கர்ணன் படத்துக்காக ஒரு கிராமத்தையே உருவாக்கியிருப்பவர் இவர்தான்!



தனுஷின் பிறந்த தினத்திற்கான சிறப்பு வெளியீடாக மாரி செல்வராஜ் இயக்கத்தில், அவர் ஹீரோவாக நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்திருக்கிறது. கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு கிராமம் உருவாகிய விதத்தை அழகழகாக எடுத்துரைக்கிறது அந்த வீடியோ. அதிர்ந்து ஒலிக்கும் தென் மாவட்ட மேளத்துடன் தொடங்கும் அதில் அதிகம் கவர்ந்தது அந்த கிராமத்தின் செட் வீடுகள் அடுத்தடுத்து உருவாகி வருகிற விதம்.
அந்த பிரம்மாண்ட கிராமத்தின் உருவாக்கத்தில் அதிகம் பேசப்படுகிறார் கலை இயக்குநர் இராமலிங்கம். ‘கபாலி’, ‘காலா’, ‘மெட்ராஸ்’, ‘மாயா’, ‘குக்கூ’ என 15 படங்களுக்கு மேல் கலை இயக்கம் செய்து அதிரடி காட்டியிருக்கிறார்.

‘‘சொல்லப்போனால் எனக்கு தம்பி மாரி செல்வராஜ் நட்பு கிடைச்சது பெரிய விஷயம். சினிமா தெரிவதை விடுங்க, கூடவே இலக்கியமும் தெரிஞ்ச ஆளுன்னா நமக்கு கவன ஈர்ப்பு அதிகமாகும். அவரே முன்னாடி ஒரு முழுநேர எழுத்தாளராகவே இருந்திருக்கிறார். பழகின பிறகு இன்னும் அற்புதமான மனிதர் என்று தெரிகிறது.

ஒரு நாள் உட்கார்ந்து ஆழமாக கதை சொன்னார். பிரமாதமான கலை வடிவத்தில் இருந்தது. செங்கல் சூளை மாதிரி அடுத்தடுத்து அடுக்கியிருக்கிறார்.
நாங்கள் அதற்கான ஒரு கிராமத்தைத் தேடி அலைந்தோம். சரியான விதத்தில் கிடைக்கவில்லை. அப்படியே அந்த கிராமத்தையே நாமே உருவாக்கி விட்டால் என்ன என்று தோன்றி விட்டது.

தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் என எல்லோரும் ஒரே நேரத்தில் ‘ஆஹா’ என்றார்கள். மினியேச்சரில் ஒரு பெரிய கிராமத்தையே உருவாக்கி விட்டோம்.  தாய்லாந்தை சென்னைக்கு கொண்டு வந்து ‘செட்’ போட்டுக் காட்டியது, ‘தாராவி’யை அப்படியே இங்கே இறக்குமதி செய்தது என உண்மைக்கு அருகில் நான் உழைத்திருக்கிறேன். வெவ்வேறு கலாசாரங்களில் பணிபுரி யும்போது நமது எண்ணங்கள் விரிவடைந்து தொழிலும் கூர்மை அடைகிறது.

மாரி செல்வராஜ் திருநெல்வேலியின் அருகாமையை அப்படியே திரை வடிவத்தில் கொண்டு வந்தார். அவரால் எதையும் சாத்தியப்படுத்த முடிகிறது. திருநெல்வேலிக்கு போறதும் ஒண்ணுதான், மாரி செல்வராஜ் கிட்டே பேசுறதும் ஒண்ணுதான். ‘கிளாக்குளம்’ என்ற ஊரில் எல்லாமே படத்திற்கான அம்சத்துடன் இடம் கிடைத்தது.

கிராமத்திற்கான பொருள்களை சேகரிப்பு செய்தோம். மரங்கள் அடர்ந்திருந்ததால், ஊடாக வீடுகளை நேர்த்தியுடன் அமைக்க முடிந்தது. வீடுகளின் அருகாமை, கலர், அதன் உயிர்த்தன்மைக்குப் பாடுபட்டது அருமையாக வந்திருக்கிறது.

அறுபது நாட்களுக்கு மேல் 110 வீடுகள் கட்டும் பணி தொடர்ந்தது. ஏறத்தாழ 150 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்தார்கள். ஒரு கிராமத்து ஒழுங்குடன் அமைவதற்காக அம்மி, உரல், உலக்கை, நெல் கொட்டும் குதிர்… என சகலமும் திரட்டினோம்.

இப்போது படம் பார்க்கும்போது எங்கள் உழைப்பின் விஸ்திரணம் தெரிகிறது. ஒரு கல்குவாரியை செட் போட்டோம். தாணு சாரின் மகன் கலா பிரபு வந்து பார்த்து ஆச்சர்யப்பட்டு விட்டார். அவரால் அதை செட் என்றே நம்பமுடியவில்லை.

செட் என்றால் அது நம்ப வைப்பது. அதில் மேஜிக் கொண்டு வர வேண்டும். இரும்பு என நம்ப வைக்க வேண்டும். ஆனால், அது இரும்பாக இருக்கக் கூடாது. தனியாக கிராமங்கள் அமைந்ததால் தனுஷின் பாதுகாப்பும் பிரச்னையின்றி அமைந்துவிட்டது. மொத்த கிராம செட்டும் நம் வசமானதில் படத்திற்கு பெரும் அழகு கிடைத்தது. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் கிராமத்தின் முழு அவதானிப்பில் வளர்ந்தவர். அவருக்கு இதில் சரியான இடம் கிடைக்க வெளுத்து வாங்கி விட்டார்.

பாரதிராஜா சினிமாவை வெளியே இழுத்துக் கொண்டுவருவதற்கு முன்னால் கலை இயக்குநர்களுக்கு பெரிய கவனிப்பு இருந்தது. அப்பொழுதெல்லாம் இயக்குநர் என்று பெயரிடப்பட்ட நாற்காலியின் அருகில் கூட யாரும் போக மாட்டார்களாம். முன்பு தயாரிப்பாளர், இயக்குநர், கலை இயக்குநருக்குத்தான் எல்லோரும் வணக்கம் சொல்லி விட்டுச் செல்வார்களாம்.  

‘சந்திரலேகா’ எல்லாம் கலை இயக்குநர்களின் உச்சமான வேலை. கலை இயக்குநர்களுக்கு படத்தின் மொத்த அழகை, கலரை கொண்டுவரவேண்டிய வேலை இருக்கிறது. இப்போது இருக்கும் இயக்குநர்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள். எனக்கு இயக்குநர் மிஷ்கின் மீது சிறு வருத்தம் உண்டு. பொது வெளியில் நல்ல சினிமா பற்றி உரையாடும் அவர் போஸ்டரில், விளம்பரத்தில் கலை இயக்குநரைக் குறிப்பிடுவதே இல்லை. அவர்களின் உழைப்பை அவர் மனதில் நிறுத்தவேண்டும் என விரும்புகிறேன்.

‘கர்ணன்’ மாதிரியான படங்களால் கலை இயக்குநர்களுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்கிறது. எங்களுக்கு பெயர் என்பது படைப்பு முழுமையடைவதில்தான் கிடைக்கிறது. இதெல்லாம் அமைய தாணு சார் மாதிரியான தயாரிப்பாளரும், இலக்கியம் உணர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ் அமைந்ததும், தனுஷ் மாதிரி ஒரு ஹீரோ கிடைத்ததுமே பெரும் காரணம். மனதுக்குப் பிடித்தமானதாகவும், உண்மைக்கு அருகே நிற்கிற தொழில் நுட்பமும், இயக்குநரின் மனமும் எனக்கு இதில் ரொம்பவும் பிடித்தது...’’ நெகிழ்கிறார் இராமலிங்கம்.
 
நா.கதிர்வேலன்