மனச்சோர்வே நீ போ... போ... இனிக்கும் இன்ப வாழ்வே நீ வா... வா!



வழிகாட்டுகிறார் மனநல மருத்துவர் ராமானுஜம்

நாம் குழந்தையாக இருந்தபோது மகிழ்ச்சியாக இருந்தோம். குடும்பத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தாலும் கூட அதை அறியாமல் எளிதில் கடந்தோம். நாம் ஓரளவுக்கு மனதை சேகரித்த பிறகுதான், எல்லாவற்றிற்கும் கவலைப்பட ஆரம்பித்தோம்.நம்மில் பலருக்கு வாழ்வில் எதுவும் தவறாகப் போகவில்லை. ஆனால், தவறாகிவிடலாம் என்ற பயத்திலேயே எப்போதும் இருக்கிறோம்.

நாம் மகிழ்ச்சி பெறுவதற்கு வெளித் தூண்டுதலைப் பயன்படுத்தினால், அது ஒரு பிரச்னையாகவே உள்ளது. எனவே நம் உள்நிலையில் ஒரு தூண்டுதலை காண முயல்வோம்.மிகப்பெரிய எதிர்பார்ப்புகள், உடனுக்குடனான எதிர்வினைகள், கடந்த காலங்கள் பற்றிய நினைவுகள்… போன்றவை என்றும் நம் மனதை ஊசலாட வைத்துக் கொண்டிருக்கின்றன. 
நம் மனதின் அளவீட்டினை இந்த கொரோனா நிலை நிறுத்தியுள்ளது. ஒரு சிலருக்கு மன தைரியத்தையும், ஒரு சிலருக்கு மனச் சோர்வையும், ஒரு சிலருக்கு சுயத்தையும்… அடையாளம் காட்டியுள்ள இந்த நேரத்தில் மனச் சோர்வில் உள்ளவர்கள் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பதை விளக்குகிறார் மனநல மருத்துவர் ராமானுஜம்.        

“மன நலம் பற்றிய விழிப்பு அடைந்து, எல்லோரும் தடையோ, கூச்சமோ இன்றித் தங்களது உணர்வுகளைப் பேசுவது அவசியம். ஆனால், ஒன்று. மனச்சோர்வுக்கு மட்டுமல்ல பொதுவாகவே மன நோய்களுக்கு மூன்று வகையான காரணங்கள் இருக்கின்றன.

1. உடல்ரீதியான காரணங்கள் - Biological causes - மூளையில் உள்ள சுரப்பிகளின் செயல்பாடுகளில் உள்ள மாற்றங்கள்.

2. உளவியல் ரீதியான காரணங்கள் - Psychological - ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆளுமை காரணமாக ஏற்படும் பிரச்னைகள். ஒருவரது பிறப்பு, வளர்ப்பு, சூழ்நிலை… என்று எல்லாம் வைத்து ஓர் ஆளுமை உருவாகியிருக்கும்.

3. சமூகவியல் காரணங்கள் - Social - சமூகக் காரணங்கள்.

இந்த மூன்று காரணங்களின் கலவைதான் மன நோய்களின் வெளிப்பாடு...’’ அழுத்தமாகச் சொல்லும் ராமானுஜம், தொடர்ந்தார்.‘‘சிலருக்கு உடல்ரீதியான காரணங்களின் பங்கு அதிகமாக இருக்கும். உதாரணம் மனச்சிதைவு எனப்படும் Schizo phrenia நோய், பைபோலார் டிஸார்டர் (Bipolar Disorder). இவை மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் வருகின்றன. இந்த நோய்களைத் தீர்ப்பதில் மருந்துகளின் பங்கு அதிகம்.

சிலருக்குத் தனிப்பட்ட ஆளுமைக் கோளாறு (Personality issues) மற்றும் உறவுகளுக்கு இடையேயான பிரச்னைகளால் சிக்கல்கள் ஏற்படும். இவர்களுக்கு அக்கோளாறுகளை நீக்கும் உளவியல் சிகிச்சை (Psycho therapy) அளிக்கப்படும்.கவுன்சிலிங் எனப் பலராலும் இது தவறாக அழைக்கப்படுகிறது.

கவுன்சிலிங் என்றால் தகவல் கொடுப்பது, கவனிப்பது, ஆற்றுப்படுத்துவது. அவ்வளவே. சைக்கோத் தெரபி இன்னும் ஆழமானது, விரிவானது,
இன்னும் சிலருக்கு சமூக காரணங்களால் மனநல பாதிப்புகள் ஏற்படலாம். உதாரணம் விவசாயிகள் தற்கொலை, புலம்பெயர்ந்தோர் பிரச்னைகள் போன்றவை. இவற்றைச் சமூக நோய்களாகக் கருதி சமூகத்தைத்தான் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

எல்லா மனநோயையும் ஒரே மாதிரிக் கருதி எல்லாவற்றுக்கும் மருந்துகள் கொடுத்தால் சரியாகிவிடும் என்பது தவறு. இதனைச் சில மருத்துவர்களும் நம்புகிறார்கள். மனம் என்பது வெறும் ரசாயனக் கூழ் அல்ல.அதே நேரம் எல்லா மனநலப் பாதிப்புகளுக்கும் உளவியல் சிகிச்சை - பொதுமக்களின் மொழியில் கவுன்சிலிங் - மட்டுமே போதுமானதாக இருக்காது.

இது மன நோய்களுக்கு மட்டுமல்ல சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய்… போன்ற உடல் நோய்களுக்கும் பொருந்தும்.
ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு உடல்ரீதியான காரணங்களின் பங்கு அதிகமாக இருக்கலாம் (கணையம் சுரக்கும் இன்சுலின் அளவு), தனிப்பட்ட ஆளுமை காரணமாக இருக்கலாம் (உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல், உணவுப்பழக்க மாறுதல்), சமூக காரணங்களின் பங்கு இருக்கலாம் (சமூக அந்தஸ்துக்காக கார் வாங்குவது, உடல் உழைப்பு இல்லாதது, வேலை, திருமணம் போன்ற நெருக்கடிகளால் Stress ஏற்பட்டு உடல் பாதிக்கப் படுவது).

எல்லா நோய்களும் இம்மூன்று காரணங்களின் வெவ்வேறு வகையான கலவைகளே. அவற்றைச் சரியாக அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுமைப் படுத்த முடியாது...” என்ற ராமானுஜம், கொரோனா குறித்தும் அலசுகிறார்.“கொரோனா குறித்தான பயம், பதட்டம்… மேற்கண்ட மூன்று காரணங்களாலும் அடங்கும். ஏற்கனவே பிரச்னை உள்ளவர்களுக்கு இது எளிதில் சென்றடையும்.

அதேபோல் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாகும் எதிர்மறையான செய்திகளின் தாக்கமும் அதிகம். இதனால் பலருக்குக் கற்பனை அதிகமாக இருக்கும். நிஜத்தை விடக் கற்பனை பயங்கர தாக்கத்தை ஏற்படுத்தும்.சமூக காரணங்கள் நம் கையில் இல்லை. அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இப்போது இருக்கும் பெரும் பிரச்னை ஒருவருக்கு கொரோனா தொற்று வந்தால் அடுத்து என்ன என்கிற பெரும் கேள்விதான்.

எனவே சிகிச்சைகள் குறித்தும் அல்லது அதிலிருந்து எவ்வாறு மீளலாம் என்பது குறித்தும் வெளிப்படைத் தன்மையோடு அரசு அறிவிக்க வேண்டும்.  
நம் கையில் உள்ள விஷயங்களை வைத்து முடிவெடுக்கலாம் என்றால், நாம் பார்க்கும் பார்வையை மாற்ற வேண்டும்.

ஊரடங்கு என்பது நம் மீது திணிக்கப்பட்ட விஷயமாக பார்க்காமல், ஓய்வாகப் பார்த்தால் பதட்டம் குறையும். கட்டுப்படுத்துவது, திணிக்கப்படுவது… போன்று அரசும் இதைக் கையாளக் கூடாது. விருப்பப்பட்ட உணவும் கட்டாயப்படுத்தி உண்ண வைக்கும் போது பிடிக்காமல் போகும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. இந்த ஊரடங்கில் பலரது வேலைகள் பறிபோயுள்ளது.

அவர்களுக்கு சின்னச் சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாகத் தெரியும். நமக்கு இனி எதிர்காலத்தில் வேலையே கிடைக்காது, வாழ்க்கையே முடிந்து போய்விட்டது… என்று பெரிய அளவில் சிந்திக்க வேண்டாம்.

இது இப்படியே இருக்காது. இது போன்ற இக்கட்டான சூழலில் வேலையை விட்டுத் தூக்குவதையும் நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்.
அவ்வாறு கையறு நிலையில் இருக்கும் நிறுவனங்களை தற்காலிகமாக அரசு பொறுப்பெடுத்து நடத்த முன் வர வேண்டும்.

வேலையில் இருப்பவர்கள், வேலை போய்விடுமா என்ற அச்சத்தைத் தவிருங்கள். முடிந்தளவு எதிர்மறையாக யோசிக்காமல் ‘வரும் போது பார்த்துகலாம்’ என்று இருங்கள். முக்கியமாக எல்லோரும் தூக்கத்திலும், உடல் நலத்திலும் கவனம் செலுத்துங்கள்.  
      
அரசு அறிவித்திருக்கும் பொருளாதார ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டாலே பலர் மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்துவிடுவார்கள்...’’ என்கிறார் டாக்டர் ராமானுஜம்.

அன்னம் அரசு