதிர்பார்த்தபடியே அவர்களுடைய கார் வந்தது. காரை மறித்து நானும் ஏறிக்கொண்டேன். கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடத்தப்பட்டிருந்த ராணுவ அதிகாரியைப் பார்த்தேன். உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவர்களை ஆசுவாசப்படுத்தினேன்.

‘‘சார், நாங்க தமிழ்நாட்டுக்காரங்கதான். கணவர் சுரேஷ், பக்கத்து மாநிலத்தில் ராணுவப் பயிற்சி மைய மருத்துவராக உள்ளார். ராணுவத்தில் அவருக்கு மேஜர் அந்தஸ்து. நான்கு நாட்களாக இங்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் தேர்வாகும் நபர்களை மருத்துவப் பரிசோதனை செய்யும் பணிக்கு என் கணவரும், மற்றொரு டாக்டரும் வந்தனர். இன்று காலையுடன் பணி முடிந்துவிட்டது. இங்கு சுற்றிப்பார்த்து விட்டு ஊருக்குப் போகலாம் என்று வந்தோம். இப்படி ஆகி விட்டது’’ என்று அழுதார் ராணுவ அதிகாரியின் மனைவி புவனா.

அவரே தொடர்ந்தார்... ‘‘நாங்கள் பார்த்த இடங்களை வீடியோவில் பதிவு செய்து கொண்டே வந்தோம். ஊஞ்சல் இருந்த இடத்துக்கு வந்தபோது, என் மகள் கரும்புச்சாறு கேட்டு அடம்பிடித்தாள். அவளுக்கு என் அப்பா கரும்புச் சாறு வாங்கித்தர அழைத்துச் சென்றார். பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. நான் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தேன். திடீரென அங்கு வந்த ஒருவன், என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். சத்தமிட்டால் குத்தி விடுவேன் என்றான். நான் ராணுவ அதிகாரியின் மனைவி என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் மிரட்டலைப் பொருட் படுத்தாமல், என் கணவரை சத்தமிட்டு அழைத்தேன். சுமார் பத்தடி தூரத்தில் நின்று கொண்டிருந்த கணவர், குரல் கேட்டு ஓடிவந்தார். இதைப் பார்த்ததும் அவன் ஓட்டம் பிடித்தான். ஓடியவனை விரட்டிச்சென்று கட்டிப் பிடித்தார். அவரிடமிருந்து திமிறி ஓட முயன்றான். டி&ஷர்ட்டை கழற்றி விட்டு, தப்பினான். மீண்டும் அவனை விரட்டிச் சென்றார். மங்கலான வெளிச்சம். நானும், ‘சுரேஷ்... சுரேஷ்...’ என்று கத்தியபடி பின் தொடர்ந்தேன். ஒரு இடத்தில் தரையில் விழுந்து கிடந்த கணவரின் உடலில் தடுக்கி விழுந்தேன். கழுத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவன் தப்பி ஓடிட்டான் சார்’’ என்று அவசரமான நிலையிலும் நிதானமாக விவரம் கூறினார்.

அவர்களை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விட்டு, பின்தொடர்ந்து வந்த என்னுடைய காரில் மீண்டும் சம்பவ இடத்துக்கு விரைந்தேன். இதற்கிடையில், ‘நிச்சயம் இது கூலிப்படை அல்லது பயங்கரவாதிகளின் செயல் அல்ல’ என்று ஐ.ஜியிடம் மீண்டும் போனில் உறுதிப்படுத்தினேன்.

ராணுவ அதிகாரி இங்கு யதேச்சையாக வந்துள்ளார். யாரும் திட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து, இதைச் செய்யவில்லை. ராணுவ அதிகாரி என்றாலும் சுரேஷ் செய்வது மருத்துவப் பணியே... அதனால் பயங்கரவாதிகளின் வேலையாக இருக்க வாய்ப்பில்லை. யதேச்சையாக நடந்த கொலைதான் என்றே தோன்றியது.

சம்பவ இடத்தில் ஒரு டி&ஷர்ட் கிடந்தது. முன்புறமும் பின்புறமும் எலும்புத் துண்டுகளுக்கு இடையில் உள்ள மண்டை ஓடு படத்தோடு, ‘டேஞ்சர்’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. பாக்கெட்டில் 2 பஸ் டிக்கெட்கள். வேறு தடயம் எதுவும் இல்லை.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராணுவ அதிகாரி இறந்துவிட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வந்தது. இதற்கிடையே மேஜரின் மனைவி மூலம் டெல்லி, சென்னைக்கு தகவல் போனது. இதனால் காவல்துறை மற்றும் ராணுவ உயரதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டபடியே இருந்தனர்.

மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றேன். ராணுவ அதிகாரியின் மனைவி என்பதால், கணவரை இழந்த அந்த நேரத்திலும் மன உறுதியோடு இருந்தார் புவனா. அவரை ஆறுதல்படுத்தி, ‘‘யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?’’ என்றேன். ‘‘இல்லை... ஆனால் நாங்கள் எடுத்த வீடியோவில் ஒருவர் கத்தியுடன் நின்று கொண்டிருப்பதையும் பிடித்தோம். அவர் மீது சந்தேகம் இருக்கிறது. கொலையாளி முகம் எனக்கு நினைவில் உள்ளது. மீண்டும் பார்த்தால் அடையாளம் காட்டுவேன்’’ என்றார்.

புவனாவின் உதவியுடன் கொலையாளியின் மாதிரி படம் வரைந்தோம். கொலை செய்யப்பட்டவரின் முக்கியத்துவம் காரணமாக எனது மேற்பார்வையில் 3 தனிப்படைகளை அமைத்தேன். புவனா வீடியோவில் குறிப்பிட்ட நபரைத் தேடி ஒரு குழுவை அனுப்பினேன். அவர்கள் சுற்றியுள்ள 50 கிராமங்களில் தேடி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை விசாரித்து, அந்த நபரைக் கண்டு பிடித்தனர். அவருடைய வீட்டில் ரத்தக்கறையுடன் கத்தியும் இருந்தது. இது எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்த, அவரை அப்படியே அழைத்து வந்தனர். விசாரணையில் அவர், இரவு நேரத்தில் தலையில் டார்ச் லைட் பொருத்திக் கொண்டு, சற்று பெரிய கத்தியால் மீனை வெட்டிப் பிடிப்பவர். கத்தியில் உள்ள ரத்தக்கறை, மீன் ரத்தம் என்று தெரியவந்தது. நீண்ட அலைச்சலுக்குப் பிறகு கிடைத்த துப்பு பயனற்றுப் போனதால் குழு வினர் சோர்ந்தனர்.
(பெயர்களும் ஊர்களும் மாற்றப்பட்டுள்ளன)
துப்பறிவோம்!
அ.கலியமூர்த்தி