பிரிவு எனப்படுவது



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                ஒருவர் அல்லது ஒன்றைவிட்டு மற்றொருவரோ மற்றொன்றோ நீங்குவதே பிரிவு.

ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தியபோது கையாண்ட உத்தி, பிரித்தாளும் சூழ்ச்சி (Divide and Rule) எனப்பட்டது.

இளமையைப் பிரிவதால் வருவது முதுமை. இல்லறத்தைப் பிரிவதால் துறவறம். தாயின் வயிற்றில் இருந்து குழந்தை பிரிவது பிரசவம். உடலை விட்டு உயிர் பிரிவது மரணம்.

கூட்டணிக்கட்சி பிரிந்தால் கூட்டணி முறிவு. அறுவை சிகிச்சை மூலம் உறுப்புகளைப் பிரித்தல் ‘ஆம்புடேஷன்’ எனப்படுகிறது.

தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பதும் ஒரு வகையான பிரித்தெடுத்தல்தானே? சில இனங்கள் மட்டும் மற்றவைகளிலிருந்து பிரிந்து, தொடர்ந்து உயிர் வாழும் கோட்பாட்டை Natural Selection   என்பார்கள் பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சியாளர்கள்.

ஓருடலில் இருந்து பிரிந்து இன்னோர் உடலுக்குத் தாவுவதைக் ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ என்பார்கள்.

 அணு உலைகளில் அணுவிலிருந்து எலக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போன்றவற்றைப் பிரிப்பதை ‘அணுவைப் பிளத்தல்’ என்பார்கள். ஓர் உலோகத்தின் மூலப் பொருளான தாதுவிலிருந்து அந்த உலோகத்தைப் பிரித்தெடுப்பது எக்ஸ்ட்ராக்ஷன்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஒரு நாட்டில் இருந்து தனியே பிரிந்து வேறு பல நாடுகள் உதயமாகியிருக்கின்றன. சுதந்திரத்தின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. 1972ல் பாகிஸ்தானிடமிருந்து வங்க தேசம் பிரிந்தது. தனிநாடு கோரிக்கை வைப்பவர்களைப் பிரிவினைவாதிகள் என்று அழைப்பதுண்டு.

இந்தியாவில் மாநிலங்களும் இப்படிப் பிரிந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்குமுன் சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தராஞ்சல் மாநிலங்கள் இப்படித்தான் உதயமாகின. இப்போதுகூட ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலம் ஆக்கக் கோரி அங்கு தினம் தினம் போராட்டம் நடக்கிறது. மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது சென்னை, திருத்தணி போன்ற பகுதிகள் தமிழ்நாட்டிலிருந்து பிரிந்துபோகாமல் இருந்ததற்கு ம.பொ.சி. ஆற்றிய பங்கு மகத்தானது.

சொத்துகளை விரும்பியவர்களுக்கு உயில் எழுதிக் கொடுப்பதை, சொத்து பிரிப்பது என்றே சொல்வார்கள். சீட்டாட்டத்திலும், மாமூலிலும், கொள்ளையிலும் ‘பங்கு பிரிப்பது’ வழக்கம்!
தலைவனும் தலைவியும் காதல் கொண்ட பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிக்க இயலாதபடி காதலில் கட்டுண்டனர் என்பதை ‘செம்புலப் பெயல் நீர்’ என்ற புகழ்பெற்ற உவமையால் சங்கப் பாடல் குறிக்கிறது. வைரமுத்து எழுதிய ஒரு சினிமா பாடலில், ‘கடலில் வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத் துளி’ என்று ஒரு வரி வரும்.

புதுமணத் தம்பதிகளை ஆடி மாதம் ‘சேராமல்’ பிரித்து வைக்கும் வழக்கம் பல சமூகங்களில் நிலவுகிறது.

இயல்பான வளர்ச்சிக்கு செல்கள் முறையாகப் பிரிதல் அவசியம். செல்களின் பிரிவு அசாதாரணமாக இருக்கும்போது கட்டிகளும் புற்றுநோயும் தோன்றுகிறது.

பிரிவை பாடலில் வடிப்பதென்றால் சினிமா கவிஞர்களுக்கு லட்டு சாப்பிடுவது போல. ‘உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு துயர் இருக்கும்’, ‘உறவைத்தானே நான் நினைத்தது... பிரிவு வந்து ஏன் அழைத்தது’ என்பதுபோல ஏராளமான பாடல்கள் பிரிவைப் பாடியவை. இவை காதலில் ஏற்படும் பிரிவுகளை துயரத்தோடு விவரிக்கும் பாடல்கள்.
யானை முகாம்களில் இருக்கும் யானைகள் போடும் குட்டியை, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தாய் யானையிடம் இருந்து பிரித்து விடுவார்கள். இந்தப் பிரிவை ‘வீனிங்’ என்பார்கள்.

மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வு இது. பழக்கப்பட்ட இரண்டு முகாம் யானைகள் மூலம், பிரிக்க வேண்டிய தாய் யானையைக் குட்டியிடம் இருந்து மெல்ல அப்புறப்படுத்துவார்கள். குட்டி யானைக்குப் பிடித்த கரும்பு, வெல்ல உருண்டைகள், வாழைத்தண்டு போன்றவற்றை ஒரு கூண்டில் வைத்து அந்தக் கூண்டின் சட்டங்களை இலைதழைகளால் மறைத்து வைப்பார்கள். குட்டி ஏமாந்து கூண்டுக்குள் வந்ததும் கதவு மூடப்படும். ஒருபுறம் குட்டியைக் காணாமல் தாய் யானை பெரிய ரகளையில் ஈடுபடும்; இன்னொருபுறம் குட்டி யானை கூண்டின் மரச் சட்டங்களில் மண்டையால் மோதி ஆர்ப்பாட்டம் பண்ணும். அந்த கூண்டின் மரச் சட்டங்களில் ஏற்கனவே எண்ணெய் பூசி வைத்திருப்பார்கள். இப்படியே சில நாட்கள் சென்றதும் தாய் யானை சகஜநிலைக்கு வரும். குட்டியின் அவல ஓலம் தாயின் காதுகளில் கேட்காத தூரத்துக்கு அது அப்புறப்படுத்தப்படும்.

‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்ற சொலவடை ஒன்றும் இருக்கிறது. மிகவும் நெருங்கியவர்களின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கும் தவிப்பு ‘பிரிவுத் துயர்’ எனப்படுகிறது.

பணியில் இருப்பவர்கள் பிரிவு என்பதை இரண்டு கட்டங்களில் சந்திப்பார்கள். இட மாறுதல் அடைந்து வேறு அலுவலகம் செல்லும்போதும், பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்போதும் பிரிவினைச் சந்திப்பார்கள். பொதுவாக மிக அதிகமாகப் பொய் பேசப்படும் சந்தர்ப்பங்களாக இந்த இரண்டும் அமைவது வழக்கம்!

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ‘ஃபேர்வெல் டே’ என்ற ஒன்றை இறுதி வகுப்பு அன்று கொண்டாடுவார்கள். சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த, ‘ரத்தத் திலகம்’ படத்தில் இடம்பெற்ற ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடல் அன்றைய தினம் கண்டிப்பாக ஒலிக்கும். இந்தப் பிரிவின்போது ஆட்டோகிராப் வாங்குவதும், முகவரி, தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொள்ளுவதும் வாடிக்கை.

‘திருவிளையாடல்’ படத்தில் சிவபெருமானுக்கும் தருமிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான கேள்வி & பதில் நிகழ்ச்சியின்போது, ‘பிரிக்க முடியாதது எது?’ என்ற கேள்விக்கு சிவபெருமான் ‘தமிழும் சுவையும்’ என்று பதில் சொல்வார்.

‘பிரிவு’ பற்றிய ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை, கனடாவைச் சேர்ந்த ஜெயபாரதன் மொழிபெயர்த்ததிலிருந்து சில வரிகள்...

‘மரணத் துயர் போல ஏனையப் பிரிவுத் துன்பந்தான் பரவி வருகிற திப்போது, தரணி எங்கணும்!’
(எனப்படுவதிலிருந்து இப்போது பிரிவோம்...
மீண்டும் சந்திப்போம்!)
 லதானந்த்