அணையா அடுப்பு-11



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

தில்லை அம்பலத்தாருக்கு வைதீகபூஜை ஆகுமா?

சென்னையைத் துறந்த சமயத்தில்தான் உடல் முழுக்க வெள்ளைத்துணி, தலையில் முக்காடு என்று நாமறியும் வள்ளலார் தோற்றத்தை எட்டினார் இராமலிங்கம்.கருங்குழி வேங்கட ரெட்டியாரின் வீட்டில் தங்கியிருந்த காலங்களில் அடிக்கடி சிதம்பரம் சென்று வருவார்.

கைக்குழந்தையாக இருந்தபோதே சிதம்பர ரகசியத்தை தரிசித்தவர் ஆயிற்றே?

அவர் கருங்குழியில் வசித்த சமயத்தில் மட்டுமே சிதம்பரம் தொடர்பாக சுமார் இருநூறு பாடல்களை இயற்றி இருக்கிறார்.
ஒரு முறை கோயில் வாசலில் அழுது தொழுது கொண்டிருந்தபோது, அம்பலத்திலிருந்த இறைவனே இறங்கி வந்து அவரைத் தேற்றியதாகவும் குறிப்பிடுகிறார்.

சிதம்பரம் என்கிற ஊர் எந்தளவுக்கு அவருக்குள் ஊறிப்போய் இருந்தது என்றால், அவர் கையொப்பமிடும் போதெல்லாம் ‘சிதம்பரம் இராமலிங்கம்’ என்றே கையொப்பம் இடுவார்.பொதுவாக தந்தை பெயரை தன் பெயருக்கு முன்பாக இட்டுக் கொள்வார்கள். அல்லது, தான் பிறந்த ஊரின் பெயரை இட்டுக் கொள்வார்கள். இல்லையேல், தான் வளர்ந்த ஊரின் பெயரையாவது தனக்கு அடையாளமாக வைத்துக் கொள்வார்கள்.
வள்ளலார் என்றாலே வடலூர். அவர் பிறந்தது மருதூர். வளர்ந்தது சென்னை.

எனினும் தன்னை சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை என்றே வள்ளலார் அடையாளப் படுத்திக் கொண்டார்.முதன்முதலாக அச்சான அவரது நூல்கள் ‘கதர் சரவணப் பத்து’ மற்றும் ‘தெய்வமணி மாலை’. அந்நூல்களில் நூலாசிரியர் பெயராக சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை என்றே அச்சானது.எனினும் அந்நாளைய சிதம்பரம் பற்றி வள்ளலாருக்கு ஏதோ மனக்குறை இருந்திருக்க வேண்டும்.சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் இரத்தின முதலியார். இவர், வள்ளலாரின் மாணவர்களில் ஒருவர்.

வள்ளலார், சிதம்பரத்திலேயே பெரும் பொழுதைக் கழிக்கிறார் என்பதால், தானும் சிதம்பரத்துக்குக் குடிபெயர விரும்பினார்.அங்கிருந்த பச்சையப்ப முதலியார் பாடசாலையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்போது வள்ளலாருக்கு கடிதமும் எழுதினார்.மார்ச் 20, 1861 தேதியிட்ட கடிதத்தில் வள்ளலார், இவ்வாறாக சிதம்பரம் பற்றி எழுதுகிறார்.“சிதம்பரத்தில் வசிப்பது சம்மதமானாலும், இவ்வியத்தில் வசிப்பது சம்மதமின்று. ஏனெனில் சிதம்பரத்தில் பச்சையப்ப முதலியார் இஸ்கூல் கிராமமல்லாததாக தற்காலத்தில் காணப்படுகிறது.

அன்றியும் அவ்வலுவல் இராஜாங்க சம்பந்த அலுவலாகவிருந்தால் நன்றாக விருக்கும். அவ்வாறின்றி ஒருமையில்லாத சில இந்துக்கள் சம்பந்தமானதாகவிருக்கின்றது.

சிதம்பரம் தற்காலத்தில் நமது உயிர்த்துணைவராகிய நடராஜப் பெருமானைப் பற்றி நாம் போவதற்கும், இரண்டொரு தினம் இருப்பதற்கும் தக்கதேயன்றி வேறொரு வகையாலுந் தக்கதாகத் தோன்றவில்லை…”அதாவது அரசுப் பணியென்றால் கூட சிதம்பரத்துக்கு இடம்பெயரலாம். ஆசிரியராக பணிபுரிய இங்கே வரவேண்டாம்.

நடராஜப் பெருமானை தரிசிக்கத் தவிர சிதம்பரத்தில் வசிக்கக்கூடிய நிலை தற்போது இல்லை என்று தன்னுடைய மாணவருக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்.‘சிதம்பரத்துக்கு குடி பெயர வேண்டாம்’ என்று அவர் சொன்னதற்கு வேறு சில ஆதாரமான காரணங்களும் இருந்திருக்க வேண்டும்.
வள்ளலார் காலத்தை விடுங்கள்.

இன்றும் கூட திருச்சிற்றம்பலத்தில் தமிழில் பாடவே போராடவேண்டிய நிலைதானே தமிழருக்கு இருக்கிறது?
சிதம்பரத்தில் ஆகமபூஜை நடைபெறாமல் வைதீகபூஜை நடைபெற்று வந்ததைக் குறித்து வள்ளலாருக்கு குறை இருந்திருக்கிறது.கோயில் வழிபாட்டு முறைகள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

ஆகம விதிகளின்படியாக அந்த சீர்திருத்தங்கள் அமைந்திருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.தில்லைக்குரியது மகுடாகமம். அக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்து, பதஞ்சலியார் முறைப்படி நடைபெற்று வந்த வைதீகபூஜையை மாற்றி ஆகம பூஜையாகச் செய்ய வெண்டும் என்றெல்லாம் விரும்பியிருக்கிறார்.தீட்சிதர்கள் எதிர்ப்பால் அது நடைபெறவில்லை.

எனவேதான் வடலூரில், தானே ஓர் சிதம்பரத்தை பின்னாளில் உருவாக்கினார். அதுவே ‘உத்தரஞான சிதம்பரம்’ என்னும் சத்திய ஞானசபை.
வள்ளலாரின் சிதம்பரக் காலங்களில் தனக்குரிய உடை தேவையெனில் அவர், சென்னையிலிருந்த இரத்தின முதலியாருக்குத்தான் கடிதம் எழுதுவாராம்.
‘லாங்கிளாத்து பீசு வாங்கி அனுப்பவும்’ என்று அவர் எழுதும் கடிதத்தில் நலம் விசாரிப்பும் பிரமாதமாக இருக்கும்.வள்ளலாருக்கு நல்ல நகைச்சுவையுணர்வும் உண்டு.

இரத்தின முதலியாருக்கு திருமணம் ஆகியிருந்த புதிது.புதுமாப்பிள்ளைக்கு அவர் எழுதிய வாழ்வியல் ஆலோசனைக் கடிதவரிகளை வாசியுங்கள்.
‘சிரஞ்சீவி குமாரசாமி அவ்விடம் வருகிறபடியால் அவனுக்குப் படிப்பும் முயற்சியும் ஊதியமும் உண்டாகிற வகை எவ்வகை  அவ்வகை ஆராய்ந்து கூட்ட வேண்டும். பழமை பாராட்டலும், கண்ணோட்டம் செய்தலும் சுற்றம் தழுவலும் அவசியம் சமுசாரிக்கு வேண்டும். நீ இப்போது முன் மாப்பிள்ளை அல்ல  புது மாப்பிள்ளை  என்போல்வோர் மீது ஞாபகமிராது.

ஆதலால் ஞாபகப்படுத்தினேன்...’வாரிசு ஏற்படும் என்பதால் நல்ல கல்வி தரவேண்டும், அதற்கேற்ப சம்பாதிக்க வேண்டும் என்று சொல்வதோடு இல்லாமல் சுற்றத்திலும், நட்பிலும் நல்ல உறவு பேணவேண்டும் என்று ஆலோசனை சொல்வதோடு ‘புதுமாப்பிள்ளைக்கு என்னையெல்லாம் நினைவிருக்காது’ என்று குறும்பாகவும் சுட்டிக் காட்டுகிறார்.

அதே இரத்தின முதலியாருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே மனைவி காலமாகி விடுகிறார்.சுற்றமும், நட்பும் இளவயது இரத்தின முதலியார் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது.வள்ளலாரிடம் ஆலோசனை கேட்கிறார் அவர்.

‘பரமசிவனிடத்தே மாறாது மனதை வைத்துக்கொண்டு புறத்தே ஆயிரம் பெண்களை மணந்துகொள்ளலாம். எந்தக் காலத்தில்  எந்த இடத்தில்  எந்த விதமாக  எந்த மட்டில்  எதை அனுபவிக்க வேண்டுமோ.. அதை  அந்தக் காலம்  அந்த இடம்  அந்த விதம்  அந்த மட்டு  பொருந்தப் பொசிப்பிக்கின்றது.

திருவருட் சக்தியாய் இருந்தால் நமக்கென்ன சுதந்தரம் இருக்கிறது. எல்லாம் திருவருட்சக்தி காரியம் என்று சிந்தித்திருக்க வேண்டும். உண்மை இது...’ என்று கூறி, மறுமணம் செய்துகொள்ளுமாறு இவரும் கடிதத்தில் ஆலோசனை கூறுகிறார்.

வள்ளலார், தான் ஞானவாழ்க்கையை எட்டிவிட்டபோதும் தன்னுடைய மாணவர்களும், சுற்றி இருந்தவர்களும் இல்வாழ்க்கையில் இன்புற்று வாழவேண்டும் என்கிற அக்கறை கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதற்கு இந்நிகழ்வு சாட்சி.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்