பிளாக் பிரின்ட்டிங்கில் பெரிய லாபம்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


                         பிளாக் பிரின்ட் செய்யப்பட்ட சேலை மற்றும் துணி ரகங்களை, பெரிய பெரிய பொட்டிக்குகளிலும் துணிக்கடைகளிலும் மட்டுமே பார்க்கலாம். விலையைப் பார்த்துவிட்டு, ‘இதெல்லாம் பணக்காரங்களுக்கானது’ என்ற சமாதானத்தோடு அந்த இடத்தை விட்டு நகர்வார்கள் பலரும்.

‘‘பணக்காரங்க கட்டற அதே பிளாக் பிரின்ட் உடைகளை நீங்களும் கட்டலாம். அதுவும் உங்க கைப்பட நீங்களே பிரின்ட் பண்ணி, குறைஞ்ச செலவுல உடுத்தலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த அருணா விஜயகுமார். ‘மைத்ரி’ என்கிற பெயரில் பிளாக் பிரின்ட் யூனிட் வைத்து நடத்துகிற அருணா, தன்னிடம் தொழில் கற்றுக்கொண்ட பலர், இன்று பல இடங்களிலும் வெற்றிகரமான தொழிலதிபர்களாக இருப்பதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

‘‘கல்யாணமான புதுசுல என் கணவருக்கு பிளாக் பிரின்ட்டிங் பண்றதுதான் பிசினஸ். பக்கத்துல இருந்து பார்த்துக் கத்துக்கிட்டேன். அப்புறம் ஒரு கட்டத்துல அவர் எங்களோட டெக்ஸ்டைல் பிசினஸ்ல பிசியானதுமே, நான் பிளாக் பிரின்ட்டிங்கை எடுத்துப் பண்ண ஆரம்பிச்சேன். எனக்குத் தெரிஞ்சதை நாலு பேருக்குக் கத்துக்கொடுக்க நினைச்சேன்’’ என்கிற அருணா, கற்றுக்கொள்ள நினைப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘ஆபீஸ் டேபிள், பிளாக்ஸ், கலர்ஸ், தேவையான துணி மெட்டீரியல்... 5 ஆயிரம் முதலீடு போதும். பெரிய இட வசதியெல்லாம் தேவையில்லை. பிரின்ட் போட்டதும், வெயில்ல காய வச்சு எடுத்தா முடிஞ்சது.’’

என்ன ஸ்பெஷல்?

‘‘நமக்குப் பிடிச்ச ஒரு டிசைன்ல, நாமளே நம்ம கைப்பட நம்ம டிரஸ்ஸை டிசைன் பண்ணிக்க முடியும்ங்கிற சந்தோஷம்தான் ஸ்பெஷல். தேக்கு மரத்துல செய்த பிளாக்ஸ் வச்சு கைகளாலயே பண்றதால, டிசைன்ஸ் கச்சிதமா வரும். எத்தனை காலமானாலும் அழியாது. பியூர் காட்டன், பியூர் சில்க், சில்க் காட்டன், பாலிகாட்டன், சூப்பர்நெட் மாதிரி துணிகள்ல பிரமாதமா பண்ணலாம். சேலை, சல்வார், டாப்ஸ், பைகள், படுக்கை விரிப்பு, தலையணை உறைன்னு எதுல வேணாலும், எந்த கலர்லயும் பிளாக் பிரின்ட் பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘ஒரு சேலைக்கு பிளாக் பிரின்ட் டிசைன் பண்ணித் தர 200 & 300 ரூபாய் வாங்கலாம். டிசைனைப் பொறுத்து ஒரு நாளைக்கு 5 முதல் 10 புடவைக்கு போடலாம். பொட்டிக் மாதிரியான இடங்கள்ல இன்னிக்கு பிளாக் பிரின்ட் செய்ய ஆளில்லை. அங்கேயும், புடவைக்கடைகள்லயும் ஆர்டர் எடுக்கலாம். சின்ன அளவுல ஆர்டர் கிடைச்சாலே பெரிய லாபம் பார்க்கலாம்.’’

பயிற்சி?

‘‘வெறும் 2 மணி நேரப் பயிற்சி... கட்டணம் 300 ரூபாய்.’’
 ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்