லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது...!



காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது

‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம்தான் இசையமைப்பாளர் சி.சத்யாவுக்கு விசிட்டிங் கார்டு. அதற்கடுத்து எத்தனையோ பாடல்களை இசையால் அழகாக்கியவர் அவர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அதிர்வுகளை ஏற்படுத்துவது சத்யாவின் பாணி. பாடல்களில் இனிமையையும், அமைதியையும் இதயத்தசையில் மெலிதாக இறக்கும் சத்யாவின் லவ் ஸ்டோரி இது.முதலில் நான் தரிசித்த பெண் அம்மாதான்.
சின்ன வயதில் பெரம்பூருக்கு அருகில் இருக்கிற திரு.வி.க.நகரில் வளர்ந்தேன். அந்தக் காலத்தில் அந்த ஏரியா முரட்டுத்தனத்திற்கு பெயர் பெற்றது. ஆனாலும் மக்கள் கனிவுடன் பழகுவார்கள்.
அப்பா அன்பை எப்போதும் வார்த்தையில் காட்டமாட்டார். அவருக்கு கோபத்தின் துணையோடுதான் எதையும் சொல்ல வரும். அம்மா கேஎம்சியில் பணி செய்ததால் காலையில் அரக்க பரக்க எழுந்து வேலை செய்து கொண்டிருப்பார்.

என்னை வளர்த்ததெல்லாம் ராஜாம்பாள் அத்தைதான். அவர் எங்கள் வீட்டிலேயே இருந்து எங்களை கவனித்து ஆளாக்கினார். காலையில் தூக்கத்தில் இருந்து எழுப்பி எங்களை பள்ளிக்கு அனுப்பும் வரை வேலையை அன்பு கனிந்து செய்வார். அவர் சமைத்தால் நாள் பூராவும் மணக்கும். நாங்கள் சாப்பிட வரும் போது தட்டில் வகை பிரித்து வைத்திருக்கும், தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதத்தைப் பார்க்கவே அழகாக இருக்கும்.

அவரிடம் நான் உணர்ந்தது, கொஞ்சமும் எதிர்பார்ப்பு இல்லாத வார்த்தைக்குள் அகப்படாத அன்பு. விருப்பு வெறுப்புகளில் மிதமாக இருக்கவும், உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் அவர்தான் கற்றுகொடுத்தார்.

அப்பா திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்து, கஷ்டத்தின் அத்தனை பக்கங்களையும் பார்த்துவிட்டே பிறகு சிம்சனில் வேலை செய்தார். அப்பாவுக்கு இசையில் ஈடுபாடு உண்டு. நன்றாக பாடவும் ஹார்மோனியம் வாசிக்கவும் தெரியும்.

அவர் திருச்சியில் இருந்த போது அதே வீதியில் தியாகராஜ பாகவதர் இருந்தார். அவர் பாடிய பாடல்களை அப்பா அப்படியே சுருதி குறையாமல் பாடுவார். அப்பாவுக்கு தன் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளவோ, நிதானித்து சரிசெய்யவே நேரம் போதவில்லை. பதிலாக எங்கள் மீது அவரின் விருப்பத்தை சுமத்தினார்.

ஆரம்பத்தில் அது பெரும் சுமையாக இருந்தது. பிறகு அது எனது விருப்பமாக மாறியது. இசை மனதை சாந்தப்படுத்தி குதூகலிக்க செய்கிறது. பாமரனை வாழச் செய்கிறது. சகலமாய்க் கேட்கும் ஓசைகளில் சப்தங்கள் மட்டும் இசையாகப் பிரிகிறது. இசை மட்டுமே வாழ்க்கையாகி விடாதுதான்.

அதே நேரம் இசை இல்லாமல் நாமில்லை. அதற்கு என்னை தயார்படுத்திய அப்பாவை மறக்க முடியாது. சின்ன வயதில் பாட்டு கற்கும் பொழுது நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இசையும், பாடலும், கற்றுக்கொள்ளுதலும் ராகமும் இணைந்த தெய்வீகத் தருணங்களாக அவை இருந்திருக்கின்றன.

ஒரு கோடு கிழித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான உலகங்களை நாமே உருவாக்கிவிட்டோம். காதலுக்கு அடிப்படை அன்பு! அன்பு
என்பது என்ன? நாம் நேசிக்கிற விஷயத்தின் நன்மை வேண்டுவதுதானே. ரோஜாவை நேசிக்கிறோம் என்றால், அதை செடியிலேயே இருக்கப் பார்த்து ரசிக்கப் பழகுவதுதானே அன்பின் வெளிப்பாடு. அதைப் பறிக்கிற நினைப்பு வந்தாலே... அது நம் தேவை சார்ந்த விஷயமாகி விடுகிற போது பிறகு அன்பு எங்கே இருக்கிறது!

காதல் என்பது அன்பின் பரிமாணம்! ஒரு பெண்ணை நேசிக்கிறோம். காதலென்பதை விடவும் அவளுக்கு வேறு பரிமாணங்கள் உண்டு. ஒரு பாசத்துக்குரிய மகளாக, ஒரு அன்பான சகோதரியாக உறவுகள் இருக்கலாம்.

அத்தனை உறவுகளையும் அந்த குடும்பத்தையும் சிதைத்து விட்டு என்ன காணப்போகிறீர்கள்! என் அத்தை ‘உனக்கு 100 பவுன் போடுகிற பெண்ணைத்தான் கல்யாணம் செய்துகொடுப்பேன்’ என்பார். அது அவர் என்னை கேலி செய்யப் பயன்படுத்துவது. ஆனாலும் நான் அப்போது ஒரு அருமையான பெண்ணை எந்தவிதமான முன் நிபந்தனையும் விதிக்காமல் மணப்பேன் என்பேன்.

என்னிடமிருந்து அப்படி ஒரு பதிலைப் பெறவே அவர் விரும்பியிருக்கிறார். நான் இதனால் எதையும் இழந்ததாக உணர்ந்ததில்லை. இசைத்துறையில் இருக்கும் போது அதுவே ஓர் இன்பம்தான். எல்லோருக்கும் பிடித்த ஒரு கலைவடிவத்தை நாம் செய்கிறோம் என்கிற போது அதுவே ஆசிர்வாதம்தான்.

அப்படி எனக்கு வாழ்க்கையில் வந்தவள் சிவகாமசுந்தரி. பார்த்த செகண்டில் பிடித்துபோகும் சில விஷயங்கள். சிவகாமி விஷயத்திலும் ஆரம்பம் அப்படித்தான். காதலென்பது என்னவென்று திருமண வாழ்க்கையே புரிய வைத்தது! என் உடல் நலனிலும், அக்கறையிலும், பொறுப்பையும் அவளே ஏற்றுக் கொண்டு செயல்படும் விதம் முற்றிலும் எனக்கானது.

எனது எல்லா வேலைகளிலும் அவள் துணை பெரும்பலம். பார்த்ததும் பிரியம் சொன்ன உறவு இது. விசு படங்களில் வருகிற பெண் போல் எளிமை அவள். இவளோடுதான் என் வாழ்க்கை பகிர்வு என உள் மனது சொல்லிவிட்டது. எனக்கு சிவகாமசுந்தரி கிடைத்தாள். அம்மாவை அப்படியே பெயர்த்து தருகிற பெரும் உறவு. நான் கற்பனை செய்து வைத்திருந்த பேரன்பும், அக்கறையும், சகித்து கொள்கிற வகையும் எல்லாமே அவளிடம் இருந்தது எனக்கு கிடைத்த பெரும் ஆறுதல்.

இப்போது வீட்டிற்குப் போவது சந்தோஷமாக இருக்கிறது. நாளின் கடினங்களை தன் புன்னகையில் அவளே முடிந்து கொள்கிறாள். வீட்டிற்கு போனால் தூக்கம் வருகிறது. என் அட்டவணையை எடுத்துக் கொண்டு பொறுப்புகளை சிரமேற்கொள்கிறாள். ஒருவரை ஏன் உங்களுக்கு பிடிக்கிறது? உங்களுடைய விருப்பங்கள் அவருடைய விருப்பங்களுடன் சேரும் தருணங்களில் அந்த ஒருவர் உங்களுக்கு பிடித்து விடுகிறார்.

சிவகாமியோடு சேர்ந்து கசிந்துருகும் இடத்தில் வேறெதற்கும் இடம் கிடையாது. காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது. அது முழுவதும் சிவகாமசுந்தரியாகவே இருக்கிறது. True Love is True Relationship.

நா.கதிர்வேலன்