உலகை உலுக்கிய உயிர்க்கொள்ளி நோய்கள்!



மினி தொடர் 16

7 காலரா...7 கோடி மக்கள் பலி!


காலராவின் முதல் வருகை 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்பதைப் பார்த்தோம். தொடக்கத்தில் கங்கைச் சமவெளிகளில் தொடங்கியது காலரா. பின்னர் வங்காளம் வழியாக இந்தியா முழுதும் பரவியது. தொடர்ந்து துறைமுகங்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் நகர்ந்தது. அப்போது முதல் 1975ம் ஆண்டு வரை ஒன்றல்ல இரண்டல்ல ஏழுமுறை உலகை உலுக்கியது காலரா.1829 - 1837 வரை ஆசியப் பகுதிகளில் காலரா பரவியது இரண்டாம் பெரும் தாக்குதல் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த இரண்டாவது தாக்குதலில் ரஷ்யாவில் தொடங்கி ஐரோப்பா வரை பாதிக்கப்பட்டது. ரஷ்யாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் காலராவில் சிக்கி சின்னாபின்னமாகின. 1831ம் ஆண்டு போலந்துக்கும் ரஷ்யாவுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்த நாட்கள் அவை. மாஸ்கோவை போலந்து தாக்கியது. பதிலுக்கு ரஷ்யர்களும் தாக்கினார்கள். அந்நாட்களில் ரஷ்ய வீரர்கள் மூலம் காலரா போலந்தில் நுழைந்து, அங்கிருந்து கிழக்கு ப்ரூஷியாவுக்கு நகர்ந்தது.

அதே ஆண்டில் ரஷ்யாவில் காலரா தாக்குதல் இருப்பதால், அங்கிருந்து வரும் கப்பல்கள் தங்கள் கடல் எல்லையில் நுழைவதை பிரிட்டிஷ் அரசு தடைசெய்தது. அந்தக் கப்பல்கள் தனிமைப்படுத்தப்பட்டன.ஆனால், கோடை காலத்துக்குப் பிறகு காலரா பிரிட்டனிலும் நுழைந்தது.

அந்நாட்களில் கொள்ளை நோய்கள் காற்று மாசுபாட்டால்தான் பரவுகின்றன என்ற கருத்து இருந்தது. இதனை மியாஸ்மா கோட்பாடு என்பார்கள்.
இந்த மாசுபட்ட காற்று இரவில் பரவுவதாகவும் இது விஷக்காற்று என்றும் கருதினார்கள். இதனால், இரவில் தீ வைப்பது ஒரு முக்கியமான தற்காப்பு ஏற்பாடாக அந்நாட்களில் கருதப்பட்டது.

பிரிட்டனில் காலரா பரவியபோது, அதைத் தடுக்க, பழைய பொருட்கள், காகிதங்கள், துணிமணிகள் என அனைத்தும் தீ வைத்து அழிக்க ஆணையிடப்பட்டது. பிரிட்டனிலிருந்து இந்தக் கொள்ளை நோய் பிரான்சுக்கும், அமெரிக்க கண்டத்துக்கும் பரவியது. பாரிஸ், டெட்ராய்ட், நியூயார்க், வாஷிங்டன் என பல நகரங்களில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்; லட்சக்கணக்கானோர் இறந்தனர். பிரான்சில் மட்டும் ஒரு லட்சம் பேர் மரணித்தனர். அதில் பாரிஸில் மட்டும் இருபதாயிரம் பேர். அமெரிக்காவிலும் பல்லாயிரம் பேர் இறந்தனர்.

காலராவின் மூன்றாவது தாக்குதல் 1846 முதல் 1860ம் ஆண்டு வரை நிகழ்ந்தது. இம்முறை ரஷ்யாவில் பாதிப்பு கடுமையாக
இருந்தது. சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் இறந்தார்கள். இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகள் நீடித்த பாதிப்பில் லட்சம் பேர் இறந்தார்கள்.
1849ம் ஆண்டில் இரண்டாவது மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. அயர்லாந்தில் காலரா பரவியபோது அங்கு ஏற்கெனவே பஞ்சத்தில் தப்பித்து மிச்சம் மீதி இருந்தவர்களும் கொத்து கொத்தாக இறந்தார்கள்.

1854ம் ஆண்டு லண்டனின் அகலச் சாலை (Broad Street) ஒன்றில் பதிக்கப்பட்ட குடிநீர்க் குழாயில் காலரா கிருமிகள் கலந்ததில் அந்நீரைப் பருகிய பலர் காலராவால் பாதிக்கப்பட்டனர். இந்த ஒற்றைக் குழாய் மட்டும் 616 பேர் உயிரைக் காவு வாங்கியது. இதை ஆராய்ந்த ஜான் ஸ்நோ என்ற ஆய்வாளர், நீரில் கலக்கும் கிருமிகள்தான் காலராவுக்குக் காரணம் என்பதை நிரூபித்தார்.

இந்த ஆய்வு ஒரு மிகப்பெரிய திறப்பை உருவாக்கியது. அதுவரை கொள்ளை நோய்கள் மோசமான காற்றால் பரவுகிறது என்ற மியாஸ்மா கோட்பாட்டையே நம்பியிருந்தனர். இந்தக் கோட்பாடு தவறு என்று ஸ்நோ நிரூபித்தார். வட அமெரிக்காவில் நுழைந்த காலரா அங்கு மிசிசிபி ஆற்றோட்டத்தில் கலந்தது. இங்கிலாந்திலிருந்து சென்ற அயர்லாந்து புலப்பெயர்வாளர்கள் பயணித்த கப்பல் மூலம்தான் இந்தப் பரவல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

செயிண்ட் லூயிஸ், நியூ ஆர்லியன்ஸ், நியூயார்க் உட்பட பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மெக்சிக்கோவில் சுமார் இரண்டு
லட்சம் பேருக்கு மேல் காலராவால் இறந்தனர். உச்சமாக அமெரிக்காவின் அதிபர் ஜேம்ஸ் கே போல் காலராவுக்குப் பலியானது கடும் அதிர்வலைகளை உருவாக்கியது.அமெரிக்க கண்டத்தில் பாரிய இடப்பெயர்வுகள் நடந்து கொண்டிருந்த காலம் அவை.

மக்கள் ஓர் இடம் விட்டு இன்னொரு இடத்துக்கு நகரும் காட்டு வழியில் நீளும் ஒற்றையடிப் பாதைகள் பல உருவாகின. கலிபோர்னியா, மோர்மான், ஓரிகான் போன்ற பாதைகளில் காலரா பரவியது. 1851ம் ஆண்டு க்யூபாவிலிருந்து க்ரேன் கனேரியா தீவுக்கு வந்த கப்பலில் இருந்த பயணிகள் மூலம் அந்த தீவில் காலரா நுழைந்து, ஆறாயிரம் பேரைக் கொன்றது.

1852ம் ஆண்டு இந்தோனேஷியாவுக்கு காலரா பரவியது. பிறகு அங்கிருந்து ஜப்பானுக்கு நகர்ந்தது. பிறகு பிலிப்பைன்ஸ், கொரியா என்று வரிசையாகப் பரவியது. தொடர்ந்து 1859ல் வங்காளத்திலிருந்து மத்திய கிழக்குக்குப் பரவியது. ஈரான், ஈராக், அரேபியாவில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர்.
நான்காவது காலரா தொற்று 1863 முதல் 1875ம் ஆண்டு வரை நிகழ்ந்தது. கங்கைச் சமவெளியிலிருந்து மெக்கா வரை இந்த முறை பாதிப்புகள் இருந்தன.
அவ்வாண்டில் மெக்காவுக்கு ஹஜ் புனிதயாத்திரை மேற்கொண்ட ஒரு லட்சம் இஸ்லாமியர்கள் காலராவால் பலியாகினர்.

அங்கிருந்து ரஷ்யா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பரவியது. ஒவ்வொரு நாட்டிலும் துறைமுக நகரங்களிலிருந்து குடிநீர்க் குழாய்கள் வழியாகவே உள்ளூர் பகுதிகளுக்குள் காலரா நுழைந்தது.1869 - 70 ஆண்டுகளில் இன்றைய தான்சானியாவின் பகுதியான சான்சிபாரில் நுழைந்த காலரா சுமார் எழுபதாயிரம் பேர்களைக் கொன்றது. வட ஆப்பிரிக்கா முழுதுமே காலராவின் கோரப்பிடியில் சிக்கியது.

1865ம் ஆண்டில் ஆஸ்திரியாவுக்கும் ப்ரூஷியாவுக்கும் போர் நடந்துகொண்டிருந்தது. அங்கும் காலரா பரவியதால் இருநாடுகளின் எல்லைகளிலும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் இறந்தனர். முப்பதாயிரம் ஹங்கேரியர்கள், முப்பதாயிரம் பெல்ஜியர்கள் மற்றும் இருபதாயிரம் நெதர்லாந்துக்காரர்கள் இறந்தனர்.ஐந்தாம் காலரா பரவல் 1881 - 96 காலகட்டங்களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவியது. இதில் ஐரோப்பாவில் இரண்டரை லட்சம் பேரும் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரும் இறந்தனர். இதே ஆண்டு ரஷ்யாவில் மூன்று லட்சம் பேர் இறந்தனர். ஸ்பெயினில் 1,20,000 பேரும், ஜப்பானில் 90 ஆயிரம் பேரும், ப்ரூஷியாவில் 60 ஆயிரம் பேரும் மாண்டனர்.

ஆறாவது காலரா பெருந்தொற்று 1899 - 1923ம் ஆண்டு சமயத்தில் நிகழ்ந்தது. இம்முறை ரஷ்யா, ஒட்டோமான் சாம்ராஜ்யங்களில் தலா ஐந்து லட்சம் பேர் வரை இறந்தனர். 1902 - 1904ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் மட்டும் இரண்டு லட்சம் பேர் இறந்தனர். மெக்காவில் மீண்டும் பல்லாயிரம் பேர் இறந்தனர்.ஏழாவது தொற்று 1961 - 1975ம் ஆண்டில் நிகழ்ந்தது.

இம்முறை அன்று கிழக்கு பாகிஸ்தானாக இருந்த இன்றைய பங்களாதேஷிலும், ரஷ்யாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் கடும் பாதிப்புகள் இருந்தன. ஜப்பானில் சிறிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. இப்படியாக உலகம் முழுக்க காலரா கொடூரமான தொற்றாக இன்றும் அடிக்கடி பரவி திகிலடித்துக் கொண்டிருக்கிறது.

சுகாதாரமான குடிநீர் சூழலே காலராவை அண்டாமல் காக்கும். தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டிக் குடிப்பது ஒன்றே காலராவை தடுக்கும் வழிமுறை என்பதால் உலக சுகாதார நிறுவனம் இன்றும் காலராவுக்கு எதிராக இதனையே முதன்மையாகப் பரிந்துரைக்கிறது.

(உயிர்க்கொல்லிகளுக்கு எதிரான போர் தொடரும்)

இளங்கோ கிருஷ்ணன்