பழைய பன்னீர்செல்வமா திரும்பவும் வருவோம்..!



நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் டிக்டாக் பிரபலங்கள்

ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை எல்லா பேட்டைகளையும் கலக்கிக்கொண்டிருந்த ஒரு app டிக்டாக். கோடிக்கணக்கான இந்தியர்களைக் கட்டிப்போட்டிருந்த டிக்டாக், திறமைகளை வெளிக்காட்ட ஒரு மைதானமாகவும் பொழுதைக் கழிக்க ஒரு பூங்காவாகவும் இருந்து வந்தது. அத்துடன் சினிமாவுக்கான நுழைவாயிலாகவும் இதைப் பயன்படுத்தி வந்தார்கள்.

திடீரென்று டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதன் பயனாளிகள் அப்படியே நிலைகுலைந்து போய்விட்டனர். சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் கூட நடந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலங்களைச் சந்தித்தோம்.

‘‘எலே பேப்பர் ஐடி...’’ என நெல்லைத் தமிழில் ஜி.பி.முத்து பேச ஆரம்பிக்கும்போதே நம்மையும் அறியாமல் சிரிப்பு வந்து
விடும். இவர் காட்டும் பலவிதமான முக ஜாடைகளும், கை அசைவுகளும் டிக்டாக்கில் அப்ளாஸை அள்ளும்.

‘‘என் பேரு பேச்சிமுத்து. ஆனால், ஜி.பி.முத்து என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். இதுவரைக்கும் டிக்டாக்ல ஏழு ஐடிக்களைப் பயன்படுத்தியிருக்கேன். பழைய ஐடி-யில் 11,550 வீடியோக்கள் போட்டிருந்தேன். அந்த ஐடியைத் தடை செஞ்சுட்டாங்க. இப்ப இருக்குற ஐடில 20,000 வீடியோக்கள் இருக்கு! ஒரு நாளைக்கு 60 - 70 வீடியோக்கள் எடுப்பேன். இந்த வீடியோக்களை எடுக்க எனக்கு ஒரு மணி நேரம் போதும். சும்மா இருக்கும்போதெல்லாம் வீடியோ எடுத்து வச்சுப்பேன். பிறகு அதை டிக்டாக்ல பதிவேற்றுவேன்.

நான் பதிவிடுற வீடியோவைக் கலாய்ச்சு பேப்பர்ல எழுதி டிக்டாக்ல ஒருத்தன் போடுவான். என்னைத் திட்டுற வீடியோவை நிறைய பேர் பார்ப்பாங்க. அதுக்காகவே நிறைய பேரு என்னைத் திட்டுற மாதிரியான வீடியோவை போடுவாங்க.

இதையெல்லாம் பெருசா கண்டுக்க மாட்டேன். ஜாலியா எடுத்துக்குவேன். நான் இந்த அளவுக்கு டிக்டாக்ல பிரபலமா இருக்கேன்னா அதுக்கு காரணம் என் ரசிகர்கள்தான். வெளியில போனாலே நிறைய பேரு என்கூட வந்து போட்டோ எடுக்குறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. டிக்டாக்கை தடை செஞ்சுட்டாங்கன்னு நண்பர்கள்தான் சொன்னாங்க. அதுல இருந்து சரியா சாப்பிடக்கூட முடியல. ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு.

இந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமா இன்ஸ்டாகிராம்ல நாலு சோகமான வீடியோவைப் போட்டிருக்கேன். ‘சிங்காரி’னு ஒரு app இருக்கு. அதுவும் டிக்டாக் மாதிரிதான். அதைத்தான் இனி நான் பயன்படுத்தப் போறேன். வீட்டுல டிக்டாக் பண்றதால அடிக்கடி சண்டை வரும். இருந்தாலும் டிக்டாக்கை நான் நிறுத்தவே இல்லை...’’ என்று சொல்லும்போதே ஜி.பி.முத்துவின் கண்கள் கலங்குகின்றன.

டிக்டாக்கில் கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்தவர் ‘ரவுடி பேபி’ சூர்யா. வித்தியாசமான உடையணிந்து லேசான கவர்ச்சிஉடன் டிக்டாக்கில் இவர் செய்யும் சேட்டைகளுக்கு குக்கிராமத்தில் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட கிராமத்துப் பெண் இவர்தான்.

‘‘கடந்த ஒரு வருஷமா டிக்டாக் பண்ணினேன். என்னோட ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியா 3 லட்சம் லைக்ஸ் வரும். பத்து லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்காங்க. தினமும் வீடியோ பண்ணி, டிக்டாக்ல ரிலீஸ் செய்தால்தான் மனசு நிம்மதியா இருக்கும். டிக்டாக் பண்றது கலாச்சார சீரழிவுன்னு சொல்றாங்க. நான் அதை ஏத்துக்க மாட்டேன்.

நிறையப் பேர் தங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ள டிக்டாக்கைப் பயன்படுத்தியிருக்காங்க. டிக்டாக் மூலமாத்தான் நிறையப் பேர் பிரபலம் ஆகியிருக்காங்க. பலபேருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைச்சிருக்கு.

இதெல்லாம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பங்கள். டிக்டாக் தடை செய்யப் போறதை நியூஸ்லதான் பார்த்தேன். இப்ப என் ரசிகர்களை ரொம்பவே மிஸ் பண்ணுறேன். டிக்டாக்ல எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க. அதுதான் என்னுடைய வளர்ச்சிக்கும் காரணம்.

அம்மா, அண்ணன், உறவினர்கள் எல்லாரும் நான் டிக்டாக் பண்றதால என்கிட்ட பேசமாட்டாங்க. அதை நான் பெரிதுபடுத்த மாட்டேன். ஏன்னா டிக்டாக்தான் என்னை பிரபலப்படுத்தியிருக்கு. இன்னைக்கு சினிமா, குறும்படங்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதுக்கு டிக்டாக்தான் காரணம். அதனால் டிக்டாக்கை நான் மறக்க மாட்டேன்...’’ என்று நெகிழும் சூர்யா, டிக்டாக் தடையை உடைத்து மீண்டும் இந்தியாவுக்கு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

‘‘இப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடுகிறோம்...’’ என்று கோரசாக சொல்கிறார்கள் ‘வண்க்கமுங்கோ’ ஷீலா மற்றும் ‘காத்து கருப்பு’ கலை. பாடல்கள், வசனங்களுக்கு டிக்டாக் செய்வதைத் தாண்டி, நேரடியாகவே பேசி புது ட்ரெண்டை செட் செய்தவர்கள். இவர்களின் காமெடி சேட்டைகள் ரொம்பவே ஸ்பெஷல்.

‘‘எங்களுக்கு கல்வி அறிவு ரொம்ப குறைவு. டிக்டாக்கைப் பயன்படுத்துவது ரொம்ப சுலபமா இருந்துச்சு. அதிகமான ஆப்ஷன் இருக்காது. இப்போ புதுசா வந்திருக்கிற appல நிறைய பட்டன்ஸ் இருக்கு. பயன்படுத்த ரொம்ப கஷ்டமா இருக்கு, படிக்காத கிராமத்து ஆளுங்க கூட பயன்படுத்துவது போல சுலபமான appபை உருவாக்குனா நல்லா இருக்கும்.

கொரோனா காலம் முடிவதற்குள் டிக்டாக் போலவே நிறைய apps வரும்னு நம்புறோம். அதில் எது சிறப்பாகவும் பயன்படுத்த எளிமையாகவும் உள்ளதோ அதில் மீண்டும் களம் இறங்கி கலக்குவோம்...’’ என்கிறார்கள் ஷீலாவும் கலையும் ஒரே குரலில்.

திலீபன் புகழேந்தி