ரத்த மகுடம்-105



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘ஒன்றும் புரியவில்லையே விநயாதித்தா..?’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் தலையில் கைவைத்துக் கொண்டார். ‘‘என் இத்தனை வருட அனுபவத்தில் இதுபோல் வேறெப்போதும் நான் குழம்பியதில்லை...’’ தலையை உலுக்கியபடி சாளரத்தை வெறித்தார்.

இருளும் ஒளியான சூழலில் காட்சிகள் துல்லியமாகத் தெரிந்தன. ஆங்காங்கே வீதிகளில் எரிந்து கொண்டிருந்த பந்த வெளிச்சங்களும் மாளிகைகளின் வாசலில் கண்சிமிட்டிய விளக்கின் ஒளியும் பழுதின்றி விழுந்ததால் நடப்பதை அவரால் நன்றாகவே பார்க்க முடிந்தது.

பாண்டிய வீரர்களால் சூழப்பட்ட கரிகாலனையும், மாளிகையின் உச்சியில் இருந்த கைப்பிடி சுவரில் நிதானமாக குதிரை நடைபோட்டதையும், அதன் மீது கம்பீரமாக அமர்ந்திருந்த சிவகாமியையும் இமைக்காமல் பார்த்தார்.

கரிகாலன் சட்டென்று மேல் நோக்கி செய்கை செய்ததும் நிமிர்ந்தார்.இதனையடுத்து சிவகாமி தன் இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து அவன் மார்பை நோக்கி வீசியதும் அதிர்ந்தார்!‘‘என்ன இது... கரிகாலனை கொல்லவே சிவகாமி துணிந்து விட்டாளா... அப்படியானால் உண்மையிலேயே அவள் என் சிஷ்யைதானா... சாளுக்கியர்களின் ஒற்றர்படைத் தலைவிதானா...’’ விநயாதித்தனை பார்த்து படபடத்தார்.

விநயாதித்தன் பதிலேதும் சொல்லவில்லை. அவன் கண்கள் மட்டும் முன்னிலும் அதிகமாக சுருங்கின. கூர்மையடைந்தன.

‘‘ஏன் அமைதியாக இருக்கிறாய் விநயாதித்தா..?’’‘‘அங்கே பாருங்கள் குருவே...’’‘‘கரிகாலன் மண்ணில் சாய்ந்துவிட்டானா?’’
‘‘சாய்த்துக் கொண்டிருக்கிறான்!’’அதிர்ச்சியுடன் தன் பார்வையைத் திருப்பி கரிகாலன் மீது பதித்தார்.

தன் கால்களால் வீடுகட்டியபடியே பாண்டிய வீரர்கள் தன்னை நெருங்காதபடி பார்த்துக் கொண்ட கரிகாலன், தன்னை நோக்கி குறுவாள் வந்ததும் பின்னோக்கி சாய்ந்தான்.ஆனால், தரையில் தன் தலையைப் பதிக்கவில்லை.மாறாக கால்களுக்கும் தலைக்கும் இடையில் சமமாக தன் மார்புப் பகுதி இருப்பதுபோல் சாய்ந்தவன், வந்த குறுவாளின் கைப்பிடியை லாவகமாகப் பிடித்தான்.மறுகணம் தன் உடலை நிமிர்த்தினான்.

பழையபடி நின்றான்.அவன் கரங்களில் இருந்த குறுவாளைப் பார்த்து பாண்டிய வீரர்கள் நகைத்தார்கள்; தாங்கள் பிடித்திருந்த வாட்களை இறுமாப்புடன் நோக்கினார்கள்.முன்னால் இருந்த வீரர்களின் தலைவன், தன் வாளை தன் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்தான்.

பந்தத்தின் ஒளி, வாளில் பட்டது. அதனால் உண்டான ஒளியில் அவன் முகம் பிரகாசித்தது.கண்களால் அலட்சியமாக சிரித்தபடி கரிகாலனை நோக்கினான்.

மெல்ல மெல்ல வீரர்களின் தலைவன் நிலைகுலைந்தான். அவன் புருவங்கள் ஆச்சர்யத்தில் அகலமாக விரிந்தன.உதடுகளை சற்றே திறந்தபடி பார்த்தான்.இப்போது நகைப்பது கரிகாலனின் முறையாக இருந்தது.பூச்சி ஊர்ந்தால் கைகளை உதறுவோமே... அப்படி கரிகாலன் குறுவாள் பிடித்திருந்த தன் கரத்தை உதறினான்.மறுகணம் அது மெல்லிய... அதேநேரம் வலுவான வாளாக நீண்டது!‘‘அது சீனர்களின் ஆயுதம்...’’ இரணதீரனை நோக்கித் திரும்பாமல் சொன்னார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘ஊகித்தேன் தந்தையே...’’ ‘மன்னர்’ என்ற அடைமொழியை தவிர்த்துவிட்டு சொன்னான் இரணதீரன்.
‘‘எப்படி ஊகித்தாய்?’’ வாயைத் திறந்து கேட்காமல் தன் மவுனத்தால் வினவினார் பாண்டிய மன்னர்.

‘‘பாண்டிய இளவரசனான இராஜசிம்மனுக்கு சீனர்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு. தமிழகத்தை சேர்ந்த அனைத்து சீன வணிகர்களும் அவன் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள்...’’‘‘ம்...’’

‘‘கரிகாலனும் இராஜசிம்மனும் ஒட்டிப் பிறந்த இரட்டை வாழைகள்... எனவே கரிகாலன் மீதும் சீனர்கள் அன்பைப் பொழிகிறார்கள்... தவிர மதுரைக்கு சிவகாமியுடன் மட்டும் கரிகாலன் வரவில்லை... கூடவே சீனன் ஒருவனும் வந்தான்... ஆனால், அவன் மதுரைக்குள் நுழைந்ததுமே மறைந்துவிட்டான்...’’
‘‘இப்பொழுது அவன்தான் வைகை ஆற்றங்கரையில் மறைந்தபடி புறாக்களை பறக்கவிட்டிருக்கிறான்...’’ கண்களில் சாந்தம் வழிய சொன்னார் அரிகேசரி மாறவர்மர். அவரது குரலில் தன் மகன் இரணதீரன் மீதான பெருமை வழிந்தது.

கணத்துக்கும் குறைவான நேரத்தில் தன் தந்தையை ஏறிட்ட இரணதீரன், அன்னாந்து பார்த்தான்.‘‘புறாக்களைத் தேடுகிறாயா..?’’ நகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.‘‘இல்லை மன்னா...’’ ‘‘பிறகு?’’‘‘புறாக்கள் என்பது மனிதர்களைக் குறிக்கும் சமிக்ஞை என்றால்... எந்தெந்த மனிதர்களை அது குறிப்பிடுகிறது என யோசிக்கிறேன்...’’

அருகில் வந்து தன் மகனை தோளோடு அணைத்தார் பாண்டிய மன்னர். ‘‘முதலில் நடப்பதைப் பார்... பிறகு யோசிக்கலாம்... ஏனெனில் கரிகாலனின் வாள் வீச்சை நீ கண்ணார காண வேண்டும்... அப்பொழுதுதான் வருங்காலத்தில் பாண்டிய அரியணையில் நீ அமர்ந்ததும் பல்லவர்களை தக்க முறையில் கையாள முடியும்... தமிழர்களின் மல்யுத்தக் கலையை எப்படி அநாயாசமாக சீனர்களின் யுத்தக் கலையுடன் கலக்க முடியும் என்பதை இக்கணத்தில்தான் நாம் அறிய முடியும். இத்தருணத்தை தவறவிட்டால் பின்னால் ஒருபோதும் இந்த வித்தையை நாம் கற்க முடியாமலேயே போகும்...’’

மல்யுத்த வீரன் போலவே தன் கால்களால் வீடு கட்டிய கரிகாலன், இமைக்கும் நேரத்தில் தன் வாளை உயர்த்தியபடி தன்னைச் சூழ்ந்திருந்த வீரர்களின் மீது பாய்ந்தான்.

சிலம்பைச் சுற்றுவதுபோல் தன் வாளை கரிகாலன் சுழற்றியதால் சூழ்ந்த பாண்டிய வீரர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள சிதறினார்கள்.இதனால் பெரு வட்டம், சிறு சிறு வட்டங்களாகின.இதன் பிறகு ஒவ்வொரு வட்டமாக கரிகாலனால் எளிதில் பந்தாட முடிந்தது.

அதை மீறி பாண்டிய வீரர்கள் ஒன்றிணைய முற்பட்டபோதெல்லாம் கரிகாலன் தன் வாளை ஓங்கியபடி குதித்தான். அருகிலிருந்த மாளிகைகளின் சுவரில் கால் வைத்து எகிறினான். சுவர் விட்டு சுவர் தாவினான். முன்னால் வந்த வீரர்களின் மீது விழுந்தான்.

எல்லோருக்கும் காயம் ஏற்படுத்தினானே தவிர யார் மீதும் தன் வாளை அவன் பாய்ச்சவில்லை.இத்தனைக்கும் கரிகாலனின் வாள் முனை பலமுறை பல வீரர்களின் மார்பைத் தொட்டது. ஆனால், ஊடுருவவேயில்லை!‘‘விநயாதித்தா...’’ ராமபுண்ய வல்லபர் அழைத்தார்.

பதிலேதும் வரவில்லை.உலுக்கினார். ‘‘விநயாதித்தா...’’‘‘கொஞ்சம் பொறுங்கள் குருதேவா...பல்லவர்களின் போர் முறை எப்படியிருக்கும் என்பதை கரிகாலன் நமக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறான்! இதை எந்தளவுக்கு இப்பொழுது நாம் உள்வாங்குகிறோமோ அந்தளவுக்கு பல்லவர்களுடன் நாம் போர் புரியும்போது வியூகம் வகுக்க முடியும்... சற்று அமைதியாக இருங்கள்...’’‘‘விநயாதித்தா...’’

‘‘தொந்தரவு செய்யாதீர்கள்...’’ விநயாதித்தனின் உதடுகள் எரிச்சலுடன் உச்சரித்தன. பார்வையை மட்டும் கரிகாலனை விட்டு அவன் அகற்றவில்லை.
தன் வாள் வீச்சினால் பாண்டிய வீரர்களை ஒரு பக்கமாக சேர்த்து அனைவரையும் பின்னோக்கி நகர வைத்தபடியே தாங்கள் இருந்த தெருவின் முனைக்குச் சென்ற கரிகாலன் வலது பக்கமாகத் திரும்பினான்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை விநயாதித்தனால் பார்க்க முடியவில்லை.‘‘இப்போது சொல்லுங்கள் குருதேவா...’’ அமைதியாக ராமபுண்ய வல்லபரை நோக்கித் திரும்பினான். ‘‘என்ன விஷயம்?’’‘‘நான் அழைத்தபோதே நீ திரும்பியிருந்தால் சிவகாமியை பார்த்திருப்பாய்...’’
‘‘ஏன் அவளுக்கென்ன..?’’

‘‘மறைந்துவிட்டாள்!’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் பற்களைக் கடித்தார். ‘‘எங்குச் சென்றாள் என்றுத் தெரியவில்லை...’’
‘‘நம் மன்னரைக் காண சென்றிருக்கிறாள்!’’‘‘என்ன...’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் அதிர்ச்சி. ‘‘நம் மன்னரையா..?’’
‘‘ஆம்! சாளுக்கிய மன்னரை!’’‘‘எதற்கு?’’‘‘மதுரை பாதாள சிறையில், தான் எடுத்த ரகசியத்தை அவரிடம் ஒப்படைக்க!’’

(தொடரும்)

செய்தி:கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்