சென்னை to சேலம் 8 வழிச்சாலை வரும்...நியூட்ரினோ திட்டம் அமலாகும்... மக்கள் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்!



#EIAdraft2020, #WithdrawEIA2020… போன்ற ஹேஷ்டேக்குகளை கடந்த வாரம் அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், திரைத்துறையினர்… என பலரும் தங்களது சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கினர்.
அது என்ன EIA? சுரங்கம், தொழிற்சாலைகள், அணைகள்… போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்களால், ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வழிகாட்டுதலாக உருவாக்கப்படும் சூழலியல் சார்ந்த மதிப்பீடே Environment Impact Assessment. சுருக்கமாக EIA.
இதன் நோக்கம் சுற்றுச்சூழலுக்கான தீவினைகளை முன்பே கணித்து அதனைத் தடுப்பதுதான். அதற்கு மக்கள் கருத்து, நிபுணர் அறிக்கை, ஆய்வு என பல்வேறு வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது இந்தச் சட்டம்.

“கொரோனா பொது ஊரடங்கு காலத்தில் இப்போது வந்திருக்கும் வரைவு சூழலியல் பாதுகாப்பு என்பதைக் கைவிட்டு முதலீட்டை முதன்மைப்படுத்து கிறது...” என்கிறார் சூழலியல் எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான அருண் நெடுஞ்செழியன்.“1972ம் ஆண்டு ஐநா நடத்திய ஸ்டாக்ஹோம் மாநாட்டிற்குப் பிறகு எல்லா நாடுகளுக்கும் சூழலியல் பற்றிய விதிமுறைகளில் அழுத்தம் ஏற்பட்டது. அதன்படி 1974ல் தண்ணீர்  பாதுகாப்பு சட்டத்தையும், 1981ல் காற்று மாசை தடுக்கிற சட்டத்தையும் இந்திய அரசு இயற்றியது1984ல் போபால் விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட பல இழப்பு களுக்குப் பிறகு தொழிற்சாலைகளின் கழிவுகள் அகற்றுதல், அதன் அமைவிடம், இயற்கையில் நிகழும் மாற்றங்கள்… என்று பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு 1986ம் ஆண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அச்சட்டத்தில் 3வது பிரிவில் EIA வருகிறது. அதற்கான வழிகாட்டுதல்கள் 1994ம் ஆண்டில் உருவாக்கப்படுகின்றன. பின்னர் 2006ம் ஆண்டில் திருத்தம் செய்யப்படுகிறது. இப்போது மீண்டும் அதில் திருத்தம் கொண்டு வருவதற்காக புதிய வரைவினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது...” என்று கூறும் அருண், “ஏற்கனவே சட்டங்கள் இருந்தபோதிலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படாமலா இருந்தன?” என்ற கேள்வியினை முன்வைக்கிறார்.

“இந்தியாவில் பல நீர்மின் திட்டங்கள், சாலை கட்டமைப்புகள், அணுமின் நிலையங்கள், எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டங்கள், சிமெண்ட் ஆலைகள், சுரங்கப் பணிகள், வேதியல் நிறுவனங்கள் ஆகியவை பெரும்பாலும் விதிகளை மீறியே இயங்கி வருகின்றன. கண்காணிப்பும் தண்டனைகளும் பெயரளவிற்கே இருந்தன.

ONGC தகவலின்படி காவிரிப்படுகையில் மொத்தம் 700 எண்ணெய்க் கிணறுகள் உள்ளதென்றும், அவற்றில் 183 கிணறுகள் பயன்பாட்டில் உள்ளதென்றும் தெரிவிக்கின்றது. ஆனால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆவணத்திலோ 219 எண்ணெய்க் கிணறுகள் உள்ளதென்றும், அதில் 71 கிணறுகள் பயன்பாட்டில் உள்ளதென்றும் கூறுகிறது.

அதாவது பயன்பாட்டிலுள்ள 112 கிணறுகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் இருந்து விடுபட்டுள்ளது. மேலும் மாசுக் கட்டுப்பாட்டின் ஆவணப்படி பயன்பாட்டிலுள்ள 71 கிணறுகளும் போதிய சூழலியல் அனுமதி இல்லாமல் இயங்குகிறது.கதிராமங்கலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு விபத்தின்போது இந்த உண்மையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் போட்டுடைத்தது. அதாவது ONGC தங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்றது.

கடந்த பத்தாண்டுகளாக சூழலியல் பாதுகாப்பில் உருவாகியுள்ள விழிப்புணர்வால், இந்த சூழலியல் பாதுகாப்பு விதிமீறல்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலப்படுத்தப்பட்டன.போலவே கருத்து கேட்புக் கூட்டங்களில் வெகுஜன மக்களின் பங்கேற்பு மற்றும் சூழலியல் தாக்க அறிக்கை குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது.

இவ்வாறு கவுத்தி வேடியப்பன்மலை மக்களின் எதிர்ப்பால் கனிமங்கள் எடுப்பது கைவிடப்பட்டது. பெரம்பலூர் MRF நிறுவனத்தின் அனல் மின் நிலைய திட்டம், உப்பூர் அனல் மின் நிலைய திட்டம், அரியலூர் சிமெண்ட் ஆலைத் திட்டங்கள்… ஆகியவற்றிற்கு கருத்து கேட்புக் கூட்டத்தில்
மக்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் கூட மிகப்பெரிய போராட்டம், உயிரிழப்பு களுக்குப் பிறகும் கூட, அந்த நிறுவனம் இவ்வளவு மாசு ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க நாம் போராட வேண்டியிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடக்கும் கட்டுமானப் பணிகள், உத்தரகாண்டில் நடந்த வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு… என எல்லாமே பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்காக அனுமதி வழங்கப்பட்டதின் விளைவுகள்.

அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஏற்கனவே உள்ள 1994, 2006 சட்டங்களைப் பின்பற்றவில்லை என்பதற்கான சான்றுகள் இருப்பதோடு, ஒவ்வொரு நிறுவனத்திலும் பெரிய விபத்துகள் நடக்கும்போதுதான் அதை நோண்டிப் பார்க்கையில் அவர்கள் எதற்கும் அனுமதி வாங்கவில்லை என்பது வெளிச்சமாகிறது...” என்று கூறும் அருண், இப்போது 2020 திருத்தத்தில் உள்ள சிக்கல்களை விளக்கினார்.

“2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிந்து பாஜக ஆட்சி வரும்போது, அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனை, ‘ஜெயந்தி டேக்ஸ்’ என்று மோடி கிண்டல் அடித்தார். அதாவது சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் பல தொழில் இழப்புகள் ஏற்பட்டுள்ளது, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தொழில் துவங்குவதற்குத் தடையாக உள்ள கொஞ்ச நஞ்சம் பாதுகாப்பு அளிக்கக்கூடிய சட்ட முறைகளையும், விதிகளையும் தளர்த்துவோம் என்பதுதான் அதன் அர்த்தம்.

அதேபோல் இப்போது கொண்டு வந்துள்ளனர்.இந்தப் புதிய சட்டத்திருத்தத்தில் முக்கியமான மூன்று பிரச்னைகள் உள்ளன.

1. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு இனி சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கையும், பொதுமக்கள் கருத்து கேட்பும், சூழலியல் தடையில்லா சான்றிதழும் தேவையில்லை என்கிறது.உதாரணமாக, தமிழகத்தில் சென்னை - சேலம் பசுமைவழிச்சாலைத் திட்டம் இனி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
திட்டம் என அனுமதியில்லாமல் செயல்படுத்தலாம். நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தைக் கூட இவ்வாறு செயல்படுத்தலாம்.

2. அனைத்து திட்டங்களும் A, B1, B2 என்று புராஜெக்ட் கேட்டகரி செக்‌ஷனாக, மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் B2 கேட்டகரி திட்டங்களுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை என்கிறது புதிய திருத்தம். அதில் ஒன்றாக 25 மெகாவாட்டுக்குக் கீழ் உள்ள நீர்மின் திட்டங்களுக்கு அனுமதி வாங்கத் தேவையில்லை என்றாகிறது.

பாதுகாக்கப்பட்ட ரிசர்வ் ஃபாரஸ்ட்டுகளில் இவ்வாறு திட்டங்கள் வந்தால், அணைகட்டும் போது பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இதுபோல் நிறைய திட்டங்களை B2 கேட்டகரியில் தள்ளிவிட்டுள்ளனர்.  

3. ஒரு நிறுவனம் சூழலியல் விதிகளை மீறும்போது அரசு பிரதிநிதிகளோ அல்லது நிறுவனம் சார்ந்தவர்களோதான் புகார் கொடுக்க முடியும். போலவே பொதுமக்கள் கருத்து கேட்பு முறைக்கும் நிறுவன சார்பாக வேட்டு வைக்கப்பட்டுள்ளது.ஆக, இனி தேசிய முக்கியத்துவம் என்ற பேரிலும், திட்ட வகையினம் என்ற பெயரிலும் எந்த திட்டம் வேண்டுமானாலும் கொண்டு வரலாம். மக்கள் பங்கேற்பு, கருத்து கேட்பு தேவையில்லை!

கொரோனா பேரிடர் காலத்தை வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்கிறார் பிரதமர். அந்த வாய்ப்பு, சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும் என்பதுதான். இதை ஒட்டித்தான் எல்லா சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்கள் வளர்ச்சி என்று சொல்லக்கூடிய திட்டங்கள் யாவும் மக்களின் வாழ்வில் பிரதி பலிக்கவில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் LAND & LABOUR மீதான ஒரு போரைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். LAND என்பது நிலம், நீர், காற்று… LABOUR என்பது மக்கள், விவசாயி, தொழிலாளி… இதை எல்லாம் ஒட்டுமொத்தமாகத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்...” அழுத்தமாகச் சொல்கிறார் அருண் நெடுஞ்செழியன்.

அன்னம் அரசு