தல sixers story-6



வெறித்தனம்!

ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்த தெம்போடு அடுத்தப் போட்டியை சந்தித்தது இந்தியா.இம்முறை அவர்கள் எதிர்கொண்டது பலமிக்க தென்னாப்பிரிக்கா அணியை.அப்போட்டித் தொடரில் அதுவரை தோல்வியே காணாத அணியாகவும் தென்னாப்பிரிக்கா இருந்தது.
போதாக்குறைக்கு சிக்ஸர் நாயகன் யுவராஜ்சிங் வேறு முழங்கை வலி காரணமாக அந்தப் போட்டியில் விளையாடவில்லை.டாஸ் வென்றது இந்தியா.வழக்கம்போல பேட்டிங்கை தேர்வு செய்தார் தோனி.காம்பிரும், சேவாக்கும் ஓப்பனர்களாக விளாச
ஆரம்பித்தனர்.

ஆனால், ஐந்தாவது ஓவரில் காம்பிர் அவுட்.உள்ளே வந்த தினேஷ் கார்த்திக், முதல் பந்திலேயே காலி.அடுத்த இரு பந்துகளிலேயே சேவாக்கின் விக்கெட்டையும் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த ராபின் உத்தப்பா பதினோராவது ஓவரில் பெவிலியன் திரும்பினார்.

61 ரன்களுக்கு முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்துத் தடுமாறியது இந்தியா.ரோஹித் சர்மா மட்டும் ஒரு முனையில் நின்று போராடிக் கொண்டிருக்க, அவருக்கு கைக்கொடுக்க உள்ளே வந்தார் ‘தல’ தோனி.

கடைசி ஓவர் வரை இந்த ஜோடி பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசி கவுரவமான ஸ்கோராக 153ஐ எட்டினர்.கிப்ஸ், க்ரீம் ஸ்மித், டீவில்லியர்ஸ், கெம்ப், பவுச்சர், போல்லாக் என்று அதிரடியான பேட்டிங் வரிசையைக் கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு சுலபமான இலக்குதான்.பேட்டிங் செய்யும்போது ஏற்பட்ட முதுகுவலி காரணமாக தோனியால் விக்கெட் கீப்பிங் கூட செய்ய முடியவில்லை.இந்திய அணியின் பாரம் மொத்தமும் பவுலர்கள் கையில் சாய்ந்தது.அதை திறம்பட சுமந்தார் ஆர்.பி.சிங்.

அவருடைய துல்லியமான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசையே நிலைகுலைந்தது.அந்தப் போட்டியில் அவர் வீசிய முதல் பந்திலேயே கிப்ஸ் எல்பிடபிள்யூ.நான்காவது பந்தில் ஸ்மித்தை அகற்றினார்.தொடர்ந்து டீவில்லியர்ஸை ஸ்ரீசாந்த் எல்பிடபிள்யூ செய்ய, கெம்ப் ரன் அவுட் ஆனார்.தென்னாப்பிரிக்க அணியின் முதல் நான்கு வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்கள்.

பவுச்சரும், மார்க்கெல்லும் மட்டும் ஓரளவுக்கு தாக்குப் பிடிக்க 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது தென்னாப்பிரிக்கா.
அது மட்டுமில்லாமல் ரன்ரேட் அடிப்படையில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் உலகக்கோப்பையை நடத்திக் கொண்டிருந்த அந்த அணி இழந்தது.பலமான அணியை வீழ்த்திய தன்னம்பிக்கையோடு செமி ஃபைனலுக்குள் நுழைந்தது தோனி தலைமையிலான இந்தியா.செமி ஃபைனலில் இந்தியா எதிர்கொள்ள இருந்த அணி ஆஸ்திரேலியா.

ஐந்து மாதங்களுக்கு முன்புதான் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருந்த ஆஸ்திரேலியா, முதல் டி20 உலகக் கோப்பையையும் வென்றே தீரவேண்டும் என்கிற வெறியோடு இருந்தது.முந்தையக் கோப்பை தொடரில் கேவலமாக வெளியேறிப் பெற்றிருந்த அவமானத்தைத் துடைக்கும் வெறி இந்தியாவுக்கு இருந்தது.

இதற்கிடையே செமி ஃபைனலுக்கு இந்தியா முன்னேறிவிட்டது என்கிற நிலையில், இந்தியாவில் டி20 வெறி உச்சத்துக்குப் போயிருந்தது.

நாட்டின் கடைக்கோடி குடிமகனில் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக பிரார்த்திக்கத் தொடங்கி
யிருந்தார்கள்.வழக்கம்போல டாஸ் வென்று பேட்டிங்கையே தேர்ந்தெடுத்தார் தோனி.முழங்கை வலி குறைந்து யுவராஜ்சிங்கும் வந்திருந்தது அவருக்கு தெம்பைக் கொடுத்திருந்தது.

ஆஸ்திரேலிய பவுலர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் ரன் சேகரிக்க இந்தியா திணறியது.15வது ஓவரில்தான் 125 ரன்னையே எட்டியது. அப்போது உத்தப்பாவின் விக்கெட் விழ, களத்தில் இருந்த யுவராஜ் சிங்கோடு தோனி பார்ட்னர்ஷிப் அமைத்தார்.ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் -வெறித்தனம்.

5 சிக்ஸர், 5 பவுண்டரிகளோடு 30 ரன்களில் 70 ரன் விளாசினார் யுவராஜ்சிங்.4 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி வெறும் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார் தோனி.இவர்களது இருவரின் அதிரடி பார்ட்னர்ஷிப்பால் 188 என்கிற சவாலான ஸ்கோரை எட்டியது இந்தியா.ஆனால், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களும் ஊழித்தாண்டவம் ஆடினார்கள்.

ஹேடன், சைமண்ட்ஸ் இருவரும் இந்திய பவுலர்களை கடுமையாகத் தண்டித்தார்கள்.கடைசி 24 பந்துகளில் 41 ரன்கள்தான் தேவை என்கிற நிலையில் ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதி என்றே அனைவரும் நினைத்தார்கள். கைவசம் 7 விக்கெட் வேறு இருந்து.இந்நிலையில் ஃபுல் பிக்கப்பில் இருந்த சைமண்ட்ஸுக்கு ஸ்டெம்ப்பு எகிற வைத்தார் இர்ஃபான் பதான்.

கடைசி 3 ஓவரில் 30 ரன்கள் தேவை.ஆஸ்திரேலியாவுக்கு இது தூசுதான்.ரொம்ப நேரம் யோசித்த தோனி, பந்தை ஹர்பஜன்சிங்கிடம் கொடுத்தார்.ஹர்பஜனின் அனுபவம் மட்டுமே அணியை கரை சேர்க்க முடியும் என்று நினைத்தார்.அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.அந்த ஓவரில் ஒரு விக்கெட் சாய்த்ததோடு, வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் ஹர்பஜன்.

கடைசி இரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலியா தடுமாற 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கம்பீரமாக இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்தியா.
அதே நாளில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்பாகவே இன்னொரு அரையிறுதிப் போட்டியின் ரிசல்ட்டும் வெளியாகி இருந்தது.அந்த ரிசல்ட் இந்திய வீரர்களுக்கு மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் பிளட் பிரஷரை எகிறச் செய்திருந்தது.

யெஸ்.

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையே நடந்திருந்த அந்த அரையிறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.எனவே - இறுதிப்போட்டி இந்தியாவுக்கும், பாகிஸ் தானுக்கும்.

ஏனோதானோவென்று செலக்ட் செய்து அனுப்பப்பட்ட இந்திய அணி, ஃபைனலுக்கு எல்லாம் போகுமென்று யார்தான் நினைத்திருப்பார்கள்?

அதுவும் இறுதிப் போட்டி, பரம எதிரி பாகிஸ்தானுடன்.கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் தலைவரான சரத்பவார், தோனிக்கு போன் போட்டு கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் கேட்டார்.

“இதுவரை ஜெயிச்சது எல்லாம் பெருசில்லை தம்பி. பாகிஸ்தான் கிட்டே மட்டும் தோத்துடக்கூடாது. கப் இல்லாமே கூட நீங்க ஊருக்குள்ளே வந்துடலாம். ஆனா, பாகிஸ்தானிடம் தோத்துட்டு வந்தா…”உலகக்கோப்பையில் தோற்று விட்டு திரும்பியபோது தாயகத்தில் கிடைத்த ‘மரியாதை’ தோனிக்கு நிழலாடியது.எனினும் மிஸ்டர் கூல் கேப்டன் மிரட்சியடையவில்லை. உற்சாகமானக் குரலில் சொன்னார்.“கோப்பையோட வர்றோம் சார். பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க!”

(அடித்து ஆடுவோம்)

செய்தி: யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்